சினிமா

ஆரோக்கியமாக வாழ காய்கறி, பழம் மட்டுமே போதுமா?

இரா. கௌதமன்

அறுபது நாட்கள் உணவு எதையும் உண்ணாமல் வெறும் பழம்,காய்கறி ஜூசை மட்டும் அருந்தி உயிர் வாழ முடியுமா? அப்படியே வாழ்ந்தாலும் அது மருத்துவ முறைப்படி சரியா, தினசரி உடல்தேவைகளுக்கான சத்து கிடைக்குமா? என்கிற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறது பேட், சிக் அண்ட் நியர்லி டெட் (Fat, Sick and nearly Dead) என்ற ஆவணப்படம்.

உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தியால் (Auto immune diesease) உருவாகும் பிரச்னை என்று ஒன்பது ஆண்டுகளாக மருந்து மாத்திரைகளுடன் வாழ்க்கை நடத்திவருபவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோ கிராஸ். இவரது எடை ஜஸ்ட் 140 கிலோ! இந்த 41 வயது மனிதர், இப்பிரச்னைகளிலிருந்து விடுபட என்னதான் செய்வது என்று மண்டையைப் பிய்த்து கொண்டு அலைந்து தன்னுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த ஜூஸ் மருத்துவத்தை தொடங்குகிறார். முதல் இரண்டு மாதங்களுக்கு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தொடங்கும் ஜோ வழக்கமான தினசரி சுழற்சியிலிருந்து விடுபட்டு அமெரிக்காவுக்குச் சென்று தொடங்குகிறார்.

ஜோ எப்படி இவ்வளவு எடை கொண்ட மனிதராக மாறினார்? இள வயதில் ஆரோக்கியமாக இருக்கும் ஜோ, பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பங்கு சந்தை வர்த்தக முகவராக வேலைக்கு சேர்கிறார். 23 வயதில் சொந்தமாக வியாபாரத்தை தொடங்கி விடுகிறார். பணம் கொட்டத் தொடங்கியவுடன் இரவு பார்ட்டிகள், துரித உணவு, குளிர் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, தூக்கமின்மை என்று 41 வயதிலேயே ஏறக்குறைய வாழ்க்கையின் விளிம்பை தொடுகிறார். வாழ்க்கை முறையை மாற்றாவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என்ற நிலையில் அத்தனையையும் உதறிவிட்டு உடல் நலத்தை பேணுவோம் என்ற முடிவில் அவர் தொடங்குவதுதான் இந்த ஜூஸ் பயணம்.

முதல் முப்பது நாட்கள் நியூயார்க் நகரிலும், அடுத்த முப்பது நாட்கள் அமெரிக்காவின் கிராம பகுதிகளிலும் பயணம் செய்யும் ஜோ, சந்திக்கும் மனிதர்களிடத்தில் தன்னுடைய உணவு பரிசோதனையை பற்றி பேசியும், அவர்களுக்கு அந்த ஜூஸை கொடுத்து சுவைக்கவும் சொல்கிறார். பொதுவாக உணவு பற்றிய மக்களின் எண்ணத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

‘சரி, இப்படிக் கட்டுப்பாடாக சாப்பிட்டு என்ன செய்யப்போற? வாழ்நாளில் ஐந்து அல்லது பத்தாண்டுகள் கூடுமா? நான் வாழற வரைக்கும் எனக்கு விருப்பமானத சாப்பிட்டுவிட்டு ஜாலியா இருந்துட்டு போறேன்'

‘கையில காசிருந்தா நல்ல சாப்பாடு சாப்பிடுவேன், இதுல விரதமெல்லாம் எப்படி?'

‘இப்படி பல விதமான உணவு முறையை பலபேர் சொல்றாங்க. அதைக் கடைபிடிக்காம போனா முன்னைவிட எடை கூடிடறாங்க‘இப்படி விதவிதமான கருத்துகளும் வருகின்றன. கூடவே நாளுக்கு நாள் ஜோவின் உடல் நிலையும் முன்னேறிவருகிறது. அவர் எடுத்துக் கொள்ளும் மாத்திரை அளவும் மருத்துவரின் பரிந்துரைப்படி குறைந்து கொண்டே வருகிறது. இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு எல்லாமே சீராகத் தொடங்குகிறது. பயணத்தில் ஆங்காங்கே கிடைக்கு பழம், காய்கறிகளை கையோடு கொண்டு செல்லும் ஜூஸரில் அரைத்து பருகிக் கொண்டே பயணிக்கிறார். உணவுடன் சேர்த்து உடற்பயிற்சியையும் தொடர்ச்சியாக அதிகரிக்கிறார்.

பயணத்தில் சந்திக்கும் சியோங் என்ற பெண்மணி ஜோவின் உணவு முறையால் ஈர்க்கப்பட்டு பத்து நாட்கள் முயற்சி செய்யலாமே என்று ஆரம்பித்ததில் அவருடைய வழக்கமான தலைவலி பிரச்னை முடிவுக்கு வருகிறது. முன்பைவிட சுறுசுறுப்பாக உணர்வதாகச் சொல்கிறார்.

அடுத்ததாக பில் ராட்ஸ் என்கிற ட்ரக் டிரைவரை சந்திக்கிறார் ஜோ. பில் இளவயதில் ஆரோக்கியமாக இருந்த மனிதர். நீச்சல் போட்டிகளில் பரிசுகளை பெற்றவர். விமானப்படையில் பணிபுரிந்த பிறகு தன்னுடைய தந்தையைப் போலவே ட்ரக் டிரைவராகிறார். நீண்ட தூர பயணத்தில் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பில்லின் உடல் எடை 200 கிலோ. நடக்கவே சிரமப்படும் நிலையில் இருக்கிறார். விவாகரத்து, மன உளைச்சல் என்று பில்லின் எடைக்கு கூடுதல் காரணங்களும் உண்டு.

பில்லும் ஜோவை போலவே ஜூஸ் உணவு முறையை பின்பற்ற ஆரம்பிக்கிறார். உணவின் மீதான தன்னுடைய ஆசையைக் கட்டுப்படுத்த மிக சிரமப்படும் பில் விடாப்பிடியுடன் முயற்சித்து சில மாதங்களில் எண்பது கிலோ வரை தன்னுடைய உடல் எடையைக் குறைப்பதுடன் கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரைகளிலிருந்தும் விடுபடுகிறார். பில்லின் சகோதரர் முதலில் இதெல்லாம் தன்னால் செயல்படுத்த முடியாது என்று சொல்பவர், சில நாட்களில் மாரடைப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தன்னுடைய உணவுப் பழக்கத்தை மாற்றாவிட்டால் உயிர் வாழ்வதே கடினம் என்ற நிலையில் அவரும் காய்கறி, பழங்கள் கொண்ட உணவு முறைக்கு மாறுகிறார்.

பழங்கள், காய்கறிகளில் நுண் தாதுக்கள் மற்றும் விட்டமின்களின் அளவு அதிகமாக இருக்கிறது என்று மட்டுமே சொல்லும் இந்த ஆவணப்படம் உடலுக்கு தேவையான சரியான அளவு சக்தியை இந்த உணவே கொடுத்துவிடுமா என்பதைப் பற்றி தெளிவாக விளக்கவில்லை. முறையான மருத்துவ பரிசோதனைகளும், தகுந்த மருத்துவரின் ஆலோசனையையும் பின்பற்றியே இது மாதிரியான உணவு பரிசோதனைகளை செய்யவேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லப்படுவது நல்ல விஷயம். அதே போல சில நாட்கள் கழித்து நீங்கள் உங்களுடைய பழைய வாழ்க்கை முறைக்கே திரும்புவீர்களேயானால் உடல் எடை குறைந்த வேகத்தைவிட வேகமாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கவும் செய்கிறார் ஜோ.

எலக்ட்ரானிக் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது அவை பழுதடைய வாய்ப்புள்ளது, அதே போல மோசமான உணவு பழக்க வழக்கங்களினால் உங்களின் உடல் பழுதடையும்போது அதற்கு தேவையான ஓய்வையும், மீண்டெழுவதற்கான முயற்சியையும் செய்யுங்கள் என்று சொல்லும் இந்த ஆவணப்படம் யூட்யூபில் இலவசமாகவே கிடைக்கிறது.

140 கிலோவுடன் உருண்டு திரண்டிருக்கும் ஜோவும், 200 கிலோவுடன் நடக்கவே சிரமப்படும் பில்லும் படத்தின் இறுதிக்காட்சிகளில் உடற்பயிற்சி செய்து கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதைப் பார்க்கும் எவருக்கும் அடுத்த வேளை உணவு உண்ணும்போது நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்ற கேள்வி நிச்சயம் எழும்.

ஜூன், 2022