சினிமா

இந்துக் கடவுள்களை இழிவுப்படுத்தியதாக பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது வழக்குப்பதிவு!

Staff Writer

இந்துக் கடவுள்களை இழிவுப்படுத்தி கவிதை வாசித்ததற்காக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி மீது காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற ‘வேர்ச்சொல்’ நிகழ்ச்சியில் கவிஞர் விடுதலை சிகப்பி கவிதை வாசித்தார்.

‘மலக்குழி மரணம்' என்ற தலைப்பில் அவர் வாசித்த கவிதை பின்வருமாறு:-

வீட்டு மலக்குழியில்

ஒருவாரமாய் அடைப்பு

அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல்

அயோத்தி சென்று ராமனைக் கையோடு கூட்டிவந்தேன்

முதலில் மறுத்தவனிடம் பணம்

கூடத் தருவதாய்க் கூறினேன்

ஒரு புட்டிச் சாராயத்தை ஒரே மூச்சில் குடித்துக் குழிக்குள் குதித்தான் ராமன்

இலக்குவனும் அனுமனும்

துண்டு பீடியை ஆளுக்கொரு

இழு இழுத்தப்பின்

வாளி கொச்சக்கயிறு அகப்பை

மூங்கில் கழியோடு

உள்ளே இறங்கினார்கள்

கணவன் கொழுந்தனின் வில் அம்புகளையும் அனுமனின் கதாயுதத்தையும் காவல் காத்துகொண்டிருந்த சீதாபிராட்டி

பசி என்றாள்

உயர்சாதி ஏழையின் பசி கொடுமையானது எனவே கடைத்தெருவுக்குச் சென்று திரும்பினேன்

மலக்குழியை மூடிவிட்டு இலங்கை நோக்கிச் சென்றிருந்தாள் போல சீதாபிராட்டி

அருகில் கிடந்த சிகரெட் அட்டையில் எழுதியிருந்தாள்

மன்றாடிக் கேட்கிறேன் மலக்குழியைத் திறக்கவே வேண்டாமென்று

எனக்கும் மனமில்லை

மலக்குழியைத் திறப்பதற்கு...

இந்த கவிதை இந்துக் கடவுள்களான ராமர், சீதை, அனுமன் ஆகியோரை இழிவுபடுத்துவதாக விடுதலை சிகப்பி மீது ‘பாரத் இந்து முன்னணி’ நிர்வாகி சுரேஷ் என்பவர் அபிராமபுரம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எழுத்தாளர் அழகிய பெரியவன், ”ரத்தமும் சதையுமான மனிதர்களாகிய நாங்கள் நாள்தோறும், நொடிதோறும் இழிவு படுத்தப் படுகிறோம். கொல்லப்படுகிறோம். எரிக்கப்படுகிறோம். அதைப்பற்றிய அக்கறை இல்லை. அவற்றைத் தடுக்க முடியவில்லை. எங்களை இழிவுபடுத்தும் கற்பிதங்களை கவிதை வடிவிலும், கலை வடிவிலும் விமர்சித்தால் சட்டம் பாய்கிறதோ?

கவிஞர் விடுதலை சிகப்பி, பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர் என்ற தன்னுடைய நூலிலும் பிற நூல்களிலும் கூறியிருக்கும் கருத்தை தான் கவிதையாகப் பாடியிருக்கிறார் நாங்கள் எங்கள் தலைவரின் வழியில் நின்று தான் கலை செயல்பாடுகளை கட்டமைக்கிறோம்.

ஆனால் கவிஞர் விடுதலை சிகப்பியின் கவிதைக்காக அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் கருத்துரிமையை கலை செயல்பாட்டு உரிமையை முடக்கக் கூடியதாக இருக்கின்றன. இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதை அரசு திரும்பப் பெற வேண்டும். நாங்கள் கவிஞர் விடுதலை சிகப்பியின் உடன் நிற்போம்.” என தெரிவித்துள்ளார். அதேபோல் சமூகவலைதளங்களில் #standwithviduthalai என்ற ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது.