சினிமா

மாபியா ராணி

இரா. கௌதமன்

மும்பையின் காமாட்டிபுரா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் அமரவைக்கப்பட்டுள்ளார் மது என்ற பதினாறு வயது இளம்பெண். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறியாத அந்தப் பெண் செய்த ஒரே தவறு காதலிப்பதாக கூறிய ஒருவனை நம்பி ரத்னகிரியிலிருந்து மும்பை ஓடி வந்ததுதான்.

மும்பை லாட்ஜில் சில நாட்கள் அவளுடன் தங்கியிருந்த அவன் வெளியே போயிருந்த நிலையில்தான் மதுவை கடத்தி இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள். மும்பையில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கும் காமாட்டிபுராவில்தான் தான் இருக்கிறோம் என்பதே மதுவுக்கு அப்போது தெரியாது.

சற்று நேரத்தில் அறைக்குள் நுழையும் ஜகனாத் என்னும் முரட்டு குடிகாரன் மதுவின் எதிர்ப்பையும் மீறி பலவந்தமாக வல்லுறவு கொள்கிறான். அவன் வெளியேறிய பிறகு, உடம்பில் காயங்களுடன் ‘ கணவர் காத்திருப்பார், என்னை விட்டு விடுங்கள்‘ என்று இறைஞ்சுகிறாள் மது. கணவன்தான் தன்னை சில ஆயிரம் ரூபாய்க்கு இவர்களிடம் விற்றிருக்கிறான் என்பதை ரேஷ்மி என்ற அந்த விடுதியை நிர்வகிக்கும் பெண்ணின் மூலம் அறிந்து முற்றிலும் உடைந்து போகிறாள் மது.

அதன்பிறகு கல்லைப்போல் எந்த உணர்சிகளையும் காட்டாமல் கால்களை இறுக்கிக்கட்டிக்கொண்டு அதில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருக்கிறார். அடுத்தடுத்த வாடிக்கையாளர்களிடம் பிரச்னை ஏற்பட ரேஷ்மிக்கு வேறு வழி தெரியாமல் கங்குபாயை அழைக்கிறார்.

தங்க சரிகை போட்ட வெள்ளை நிற உடையில் கருப்பு நிற பெண்ட்லி காரில் வந்திறங்கும் கங்குபாயை அனைவரும் வணங்குகிறார்கள். மதுவின் அறைக்கு செல்லும் கங்குபாய், அவரின் இறுக்கத்தை உடைத்து பேச வைக்கிறார். மீண்டும் ரத்னகிரிக்கே செல்ல விரும்பும் அந்த பெண்ணை, குடும்பமும் மற்றவர்களும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?. ஆனால் மது தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதைக் கண்டு அவரை ரத்னகிரிக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறார். இதுதான் கங்குபாய். விருப்பமில்லாத பெண்களை இந்த தொழிலுக்காக கட்டாயப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். கங்குபாய் சொல்லிவிட்டால் அதற்கு மறு பேச்சே கிடையாது.

மதுவுக்கு கங்குபாய் ஏன் உதவி செய்ய வேண்டும்? இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ள கங்கா ஹர்ஜீவந்தாஸ் கத்தியவாடி என்ற கங்குபாயின் நிஜக் கதையை தெரிந்து கொள்வது அவசியம்.

குஜராத்தின் கத்தியவாடி கிராமத்தில், வசதியான படித்தவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த கங்காவுக்கு சினிமா என்றால் உயிர். ஆஷா பரிக், ஹேமமாலினி போன்று பெரிய நடிகையாக வேண்டும் என்பது கனவு. மிகவும் ஆச்சாரமான, கட்டுக் கோப்பான குடும்பத்தில் சினிமாவைப் பற்றி பேசுவதே பாவமாக கருதப்பட்ட 1950 களின் காலகட்டம் அது. மும்பை, கங்காவின் தந்தை ராம்தின் என்பவரை கணக்கராக நியமிக்கிறார். அவர் மும்பையில் வேலை செய்தவர். சினிமாக்காரர்கள் சிலரை தெரிந்தவர் என்ற தகவல் கங்காவிற்கு தேன் போல இனிக்கிறது. அவருடன் பேசிப்பழக ஆரம்பிக்கும் கங்கா தன்னுடைய சினிமா ஆசையைத் தெரிவிக்கிறார். தன்னை கல்யாணம் செய்து கொண்டால் மும்பைக்கு அழைத்துச் சென்று பெரிய நடிகையாக்குவதாக ராம்தின் கூற,வீட்டிற்கு தெரியாமல் பணம், நகைகளை எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு கிளம்புகிறது அந்த ஜோடி.

கொஞ்ச நாள்கழித்து ஐநூறு ரூபாய்க்கு ராம்தின், ஷீலா என்பவரிடம் காமட்டிபுராவில் கங்காவை விற்றுவிடுகிறார்.

அங்கே போய் அழுது புரண்டு அடிவாங்கிய பிறகு கங்காவிற்கு இருப்பது இரண்டு வழிதான். தப்பித்து ஊருக்கு செல்வது. ஆனால் அப்படிச் செய்தால் அங்கு தன்னை கௌரவக் கொலை செய்யக்கூட வாய்பிருக்கிறது. அடுத்தது தற்கொலை செய்து கொள்வது. சாவதைவிட வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று நினைக்கும் கங்கா, ஷீலாவிடம் தான் தயார் என்று சொல்கிறார். பெயரைக் கேட்கும் முதல்

வாடிக்கையாளரிடம் கங்கா என்ற பெயரை மறைத்து கங்கு என்கிறார்.

வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவதில் கங்கு கை தேர்ந்துவிட, அவரின் புகழ் பரவுகிறது. கங்குவைத்தேடி பல ஊர்களிலிருந்து பெரிய மனிதர்கள் வருகிறார்கள். கூடவே பிரச்னையும் வருகிறது.

தாதா கும்பலைச் சேர்ந்த சௌகத் கான் என்ற முரடனும் கங்குவைத் தேடி வருகிறான். முரட்டுத்தனமாக கங்குவை கையாளும் அவன் பணமும் தருவதில்லை. சௌகத் வந்துபோன பிறகு ஒரு வாரம் உடல் நிலை சரியில்லாமல் கிடக்கும் கங்கு, இது போன்ற ஆட்களை அனுப்ப வேண்டாம் என்று ஷீலாவிடம் கூறுகிறார்.

ஷீலாவிற்கும் கங்குவின் மதிப்பு தெரியும். அடுத்த முறை சௌகத் வரும்போது ஷீலா என்ன முயற்சி எடுத்தும் பலனில்லை. இதனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறாள் கங்கு. தன்னுடைய தோழிகள் மூலமாக சௌகத்தை பற்றி விசாரிக்கிறார். தெற்கு மும்பையை கையில் வைத்திருக்கும் கரீம் லாலா என்ற தாதாவின் அடியாள் அவன் என்ற தகவல் கிடைக்கிறது.

தொழுகை முடிந்து வரும் கரீம் லாலாவை சந்திக்க காத்திருக்கிறார் கங்கு. உதட்டுச்சாயம், முக அலங்காரத்தை வைத்து யாரென்று கணித்துவிடும் கரீம் லாலா தெருவில் பேசத் தயங்கி வீட்டிற்கு வரச் சொல்கிறார். அங்கே நெகிழ்ச்சியான சந்திப்புக்கு விடைபெற்று செல்லும்போது கரீமை சகோதரனாக நினைத்து ராக்கி கட்டிவிடுகிறார் கங்குபாய்.

சௌகத் அடுத்த முறை வரும்போது அவனை இழுத்து தெருவில் போட்டு அடித்து துவைக்கிறார் கரீம்.  ‘கங்கு என்னுடைய ராக்கி சகோதரி. அவளுக்கு என்ன பிரச்னை என்றாலும் நான் வருவேன்‘ என்கிறார்.

அன்றிலிருந்து கங்குபாயை பயம் கலந்த மரியாதையுடன் அனைவரும் பார்க்கிறார்கள். போலீஸ்காரர்களின் தயவும் கிடைக்கிறது. காமாட்டிப்புராவில் சிவப்பு விளக்கு பகுதியின் தலைவியும் ஆகிறார்.

மும்பை ஆஸாத் மைதானத்தில் பெண்களின் உரிமைக்கான ஒரு விழாவில் கங்குபாயையும் பேச அழைக்கிறார்கள். ‘சமூகத்தில் எங்களை கீழ்த்தரமாக நடத்துகிறீர்கள். நாங்கள் யாரும் விரும்பி இந்த தொழிலில் இல்லை. இவ்வளவு ஜனத்தொகை கொண்ட மும்பை நகரில் குறைவாகவே பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம் நாங்கள் தான். ஆண்களின் பாலியல் வேட்கையைத் தணிக்கும் நாங்கள் சமூக சேவகர்கள்.'  என்று அவர் பேசிய அந்த பேச்சு, பாலியல் தொழிலாளிகள் பிரச்னைக்காக இந்திய பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு வரை அவரைக் கொண்டுபோனது.

ஹுசைன் ஜைதி எழுதிய ‘மாஃபியா குயின்ஸ் ஆப் மும்பை‘ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ள இந்த கங்குபாயின் வாழ்க்கை தற்போது சஞ்சய் லீலா

பன்சாலி இயக்கத்தில் அலியா பட்  நடிக்க ‘கங்குபாய் கத்தியவாடி‘ என்ற பெயரில் சினிமாவாக தயாராகி வருகிறது. பன்சாலி மேலுள்ள நம்பிக்கையில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம்.

 ஏப்ரல், 2021