சினிமா

வலியில் பிறந்த கதை!        

தா.பிரகாஷ்

திரையிடப்பட்ட விழாக்களில் விருதுகள், பாசிட்டிவான விமர்சனங்கள் என பல பாராட்டுகளைப் பெற்றுவருகிறது தேன் திரைப்படம். இதன்  இயக்குநர் கணேஷ் விநாயகத்துக்கு இது நான்காவது படம்.  ஆரம்பத்தில் எடுத்த வணிக ரீதியான திரைப்படங்களுக்குப் பின் தேன் போன்ற ஆழமான படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கும் இவரிடம் பேசினோம்.

‘‘செங்கோட்டைக்கும் குற்றாலத்துக் கும் அருகில் உள்ள ‘எஸ்பெண்ட்' என்ற கிராமத்தை சேர்ந்தவன் நான்.  எனக்கு பன்னிரெண்டு வயசு இருக்கும் போதே சினிமா மேல ஆர்வம் வந்துடிச்சி. அப்போதே நிறைய புத்தகங்கள் படிப்பேன்.

 சினிமா பாக்குறதுக்காக ஸ்கூல கட்டடிக்குறது, அதுக்காக வீட்ல பணம் திருடுவது போன்ற வேலையெல்லாம் செஞ்சிருக்கேன். எங்கம்மாவுக்கு தெரியும், பணம் எடுத்தால்

சினிமாவுக்குத்தான் போவேன்னு. படம் பாத்துட்டு வந்தேன்னா, வீட்ல இருக்குற அண்ணா, அம்மா என எல்லார் கிட்டையும் படத்த பத்தின கதைகளை சொல்வேன்.  அப்பயே கதை சொல்ற ஆர்வம் இருந்துச்சி. அதனால சினிமாவுக்குள்ள வரணும்னு நினைச்சேன். ஆனா, இயக்குநர் ஆகணும்னு தோணல.

ஸ்கூல்ல படிக்கும் போது இயக்குநர் பாரதிமோகன்  ‘சின்ன காளை‘னு ஒரு படம் எடுக்க வந்தாரு. அவருக்கு இடங்களை காண்பிப்பது என

துருதுருன்னு சுத்திக்கிட்டிருந்தேன். அவர் தான் என்னை கூட்டிட்டு வந்து சீர்காழியில படிக்க

வச்சாரு. அவரோட தத்துப் பிள்ளையா என்னை வளர்த்தாரு. அவர் தான் என்னைய இந்த அளவுக்கு வளர்த்து ஆளாக்கிவிட்டது எல்லாம்.

ப்ளஸ் டூ படிச்சி முடிச்சதும் ஸ்டில்ஸ் சிவா அண்ணனிடம்  உதவி யாளராக வேலைக்கு சேர்ந்தேன். பதினைந்து படங்கள் அவர் கிட்ட வேலை பார்த்தேன். என்னோட நண்பன் சுகுமாரோட (தேன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்) அண்ணன் தான் டைரக்டர் ஜீவா. அவரிடமும்  கொஞ்சம் வேலை பார்த்தேன். பிறகு ‘வர்ண ஜாலம்' படத்துல முதன்மை போட்டோகிராபராக சேர்ந்தேன். அதன் பின்னர், தருண் கோபிகிட்ட ‘திமிரு' படத்துல உதவி இயக்குநரா சேர்ந்தேன். அடுத்து,  சிம்புவின் ‘காளை‘, ‘கெட்டவன்’ படத்துல வேலைப் பார்த்தேன். கெட்டவன் படத்துக்கு இருபத்தேழு நாள் ஷூட் நடந்துச்சி. ஆனா அந்தப் படம் ட்ராப் ஆகிடுச்சி. சினிமால இப்படிலாம் நடக்கும் தான். இதையெல்லாம் பெருசா எடுத்துக் கிறதில்ல. சினிமா மேல அதிகமான மோகம் இருந்துதால, அது எனக்கு பெரிய கஷ்டமா தெரியல. அதுக்கு ஏத்த மாதிரி மனசை தயார் பண்ணிக்கிட்டேன்.

என்னோட முதல் படம் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்‘ தான். ஆனால் என்னோட லிஸ்ட்ல அது இல்லை. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால அந்த படத்துல இருந்து வெளியேறிட்டேன். என்னோட  முதல் முழுமையான படம்னா அது ‘தகராறு’ தான். தகராறு ஒரு மல்டி ஸ்டார் படம். கதை நல்லா இருந்ததால அருள் நிதி  நடிக்க ஒத்துக்கிட்டாரு. அப்படித்தான் என்னோட முதல் படவாய்ப்பு அமைந்தது.

இரண்டாவது படம் ‘வீரசிவாஜி‘, இதுல விக்ரம் பிரபு நடிச்சாரு. என்னோட முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் என்ன ஒற்றுமைன்னா... முதல் படத்துல கலைஞரோட பேரனும், இரண்டாவது படத்துக்கு சிவாஜி பேரனும் நடிச்சதுதான். அப்புறம் என்னோட மூணாவது படம் (ஹைபர்) கன்னடத்துல பன்னேன். இப்போ வந்திருக்கிற நாளாவது படம் தான் தேன்.

முதல் இரண்டு படத்துக்கும் தேன் படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கேன்னு கேட்பீங்க.

பொதுவாகவே மக்கள் திரைப்படங்களில் பொழுதுபோக்கு அம்சங்களைத்தான் எதிர்பார்க்கின்றனர். திரைப்படம் என்றாலே அதில் வணிகமும் இருக்கும். அதுக்கு ஏற்றது போல் தான் படம் எடுக்க வேண்டி உள்ளது. தேன் மாதிரியான திரைப்படங்களை எடுப்பது சவால் நிறைந்த ஒன்று. அதற்காக எதுவும் பேசாமல் இருந்துவிட முடியாது.

ஏதோ சினிமாவுக்கு வந்தோம், போனோம் என்று இருக்க கூடாது. நம்மோட கருத்து யாரோ ஒருவருக்காவது பயன்படனும் என்ற எண்ணம் எனக்குள் உண்டு.

எல்லோருக்கும் எல்லா உரிமையும் இருக்கு. பேசுவதற்கான, என்னுடைய உரிமைகளை கேட்பதற்கான எல்லா உரிமைகளும் உள்ளது. அதனடிப்படையில் தான் இந்த படத்தை எடுக்க முனைந்தேன்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா பழங்குடிகளுக்கும் அரசுக்கும் முரண்பாடு இருக்கு. பழங்குடிகள் இருப்பதால் மலை மாசுபடுவதாக அரசு நினைக்கிறது. மலையை விட்டால் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும் என  மக்கள் நினைக்கிறார்கள். இது ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது.  இதற்கான முடிவு எதுவும் இதுவரை சொல்லப்படவில்லை.

தேன் திரைப்படத்தோட கதையே, இந்த வலியில் இருந்து தான் தோன்றியது. ஒடிசாவுல நடந்த ஒரு நிகழ்வும், தேனியில நடந்த ஒரு நிகழ்வும் தான் இந்தப் படத்தோட கதை. ஒருத்தன் தன்னோட இறந்து போன மனைவியை தோள் மேல தூக்கிக் கொண்டு, குழந்தைய கையில் பிடிச்சிக்குனு பதினாலு கிலோ மீட்டர் நடந்துப்  போறான். அவ்வளவு தூரம் அவரை ஒரு மனுசன் கூடவா பாக்கவில்லை? இந்த வலி தான் தேன் திரைப்படம்.

பழங்குடி மக்கள் படும் கஷ்டம், அவர்கள் எந்த சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள், அரசாங்கம் அவர்களை எப்படி நடத்துகிறது என்கின்ற பார்வையைத்தான் இந்த படம் வலுவாக பேசுகிறது. அதேபோல், மலைவாழ் மக்களின் முக்கியமான தொழில் தேன் எடுப்பது என்பதாலும் படத்திற்கான தலைப்பாக தேன் என்றே வைத்தோம்.

நடிகர் தருண்குமார், எனக்கும் தயாரிப்பாளர் அம்பலவாணன் சாருக்கும் தெரிந்தவர் என்பதால் அவரையே வேலு கதாபாத்திரத்தில் நடிக்க

வச்சோம். அதேபோல், அபர்ணதியும் நீண்ட நாள் தோழி என்பதால் அவரையே பூங்கொடி கதாபத்திரத்தில் நடிக்க வச்சோம். படத்துக்கான அலுவலகத்தையும் தேனியிலேயே வைத்தோம். படத்துல நடிச்ச எல்லோரையும் மலை கிராமத்துலேயே தங்க வச்சி, பழங்குடி மக்களோட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்தோம். நடிப்புக்காக எந்த பயிற்சியும் தனியா கொடுக்க வில்லை.

அதேபோல், குழந்தை கதாபாத்திரத்தில் நடிச்ச அனுஸ்ரீக்கு எந்த பயிற்சியும் தரவில்லை. வாய் பேசாத குழந்தை மாதிரி ரொம்ப கச்சிதமா நடிச்சா. எல்லாருமே ரொம்ப ஈடுபாட்டோடு இருந்தாங்க.

என்னோட வாழ்க்கையே சினிமா தான். நான் இறந்தால் கூட என்னை ஏவிஎம் சுடுகாட்டில் கொண்டு சென்று புதைங்கன்னு தான் சொல்லுவேன். நான் வாழ்ந்துக் கொண்டிருப்பதற்கும், இனி வாழப்போகும் வாழ்க்கைக்கும் சினிமா தான் காரணமாக இருக்கும். இனி வரும் என்னோட எல்லா படங்களிலும் சமூகம்  சார்ந்த கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும்,'' என்கிறார்  கணேஷ் விநாயகன்.

ஏப்ரல், 2021