சமையல் அறை

என் சமையலறையில் : தீபா பாலச்சந்தர்

மணிதிலக்

சொந்த ஊர் சேலம். எங்க தாத்தா கல்யாண கேட்டரிங் வச்சிருந்தாங்க. பாட்டி ஹோட்டலுக்கு சமையல்லாம் செஞ்சு கொடுப்பாங்க.  பாட்டி வீட்டுல விதவிதமா இட்லி, தோசை செய்வாங்க. தோசைக்கு ரெண்டு சட்னி, ஒரு சாம்பார், ஒரு பொடி எப்பவுமே இருக்கும்.  நாங்க ஏதாவது வேணும்னு கேட்டா அடுத்த அஞ்சாவது நிமிஷம் அதை செஞ்சுட்டு வந்து கொடுப்பாங்க.” என்கிறார்  சமையல் கலைஞர் தீபா பாலச்சந்தர்.  அந்திமழைக்காக தொடர்கின்றன அவரது சமையல் அனுபவங்கள்.

“நான் பத்தாம் வகுப்பு லீவ்லயே சமைக்கக் கத்துக்கிட்டேன். தாத்தா எனக்கப்புறம் நீதான்னு  சொல்லி அவர் இறக்குறதுக்கு முன்னால அவரோட சமையல் அனுபவத்துல இருந்து ஒவ்வொண்ணுக்கும் என்ன அளவுகள், என்ன என்ன பொருட்கள் சேக்கணும்னு சொல்லி எழுதிக்க சொன்னாங்க. ஒரு நோட்டு போட்டு எல்லாமே எழுதி வைச்சதோட செஞ்சும் பாத்தேன். மூணு மாச லீவ் முழுக்க கிச்சன்ல என்னோட சோதனை முயற்சியும் நடந்துச்சு. அதுக்கப்புறம் பி.எஸ்சி. எம்.எஸ்சி முடிச்சு கல்யாணமாகிடுச்சு. என்னோட மாமனார் பத்திரிகைகளுக்கு கதையெல்லாம் எழுதுவார். அவர்தான் என்னோட சமையல் ஆர்வத்த பாத்து பத்திரிகைகளுக்கு எழுத வைச்சார். இப்போ பிரபலமான நிறைய பத்திரிகைகள்ல எழுதிட்டிருக்கேன்.

நானும் இப்ப தோசை இட்லி செஞ்சா சாம்பார், சட்னி, பொடி வச்சுதான் கொடுப்பேன். எள்ளுப் பொடி, கருவேப்பிலைப் பொடினு ஏதாவது இட்லிப் பொடி 15 நாளைக்கு ஒரு தடவை அரைச்சு வைச்சுடுவேன். அதுக்கு மேல வச்சிருந்தா வாசனை குறைய ஆரம்பிச்சுடும். மத்தபடி கெட்டுப் போகாது. உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சம அளவும், கறுப்பு எள் பாதி அளவும் எடுத்து மிளகாய் வத்தல் ஒண்ணு ரெண்டு சேத்து வறுத்து அரைச்சு அதுல பெருங்காயத் தூளும், உப்பும் சேத்து அரைச்சு வைச்சுக்குவேன். அதை பீட்ரூட், அவரைக்காய், கத்தரிக்காய் ஏதாவது பொரியல் செய்யும்போது பயன்படுத்துவேன். பொரியலை இறக்கும்போது தேங்காய்க்கு பதிலா இந்த பொடிய தூவி இறக்குவேன். ருசியா இருக்கும்.

நாங்க ஹோட்டல்ல சாப்பிடவே மாட்டோம். தவிர்க்க முடியாம சாப்பிட்டா கூட வீட்டுக்கு வந்ததும் அங்காயப் பொடிய ஒருஸ்பூன் சாப்பிட்டுருவோம். வாரத்துல ஒருநாள் இந்த அங்காயப் பொடியை சாப்பாட்டுல ரெகுலரா சேத்துப்போம். ஞாயிற்றுக்கிழமை மதியம் நாலு ஸ்பூன் அங்காயப் பொடியை சாதத்துல சேத்து ரெண்டு ஸ்பூன் நெய்விட்டு சாப்பிடுவோம். அந்த வாரத்துல உடம்புக்குள்ள சேர்ந்திருக்கிற எல்லா பிரச்சினைகளும் ஓடிப்போயிடும். உணவு ஒவ்வாமை, வயிற்றுவலி, மாதவிடாய் பிரச்சினை, வாந்தி எல்லாமே சரியாயிடும். குழந்தைகளுக்கு இந்தப் பொடியக் கொடுத்தாலே போதும். பூச்சித் தொல்லை இருக்காது. முக்கியமா வெயிட் போடாது. முப்பது வயசுக்கு மேல ஆச்சுல. அதான் சாப்பாட்டு விஷயத்துல சரியா இருக்கணும்னு நினைப்பேன். அதனால காலையில வெறும் வயித்துல வெந்தயம் அரை டீஸ்பூன் வாயில போட்டு தண்ணியக் குடிச்சிடுவேன். உடல் சூடு தணிஞ்சுடும். நைட் பல் தேய்க்கிறதுக்காக நானே ஹோம் மேட் பவுடர் தயார் பண்ணி வைச்சுருக்கேன். ஜாதிக்காய், மாசிக்காய், இந்துப்பு, கிராம்பு, துளசி, புதினா எல்லாத்தையும் வெயில்ல காயப்போட்டு பவுடராக்கி வைச்சிருக்கேன்.

எனக்கு ரெட்டைக் குழந்தங்க. ரெண்டாவது படிக்கிறாங்க. அவங்களுக்கு ஸ்கூலுக்கு விதவிதமா செஞ்சு கொடுக்கணும்ங்றதால டெய்லி ஏதாவது ட்ரை பண்ணிட்டே இருப்பேன். என் சமையலுக்கு என்னோட பொண்ணுங்கதான் ஃபர்ஸ்ட் கமெண்ட் சொல்லுவாங்க. என் சின்னப் பொண்ணு மிளகாய் பொடியும் தயிரும் வச்சு சாப்பிடுவா. நான் பத்திரிகைகளுக்கு எழுதிட்டிருக்கேன். அதுல டிஷ் செஞ்சு வைச்சு போட்டோ எடுக்க வருவாங்க. அப்போ போட்டோ எடுத்து முடிஞ்சதும் என் பொண்ணுங்க அதை சாப்பிடுவாங்க. சில நேரங்கள்ல என்ன டிஷ் செய்யலாம்னு அவங்களே லிஸ்ட் சொல்லுவாங்க. அந்தளவுக்கு ரெண்டு பேரும் சூட்டிகையா இருப்பாங்க.

புதினா துளசி இஞ்சியெல்லாம் சேத்து பேஸ்ட் செஞ்சு வைச்சுக்கிட்டு லெமன் ஜூஸ் பண்ணும்போது கொஞ்சமா சேத்துக்கிட்டா வாசனையாவும் சுவையாவும் இருக்கும். பிள்ளைங்க தினமும் ஸ்கூல் விட்டு வரும்போது ஏதாவது ஒரு ஜூஸ் கண்டிப்பா இருக்கும். தினமும் கலர் கலரா ஜூஸ் செய்யுறதுக்காக பீட்ரூட், கேரட், ஆரஞ்சுனு  அசத்துவேன். நொறுக்குத் தீனிகளும் வீட்டுல செஞ்சதுதான். காராசேவ், மிக்ஸர், ஓமப்பொடி எல்லாம் செஞ்சு வைப்பேன். கசகசா, பேரீச்சம்பழம், நட்ஸ் சேத்து அரைச்சு அதுல நெய் விட்டு தட்டையா உருட்டி செஞ்சு, ஸ்லிம் தட்டைனு அதுக்கு ஒரு பேரும் வச்சிருக்கேன்.

தாத்தா சொன்ன சமையல் குறிப்பு இரகசியத்துல முக்கியமானது,  ‘சமைக்கும்போது அதுல ஒரு ஸ்பூன் அன்பையும் சேத்துக்கிட்டா சுவை அபாரமா இருக்கும்’ புன்னகைக்கிறார் தீபா.

ராகி லாலிபாப்

தேவையான பொருட்கள்: ராகி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், பாதாம், முந்திரி, பேரீச்சம்பழம் - அரை கப் (பொடியாக நறுக்கியது), துருவிய வெல்லம் - ஒரு கப், நெய் - தேவையான அளவு, டூத் பிக் ஸ்டிக் - தேவையான எண்ணிக்கை

செய்முறை: ராகி மாவு, துருவிய தேங்காய் இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பேரீச்சம்பழம் இவற்றை நெய்விட்டு வறுத்துக் கொள்ளவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து டூத் பிக் ஸ்டிக்கில் குத்தி வைத்தால் லாலிபாப் ரெடி

மில்க் மிக்ஸ்

தேவையான பொருட்கள்:

பனங்கற்கண்டு - 1/4 கிலோ, பாதாம் - 50 கிராம், முந்திரி - 50 கிராம், சுக்குத் தூள் - 2 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், ஏலக்காய்  - 4

செய்முறை:

பாதாம் முந்திரி மிளகு ஏலக்காய் அனைத்தையும் எண்ணெய் விடாமல் இளவறுப்பாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் சுக்குத் தூள் பனங்கற்கண்டு சேர்த்து வறுத்தப் பொருட்களுடன் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பாலில் கலந்தும், வெந்நீரில் கலந்தும் பருகலாம்.

பிப்ரவரி, 2016.