சமையல் உலகின் ராணி என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் மல்லிகா பத்ரிநாத். சென்னை போயஸ் தோட்டத்து வீட்டின் வரவேற்பறையில் சினிமாவில் பார்ப்பதைப் போன்ற பழைய காலத்து மாடலில் இருக்கும் லேண்ட்லைன் தொலைபேசி. அந்த அறையைக் கடந்து உள்ளே சென்றால் வீடு முழுக்க அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விருதுகள். அகம் நிறைய புன்னகையுடன் வரவேற்றதை அவரது முகம் கண்ணாடியெனக் காட்ட எளிமையாக பேச ஆரம்பித்தார்.
“இத்தனை பெரிய வளர்ச்சி ஒரு நாளில் சாத்தியமில்லை, எப்படி நீங்கள் சமையல் உலகில் நுழைந்து சாதனை படைத்தீர்கள்?” என்றதும் பளிச்சென்ற புன்னகையுடன், “எனக்கு சொந்த ஊரு சேலம். எங்க வீட்டுல இருபத்தைஞ்சு பேருக்கு மேல இருந்தாங்க. வீட்டு வேலைக்கும் ஆட்கள் இருந்ததால எனக்கு சமையல் அறை பக்கம் வேலையே இல்லை. நான் படிச்சதெல்லாம் பி.எஸ்.சி. ஹோம்சயின்ஸ். நியூட்ரிஷியன் சப்ஜெக்ட் அதுல உண்டு. எனக்கு அதில் ரொம்ப ஈடுபாடுங்கறதால அதுகுறித்து நிறைய தெரிஞ்சுக் கிட்டேன். முதன் முதல்ல கல்லூரிக்குப் போய்தான் சப்பாத்தி மாவு பிசையவே கத்துக்கிட்டேன். படிப்பு முடிச்சதும் திருமணம் ஆகிடுச்சு.
திருமணமாகி சென்னைக்கு 1977-ல் வந்தேன். 1988ல் இருந்து புத்தகங்கள் போட ஆரம்பிச்சேன். அந்த காலத்துல எல்லார் வீட்டுலயும் ஒரு கோல நோட்டும், ஒரு சமையல் குறிப்பு நோட்டும் இருக்கும். நானும் எங்க வீட்டுல இருந்து பாட்டியோட நோட்டோட சேர்த்து நாலைஞ்சு நோட்டுகளை எடுத்துட்டு வந்தேன். அதுல நிறைய ரெசிபிகள் செஞ்சு பார்ப்பேன். பொதுவாகவே உடல்நலம் சார்ந்துதான் எதையுமே செய்வேன். இன்னைக்கு ருசியான உணவுகள்னா ஆரோக்கியம் இல்லாத உணவுகளா இருக்கு. ஆனா என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமான உணவுகளை ருசியா செய்றதைப் பத்திதான் யோசிப்பேன். தவறு செஞ்சு செஞ்சுதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஒருநாள் பண்ண தப்ப மறுநாள் பண்ணாம பாத்துப்பேன். சரியா வந்ததும் அதை நோட்டுல எழுதி வைப்பேன். அதையெல்லாம் தொகுத்து முதன்முதல்ல சைவ குருமா வகைகள்னு ஒரு புத்தகம் நானே ஆந்திர மகிளா சபாவில் வெளியிட்டேன். அதுல சப்பாத்திக்குத் தொட்டுக்குற 100 சைடிஷ் பத்தி எழுதிருந்தேன். அந்த புத்தகம் ஃப்ரண்ட்ஸ் மத்தியில நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது. அதனால இன்னும் வேற வேற தலைப்புகள்ல புத்தகங்கள் போட ஊக்குவிச்சாங்க. அந்த சமயத்துல மீனாட்சியம்மாள் புத்தகம் தவிர பிரபலமான சமையல் புத்தகங்கள் எதுவும் இல்லை. அதுக்கப்புறம் முதன்முதல்ல தூர்தர்ஷன் தொலைக்காட்சியில நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. அதன் பிறகு பத்திரிகைகள்ல எழுத ஆரம்பிச்சேன்” என்பவர் வருடத்திற்கு ஒரு புத்தகம் என இதுவரை முப்பது புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். அனைத்தையும் தனது சொந்த பதிப்பகத்தில் மட்டுமே போட்டிருக்கிறார். டிபன், சட்னி, கிரேவிஸ், மதிய உணவு, பிரியாணி கலவை சாதங்கள், ஓட்ஸ், சோயா, சிறுதானியம் என்று பல வகையான முப்பது புத்தகங்களிலும் எந்த ரெசிபியையும் திரும்ப எழுதியதில்லை என்பது இவரது சிறப்பு. சமீபகாலமாக யூட்யூப் நிகழ்ச்சிகள் செய்துவருகிறார்.
“முதல் புத்தகம் போட்டபோது இதுக்காக ஒவ்வொரு கடையா ஏறி இறங்கனுமா என்று யோசித்தோம். ரெண்டு மூணு புத்தகம் போட்டதும் கடைகள்ல கொடுக்க முயற்சி பண்ணோம். தமிழ்நாட்டுல டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வந்த காலகட்டம் அது. அப்போ மைலாப்பூரில் உள்ள ஒரு ஸ்டோரில் என்னுடைய புத்தகங்களை வைச்சுக்க அனுமதி கேட்டேன். பில் போடுறதுக்கு கியூல நிக்குற இடத்துல ஒரு டேபிளில் புக்கை வைச்சுட்டா பில் போடுறப்போ இதுல ஒரு காபி எடுத்துட்டுப் போவாங்கனு சொன்னதும் அந்த கடைக்காரரும் ஒத்துக்கிட்டார். இது கொஞ்சம் கொஞ்சமா பரவி தமிழகம் முழுக்க என்னோட புத்தகங்கள் கிடைக்க ஆரம்பிச்சுது” என்று பிசினஸை வளர்த்த விதம் குறித்து கூறும் மல்லிகா பத்ரிநாத் தென்னிந்தியாவில் சமையல் புத்தகங்களில் ‘பெஸ்ட் செல்லர்’ லிஸ்ட்டில் இருந்தவர்.
இவரது புத்தகங்களை படித்தவர்கள் பாராட்டுமழையில் இவரை நனைத்துக் கொண்டே இருக்கின்றனர் என்பதற்கு மலையென வந்து குவியும் கடிதங்களே சாட்சி. ’என்னோட புத்தகங்கள் வெளிநாடுகள்லயும் நிறைய பேர்கிட்ட இருக்கு. சில பேர் பொண்ணுக்கு சீர் கொடுக்கும்போது என் புத்தகத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்காங்க. கல்யாண சமையல் காண்ட்ராக்ட் கொடுக்கும்போது மல்லிகாவோட புத்தகமும் கொண்டு வந்துடுங்கனு சொல்லிடுவாங்க. தென்னிந்திய சமையல் கலைஞர் சங்கத்தில் இருந்து ‘அறுசுவை ஞான கலாமணி’ என்ற பட்டமே கொடுத்திருக்கிறார்கள்.
சிறுதொழில் செய்றவங்க என்னோட புத்தகம் படிச்சுட்டு விதவிதமான முறுக்கு செஞ்சு விக்கிறோம், இப்ப பிஸினஸ் ரொம்ப நல்லா போகுதுனு கடிதம் போட்டிருக்காங்க. காலேஜ் போற பொண்ணுங்க தனியா தங்கும்போது என் புத்தகத்தை வைச்சு சமைக்க கத்துக்கிறாங்க. வீட்டில் ஊறுகாய் போடுறவங்க, ரோட்டுல சூப் விக்கிறவங்கனு அவங்க பிசினஸ் வளர்றதுக்கு என்னோட புத்தகங்கள் உதவியிருக்கு” என்பவர் சென்னையில் மட்டுமே கிடைக்கக்கூடிய வகையில் எம்.ஹெச்.பி எனும் மசாலா கம்பெனியையும் நடத்தி வருகிறார்.
“மத்தவங்க எழுதுன ரெபிசிகளை பெரும்பாலும் படிச்சதும் இல்லை, தொலைக்காட்சியில் பார்த்ததுமில்லை. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் இதைப் போல செய்யக்கூடாதுனு யோசிப்பேன். இப்பலாம் இருக்குற மாதிரி அந்த காலத்துல கிடையாது. இன்னைக்கு இணையத்தில் கேசரினு போட்டா நூறு கேசரி வரிசையா வருது. ஆனா அன்னைக்கு அப்டி கிடையாது. புத்தகங்கள் மட்டும்தான் இருந்துச்சு. அப்போலாம் 10,000 பிரதிகளுக்கு மேல புத்தகங்கள் போடுவோம். இன்னைக்கு 2000தான் போடுறோம். இன்னைக்கு போட்டிகளும் அதிகம். நிறைய பேர் வந்துட்டாங்க. ஆனாலும் இன்னைக்கு நிறைய வாய்ப்புகளும் இருக்கிறத மறுக்க முடியாது”என்கிறார் மல்லிகா.
“என் கணவர் ஒரு ஆடிட்டர். எனக்கு ரெண்டு பசங்க. திருமணமாகி ஒருத்தர் பெங்களூரிலும், ஒருத்தர் வெளிநாட்டிலும் இருக்காங்க. எனது பேரப்பிள்ளைகள் நான் வர்றேன்னு சொல்லிட்டா போதும் ஒரு பெரிய லிஸ்ட்டே ரெடிபண்ணிடுவாங்க. இதெல்லாம் பண்ணித் தருவேன்னு எங்க ஃப்ரண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன், செஞ்சு தந்திடுவீங்கல்ல.. என்று
சொல்லிடுவான். நானும் அவன் என்னென்ன கேட்டானோ எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துடுவேன்” என்பவர் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறார்.
“சாதிக்கணும் நினைக்கிறவங்க எந்த துறையில சாதிக்கணும்னு நினைக்கிறாங்களோ அதைப் பத்தி நிறைய விஷயங்களை தெரிஞ்சு வைச்சுக்கிறது நல்லது. அதே மாதிரி நாம தேர்ந்தெடுக்கிற துறையில ஏற்கனவே சாதிச்சிட்டிருக்கிறவங்களை சந்திச்சு அவங்களோட வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் என்ன காரணம்னு தெரிஞ்சுக்கணும். அடுத்தது ஒரு துறையை நாமத் தேர்ந்தெடுத்த பிறகு அதுல இருந்து பின்வாங்க கூடாது. எந்தத் துறையிலும் ஏற்ற இறக்கம் இல்லாம இருக்காது. தொடர்ந்து அந்த துறையில பயணிச்சுட் டிருக்கும்போதுதான் நிறைய கத்துக்க முடியும். என்ன பிரச்சினை வந்தாலும் அதைத்தாண்டி போய்ட்டே இருக்கணும். இதுல எனக்கு தோல்வி வந்துடுச்சுனு வேற வேற துறையா மாறிக்கிட்டு இருக்கும்போது எல்லாத்தையும் முதன்முறையா கத்துக்க வேண்டியிருக்கும்.
என்னுடைய வெற்றிக்குக் காரணம் கடின உழைப்பு, என் கணவரோட ஒத்துழைப்பு. நான் ஜீரோனா அவரு பக்கத்துல இருக்குற ஒண்ணு மாதிரி. அதாவது என்னோட வெற்றிக்குப் பின்னாலனு சொல்றதை விட என் வெற்றிக்கு பக்கத்துணையா இருக்கிறவருனு சொல்றதைத்தான் விரும்புறேன்.
பெரும்பாலும் எல்லாருமே எதுலயாவது சின்னச் சின்ன தவறுகள் பண்றதுண்டு. ஆனா அதை சுட்டிக்காட்டும்போது அதை ஏத்துக்கணும். நம்ம நலன் மேல அக்கறை இருக்கிற ஒருத்தர்தான் தவறுகளைச் சுட்டிக் காட்ட முடியும். ஆனா இந்தக் கால இளைய தலைமுறை சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட சோர்ந்துடுறாங்க. அப்படி இருக்கக்கூடாது. நம்ம தவறை சுட்டிக்காட்டும்போது திருத்திக்கணும். என் தவறுகளை சுட்டிக்காட்டி என்னை சரியாக்கியவர் என் கணவர்.
அதனால எந்த துறையாக இருந்தாலும் கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, துறைசார்ந்த அறிவு, தன்னம்பிக்கை இதெல்லாம் கண்டிப்பா இருக்கணும். இதுதான் வெற்றிக்கான மந்திரமா பாக்குறேன். எப்போதும் நேர்மறைச் சிந்தனையோட இருக்கணும். எந்தக் கஷ்டம் வந்தாலும் சோர்ந்துபோயிடக் கூடாது. அடுத்தது என்னனு யோசிச்சுப் போகணும். அப்பதான் ஜெயிக்க முடியும்” என்கிற மல்லிகா இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் சுவை - அறுசுவை எனும் நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.
தேவையான பொருட்கள்: அரைக்கீரை - பொடியாக நறுக்கியது, வெங்காயம் பொடியாக நறுக்கியது, அரிசி சாதம் ஒரு கப், சிவப்பு மிளகாய் - 5, க டு கு - சி றி த ள வு , உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், ஆளிவிதை -இரண்டு ஸ்பூன், எள் - ஒன்றரை டீஸ்பூன் செய்முறை: உ ளு த் த ம் ப ரு ப்பை யு ம் , எ ள்ளை யு ம் ஆளிவிதையையும் தனித்தனியே வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். வெங்காயம், அரைக்- கீரையைச் சேர்த்து வதக்கி பின்னர் சாதத்தைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் வறுத்த பொடிகளைச் சேர்த்து சூடாக கிளறி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: ஆளிவிதையில் ஒமேகா3 அதிகம் இருக்- கிறது. ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் பால் சேர்த்தோ, மோர் சேர்த்தோ சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. ஆளி விதையை உளுந்துடன் சேர்த்து இட்லிப் பொடி செய்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: ரவை - ஒரு கப், சர்க்கரை ஒரு கப், சப்போட்டா - 6 அல்லது 7, நெய் - சிறிதளவு, தண்ணீர் - 2 - கப் ஏலக்காய் தூள் - சிறிதளவு, ஜாதிக்காய் தூள் - சிறிதளவு, முந்திரி, பாதாம் - தேவையான அளவு செய்முறை: சப்போட்டாவைத் தோல் மற்றும் விதை நீக்கி கூழாக்கி வைத்துக் கொள்ளவும். முதலில் ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீரைச் சேர்க்கவும். முக்கால்பாகம் வெந்தபிறகு சர்க்கரையைச் சேர்க்கவும். பின்னர் சப்போட்டா விழுது சேர்க்கவும். ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்து சேர்த்து இறக்கவும். ஃபர்பி ட்ரேயில் வைத்துக் கட் செய்து கொடுக்கலாம்.
குறிப்பு: ஒரு கப் சர்க்கரைக்கு பதிலாக பாதியளவு நாட்டுச்சர்க்கரையும், பாதி அளவு சர்க்கரையும் எடுத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
க த் த ரி க் கா ய் - ஏழு அல்லது எட்டு, பெரிய வெங்காயம் - ஒன்று, புளி கரைசல் - தேவையான அளவு, சாம்பார் பொடி - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - தேவையான அளவு செய்முறை: ஒரே அளவிலான கத்தரிக்காய் வாங்கி காம்பு பகுதியை நீக்கி முழுதாக இருக்கும்படி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்துடன் புளி கரைசல், வெல்லம் சேர்த்து கத்தரிக்காயில் வைத்து ஸ்டஃப் செய்துகொள்ளவும். இதுவே வாணலியில் வைத்தால் முதலில் எண்ணெயில் தாளித்துக் கொட்டலாம். மைக்ரோவேவ் ஓவனில் செய்யும்போது முதலில் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதனால் தாளிக்காமல் ஸ்டஃப் செய்து வைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்க வேண்டும். ஏழு நிமிடத்திற்குள் வெந்துவிடும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து, அதற்கு பிறகு கொஞ்சமாய் எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் திறந்து வேக வைத்து இறக்கவும். வெளியில் வந்திருக்கும் வெங்காயத்தை மீண்டும் கத்தரிக்காய்க்குள் எடுத்து வைத்து பரிமாறலாம். வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும்போது எண்ணெய் குறைவாக சேர்த்தால் போதும். உப்பு சாதாரணமாக சேர்ப்பதைவிட மிகச் சிறிதளவே அதுவும் கடைசியில் சேர்க்கவேண்டும்.