ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்களுக்கு நடிப்புப் பயிற்சி வழங்கிவருகிறார் விஜயலட்சுமி. மதுரையைச் சேர்ந்த இவர் மூன்று குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார். இதுதவிர மேடை நாடகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். அதே போல் சமையல் கலையிலும் கைதேர்ந்தவர். அவர் சமையலுக்குள் நுழைந்த விதம் குறித்து பேசுகிறார்.
“எனக்கு கல்லூரி முடிக்கிற வரைக்குமே சமையல்னா என்னனே தெரியாது. ஒரு சுடுதண்ணீ கூட விஜிக்கு வைக்கத் தெரியாதுனு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. எங்க வீட்டுல மொத்தம் அஞ்சு பொண்ணுங்க. எங்க அண்ணனுக்கும் எனக்குமே 20 வருஷ இடைவெளி. அண்ணன் காலேஜ் படிக்கும்போதுதான் நான் பிறந்தேன். அதனால வீட்டுல கடைக்குட்டினு பயங்கர செல்லம். நான் காலேஜ் படிக்கும்போது எல்லாருமே கல்யாணமாகிப் போயிட்டாங்க. காலேஜ் போகும்போது கூட அம்மாதான் சோறூட்டி விடுவாங்க. அந்தளவுக்கு ரொம்ப செல்லம் கொடுப்பாங்க எங்கவீட்டுல.
எனக்கு இப்படித்தான் சுவை இருக்கணும்னு எந்த விதிகளும் கிடையாது. அதனால 2011 சென்னை வந்ததும் ஹாஸ்டல்ல தங்கினேன். அதனால சாப்பாடு விஷயத்துல பெரிசா அலட்டிக்க மாட்டேன். 2013லதான் வீடு பாத்து தனியா வர ஆரம்பிச்சேன். அப்பதான் நான் சமையலுக்குள்ள நுழைய ஆரம்பிக்கிறேன். இதுல ரொம்ப ஆச்சர்யமான விஷயம் என்னனா எங்க அம்மா கைப்பக்குவம் எனக்கு அப்டியே வந்துடுச்சு. எங்க அம்மா போன்லதான் சமையல் குறிப்புகள் சொல்லுவாங்க. ஆனாலும் அந்த பக்குவம் வந்தது எனக்கு மட்டும்தான் அப்டித் தெரியுதோனு நினைச்சுட்டு இருந்தேன். ஊர்ல இருந்து அம்மா அப்பா வந்தபோது சாப்பிட்டுட்டு அவங்களும் அதையேதான் சொன்னாங்க.
இன்னைக்கு வரைக்கும் சாம்பார் பொடி, மசாலா பொடி, கறிக்குழம்பு பொடினு எதுவுமே வெளில வாங்குனதில்லை. எல்லாமே வீட்டுல செஞ்சதுதான். அம்மா என்னன்ன அளவுகள்ல பொருட்கள் எல்லாம் சேப்பாங்கனு கேட்டு எழுதி வாங்கி அதைத்தான் நாங்க அக்கா தங்கச்சி அஞ்சுபேரும் பயன்படுத்துறோம். எங்க வீட்டுல எல்லாத்துக்கும் ஒரேபொடிதான். மிளகாய், மல்லி, மஞ்சள், சீரகம், கடலைப்பருப்பு, பச்சரிசி, சோம்புனு எல்லாத்தையும் எண்ணெய் ஊத்தாம வெறும் வாணலில வறுத்து அரைச்சு வச்சிக்குவேன். அது ஒரு வருஷத்துக்கு ஒருமுறைதான் அரைப்போம். அது கெடாம இருக்கும். எங்க அக்காக்கள் ஆறுமாசத்துக்கு ஒருமுறை அரைச்சுப்பாங்க. என்னன்ன அரைக்கணும்ங்ற லிஸ்ட் எங்க எல்லார் வீட்டுலயும் ஒரு பேப்பர்ல எழுதி வைச்சிருக்கோம்.
அதேமாதிரி எங்க வீட்டு சமையல்ல என்ன பண்ணாலும் சீரகம் இருக்கும். உப்புமா செஞ்சா கூட சீரகம் போடுவேன். ஏன்னா சீரகம் ஒரு முக்கியமான உணவுப் பொருள்னு அம்மா சொல்லிக் கொடுத்தாங்க.. எந்த உணவுலயும் சீரகம் இருக்கிறது எப்படி முக்கியமோ அதுமாதிரி பட்டை, கிராம்பு, ஏலம், அஜினோமோட்டோ எதுவுமே என்னோட சமையல்ல சேர்த்ததே இல்லை. அஞ்சறைப்பெட்டியில எது இருக்கோ இல்லையோ சீரகம் இருக்கும். எங்க நாலு அக்காவீட்டுலயுமே அப்டித்தான்.
இன்னைக்கு வரைக்கும் பீட்சா, பர்கர், குளிர்பானங்கள்னு எதுவுமே குடிச்சடில்லை. அதேபோல சாப்பிட எது இருக்கோ இல்லையோ, வாரத்துல ரெண்டு மூணுநாள் ராஜ்மா, கொண்டக் கடலை, மொச்சை இப்படினு பயறுக் குழம்பு வச்சிடுவேன். இப்ப சமையல்ல என்ன சந்தேகம்னாலும் எங்க அக்காக்களுக்குத்தான் போன் பண்ணுவேன். எங்க அம்மா, நாலு அக்கா, நான் எங்க எல்லாருடைய சமையல் முறையும் பக்குவமும் ஒரே மாதிரிதான் இருக்கும். நாங்க யாராவது புதுசா முயற்சி பண்ணா கூட அதை ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்குவோம்.
எனக்கு மீன்குழம்பு ரொம்ப பிடிக்கும். அதுலயும் முதல்நாள் வைச்சு மறுநாள் சாப்பிடுவோம். இல்லனா காலைல வைச்சுட்டு மதியம் கூட சாப்பிடுவோம். மத்த குழம்புனா காய் வெந்தபிறகுதான் புளி ஊத்தனும். அதே மீன்குழம்புனா புளி ஊத்தி கொதிச்ச பிறகுதான் மீன் போடனும். அதேபோல மண்சட்டியில்தான் செய்வோம். கல் உப்புதான் பயன்படுத்துவோம்.
குழிப்பணியாரம், காரப்பணியாரம்னு மண்சார்ந்த உணவுகள்தான் பிடிக்கும். மண்பானையில் சமைக்கும்போது எது சமைத்தாலும் உள்ளூர வேகும். நல்லா வெந்தாலும் தூளாகாது. அதனாலதான் சுவை வித்தியாசமா இருக்கு. மண்பானைக்கு மரக்கரண்டிதான் பயன்படுத்துவோம். என்கிறார்.
விருதுநகர் மீன்குழம்பு :
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 200கிராம், காய்ந்த மிளகாய் - கை நிறைய, சீரகம்--இரண்டு ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, மீன் - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். மண் சட்டியில் எண்ணையை ஊற்றியதும் அப்படியே அரைத்த கலவையைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் கரைத்த புளியை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு மீனை சேர்த்து ஐந்து நிமிடத்தில் இறக்கவும்.
மதுரை மீன்குழம்பு : தேவையான பொருட்கள்:
மீன் தேவையான அளவு, தக்காளி தேவையான அளவு, சின்ன வெங்காயம் தேவையான அளவு, பூண்டு, தேவையான அளவு, சீரகம் ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், புளி தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் – நான்கைந்து, மிளகாய் பொடி – தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கிய பின் கருவேப்பிலை போடவும். அதன்பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின்னர் மிளகாய்ப்பொடியும் உப்பும் சேர்த்து அந்த எண்ணெயிலேயே வதக்கவும். அதனுடன் கரைத்த புளி ஊற்றவும். இந்த கரைசல் நன்கு கொதித்ததும் மீனைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். இறக்கி வைத்து கொத்தமல்லி தூவவும்.
டிசம்பர், 2016.