சமையல் அறை

என் சமையலறையில் : ஸ்ரீபெரியகருப்பன்

குழந்தைகளை சமையலுக்கு பழக்குங்கள்!

சே.சரஸ்வதி

குழந்தைகளை சமையலுக்கு பழக்குங்கள்!

தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகள், FOODOLOGYஎன்ற ஸ்டூடியோவின்  மூலம் சமையல் பயிற்சி வகுப்புகள், விழாக்கள், சந்திப்புகளை ஒருங்கிணைத்தல், உலக உணவுகள் உள்நாட்டு ருசியில் என்ற தலைப்பில் சமையல் புத்தகம், மாலை வேலையில் ஐடி பணி என பம்பரமாக சுழல்பவர் ஸ்ரீபெரியகருப்பன். அடையாறில் அவரது ஸ்டுடியோவில் சந்தித்தோம். அப்போதுதான் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு செய்த முட்டைக்கோஸ் சாதத்தை இறக்கி வைத்து அவர்களுக்கு பாய் சொல்லி நமக்கு ஹாய் சொன்னார்.

“பிறந்தது தூத்துக்குடி. அப்பாவுக்கு பாபா அணுஆராய்ச்சி மையத்துல வேலை. தூத்துக்குடில இருந்து நாங்க கொஞ்சநாள்ல சென்னைக்கு இடம்பெயர்ந்து வந்துட்டோம். திநகர் ஹோலிக்ராஸ் ஸ்கூல்லதான் படிச்சேன். ஐடி முடிச்சுட்டு வேலைக்கு வெளிநாடு போய்ட்டேன். அந்த சமயத்துல எனக்கு கல்யாணம் பேசி முடிச்சாங்க. என் வீட்டுக்காரர் அருண் வெளிநாடுகளிலேயே படிச்சு வளர்ந்தவர். அவருக்கு சொந்த ஊர் காரைக்குடி பக்கம் கொத்தமங்கலம் கிராமம். பல படங்கள்ல கிராமத்து வீடுனா கொத்தமங்கலம் வீட்டத்தான் காட்டுவாங்க. எங்க அத்தையும் மாமாவும் அதை படப்பிடிப்புக்காக விட்டுருக்காங்க. ஆனா நாங்க சின்ன விசேஷம்னாலும் சொந்தக்காரங்க சகிதம் அங்கே ஆஜர் ஆகிடுவோம். காதுகுத்து, கல்யாணம், பிறந்தநாள்னு எதுவா இருந்தாலும் அங்கதான் கொண்டாடுவோம்.

எனக்கு கல்யாணம் ஆனதும் அருணோட சொந்தக்காரங்க விருந்துக்குக் கூப்பிட்டாங்க. அப்போ அவரோட இலைல வைச்ச ஒரு காய்கறிகள கூட தொடல. வெறும் அப்பளம், தயிர் மட்டும்தான் எடுத்துக்கிட்டார். எனக்கு அப்பவே என்னதான் இவர் சாப்பிடுவாருங்கற மாதிரி ஆகிடுச்சு. விருந்து வைச்சவங்க

சைவம். அதனால இவருக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்னு நினைச்சுக் கிட்டேன். கல்யாணம் ஆனதும் வெளிநாடு போய்ட்டோம்.

அப்பதான் இவருக்கு இந்திய உணவுகளான தோசை, இட்லி, சாம்பார், சட்னி, பருப்பு, காய்கறி எதுவுமே பிடிக்காதுன்னு தெரியும். வெளிநாட்டுல இருக்கும்போது அடிக்கடி ஹோட்டல்ல போய் சாப்பிடுவோம். அப்போ அவர் தாய், மெக்ஸிகன், சூசி, சைனீஸ் வகைகளா ஆர்டர் பண்ணுவாரு. முதல்ல அதையெல்லாம் சாப்பிட எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனா இவருக்காக அந்த செய்முறையைக் கேட்டுவந்து வீட்டுல செஞ்சுக் கொடுப்பேன். அப்படியே படிப்படியா ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளையும் கத்துக்கிட்டு நம்ம நாட்டு சுவைக்கு ஏத்த மாதிரி செய்ய ஆரம்பிச்சேன். இவரைக் காய்கறி சாப்பிட வைக்கிறதுக்காகவே வெளிநாட்டு சுவையில நம்ம காய்கறிகள செஞ்சு கொடுத்தேன். இவரும் சாப்பிட ஆரம்பிச்சார். ஆனா எனக்கு வெளிநாட்டு உணவுகளை நம்ம சுவையில சாப்பிட விருப்பம். அதனால அதையும் முயற்சி பண்ணேன். இப்ப எனக்கு 16 நாடுகளுடைய உணவுமுறைகள் அத்துபடி.

இட்லில மஞ்சூரியன் செய்றது, தோசைனா கலராவும், வெவ்வேறு வடிவமாவும் செய்றது எங்கவீட்டுல பிடிக்கும். ஜப்பான் உணவு முறையில் சுஷினு சொல்வாங்க. அதுல சீவிட் அப்டினு ஒரு உணவு. ஜப்பான்ல கடல்பாசில, வொயிட் ரைஸ், வேக வைக்காத மீன் ரெண்டையும் வைச்சு சுத்தி சாப்பிடுறதுதான் சீவிட். நம்ம ஊர்ல செய்யும்போது கடல்பாசில சாதமும், வேக வைச்ச நண்டு சதையும் சேத்து செய்வேன்.

சிக்கன்ல மட்டும் நூறு வெரைட்டி பண்ணுவேன். புதுசா நிறைய உணவுகளையும் முயற்சி செஞ்சுருக்கேன். என்னோட பிள்ளைகள் தப்தி, சுக்ரீவ் ரெண்டு பேரும் சமையல்னா ஜாலியா செய்வாங்க. பொதுவா எல்லோரும் பிள்ளைகளையும் சமையல்ல ஈடுபடுத்தணும். முப்பதுநாளும் ஹோட்டல்ல சாப்பிட முடியுமா? வீட்டுல செய்ய வேண்டிய கட்டாயம் இருக்குல்ல. அதனால வீட்டுல சின்ன வயசுல இருந்தே அவஙகளையும் பழக்கணும்.

நான் என்னோட குழந்தைங்கள கடைக்குக் கூட்டிப்போய் காய்கறிகள் வாங்கி வருவேன். வீட்டுக்கு வந்ததும் அவங்களும் பச்சை மிளகாய் காம்பக் கிள்ளிக் கொடுக்குறது, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை உருவி கொடுக்குறதுனு சின்ன சின்ன வேலைகள் செய்வாங்க. அவங்களையே அடுப்பில இருக்குற பாத்திரத்துல போட வைப்பேன். அப்ப வர்ற சத்தத்த கேட்டு அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும். அவங்களும் சமையல்ல உதவி பண்ணும்போது அவங்களே விரும்பி சாப்பிடுவாங்க. இது நீ செஞ்ச சாப்பாடு. நீ சாப்பிடுனு சொல்லத் தேவையே இல்லை. குழந்தைகளும் அடம்பிடிக்க மாட்டாங்க. ஆர்வமா சாப்பிடுவாங்க. இது குழந்தைகளை சாப்பிட வைக்கிற சிம்பிள் டெக்னிக்’ என்று உற்சாகமாக பேசுகிறார் ஸ்ரீ பெரியகருப்பன்.

***  

சமையல் டிப்ஸ்

பஜ்ஜி செய்யும்போது தண்ணீருக்குப் பதிலாக கோலிசோடா ஊற்றி பிசைந்து செய்தால் மொறுமொறுப்பு கூடுதலாக இருக்கும். பாயாசம் செய்யும்போது சர்க்கரைக்கு பதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துக்கொண்டால் இனிப்பும், சுவையும் கூடுதலாக இருக்கும். எந்த காய்கறி கலவை சாதமாக இருந்தாலும் தேங்காய்ப்பால் சேர்த்தால் அதன் சுவையே அலாதிதான்.

***

 ஹனி சிக்கன் : தேவையான பொருட்கள்:

சிக்கன் : 1/2 கிலோ, இஞ்சி பூண்டு விழுது : 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் : 1 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, தேன் சிறிதளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, தேன் சேர்த்து பிரட்டி வைக்கவும். அரைமணி நேரம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஆயுர்வேதத்தில் தேனை சூடுபடுத்தக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் வெளிநாட்டில் தேன் சேர்த்துதான் செய்கிறார்கள்

***

கற்றாழை ஜூஸ் :  தேவையான பொருட்கள்

சோற்றுக்கற்றாழை : 2 கீற்றுகள் சீரகம்: சிறிதளவு, பெருங்காயம்: சிறிதளவு, இஞ்சி: சிறிதளவு, பச்சை மிளகாய்: சிறிதளவு, உப்பு: சிறிதளவு, தயிர் சிறிதளவு. பனங்கல்கண்டு: சிறிதளவு

செய்முறை

சோற்றுக்கற்றாழையை தோல் சீவி விட்டு உள்ளே உள்ள சதையை நறுக்கி மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.  கோடைக்கேற்ற பானம் இது.

***

பன்னீர் பாயாசம் :தேவையான பொருட்கள்

பன்னீர் -1/2 பாக்கெட், பால் - ஒரு லிட்டர், மில்க்மெய்டு - 1/2 கப், பாதாம் - 15 --&20, முந்திரி - 10 -& 15, குங்குமப்பூ - தேவையான அளவு, ஏலக்காய் பவுடர் - தேவையான அளவு, நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாகக் காய்ச்சவும். இதில் மில்க்மெய்டு மற்றும் துருவிய பன்னீரைச் சேர்க்கவும். பிறகு இதில் ஏலக்காய் பொடி, பாலில் ஊறவைத்த குங்குமப்பூ, முந்திரி, பாதாம், சேர்த்து கிளறி இறக்கினால் பன்னீர் பாயாசம் ரெடி

மில்க்மெய்டு இருப்பதால் சர்க்கரை தேவையில்லை. கூடுதலாக வேண்டுமெனில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். ஆறிய பிறகு ஃபிரிட்ஜில் வைத்து குளிரவைத்தும் பரிமாறலாம்.

மே, 2016.