சென்னை லலித் கலா அகடாமியில் நடைபெற்ற ஓவிய, சிற்பக் கண்காட்சி 
இலக்கியம்

80 படைப்பாளிகள் + 200 படைப்புகள்... உலகத்தரத்தில் ஓவியக் கண்காட்சி!

தா.பிரகாஷ்

“கலை எல்லோருக்குமானது; மகிழ்வைத் தரக்கூடியது; சிந்திக்கச் சொல்லும்!” - சென்னை லலித் கலா அகடாமியில் எண்பதுக்கும் மேற்பட்ட ஓவிய, சிற்பக் கலைஞர்களின் முக்கியப் படைப்புகளைக் காட்சிப்படுத்திய ஓவியர் விஸ்வத்தின் வார்த்தைகள் இவை!

பல்லவா ஓவியர்கள் கிராமம் ஒருங்கிணைத்த ஓவிய, சிற்பக் கண்காட்சி நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை சென்னை லலித் கலா அகடாமியில் நடைபெற்றது. கண்காட்சியோடு பல்வேறு ஆளுமைகளின் உரைகளும் ஓவியர்கள் – பார்வையாளர்கள் சந்திப்பு, மூத்த படைப்பாளிக்குப் பாராட்டு என மிக நேர்த்தியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அபூர்வ நிகழ்வு இது!

“ஓராண்டாக நான் வரைந்த ஓவியங்களை மட்டும் காட்சிப்படுத்த நினைத்தேன். பிறகு என்னுடைய நண்பர்கள், சக ஓவியர்கள், இளம் ஓவியர்கள், காலமான ஓவியர்களின் படைப்புகளையும் காட்சிப்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

என்னுடைய 32 ஓவியங்கள், ராமனுடைய 15 ஓவியங்கள், வில்லேஜ் மூக்கையாவுடைய 20 ஓவியங்கள் என மொத்தம் 83 ஓவிய, சிற்ப கலைஞர்களின் இருநூறுக்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைத்தோம்.

எனக்கு ஆசிரியராக இருந்த, என்னோடு படித்த, என்னிடம் கற்றுக் கொண்ட, என்னிடம் பார்த்துப் பழகிய பலரின் படைப்புகள் இடம்பெற்றது. இது முதல் முயற்சி.” என்கிறார் நிகழ்வை ஒருங்கிணைத்த மூத்த ஓவியர் விஸ்வம்.

கண்காட்சியில் மறைந்த ஓவியர்கள் வீர. சந்தானம், எம். பாலசுப்ரமணியம், வில்லேஜ் மூக்கையா, மு. நடேஷ் ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

ஓவியர் சுஜாதா நாராயணன்

முதல் முறையாக தன் ஓவியத்தை காட்சிக்கு வைத்திருந்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சுஜாதா நாராயணனிடம் பேசினோம், “நான் ஓவியராக காரணம் என்னுடைய அம்மாதான். ரொம்ப நல்லா ஓவியம் வரைவாங்க. கொரோனா காலத்தில்தான் ஓவியங்கள் வரையத் தொடங்கினேன். அந்த சமயத்தில் கலைஞர்கள், படைப்பாளிகள் அவர்களின் படைப்புகளை நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்வார்கள். அப்படி நானும் எனது ஓவியங்களை நண்பர்களுக்கு அனுப்பினேன். அந்த சமயத்தில் கமல்சாருடன் வேலைப் பார்த்ததால், அவருக்கும் அனுப்பினேன். அவருக்கு நான் வரைந்த கறுப்பு வெள்ளை ஓவியங்கள் பிடித்ததாக சொன்னார். நிறத்தில் என்ன மாற்றங்களைச் செய்யலாம் என்றும் ஐடியா கொடுப்பார். ’இதை செய்யாதே… இது வராது’ என்று அவர் சொன்னதில்லை. அது எனக்கு உத்வேகமாக இருந்தது. இதே ஊக்கம் என் நண்பர்களிடமிருந்தும் வந்தது. இதுதான் என்னை நிறைய கற்றுக் கொள்ள வைத்தது. நல்ல அடித்தளத்தைக் கொடுத்தது. இப்படித்தொடங்கிய என்னுடைய ஓவிய பயணம், லலித் கலா அகடாமியில் நான் வரைந்த ஓவியம் காட்சிப்படுத்தும் இடத்துக்கு வந்து சேர்த்திருக்கிறது. இந்த கண்காட்சியில் 17 பெண் ஓவியர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.” என நெகிழ்வுடன் பேசிய சுஜாதாவின் கம்பீரமான ஆண்டாளும் அழகான தாமரைக் குளமும் ரம்மியமாக இருந்தன.

ஓவியர் கே.ஆர். கார்த்திகேயன்

கண்காட்சியில் தனது மூன்று ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்த ஓவியர் கே.ஆர். கார்த்திகேயனிடம் பேசினோம், “என்னுடைய ஓவியங்கள் இயற்கை சார்ந்தே இருக்கும். ‘ட்ரீ ஆஃப் லைஃப்’என்ற கான்செப்டில் ஓவியங்கள் வரைகிறேன். நான் வரைந்துள்ள மரத்தில் பழங்கள், கிளிகள், பூக்கள், இலைகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். நாம் பயன்படுத்துகிற, யாரும் கண்டுகொள்ளாத பூக்களை ஓவியத்தில் பயன்படுத்தியுள்ளேன். இந்த சமூகத்தில் கண்டுகொள்ளாத மனிதர்களை அது பிரதிபலிக்கிறது. ஏற்றத்தாழ்வு இல்லாமல் மனிதர்கள் பயணிக்க வேண்டும் என்பதை என் ஓவியங்கள் வலியுறுத்துகின்றன.” என பொறுப்போடு பேசினார்.

இந்த கண்காட்சியில் டெல்லி, மேற்குவங்கம், ஹைதராபாத், ஒரிசா, பாண்டிச்சேரி என இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்களின் ஆயில் பெயிண்டிங்ஸ், அக்கர்லிக்ஸ் பெயிண்டிங்ஸ், மிக்ஸ்ட் மீடியம், வாட்டர் கலர் ஓவியங்கள் கேலரியை அலங்கரித்தோடு, சிற்பங்களும் கவர்ந்தன. மேலும், கவின் கலைக்கல்லூரி மாணவர்களின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் பல்லவா ஓவியர்கள் கிராமத்தை தொடங்கிய டாக்டர் அருணா பிள்ளை, சிற்பி சு.முருகேசன், நவீன ஓவியர் பொன்ரகுநாதன் ஆகியோருக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.

ஓவியர் விஸ்வம்

நிகழ்வை செறிவாக ஒருங்கிணைத்திருந்த விஸ்வத்திடம் ஓவியம் குறித்தும் அவரின் படைப்பாக்கம் குறித்து கேட்டோம், “பள்ளிக் கூடத்தில் எண்ணையும் எழுத்தையும் சொல்லித்தந்தார்கள். ஆனால், நிறங்களைப் பற்றி சொல்லித்தரவில்லை. சொல்லிக் கொடுக்கப்படாத கலையை வாழ்க்கையாகக் கொண்டவர்கள் ஓவியர்கள். மற்ற கலை வடிவங்கள் போல் அல்ல ஓவியம்.

நான் பத்து ஓவியங்கள் வரைகிறேன் என்றால், முதல் ஓவியத்துக்கும் இரண்டாவது ஓவியத்துக்கும் தொடர்பு இருக்கும். இந்த தொடர்பு அடுத்தடுத்தடுத்த ஓவியங்களில் இருந்தாலும் முதல் ஓவியத்துக்கும் பத்தாவது ஓவியத்துக்கும் தொடர்பு இருக்காது.

என்னுடைய எல்லா ஓவியங்களிலும் என்னுடைய அடையாளம் இருக்கும். பஞ்ச பூதங்களை பிரதிபலிக்க நினைக்கிறேன். கலை என்பது கணக்கல்ல. அது மிக அழகானது. ” என்கிறார் விஸ்வம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram