ரவிபேலட்
இலக்கியம்

அம்மைக் குழவி

எழுத்து: அறிவுமதி தூரிகை: ரவிபேலட்

அறிவுமதி

குழவித் தீம்நீர் (பெரும்பாணாற்றுப்படை 357)

தமிழ் நம் தாய்மொழி
மட்டுமன்று.
தாய்மை
மொழியும் கூட!

ஆம்

தாய்மொழி
‘இளம் பிறை'
என்பதைத்
தாய்மை மொழி
‘திங்கள் குழவி’
என்கிறது.

தாய் மொழி
‘இளநீர்’ என்பதைத்
தாய்மை மொழி
‘குழவித் தீம் நீர்’
என்கிறது.

தாய் மொழி
இளவேனில்
என்பதைத்
தாய்மை
மொழி
‘குழவி வேனில்’
என்கிறது.

நாம் பயன்படுத்திய
‘அம்மிக் கல்’
நினைவிருக்கிறதா?

இருக்கிறதே!

கீழே படுத்திருப்பது
பெரிய கல்…
அதனை அம்மி
என்பார்கள்.

அதன்மேலே
உருள்வது
சிறிய கல்.

அதனைச் சில நேரம்
‘குழவி’
என்றும் சொல்வார்கள்.

பாதி உண்மைக்கு
வந்துவிட்டாய்.

மீதி
உண்மையையும்
சொல்லட்டுமா?

சொல்… சொல்…

மேலே உருள்வது
குழவி
என்றால்
கீழே படுத்திருப்பது
அம்மி… அன்று.

அம்மை!

ஆம்… படுத்திருக்கும்
அம்மாவின் மார்பில்
உருண்டு
விளையாடும்
குழந்தை போல்
உள்ளதால்…

எம்
தாய்மைத் தமிழில்
எப்படிச்
சொல்லி இருக்கிறார்கள்
தெரியுமா?

எப்படி?!

‘அம்மைக்
குழவி’

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram