தஞ்சாவூர்- வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் செ. தினகர ஞானகுருசாமி எழுதிய சனாதனம் அறிவோம், சுந்தர புத்தன் எழுதிய பெரியவன் நாவல் என இரு நூல்களையும் பாராட்டிப் பரிசளிக்கப்பட்டது.
சுந்தர புத்தன் எழுதிய 'பெரியவன்' நாவலுக்கு சிறந்த நூலுக்கான பரிசையும் பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கினார் பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி. பரிசை வழங்கிவிட்டு கி. வீரமணி பேசும் போது,
"இந்த நாவலில் ஒரு பகுதிநேரச் செய்தியாளரின் வாழ்க்கையையும் கிராமத்தின் கதையையும் எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சுந்தரபுத்தன். பொதுவாக நாவல்களில் கற்பனை இருக்கும். ஆனால், பெரியவன் நாவலில் ஒப்பனை இல்லாத எதார்த்தம் இருக்கிறது. இது இலக்கியச் செறிவுள்ள நூல்" என்றும் பாராட்டினார்.
கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும், மாநிலக் கல்லூரி முதல்வருமான இராமன், நாவலின் தனித்தன்மை பற்றியும் அது புழங்கும் ஊர் நினைவுகளையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
பெங்களூர் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணி நன்னன், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் பற்றிய இலக்கிய உரை நிகழ்த்தினார் .
சுந்தர புத்தன் தனது ஏற்புரையில்,
"பெரியவன்' நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த மதிப்பிற்குரிய விருதை என் வாழ்நாளின் பெருமையாக நினைக்கிறேன். தாய்வீட்டுச் சீதனமாக ஏற்றுக்கொள்கிறேன்.
2019 ஆம் ஆண்டு புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவில் என் தந்தைக்கு பெரியார் விருது வழங்கினார்கள். இன்று என் நூலுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளார் அய்யா ஆசிரியர் அவர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது எங்கள் ஊருக்கு பேசுவதற்காக வந்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் நடேசன் என்பவர். அன்று முதல் இன்று வரை எத்தனை எத்தனை கூட்டங்கள்... போராட்டங்கள்... மாநாடுகள்...
ஒரு நாளிதழின் ஆசிரியராக 60 ஆண்டுகளைக் கடந்து பொறுப்பில் இருப்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான்.
அய்யா அவர்களுக்கு டிசம்பர் 2 பிறந்த நாள். இந்த அழகிய தருணத்தில் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் கால்சட்டைப் பருவத்தில் அய்யா ஆசிரியர் அவர்களின் உரைவீச்சுகளை ஊரில் கேட்டு வளர்ந்தவர்கள் நானும் ராமனும். இன்று அவருடன் மேடையில் அமர்ந்திருப்பது ஒரு கனவுபோல இருக்கிறது. வாழ்நாளில் மறக்கமுடியாத பெருமை எங்களுக்கு. அய்யா அவர்களின் கால்படாத இடமே எங்கள் ஊர்களில் இல்லை.
என் அப்பாவின் கதைதான் இது. என் பால்யம் முதலே பார்த்த கேட்ட வாழ்ந்த கதையைத்தான் இரண்டு ஆண்டு காலத்தில் எழுதினேன். அதுதான் பெரியவன். ஊரில் குடும்பத்தில் மூத்த பையனை பெரியவன் என்று அழைப்பார்கள். அப்பா குடும்பத்தில் மூத்தவர். அதனால்தான் அந்த தலைப்பை வைத்தேன்.
இரவில் சில நேரங்களில் செய்திகள் எழுதுவார். விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எழுதிக்கொண்டிருப்பார். காலை எட்டு மணிக்குள் சைக்கிள் புறப்பட்டுவிடும். சில நாள் கட்சி வேலை. சில நாள் செய்தி சேகரிப்பு.
திராவிடர் கழகக் கூட்டங்கள் ஊரில் நடந்தால், கடைசி நபராக நின்றுகொண்டு குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பார். சிறப்புரையாற்ற வந்திருக்கும் பேச்சாளர்கள், "எங்கய்யா ஒளிச்செங்கோ" என்று விசாரிப்பார்கள். பிறகு ஓடிப்போய் அவர்களை சந்தித்துவிட்டு வருவார்.
எவ்வளவு அவசர செய்தி என்றாலும் சைக்கிள்தான். வீட்டில் ஃபோன் கிடையாது. கொரடாச்சேரி சென்று போனில் மாலை முரசு அலுவலகத்திற்கு தகவல் சொல்வார். தீபாவளி, பொங்கல் மலர்களில் கட்டுரைகள் எழுத பல நாள்களைச் செலவழிப்பார். கடைசியில் 9 பாயிண்டில் அவரது பெயர் வரும்.
பெரியார் பற்றி எழுதி இதுவரை அவரது பெயரில் 10 நூல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் எத்தனையோ நூல்களை வெளியிடும் அளவுக்கு அவரிடம் குறிப்புகள் இருந்தன. தன் கடைசி நாட்கள் வரையில் அவர் எழுதுவதை கைவிடவில்லை.
எப்போதாவது சாப்பிடும்போது தன் தந்தை சுந்தரம் பற்றிப் பேசுவார். அவரது உதவும் குணம் பற்றிப் பேசுவார். சமையல் ருசி பற்றிப் பேசுவார். பண்ணை வேலை பறிபோய் கூலி வேலை பார்த்தது பற்றி நினைவுகூர்வார். அவரது நினைவாகத்தான் எனக்கு சுந்தரபுத்தன் என்று பெயர் வைத்தார்.
நான் பள்ளியில் படிக்கும்போது, அவர் எழுதிய செய்திகளை என்னிடம் காப்பி செய்யக் கொடுப்பார். அவரே எழுதி அனுப்பிவிடமுடியும். என்னை ஏன் செய்திகளை எழுதவைத்தார் என்பதை, நான் செய்திக்கட்டுரைகள் எழுதத் தொடங்கிய நாளில் புரிந்துகொண்டேன்.
நான் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் "எப்பய்யா ஊருக்கு வர்ற" என்று கேட்பார். ஊருக்கு வரும் நாளுக்காக காத்திருப்பார். அய்யா வந்துட்டானா என்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். என்னைப் பார்த்ததும் சைக்கிளில் அத்திக்கடைக்குப் போய் பரோட்டாவும் ஆட்டுக்கறியும் வாங்கிவருவார்.
என் 24 வயது வரையில் அப்பாவுடன் ஊரில் இருந்திருக்கிறேன். வீட்டுக்கு எப்போது வருவார் என காத்திருந்திருக்கிறேன். சென்னைக்கு வந்த பிறகு அவருடன் பேசும் நேரம் குறைந்துபோனது. ஊருக்கு வருவது தெரிந்தால், ஏதாவது புதிய புத்தகத்தின் பெயரைச் சொல்லி வாங்கிவரச் சொல்வார்.
அப்பா என்றதுமே வெள்ளையாற்றின் கரையில் இருந்து பாண்டவை ஆற்றின் கரைக்கு நடுவே மெல்லிய கோடாக நீளும் வயல்வழிச் சாலையில் அவர் சைக்கிளில் வரும் காட்சியே மனதில் நிறைகிறது. மறைவதற்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை சைக்கிளில் வெளியே சென்றுகொண்டிருந்தார்.
திருமணமாகி மூன்று மாதங்களில் வேலையிழந்தேன். அந்த காலகட்டத்தில் என்னைப் பார்க்க வந்தவர், ஓர் அறிஞர் சொல்லியதாகக் கூறிய வாசகங்கள் காதில் ஒலிக்கின்றன: "வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்".
இந்த நாவலில் நான் பயன்படுத்தியிருக்கிற அய்யா தந்தை பெரியாரின் பேச்சுகள் உண்மையானவை. அப்பாவின் அரிய சேகரிப்புகளில் இருந்து கிடைத்தவை.
எங்களுக்குப் பள்ளிக்கூடம் பாடம் நடத்தியதைவிட, உள்ளூரில் நடந்த சமூக, அரசியல் நிகழ்வுகளும் பொதுக்கூட்டங்களும்தான் அதிகம் பாடம் எடுத்திருக்கின்றன. அய்யா ஆசிரியர் அவர்களின் பேச்சுகளை பால்யம் முதலே கேட்டு வளர்ந்தவன்.
1971 ஆம் ஆண்டு எங்கள் ஊரிலேயே அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் அப்பாவுக்குத் திருமணம் நடந்தது. தம்பி, தங்கை உள்ளிட்ட எங்கள் மூவருக்கும் அப்படித்தான் நடந்தது.
இந்த அழகிய தருணத்தில் அப்பாவை நினைத்துப்பார்க்கிறேன். என் தந்தையின்மீது பேரன்புகொண்டவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அந்த அன்பின் விளைவுதான் இந்தப் பரிசும் பாராட்டும்.
இதை, எனக்கு வழங்கிய விருதாக நினைக்கவில்லை. என் தந்தையின் எளிமையான பங்களிப்புக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்.
பெருங்கருணையும் பேரன்பும் கொண்டு பரிசு வழங்கிய அய்யா ஆசிரியர் அவர்களுக்கும் பெரியார் உயராய்வு மைய இயக்குநர் நம் சீனிவாசன் அவர்களுக்கும், நிதியுதவி வழங்கிய அறக்கட்டளைகளுக்கும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர், இணை துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ” இவ்வாறு அவர் பேசினார்.
விழா முடிந்ததும் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்று நட்டனர். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர், இணை துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முதுகலை படிக்கும் மாணவி இரா .ஸ்ரீ அமிர்தவர்ஷினி நன்றிய உரையாற்றினார்.
பெரியார் சிந்தனை உயராய்வு மைய இயக்குநர் பேராசிரியர் நம். சீனிவாசன்,பரிசளிப்பு விழாவை சரியான நேரத்திற்குள் நடத்திக்காட்டியது நேர மேலாண்மைக்கு ஓர் உதாரணம்.