நூல் அறிமுகம்

வானத்தை வானத்திலேயே விட்டுவிடுதல்

ரமேஷ் வைத்யா

அறிவியல் புனைகதை என்பதில் சில வகைகள் இருக்கின்றன. ஆர்.வெங்கடேஷ் எழுதியிருக்கும் பதினாறு சூரிய உதயங்கள் என்னும் நாவல் அந்த வகைகளுக்குள் அடங்கவில்லை.

கருவாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டது நடந்த ஒரு சம்பவம். அது அறிவியலோடு - வானவியலோடு - தொடர்புடையது. அதில் பங்குகொள்ள நேர்ந்த பலரது மனங்களை புனைவின் துணையோடு அணுகிப் பார்த்திருக்கிறார் கதாசிரியர். முற்றிலும் கற்பனையாக இல்லாத இந்தத் தன்மையே இந்நாவலைப் புதிதானதாக ஆக்குகிறது.

புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகிய ஆய்வாளர்கள் சர்வதேச வான்வெளி மையத்துக்கு எட்டு நாள் பயணமாகச் செல்கிறார்கள். புனைவில் வரவேண்டிய சிக்கல் எதார்த்தத்திலேயே வருகிறது. சொன்னபடி பூமிக்குத் திரும்ப இயலாத தொழில்நுட்பச் சிக்கல் நேர்கிறது. தோராயம் முந்நூறு நாட்கள் அவர்கள் அந்தரத் தொலைவிலேயே இருக்க வேண்டிவருகிறது. அவர்களால் பூமிக்குத் திரும்பவே முடியவில்லை. அடுத்து என்ன? இப்படி ஒரு கருவை எடுப்பதில் சில சிக்கல்கள் உண்டு.

பூமிக்கு அப்பால் நானூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் அபாந்திரமான அண்ட வெளியில் பெரும்பாலான கதை நிகழ்கிறது. முற்றிலும் அறியாத சூழலைப் பற்றி எழுத வேண்டும், அதை வாசகரோடு தொடர்புபடுத்தவும் வேண்டும் என்கிற சவால். எழுதிவிடலாம் என்கிற எண்ணம் அசாத்திய தைரியம் வாய்ந்தது. அதை சிரமசாத்தியமாக மாற்றிக் காட்டியிருக்கிறார். வாசிக்கும் நாம் அந்தச் சூழலில் பொருந்திவிடுகிறோம். அது மட்டும் ஆச்சரியமில்லை, நாம் அறிந்தே இராத புவியியல் பிரதேசத்திலிருந்து வரும் பாத்திரங்கள் நமக்குப் பரிச்சயமாகிவிடுகின்றன என்பதும் வியப்புதான். சமீப வாசிப்பில் இப்படி அனுபவம் எனக்குக் கிட்டியதில்லை. (மிகச் சிறு வயதில் ராதுகா பதிப்பக வெளியீடுகளாக வாசித்துப் பரிச்சயமான நாஸ்தென்கா, கலீனா லெபதேவ்ஸ்கி போன்றோர் நினைவுக்கு வருகிறார்கள்.)

இன்னொரு சிக்கல், கதைச் சுருக்கத்தைச் சொல்லும்போது ‘அடுத்து என்ன’ என்கிற சொற்றொடர் இயல்பாகவே எழுந்ததைக் கவனித்திருப்பீர்கள்... ஆனால், இங்கே இது சம காலத்தில் நடந்த ஒரு சம்பவம். சிக்கல் தெரிந்த அனைவருக்கும் முடிவும் தெரிந்திருக்கும். அதன் பிறகு அந்த மர்ம அம்சத்தை வைப்பது எப்படி? அங்கேதான் வெங்கடேஷ் சாமர்த்தியமான ஒரு யோசனையைக் கையாண்டிருக்கிறார். ‘இந்தக் கதையை அறிவியல் புனைவு என்றுகூடச் சொல்லலாம், ஆனால் சஸ்பென்ஸ் வரிசைக்குக் கொண்டுபோய்விடக் கூடாது’ என்கிற திட்டம்தான் அது. அப்படியானால், சுவாரசியத்தைக் கூட்ட என்ன செய்வது? கதாபாத்திரங்களின் மனவோட்டத்தில் விளையாடிப் பார்ப்பது. இந்த விளையாட்டில், எல்லாக் கட்டங்களிலும் அட்வான்டேஜ் பக்கமே நிற்கிறார் கதாசிரியர்.

பொதுவாகவே ஒரு நாவலை, நீளம் காரணமாகச் சொல்கிறேன், தன்மை ஒருமையில் எழுதுவது கொஞ்சம் கஷ்டம். இதில் ஒரு பெரிய சவாலைத் தனக்குத் தானே போட்டுக்கொண்டிருக்கிறார். அதாவது, ஒவ்வோர் அத்தியாயமும் வெவ்வேறு பாத்திரத்தின் கோணத்தில் விரிவது. அந்தப் பாத்திரமே தன்மை ஒருமையில் பேசுவது. இது குழப்பத்துக்கு வழிகோலக்கூடியது. ஆனால், எளிய, சுவாரசிய உத்திகளின் மூலம் பேசிக்கொண்டிருப்பது யார் என்கிற குழப்பமே வராமல் எழுதியிருக்கிறார். இதைச் சாதனை என்றே சொல்லலாம். 

பாத்திரங்களை எல்லாம் பார்த்தால், புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ், ஸ்டீவ் ஸ்டிச், எலான் மஸ்க், பில் நெல்சன் என்று இருக்கிறது. இவர்களை எப்படிக் குழப்பாமல் நடத்திச் செல்வது? படித்துப் பாருங்கள் எப்படி என்று தெரியும். அதிலும் புட்ச் வில்மோர் இறை நம்பிக்கையாளர் என்பதால் அவர் சிந்திக்கும்போது, ‘பெலப்படுத்துகிறார் இயேசு’ என்று வெங்கடேஷ் எழுதுவதை வாசிக்கையில் முறுவல் எழுகிறது.

மேலே சொன்ன பெயர்கள், பாத்திரங்கள்தான் முழுக்க முழுக்க உலவுகிறார்கள் என்பதால், அபாரமாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வேற்று மொழி நாவலை வாசிப்பது போன்ற அனுபவம் நமக்கு ஏற்படும். ‘குடத்திலிட்ட விளக்கு’ என்பது போன்ற சொல்லாடல்கள் வரும்போதுதான் ‘தமிழ் நாவல் படிக்கிறோம்’ என்ற எண்ணமும் வரும்.

இலக்கியப் புனைவுக்கு, தக்கண ஆராய்ச்சிகள் தேவையில்லை, ஆனால், இந்தக் கருவுக்கு பரவலாகப் படித்து சரியான தகவல்களைக் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் நம்பகத்தன்மை பல்லிளித்துவிடும். ஆழமாக ஆய்ந்திருக்கிறார் ஆசிரியர். எந்த அளவுக்கென்றால், கதையில் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பு வந்தால், செய்தி நிறுவனத்தின் பெயர், வினா எழுப்பும் பத்திரிகையாளரின் பெயர் போன்றவற்றை அப்படி அப்படியே எழுதும் அளவுக்கு. ‘இந்த இடத்தில் ஒரு தவறு இருக்கிறது’ என்று விரல் நீட்டிவிடவே முடியாது. சர்வதேச வான் மையத்திலிருந்து பூமி இருக்கும் பகுதியைப் பார்க்க ஒரு ஜன்னல் இருக்கிறது. ‘ஐஎஸ்எஸ்ஸின் பூமிச் சாளரம் குபோலா’ என்கிறார்!

தகவல்கள் தருவது போக, வெங்கடேஷின் நடை வகையைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். வித்தியாசமான கதைக் கருவை எடுத்தாயிற்று. மேலும் வித்தியாசம் காட்டுகிறோம் என்று கெடுத்துவிடக்கூடாது. நாவலின் பல இடங்களில் இந்திரா பார்த்தசாரதியை வாசிக்கிறோமோ என்ற எண்ணம் எழுந்தது. (ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, அக்னி நாவல்களில் அதிகார வர்க்கத்தைப் பற்றிய இ.பா-வின் சித்திரிப்புகளைப் பொருத்திப்பார்த்துக்கொள்ளலாம்.) எதையும் கிஞ்சித்தும் கூடுதலாகச் சொல்லிவிடாத ‘ஆன்றவிந்தடங்கிய’ நடை.

அண்டவெளியில் புழங்குவது என்பது முற்றிலும் நாமறியாத ஒரு தருணம். அதைக் கொண்டுவந்து அன்றாடத் தருணங்களோடு ஊடாட்டுவதற்கு இந்த நடை உதவி செய்கிறது. கீழ் வரும் வாசகங்களைப் பாருங்கள்:

‘சொல்லப்படாத சொற்கள், சொல்லப்படாததாலேயே மேலும் ஓங்கி ஒலிக்கின்றன.’

‘என் வருத்தங்களின் மேல் என்றைக்குமே சுவாரசியம் இருந்ததில்லை. இந்த வருத்தங்களும் குறைகளும் நீண்ட காலம் நீடிக்காது. அவற்றிற்கெல்லாம் ஒரு மாற்று உண்டு. தீர்வு வரும்வரைதான் அவை ஒரு பிரச்னையாக இருக்கும். அதனால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.’ - இந்தக் கதையின் வாக்கியங்களாக மாத்திரமல்ல; நாம் எடுத்துச் செல்லத்தக்க யோசனைகளாகவும் இவை மேலெழுவதை உணர முடியும்.

இதன் பின்னால் மிகுந்த நம்பிக்கை வாய்ந்த ஒரு மனம் இருப்பதையும் உணரலாம். அந்த மனம்தான், ‘இங்கே உள்ள குறைகளைச் சொல்வது உன் வேலை அல்ல. முன்னேற்றத்தின் சித்திரத்தைத் தீட்டப் பிறந்தவன் நீ’ என்று எழுதும்.

அதைப் போலவே, ஒரு விஷயத்தில் எழுத்தாளரின் மனம் முழுமையாக நிலைகொண்டுவிடுகிறபோது தன்னையும் மீறி ஒரு சொல்லோ ஓர் அபிப்பிராயமோ வந்து விழுந்துவிடுகிறது என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. ‘ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்று ஆயிரம் விஷயங்களைப் பேசினாலும் பிரச்சாரம் செய்தாலும் வோட்டுப் போடும் மக்களின் அடிமனத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் வெளிப்படப்போகிறது’ என்று இவர் எழுதும்போது தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வந்திருக்கவில்லை என்பது குறித்துக்கொள்ளத் தக்கது.

நாம் புழங்காத களத்திலும் நம்மை ஒன்றிப்போகச் செய்ய முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் வெங்கடேஷ்.

பதினாறு சூரிய உதயங்கள், ஆர்.வெங்கடேஷ், வெளியீடு: சுவாசம், பேச:8148066645 விலை ரூ.200

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram