வெ.இறையன்பு
கடந்த காலங்களை அசைபோட்டுப் பார்ப்பதில் அலாதியான ஆனந்தம் நம் உள்ளத்தில் அலைமோதுவதுண்டு. நாம் எப்போதுமே கசப்பை வடியவிட்டுக் களிப்பைத் தக்கவைத்துக்கொள்கிறவர்கள். சற்று எட்ட நின்று நடந்தவற்றைக் கண்களை மூடி யோசிக்கும்போது அது இன்னும் தெளிவாக, மேகமூட்டத்திலிருந்து கிளம்புகின்ற முழுநிலவின் ஒளிபோல நமக்குச் சம்பவங்கள் அடுக்கடுக்காக நினைவடுக்குகளிலிருந்து கிளம்பி வந்து எழுதும் வேகத்தைவிட இன்னும் விரைவாக நம்மைத் திக்குமுக்காட வைப்பதுண்டு.
கல்விச் சூழலில் கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை எங்கள் தலைமுறையினரைச் சார்ந்தவர்கள் அனுபவித்து அறிந்தவர்கள். அதிக அவா இல்லாத பெற்றோரும், பெரிய கனவுகள் இல்லாத குழந்தைகளும், பாரபட்சம் காட்டாத ஆசிரியப் பெருமக்களும் இணைந்து கைபிடித்து எழுதக் கற்றுத்தருகிற முயற்சியாக அன்று கல்வி இருந்தது. ஆசிரியர்களின் கோபத்தை மாணவர்கள் வகுப்பறையிலேயே துடைத்தெறிந்துவிட்டு ஓய்வு நேரங்களிலெல்லாம் அவர்களைப் பற்றியே அரட்டையடித்துக்கொண்டிருந்த சூழல் அன்று இருந்தது. தொடக்கப்பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம்வரை மாணவர்கள் ஆசிரியர்களைப் பற்றியே விமர்சனம் செய்வதும், அவர்கள் குரலில் பேசி தங்களுக்குள் குதூகலிப்பதும் அன்று மாலைநேரப் பொழுதுபோக்குகள்.
இன்று கல்விச் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. மாணவர்கள் தங்களுக்குள் ஆசிரியர்களைப் பற்றியோ, பேராசிரியர்களைப் பற்றியோ வகுப்பு முடிந்ததும் பேசிப் பார்க்க முடிவதில்லை. அவர்களுக்குள் விவாதங்களோ, தர்க்கங்களோ அதிகம் நிகழ்வதும் இல்லை. அவர்கள் மிடுக்குப்பேசியின் இடுக்குகளில் தொலைந்து விடுகிறார்கள்.
நண்பர் முருகேசபாண்டியன் தேர்ந்த இலக்கியவாதி. அடர்ந்த வாசிப்பாளர். புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள், வரலாற்றுக் குறிப்புகள், சுயசரிதங்கள் என்று அவருடைய வாசிப்பு விரிவாகவும் ஆழமாகவும் வியக்கத்தக்க வகையில் பரிணமிக்கும் தன்மை பெற்றது. அண்மையில் அவருக்குத் தமிழ்நாடு அரசு ‘இயல் விருது‘ அளித்து அங்கீகரித்தபோது தீவிர எழுத்தாளர்கள் அனைவரும் அதை ஏகமனத்துடன் வரவேற்று வாழ்த்தினார்கள். அவருடன் பழகும் தருணங்களில் உரையாடல் பெரும்பாலும் இலக்கியங்கள் சார்ந்தே அமைந்திருக்கும். அப்படி அவர் வாசித்தவற்றை மற்றோருக்கும் பகிர்ந்து தருகின்ற பரந்த மனப்பான்மை அவருக்கு உண்டு. சிலர் தாங்கள் பெற்ற அறிவை முந்தானைக்குள் முடிந்து வைத்துக்கொள்வதைப்போல தான் மட்டுமே அறிவாளியாகத் திகழ வேண்டுமென்று அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.
பள்ளிப் பருவத்திலிருந்து பல்கலைக்கழகம்வரை பயணித்த அவருடைய கல்வி அனுபவங்களை ‘என் வகுப்பறை வாசம்‘ என்று சுவைபட எழுதியிருக்கிறார். சமகாலத்தைச் சற்றொப்பச் சார்ந்தவர் என்கிற காரணத்தால் அவருடைய அனுபவங்களும் என்னுடைய அவதானிப்புகளும் பெரும்பாலும் ஒத்துப்போவதால் இந்நூலை வாசிக்கிறபோதே என்னால் ஒவ்வொரு வரியிலும் ஒன்றிப்போக முடிந்தது. நூலின் ஒவ்வொரு வரியையும் தொடர்புபடுத்தி நான் வாழ்ந்த காலகட்டத்தின் சம்பவங்களோடு பொருத்திப் பார்த்து புன்னகை பூக்க முடிந்தது.
கல்வி என்பது கட்டடங்களோடு முடிந்து விடுகின்ற கண்ணாமூச்சி அல்ல. அது வாழ்க்கை முழுவதும் நாம் நடத்துகின்ற புதையல் வேட்டை என்பதைத் தொடக்கப் பக்கங்களிலேயே தொட்டுக்காட்டி விடுகிறார். மலைச்சாரலுக்குப் பயணிக்கும்போது அடிவாரத்திலிருந்தே சில்லிப்பு தொடங்கி விடுவதைப்போல முன்னுரையிலேயே அறிவு அன்றாட வாழ்வின் நுணுக்கங்களிலிருந்தும் பெற வேண்டியது என்பதைச் சின்ன சம்பவத்தின் மூலம் கூறிவிடுகிறார்.
வாழ்க்கையின் பெரிய நிதர்சனங்கள் சிறிய சிறிய நிகழ்வுகளில் நாம் முட்டி மோதும்போதுதான் நிகழ்கின்றன. இரண்டாவது மட்டுமே படித்த கீதாரியிடம் உரையாடியபோது அவருக்கு நேர்ந்த கற்றலை அவர் விளக்குகிறபோது எனக்கு ஹெர்மன் ஹெசியின் ‘சித்தார்த்தா‘ என்கின்ற மகத்தான நூலில் இடம்பெறுகிற ஓடக்காரர்தான் நினைவுக்கு வந்தார். வீதியிலிருந்து கற்றுக்கொள்கின்ற கல்வி இன்று முற்றிலுமாக அடைபட்டுப் போய்விட்டது.
முதிர்ச்சியுடன் முதுமையடைவது என்கிற கோட்பாட்டை எப்படி அவருடைய இலக்கிய ஆசானிடமிருந்து உறிஞ்சிக்கொண்டார் என்பதை மு.பா. உணர்த்தும்போது அப்படிச் சாவின் விளிம்பில் சிரித்து வாழ்ந்ததற்காக நன்றி சொல்லி விடைபெற்ற வீரர்களையும், உடலில் தெம்பிருக்கும்வரை நிமிர்ந்து நின்றுவிட்டு மருத்துவமனைக் கட்டிலில் மரவட்டையைப்போலச் சுருண்டுவிட்ட சாமானியர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.
பள்ளியில் சேர்வது சிரமமில்லாத காலமாக நாங்கள் கல்வியைத் தொடங்குகின்ற ஆண்டுகள் இருந்தன. மு.பா.வாவது பள்ளியில் சேரும்போது வலதுகையை வைத்துத் தலையைச் சுற்றி இடது காதைத் தொட்டுவிட்டார். எனக்கு அது இன்றும் சாத்தியப்படவில்லை. அப்போதெல்லாம் பிறப்புச் சான்றிதழ் என்ற ஒன்று பெரும்பாலும் இருக்காது. அதனால் நாங்கள் ஆவணங்களில் வகுப்பில் சேரும் வசதிக்காக ஜூன் மாதம் பிறந்ததாகக் குறிக்கப்பட்டவர்கள்.
வகுப்பறைகளில் பிரம்புகள் விளையாடிய நிகழ்வுகளையும், தலையில் அடிபட்டு தனக்கு ரத்தம் வந்ததால் கொதித்துக் கோபப்பட்ட தாயாரின் வசவுகளையும்கூட தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார். பள்ளிக் குழந்தைகளை அடிப்பது குறித்து பள்ளிக்கே போகாத அவர் தாயார் தங்கம் சொன்ன தீர்க்கதரிசனப் பார்வையையும் வியப்புடன் குறிப்பிடுகிறார். டேனியல் என்கின்ற ஆசிரியரின் பிரம்பை திருட்டுத்தனமாக எடுத்து நொறுக்குகிற நிகழ்வைப் படிக்கும்போது வன்முறையின் வெளிப்பாடாகவும், அதிகாரத்தின் குறியீடாகவும் எல்லோரும் ஏதேனும் ஒன்றைக் கைகளில் ஏந்தவே ஆசைப்படுகிறார்கள் என்கின்ற உலகியல் பார்வை நம்மை உறுத்துகிறது. ஷேக்ஸ்பியர் ‘அளவுக்கு அளவு‘ (Measure for Measure) நாடகத்தில் கூறுவதைப்போல தனக்குக் கிடைத்த அணுவளவு அதிகாரத்தையும் விண்ணளவு விரிவாக்கிக்கொள்ளவே பலரும் பிரயத்தனப்படுகிறார்கள்.
எங்கள் அனைவரையுமே பள்ளிப் பருவத்தில் பரவசப்படுத்திய குரங்குகள் குல்லாவை அபகரித்த கதை கண்ணாடி நியூரான்களை அடிப்படையாகக்கொண்டது என்பதை நான் ‘மூளைக்குள் சுற்றுலா‘ எழுதும்போது புரிந்துகொண்டேன்.
பள்ளிக்கூடங்கள் பெற்றோர் பயமுறுத்தி அனுப்பப்பட்ட இடமாக இருப்பதையும், பள்ளிக்கு வராமல் விளையாடும் மாணவர்களை கும்கி யானையைப்போலப் பிடித்துவந்த சம்பவங்களையும், ஒழுங்காக வராத மாணவர்களுக்குக் காலில் கட்டை பிணைக்கப்பட்ட நிகழ்வுகளையும் படிக்கும்போது இன்று நிகழும் கல்விச் சூழலோடு ஒப்பிடாமல் ஒருபோதும் இருக்க முடியாது. கல்விக்கூடங்கள் இயல்பாகக் குழந்தைகள் செய்யும் குறும்புகளுக்காகச் சித்திரவதைக்கூடங்களாக மாறிய நிலையை வேதனையுடன் கூறுகிறார்.
அவமானங்களின் மூலம் மாணவர்களைப் படிக்கவைத்துவிட முடியும் என்கிற அவல நிலையும் நானும் என் பள்ளிப் பருவத்தில் சந்தித்திருக்கிறேன். வீட்டுப்பாடம் எழுதாத மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்கு சாக்பீஸ் மீசை வரைந்து அழைத்துப்போய் அவமானப்படுத்திய பரிதாபமான சம்பவங்கள் நிறைய உண்டு. அதே நேரத்தில் பள்ளியில் உடல் உழைப்புக்கான வாய்ப்புகளை மாணவர்கள் எப்படி மகிழ்ச்சியாகச் செய்தார்கள், தோட்டம் போட்டார்கள், கரும்பலகையைச் செம்மையாக்கினார்கள் என்பவற்றையெல்லாம் அவர் குறிப்பிடும்போது இப்போதெல்லாம் அப்படிச் செய்தால் ஊடகத்தினர் அந்த ஆசிரியர்களை உரித்தெடுத்து விடுவார்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. மண்ணில் கால் வைக்காமல் மண்ணுக்குள் செல்லுகின்ற சொகுசான வாழ்க்கையே சிறந்தது என எண்ணி உபாதைகளுக்குள் ஒரு சமூகமே புதைந்து கிடக்கிறது.
மதிய உணவின் முக்கியத்துவம்பற்றி அவர் பேசுகிறபோது காலைச் சிற்றுண்டியை அளிக்கிற திட்டத்தை வடிவமைக்கும் நேர்வு நான் தலைமைச் செயலாளராக இருக்கும்போது நிகழ்ந்ததை நினைத்துக்கொள்கிறேன்.
தமிழைப் பிழையின்றி எழுத அன்று நடந்த பெரு முயற்சிகளையும் இன்று தமிழில் முதுகலை மாணவர்கள்கூட எழுத்துப் பிழைகளுடன் எழுதுகிற சூழலையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மு.பா.விற்கு நான்காம் வகுப்பு படிக்கிறபோதே வாசிப்பின் ருசி தெரிந்ததைப்பற்றி கூறுகிறார். இன்றுவரை அது எரிகிற தீப்பிழம்பாக அவரிடம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தொடக்கப்பள்ளியிலேயே பால்ரீதியாக எழுப்பப்பட்ட கண்ணுக்குத் தெரியாத கடுஞ்சீனச் சுவர்களை அன்றையத் தலைமுறை அனுபவித்தது. அவையே எதிர்ப்பாலின்மீது தீவிரமான ஈர்ப்பையும் அவர் கூறியதைப்போல ஏற்படுத்தியது.
பள்ளிகளில் பார்க்காத சாதி வேறுபாடு கல்லூரிகளில் தலைதூக்குவதைப் பற்றியும் எழுதுகிறார். இது எங்கள் வயதினர் அனைவருக்குமே ஏற்பட்ட கசப்பான அனுபவம். பகிரங்கமாகப் பகடி செய்கிறபோது ‘நீ என்ன சாதி?‘ என்று மூத்த மாணவர்கள் கேட்கின்ற அக்கிரமத்தை நாங்கள் சந்தித்திருக்கிறோம். பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய ‘சாதியை ஒழித்தழித்தல்‘ போன்ற நூல்களைப் பற்றிய கருத்தரங்கங்கள் கல்லூரிகளில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எங்கெல்லாம் ஆதிக்க சாதிகள் உயர்ந்த பீடத்தில் தாங்கள் உட்கார்ந்திருப்பதாக எண்ணுகிறார்களோ, அங்கு இவற்றிற்குக் கூடுதல் தேவை உள்ளது.
வகுப்பறையைத் தாண்டி விளையாடிய விளையாட்டுகளையும், பெரியோர்கள் பயிற்றுவித்த உச்சரிப்பு வினாக்களையும், சிந்திக்க வைக்கின்ற நடைமுறைக் கணக்குகளையும், அவற்றிலிருந்து மடியேந்தி பெற்றுக்கொண்ட ஞானத்தையும் மிக நேர்த்தியாகச் சித்திரித்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளைப் பொத்திப்பொத்தி வளர்க்கவில்லை என்பதை அவருடைய நாகமலைச் சுற்றுலா தெளிவுபடுத்துகிறது. பருவத்திற்கேற்ற விளையாட்டு, பாடிய பாடல்கள் என்று தான் ரசித்த பாலப்பருவத்தை நம் கண்முன்னே அவர் நிறுத்தும்போது நம்முடைய பள்ளிப் பருவமும் அவற்றோடு கைகோர்த்து நடக்கின்றது.
உயர்நிலைப் பள்ளியை அடைந்ததும் தாங்கள் முதிர்ச்சியடைந்ததைப் போன்ற மனநிலை மாணவர்களுக்கு ஏற்படும். தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொக்காகப் பார்க்கத் தொடங்குவார்கள். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இயற்கை அழைப்பிற்கு இடமிருப்பதில்லை. பேனாவைப் பயன்படுத்தத் தொடங்கியதும் அவற்றிலிருந்து அடிக்கடி மசி வழிந்து கைகளும் சட்டையும் கரை படியும். பெற்றோர் பிள்ளைகள் கேட்ட உடனே பணம் கொடுக்க விரும்பியதில்லை. பணத்தின் அருமை தெரிய அவர்கள் அளித்த பயிற்சி அது.
பள்ளியில் வகுப்புகளுக்கிடையே தடுப்புகளை அமைக்கக் கொடுத்த பொதுப் பணத்தில் தேநீர் குடித்த சம்பவம் மனத்தில் ஏற்படுத்திய மடிப்புகள் இன்னும் நீடிப்பதாக அவர் சொல்வது உள்ளுணர்வின்படி அவர் வாழும் வாழ்க்கைக்குச் சான்று. அதுவே இன்று அவருடைய விமர்சனக் கோட்பாட்டில் இலக்கிய நேர்மையோடு இயங்குவதற்கும் ஆதாரமாக அமைந்திருக்கிறது.
உயர்நிலைப் பள்ளிகளில் கைவினை வகுப்புகள் உண்டு. உற்றுநோக்குவதற்கும், உழைப்பின் மகத்துவத்தை அறிவதற்கும், உருவாக்கும் திறனைப் பெறுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட அவையெல்லாம் இன்று காணாமல் போய்விட்டன. ஓவிய வகுப்புகளில் ஆசிரியர் அளிக்கின்ற மதிப்பெண்களை அனைவரிடமும் காட்டித் திரிந்தவர்கள் நாங்கள். இன்று மாணவர்கள் மருத்துவக் கல்லூரியையும் பொறியியல் கல்லூரியையும் நோக்கி ஓடும் கடிவாளக் குதிரைகள்.
புத்தகங்கள் எவ்வாறு தனக்கு மிகுந்த விருப்பமாக மாறின என்று விரிவாக எழுதியிருக்கிறார். இறுக்கமான நடையுடன்கூடிய இலக்கியங்களை வாசிக்கின்ற இளைஞர்கள்கூட தொடக்கத்தில் அம்புலிமாமாவையும், சரித்திர நாவல்களையும், துப்பறியும் கதைகளையும் தேடித் தேடிப் படித்தவர்கள்தாம். அவையே வாசிப்பை வழுக்கிக்கொண்டு நம்மை அழைத்துச்செல்ல வழிமொழிந்தன. இன்றும் கையில் அம்புலிமாமா கிடைத்தால் நான் அதை வாசிக்கவே விரும்புவேன். மு.பா. இன்று தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் அடையாளப்படுத்தப்படுவதற்கு அன்று அரும்பிய அவருடைய வாசிப்பே காரணம்.
அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், அறிஞர் அண்ணாவின் மறைவையும், புத்தர் ஏற்படுத்திய தாக்கத்தையும், பெரியார் கருத்துகள் உண்டாக்கிய மாற்றத்தையும் அவர் கூறும்போது அன்றிருந்த அரசியல் விழிப்புணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘ஆசிரியர் என்றால் எப்போதும் இறுக்கமான முகத்துடன் மூலநோயில் அவதிப்படுகிறவர்போல வகுப்பறையில் சிரமத்துடன் பாடம் நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தை வாசன் சார் மாற்றியமைத்தார்‘ என அவர் எழுதிய வரிகள் அங்கதத்தின் சிகரம்.
அவருடைய ஆசிரியர் வாசன் குறிப்பிட்ட ஆற்றங்கரையோரச் சம்பவம் குரு நானக் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒன்று. ஆங்கில ஊடகத்தில் சேர எடுத்த முயற்சி, மிடுக்குடன் வகுப்பறைக்கு வந்த மணிமேகலை ஆசிரியர் ஏற்படுத்திய புரிதல், ராஜு என்கிற ஆசிரியர் கணிதத்தைப் படிப்படியாகச் சொல்லிக்கொடுத்து அந்தப் பாடத்தின்மீதே விருப்பம் ஏற்பட வைத்த நிகழ்வு என்று ஒரு காட்சிப்படத்தைப் பார்ப்பதைப் போன்ற சம்பவங்களைச் சொற்சித்திரமாகத் தீட்டிச் செல்கிறார்.
பள்ளிக்கூடம் செல்வதும், சக மாணவர்களோடு விளையாடுவதும், கதைப்பதும் மகத்தான அனுபவங்கள். பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்கள் அந்த முக்கியமான அனுபவங்களை இழந்துவிட்டார்கள் என்கிற அவர் கூற்று முக்கியம். ஏனென்றால் பள்ளி என்பது வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெறுகின்ற கூடங்கள் அல்ல. அவை வாழ்வைச் செதுக்குகின்ற பட்டறைகள். ஆனால் இன்று அடிக்கடி நடத்தப்படும் தேர்வுகள், சுமத்தப்படும் வீட்டுப் பாடங்கள் ஆகியவை பிள்ளைகளின் குழந்தைத்தனத்தை ஒட்டுமொத்தமாகத் திருடி விடுகின்றன.
கல்லூரிக்குச் செல்வது அரிதாக இருந்த நிலையை மேனிலை வகுப்புகள்தான் மாற்றியமைத்தன. அன்று ஒருசில மாணவர்கள் மட்டுமே புகுமுக வகுப்பில் இணைவார்கள். ஆங்கிலம் என்கிற மொழி மாணவர்களைப் பாடாய்ப் படுத்திய துயரம் இன்றுவரை நீடிப்பதுதான் வேதனை. கணிதப் பாடத்தையும், தமிழ்ப் பாடத்தையும், ஆங்கில மொழியையும் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் ஏன் சிரமப்படுகிறார்கள் என்பதை விரிவான ஆய்வுசெய்து அதிலிருக்கிற அடிப்படைச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் நிறைகலை படித்த மாணவர்கள்கூட சாதாரண ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும்படுகிற தொல்லை நமக்கு அச்சுறுத்துவதாக இருக்கிறது. மேனிலை வகுப்புகளில் மேட்டுக்குடி மாணவர்கள் சமற்கிருதத்தையோ பிரஞ்சு மொழியையோ மதிப்பெண்களைக் குறிவைத்து எடுக்கிற நிலை உள்ளது. கல்லூரிகளிலோ கணிதப் பாடங்களில் இணைவதற்கு மாணவர்கள் விருப்பம் காட்டாததால் பல கல்வி நிறுவனங்கள் அத்துறையை இழுத்து அடைத்துச் சாத்தும் நிலை இருக்கிறது.
மு.பா. அவர்கள் தன்னுடன் புகுமுக வகுப்பு படித்த பல மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாததால் மேற்படிப்பைத் தொடர முடியாத வருத்தமான நிலையை வேதனையோடு குறிப்பிடுகிறார். இன்று தாராளமயமான மதிப்பீட்டால் அரைகுறைகளும் அதிகம் படிக்க முடிகிறது. கல்லூரியில் பட்டப் படிப்பில் கணிதத்தைத் தேர்ந்தெடுத்ததைக் குறித்தும், தான் பட்ட சோதனைகள் குறித்தும், நாடகங்களில் நடித்த அனுபவங்கள் பற்றியும், சிறப்பாக நடத்திய பேராசிரியர்கள் பற்றியும் உள்ளம் நெகிழக் குறிப்பிடுகிறார்.
அருணாசலம் என்கிற பேராசிரியர் வகுப்பில் நுழையும்போது மாணவர்கள் மேசையைத் தட்டி ‘வாங்கய்யா வாத்தியாரய்யா‘ என்று பாடியதையும், அவர் மேடைமீது ஏறி நின்று ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே‘ என்று பாடியதையும் படித்தபோது வாய்விட்டுச் சிரிக்கிறோம். ஆங்கிலப் பேராசிரியர் அகஸ்டின் எவ்வாறு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாக விடையளிப்பார் என்பதையும் எழுதியிருக்கிறார். அர்ப்பணிப்புடன் பணியைச் செய்த ஆசிரியர்கள் மாணவர்களிடம் பெரிய தூண்டுதலை எல்லாக் காலங்களிலும் ஏற்படுத்துகிறார்கள். கணிதவியல் பேராசிரியரான ஐ. ஜெயராஜ் என்பவர் சுவைபட கணித வகுப்புகளை நடத்தி ஈர்ப்பு ஏற்படச் செய்ததையும் கூறுகிறார்.
மு.பா. அவர்கள் கூறுவதைப்போல அறிவியல் பார்வை, கணிதத்தின் புரிதல் இலக்கியத்திற்கும் வலு சேர்க்கின்ற ஒன்றுதான். வேறோர் இயலில் பண்பட்ட அறிவைப் பெற்றவர்கள் அதைத் தாங்கள் சார்ந்திருக்கும் துறைக்கும் விரிவுபடுத்தி உன்னதங்கள் படைக்க முடியும். நூலாசிரியருடைய அறிவியல் பின்னணியே பின்னாளில் இதழியல் திட்டக் கட்டுரையைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சிறப்பாக எழுத உதவியிருக்கிறது என்பதை இன்று இலக்கியம் படிக்கிற மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அறிவு என்பது தட்டிகள் வைத்து பிரிக்கப்பட்ட அரங்கு அல்ல. அது பரந்த பெருவெளி.
இலக்கிய ஆசானாக ஐ.சி. பாலசுந்தரம் அவர்களைச் சிலாகித்துப் பேசுகிறார். முதுமையில் படுத்த படுக்கையாக இருக்கும்போதுகூட தொல்காப்பியச் சூத்திரத்தை நினைவாற்றலுடன் கூறிய அவருடைய ஈடுபாடு நம்மையும் ஈர்க்கிறது. அவருக்குத் தன்னுடைய ‘சொற்கள் ஒளிரும் உலகம்‘ என்ற நூலைக் காணிக்கையாக்கியதையும் கூறுகிறார்.
விடுதி வாழ்க்கை ஒரு மாணவனைப் பண்படுத்துகிறது. சமூக நுண்ணறிவையும், உணர்ச்சி மேலாண்மையையும் அது விரிவுபடுத்துகிறது. சுயசார்புடன் நிற்பதற்கான தெம்பையும் திராணியையும், அதே நேரத்தில் சுயநலமில்லாமல் பரிவுடன் பழகுகின்ற தேர்ச்சியையும் அது கற்றுத்தருகிறது. நூலாசிரியர் கூறுவதைப்போல வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பகுதியில் விடுதியில் தங்குவது ஒரு மாணவனைச் செதுக்கி செம்மைப்படுத்தும்.
பல்கலைக்கழக வாழ்க்கையில் தமிழ் இலக்கியத்தை நிறைகலைக்குத் தேர்ந்தெடுத்த அனுபவங்களையெல்லாம் நுட்பத்துடன் விவரிக்கின்றார். சக மாணவிகளுடன் நட்புரிமையுடன் பழகிய சம்பவங்கள், பேராசிரியர்களின் அறையில் அமர்ந்து இலக்கிய விசாரம் செய்தவை, தமிழ்ப்புலத் தலைவரான பேராசிரியர் முத்துசண்முகம் பிள்ளையினுடைய ஆளுமை போன்றவற்றை அவர் விவரிக்கும்போது பல்கலைக்கழக வாழ்க்கையைச் சொட்டுச்சொட்டாக அவர் அனுபவித்து மகிழ்ந்ததை நாம் அறிய முடிகிறது.
கல்லூரி என்பதே கேளிக்கைகளுக்கான இடம் என்பதைப்போலத் தமிழ்த் திரைப்படங்கள் சித்திரிப்பதையும் கண்டிக்கிறார். ‘நாற்பது வயதுக்கு மேற்பட்ட குண்டான ஆண்களும் பெண்களும் முரட்டு முகத்துடன் கல்லூரி மாணவ மாணவியராக நடிக்கும் கொடுமை இந்தியத் திரைப்படங்களில் மட்டும்தான் நிகழும்‘ என்ற அவருடைய கொதிப்பான விமர்சனம் உண்மைதான்.
சிலப்பதிகாரத்தில் மூவேந்தர்களுக்குத் தரப்பட்டுள்ள முக்கியத்துவம் குறுநில மன்னர்களின் பெயரைக் குறிப்பிடாமல்கூட இருப்பதில் துருத்திக்கொண்டிருக்கிறது என்கிற மு.பா.வினுடைய விமர்சனத்தைப் பேராசிரியர் முருகரத்தினம் அங்கீகரித்ததை அவர் எழுதும்போது அன்று பேராசிரியர்கள் எத்தகைய பெருந்தன்மையோடு திகழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
நூலில் ஆங்காங்கே நகைச்சுவைச் சம்பவங்கள் இழையோடுகின்றன. தொடர்வண்டி இயக்குகிற நிலக்கரியை அள்ளி அடுப்புக்குள் எறிகிற அனுபவத்தைக்கூட அவர் பெற்றிருக்கிறார் என்பது மு.பா.வின் பரிசோதித்துப் பார்க்கும் வாழ்வியல் அணுகுமுறையை விளக்குகிறது. துணைவேந்தர்கள் எளிமையாகவும் அர்ப்பணிப்புடனும் திகழ்ந்த தன் பல்கலைக்கழகப் பருவத்தை ஏக்கத்துடன் இறுதியில் பதிவு செய்கிறார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினுடைய தமிழ்ப்புலத் தயாரிப்பு என்று பெருமிதமாகச் சொல்லும் நிலை தனக்கு ஏற்பட்டதற்கு தனக்கு வாய்த்த பேராசிரியர்களே காரணம் என்று அவர் நூலை முடிக்கிறபோது கூறுவது தனக்குக் கற்றுக்கொடுத்த அத்தனை ஆசான்களுக்கும் அவர் காட்டுகிற கற்பூர ஆரத்தியாக விளங்குகிறது.
சுயநலம் சார்ந்து இயங்குகிற தெளிவில்லாத மாணவர்களை இன்று கல்விக்கூடங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. வளாக நேர்காணலில் அதிக ஊதியத்திற்கு அடிமைப்படுவது மட்டுமே கல்வியின் இலக்கு என்கின்ற மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. மாணவர்கள் உபரி வாசிப்பை மேற்கொள்வதில்லை. அவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைத் தங்களுக்குள் தீர்க்கமாக விவாதிப்பதுமில்லை. அவர்களுடைய ஓய்வு நேரத்தை மின்னணுச் சாதனங்கள் மென்று துப்பிக்கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் சமூகத்தின் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய வினாவை நம் முன்னால் வைக்கின்றன.
கல்வி அடைந்திருக்கும் மாற்றங்களையும், கல்வியாளர்களின் அணுகுமுறையையும், சமூக அக்கறையோ அரசியல் விழிப்புணர்வோ இல்லாத மாணவர்களையும் நாம் சிந்தித்து பொறுப்புள்ள மனிதர்களாக உருவாக்கும் வேள்வியை எங்கிருந்து தொடங்குவது என்ற வினாவை இந்த நூல் ஆழமாக நம் இதயத்தில் எழுப்புவதே இதன் மகத்தான நோக்கம் என்று நான் கருதுகிறேன்.
கல்வியாளர்களும் கற்றுத்தருபவர்களும் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய ஓர் அனுபவப் பதிவு.
என் வகுப்பறை வாசனை: பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை. முருகேசபாண்டியன்ந., சென்னை: என்.சிபி.ஹெச். பதிப்பகம். பக்கம்: 230; விலை; ரூ.220/-. தொடர்புக்கு:044-26251968