நூல் அறிமுகம்

ஒரு காவல்துறை அதிகாரியின் டைரிக் குறிப்பு

மதிமலர்

எழுத்துகளில் மிகக் கடினமானது சுயசரிதை. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். உண்மைகளை எழுதினால் சிக்கல் வரும். ஆயினும் துணிந்து இந்நூலை எழுதி இருக்கிறார் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.சிவகுமார். “அனைத்து உண்மைகளையும் நான் எழுதவில்லை. ஆனால் எழுதிய அனைத்தும் உண்மை” என ஒரு பஞ்ச் வைத்து தப்பிக்கொள்கிறார்.

நம்மை பிரமிக்கவைப்பது அவரது சிறுவயதிலிருந்து அவர் சேகரித்து வைத்திருக்கும் நினைவுக்குறிப்புகள், புகைப்படங்கள், தகவல்கள்தான். பின்னாளில் இப்படியொரு நூல் எழுதுவோம் அதற்கு இதெல்லாம் தேவைப்படும் என நினைத்து அவர் மட்டுமல்ல யாருமே சேகரித்திருக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் அவரிடம் இயல்பிலேயே இருந்த ஒழுங்கும் காலநிர்வாகமுமே இதைச் சாத்தியப் படுத்தியிருக்கின்றன.

நாமக்கல் அருகே ஒரு கிராமத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை முடித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்து, தனியார் துறையில் பணியாற்றி, அரசுப் பணிக்குத் தேர்வாகி, பல இடங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்று… இதை அவர் இந்த 800 பக்க நூலில் மிக சுவாரசியமாக எழுதி இருக்கிறார். எத்தனை மனிதர்கள், எத்தனை சம்பவங்கள், எத்தனை அக புற நினைவுகள்…

அவர் படித்த கல்லூரி புதிதாக உருவாக்கப்பட்டது. எனவே நாற்காலிகள் எண்ணிக்கை குறைவு. நாற்காலிகளையும் தூக்கி வெளியே போட்டுவிட்டு தரையில் அமர்ந்து பாடம் கேட்கிறார்கள். இதுவும் போராட்ட வடிவமே. பாடம் எடுக்க வந்த ரங்கா ரெட்டி என்ற பேராசிரியரும் தரையில் அமர்ந்து பாடம் சொல்லித் தருகிறார். இந்த போராட்டத்துக்கு விரைவிலேயே வெற்றி. அழகிய புதிய நாற்காலிகளை நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது.

ஏராளமான ஆன்மிக அனுபவங்கள் இந்நூலில் உள்ளன. தனியார் துறையில் வேலை செய்தபோது தொலைபேசிக்குக் கள்ளச்சாவி போட்டுப் பேசியதையும் ஒப்புக் கொள்ளும் திறந்த மனது.

தான் பிறந்த வடுகம் கிராமத்துக்கே உரிய நாடகங்கள் நடத்தும் பின்னணியை அழகாக விவரிக்கும் அவர் அந்நாடகங்களில் நடித்த ஊர்க்காரர்களின் படங்களைக்கூட விடாமல் பிரசுரித்து பெருமை கொள்கிறார். தன் கல்லூரி அறைத் தோழர் பழனி கொடுத்த டைரியில் தான் பல நினைவுகளைப் பதிவு செய்ததாகத் சொல்கிறார். அந்த டைரிக்கும் நண்பர் பழனிக்கும் நன்றி.

சுயசரிதைகள் என்பவை வெறும் நினைவுகள் அல்ல. வாழ்ந்த காலத்தின் பதிவுகள். இந்நூல் முழுவதும் ஓர் ஐம்பதாண்டுகால தமிழக சமூக வரலாற்றுப் பதிவுகளும் இடம்பெற்றிருப்பது முக்கியமானது.

என்னுள் நான் (முதல் பாகம்) மருத்துவர் ஆர்.சிவகுமார் ஐபிஎஸ், வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் – 641001. போன்:9047087053, விலை ரூ:850.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram