நூல் அறிமுகம்

கையடக்க உலகம்!

Staff Writer

அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் எளிமையானவை போல் தோன்றினாலும் உள் நுழைந்து பார்க்கும் போது திகைப்பையும் வியப்பையும் அளிக்கக் கூடியவை.

அவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு வகைமைக்குள் அடக்கித் தொகுத்து ' அ.முத்துலிங்கத்தின் திருட முடியாத கதைகள்' என்கிற தலைப்பில் இதழாளர், எழுத்தாளர் அருள்செல்வன் தொகுத்துள்ளதைக் காலச்சுவடு பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் அந்நிய மண்ணில் நிகழ்பவை. ஆனாலும் அவற்றை நம் மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து சேர்த்துள்ளார் அ.மு.

அ. மு. ஒரு முறை ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் 'என்னுடைய அனுபவங்களை யாராலும் திருட முடியாது' என்று. அப்படிப்பட்ட அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகளாக இருப்பதால்தான் இந்தத் தொகுப்பு நூலுக்கு அதன் பிரத்தியேகத் தன்மையைக் கருதி, ‘அ.முத்துலிங்கத்தின் திருட முடியாத கதைகள்' என்று பெயரிட்டுள்ளார்கள்.

மனதில் வறுமையையே சுமந்துள்ள உக்ரெய்ன்காரி நடாஷா, மனைவியிடமே அடிமையாக இருக்கும் பிலிப்பைன்ஸ் காரன் மார்ட்டின், சோமாலியாவில் குடிநீருக்காக தவிக்கும் மைமூன், ஆப்கானிஸ்தானில் காசிம்- ரஸீமா காதல், ஆப்பிரிக்க வேலைக்காரன் குதம்பே, பெஷாவரில் இருக்கும் தேவி ரசிகர், இத்தாலியில் பசியால் தவிக்கும் சோமாலி, தாய்லாந்திலிருந்து சாகசப் பயணம் செய்யும் ஜெகன், கனடாவில் கொட்டும் பனியில் பிரசவம் பார்க்கச் செல்லும் டாக்டர், சியரா லியோன் நாட்டில் மலிவான பொருள் வாங்கும் இலங்கைக்காரர், குடும்பச் செலவுக்காக தந்தையால் அடகு வைக்கப்படும் ஆப்பிரிக்கச் சிறுவன் உக்கோ இப்படி எத்தனையெத்தனை குணச்சித்திரங்கள் அத்தனையும் புதியன.

அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகையுணர்ச்சி காட்டாமல் சம நிலையில் நின்று இந்த மாறுபட்ட கதைகளை எழுதியிருக்கிறார் அ.முத்துலிங்கம். பாஸ்போர்ட், விசா இல்லாமல் அந்தந்த நாடுகளுக்குச் சென்று வந்த உணர்வு நிச்சயம்!

'அ.முத்துலிங்கத்தின் திருட முடியாத கதைகள்' காலச்சுவடு பதிப்பகம் ,669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001. போன் :63836 20414, விலை: ரூ.320.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram