ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா. நாவலின் ஆரம்பத்திலேயே நாகராஜ ராவ் மரணம் அடைகிறார். அவர் தலைமாட்டிலேயே அமர்ந்திருக்கும் கருப்பு உருவம் அவரிடம் நீ பிறந்ததில் இருந்தே உடன் இருப்பவன் நான். என் பெயர் கர்மன் என்று சொல்கிறது. ஒவ்வொரு நாவலுக்கும் அதை வாசிப்பவதற்கான மனநிலையை தயார் செய்வதில் முதல் அத்தியாயத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அதைச் சரியாக செய்து நம்மை அந்த குடும்பத்தின் கதைக்குள் இழுத்துப்போகிறார் ஹரன்பிரசன்னா.
நெல்லை அருகே பத்தமடையில் இருக்கும் மாத்வ பிராமணக் குடும்பத்தில் காந்தி, ராஜாஜி காலந்தொடங்கி நடக்கிற கதை. அந்த குடும்பத்தின் ஆண்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு மாதிரி; தனிப்பட்ட குணங்கள்; அது சார்ந்த சம்பவங்கள்; சம்பிரதாயங்கள் என நேர்த்தியாக தீட்டி இருக்கிறார். தனிப்பட்ட குணங்களும் நிமிர்வும் கொண்ட பெண் பாத்திரங்களை வடிவமைத்து ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்லி இருக்கிறார். சாரதா என்ற பெண் மீது கொண்ட முறையற்ற ஆசையால் சுப்பாராவ் என்ற பாத்திரம் நடந்துகொள்ளும் முறைதான் இந்நாவலின் அடிநாதம். சுப்பாராவைத் தாண்டி கதை நகர்ந்தாலும் அவரது சுவடு அழுத்தமாக இக்கதையில் ஒரு கரிய நிழலாகப் படிந்திருக்கிறது.
கர்மன், ஹரன் பிரசன்னா, சுவாசம் வெளியீடு, விலை ரூ 410