நூல் அறிமுகம்

மனநல வழிகாட்டி

மதிமலர்

இன்ட்ரோவெர்ட் தன்மை என்பது என்ன? எவருமே வேண்டாம் என்கிற சமூக வெறுப்புத் தன்மையையும் அதீதக் கூச்ச சுபாவத்தையும் பலர் இன்ட்ரோவெர்ட் தன்மை எனப் புரிந்துகொண்டுள்ளனர். உண்மையான இன்ட்ரோவெர்ட்டுகள் சமூகத்துடன் இணக்கமாக இருக்கக் கூடியவர்களே எனப் பேசத் தொடங்கும் இந்த உளவியல் நூல் மனிதர்களை ஆரோக்கியமான மனநிலைக்குத் தயார்செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

காதல் என்பது ஹார்மோன்களின் சேட்டையா? அதையும் தாண்டிய ஒன்றா என்று உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து உண்மையான காதல் என்பது என்ன? காதலின் பல வகைகள் என்னென்ன என்றெல்லாம் ஆய்ந்து ஒரு கட்டுரையில் நூலாசிரியர் சொல்லி இருக்கிறார். தான் என்கிற ஆணவத்தை விடுவதே காதலின் பொன்விதி எனச் சொல்வதை சிந்தித்துக்கொண்டே இருக்கலாம். காதலில் பிரேக் அப் ஏற்படும்போது அதைச் சமாளிப்பது எப்படி என்றும் ஒரு கட்டுரை பேசுகிறது. காதலுக்கு உரையாடல் அடிப்படைக் காரணி; குறிப்பறிதல் என்பது வள்ளுவர் காலத்துடன் போய்விட்டது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.

ஆளுமைக் கோளாறுகள், மருத்துவ உளநோய்கள், தொடர்பாடல், வாழ்வியல் சவால்கள் போன்ற தலைப்புகளில் சிக்கலான உளவியல் கோட்பாடுகளையும் எளிமையாகப் புரியும் மொழியில் எழுதியிருக்கிறார் நூலாசிரியரும் மனநல ஆலோசகருமான ஜெய கண்ணன். PTSD எனப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மனநலக்கோளாறு பற்றி எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் அவர் காட்டியிருக்கும் இரு உதாரணங்கள், சமூகத்தில் பல நிகழ்வுகளை உளவியல் கோளாறு என்ற கோணத்தில் பார்த்து சிகிச்சை அளித்திருக்கலாமோ என எண்ண வைக்கிறது.

நானும் இன்ட்ரோவர்ட் தான், ஜெய கண்ணன், வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ், விலை ரூ.350, பேச:9600398660

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram