நூல் அறிமுகம்

நிலவின் கதைகள்

சக்தி ஜோதி

கவிஞர் பழநிபாரதி, திரையிசைப் பாடல்களில் தனக்கென தனித்த அடையாளம் பெற்றிருப்பவர். மேலும் கவிதை எழுதுவதை தம்முடைய அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்றாகக் கொண்டிருப்பவர். இவருடைய கவிதைகள் பல்வேறு உருவகங்கள், உவமைகளைக் கொண்டு வாசகனை மிகவும் எளிதாக தன்பக்கம் ஈர்க்கக்கூடியவை.  அன்றாட வாழ்க்கையின் சிக்கல்கள், அரசியல்,  தனிமனித மற்றும் சமூக உளவியலென பல்வேறு தளங்களில் இயங்கும் இவரது கவிதைகள், எளிமையான சொற்களில் ஆழமான பொருளை உணர்த்துபவை.

கவிஞர் பழநிபாரதி சொற்களைச் சத்தமின்றி உணர்வுகளாக மாற்றும் கலைஞன். அவரது கவிதைகள் மேடைகளில் கைதட்டலை எதிர்பார்ப்பதல்ல,  வாழ்க்கையின் நிழல்பகுதிகளை மனதோடு மௌனமாகப் பேசுகின்றன. மண்ணின் வாசனை, உழைப்பின் வலி, ஒடுக்கப்பட்டவர்களின் அடங்கிய குரல், காதலின் மென்மையான வலியை உணர்த்துபவை. பூக்களால் அலங்கரிக்கப்பட்டதுபோல காட்சியளித்தாலும் முட்களுக்கிடையில் மலரும் உண்மை. பழநிபாரதியின் கவிதைகள் மனிதனை மனிதனாக நிறுத்துவதற்கான  மென்மையான ஆனால் உறுதியான அழைப்பாகவே நிகழ்கின்றன.

“நிலவு ஒரு கதை சொல்லி” எனும் இந்தக்கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன்  நிலவோடு நாமறிந்த கதைகளாகவும்  விரியத்தொடங்கிவிடுகிறது. இந்த நிலத்தில் வாழ்கிற மானுடர் யாவரும்  நிலவைக் குறித்து அவரவர்க்குத் தெரிந்த கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்க, நம் எல்லோரையும் அறிந்த நிலவு ஒவ்வொருவரையும் பற்றிய எண்ணிலியான கதைகளைத் தன்னிடத்தில் புதைந்து வைத்திருக்கிறது. அவ்வாறாக நிலவு அறிந்திருக்கும் மானுடர்களின் கதைகளாக இந்தத் தொகுதியின் கவிதைகள் பல்வேறு படிமங்களுடன் அமைந்துள்ளன.

உதாரணமாக, ‘மற்றொரு மீன்’  எனும் தலைப்பில் அமைந்துள்ள கவிதை,

“நீங்கள் ஒரு மீனுக்குத்

தூண்டிலிடுகிறீர்கள்

அது

தப்பிவிடுகிறது

மற்றொரு மீன்

தன்னைத் தந்து

அதை விடுவித்திருக்கிறது

இறந்த கண்களால்

உங்களை

அது கண்காணிக்கிறது

பெரிதாக

நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டாம்

பிரபஞ்சத்தின்

ஒரு மீச்சிறு நிகழ்வுதான்

இதுவும்.”

இந்தக்கவிதை முதல் வாசிப்பில் எளிமையானதாகத் தோன்றுகிறது. ஆனால் ஒரு மீனின் தியாகம், மற்றொரு மீனின் விடுதலை என்கிற இருவேறு செயல்களில் உள்ளிருக்கும் ஒத்திசைவு சட்டென மனத்துக்குள் அதிர்வை எற்படுத்தக் கூடியது. 

மென்மையாகத் தொடங்கும் இந்தக்கவிதை,  அலங்காரமான சொற்கள் எதுவுமற்று தன்போக்கில் இயல்பாக சொல்லப்பட்ட ஓர் உயிரின் வலியை, எந்தவிதமான குற்றச்சாட்டுமின்றி தூண்டிலிட்டவனை உற்றுநோக்கவைக்கிற நுட்பம் இது.   நேரடியாக வாசகனிடம் பேசுகிற இக்கவிதையின் நிறைவு வரிகளின் மூலம், தன்னை தியாகமாக்குபவரை சுலபமாக மறந்துவிடுகிற  மனித மனத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது.

 பழநி பாரதியின் கவிதைகளில் தலைப்பில் ஒரு கதை தொடங்கிவிடுகிறது. கவிதைக்குள் பயணிக்கையில் வாழ்க்கையின் எதார்த்தமும் தத்துவமும் வெளிப்படுகிறது. ‘கிரீச்’ எனும் தலைப்பில் அமைந்துள்ள ஒரு கவிதையில், பறவையின் சத்தமா, நீண்டநாட்களாகத் திறக்கப்படாமலிருக்கும் வீட்டின் கதவைத் திறக்கும் சத்தமா அல்லது இறுகிக்கிடக்கும் ஒருவரின் மனம் ஏதோவொரு  இணக்கமான தருணத்தில் எதிர்பாராமல் உடைந்து அழும் தருணமா என்று பல்வேறு விதங்களில் கற்பனையை விரியச் செய்பவை. இந்தக் கவிதையின் மையப் படிமம் குருவி. ஆனால் அது ஒரு பறவை மட்டுமல்ல; அறிந்த உலகத்துக்கும் அறியாத கனவுகளுக்கும் நடுவே மிதக்கும் ஒரு சுயம்.

‘எதிர்வானம் நோக்கி

ஒரு குருவி

காற்றைப் பின்தள்ளி

உந்தியெழ நினைக்கிறது’ எனும் வரிகளில் இந்த வாழ்க்கையின் சவால்களும்,  

‘அதன் ஒரு பக்கக் கண்ணில்

நேற்றிரவு கடைசியாகப் பார்த்த

நட்சத்திரத்தைப் பார்த்தேன்

தானியங்கள் சிந்திக்கிடப்பதை

புழுக்கள் ஊர்வதை

ஒரு பூமொட்டு அசைவதையும் பார்த்தேன்’ எனும் வரிகளில் அன்றாட வாழ்க்கையின் சிறிய தருணங்கள், உயிரின் இயக்கம், நிகழ்காலத்தின் உண்மைகளும்,  

‘இன்னொரு பக்கக் கண்ணில்

அதன் தனித்த கனவிருக்கலாம்

மற்றொரு வானமிருக்கலாம்

கவண்கல் காயமிருக்கலாம்

அலைக்கழிந்த வலியிருக்கலாம்’ எனும் வரிகளில்  பறவையெனும் படிமம் முழுமையாக மனிதனாக மாறுகிறது. கனவு- வானம், கவண்கல் காயம்- வலி என்று கவிதை மனித வாழ்வின் அர்த்தம் சொல்கிறது.  ஒருபக்கக் கண் நிகழ்காலத்தின் நிஜமெனில் மறுபக்கக் கண் அகவுலகப் பயணம்.

‘அறிந்ததற்கும் அறியாததற்கும் இடையில்
மிதந்துகொண்டிருக்கிறது அதன் கிரீச்சிடல்’

எனும் இக்கவிதையின் இறுதிவரிகளில் ‘கிரீச்’ என்பது ஒரு குரல் அல்ல; அது ஒரு நிலை. தீர்மானமில்லாத, ஆனால் அமைதியாகவும் இல்லாத ஒரு மனநிலை. பறக்கத் தயாராக இருக்கிற ஒரு உயிரின் உள்ளொலி.  சொல்லப்படாத பதற்றமும் மென்மையான வலியும் கொண்டிருக்கும் பறவையின் ஒலியால் தொடங்கி, வாசகனின் மனத்துக்குள் இக்கவிதை நிறைவடைகிறது.

 “நிலவு ஒரு கதைசொல்லி” எனும் இந்தக்கவிதைத்தொகுப்பில்,   

 ‘இரயிலுக்குள் நான்

எனக்குள் இரயில்

இருவரும் நிறுத்தமின்றி

ஓடிக்கொண்டே இருக்கிறோம்’-பக்.15

‘கனவொன்று

என் தோள் மீது ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறது’-பக்.15

 ‘பெயர் மாறிய பலகை

புதிய வெளிச்சத்தில் மின்னுகிறது

மனமோ பழைய பெயரை

மௌனமாக வாசிக்கிறது’-பக்.21

‘காற்றில்

சுடர் படபடக்கும்பொழுது

நட்சத்திரங்கள் நடுங்குகின்றன’’- பக்.26

‘குடைராட்டினக் குதிரைகள்

ஒன்றையொன்று

முகம் பார்த்துக்கொண்டதில்லை

அந்தத் தீராத வேட்கையில்தான்

அவை ஒன்றையொன்று தொடர்கின்றன

அல்லது துரத்துகின்றன’ -பக்.36

 ‘கடிகாரம்

ஒரு துறவியின் இதயம்போல

அமைதியாகத் துடிக்கிறது’-பக்.51

‘வேர்கள் உயரத்திலிருந்தல்ல

ஆழத்திலிருந்து நீரருந்துகின்றன’- பக்.57

‘மீண்டும் பூத்ததுபோல் ஒரு புத்துணர்வு

அப்படியே உதிரவேண்டுமென ஓர் உள்ளுணர்வு’- பக்.72

‘அலைகள்

எதற்காக இவ்வளவு சிப்பிகளைக்

கொண்டுவந்து கொட்டுகிறது’- பக்.79

போன்ற வரிகளினூடே வாசகமனம் தானாகத் திறந்துகொள்கிற கதவுகளில் புதிய பாதைகள் பலநூறாக விரிகின்றன.  

பழநி பாரதியின் கவிதைகள் எந்தத் தத்துவத்தையும் விளக்கவில்லை, ‘இதுதான்’ என்று எதன்பக்கமும் சாய்ந்து வாதிடவில்லை, தனிமை, தியாகம், துயரமென எவ்விதமான உணர்ச்சியையும் திட்டமிட்டுத் தூண்டுவதில்லை. மரணம், கல்லறை ஆகியவற்றைப் பேசுகிற கவிதைகளிலும் வாழ்க்கையின் இயல்பான ஓட்டத்தில் நிகழும் தருணங்களாக வாசக மனத்துக்குள் நிலைபெற்று நின்றுவிடுகின்றன.

“நிலவு ஒரு கதைசொல்லி” எனும் கவிதையில்  

“தூங்குவதற்காகக் கதைகேட்டு

தூங்காமல்போன நிறையப் பேரை

அதற்குத் தெரியும்”  எனத் தொடங்கி,

“நிலவு

திடுக்கிட்டு எழுந்துகொண்டது

துர்க்கனவிலிருந்து”

என நிறைவடைகையில் மென்மையான குழந்தைக்கதையாகத் தொடங்கி, ஆழ்ந்த மனிதத் துயரத்திற்கு மெதுவாக அழைத்துச் செல்கிறது. ஒற்றை நினைவைக் கொண்டதல்ல இந்தக்கவிதை, கூட்டு நனவிலியாக அமைந்து, வாழ்வின் துயரையும் மரணத்தின் அதிர்வையும் ஒன்றாக நினைவூட்டுகிறது.  இந்தத்தொகுப்பின் கவிதைகளில் பல  இவ்வகையான நிகழ்- நிழல் அடுக்குகளில் வெளிப்பட்டுள்ளன.

 வானில் நிலா முழுமையாக ஒளிரும் தினத்தில், ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் அதனுடைய தனித்த அமைதிக்குள் தன்னைத் தொலைத்திருப்பார். தான் நிற்கும் நிலத்திலிருந்து வெகுதொலைவில் ஒளிர்கிற நிலவிடம், ஒளி எவ்விதம் உருவாகிறது என்பதை அறிந்தபிறகும்கூட காதல்-இன்பம், பிரிவு-தனிமை, இழப்பு- துயரமென அந்தரங்கமான நிலைகளில் அந்த நிலவை தனக்கு மிக அணுக்கமாக உணர்பவர்கள் உண்டு. தன்னுடைய உணர்வுகளை நிலவிடம் கடத்திவிட்டதாக ஒருகணமேனும் நம்புகிற மனிதர்களினால்தான் சகமனிதரிடம் நேசம் கொள்ளவும் முடிகிறது.

 பருந்துப்பார்வை அல்லது பறவைப்பார்வை என்று குறிப்பிடப்படுவதுபோல இது நிலவின் பார்வை. இந்தக் கவிதைத்தொகுதி முழுக்க பல்வேறு கவிதைகளை இவ்விதமாக பகுத்துப் பார்க்கவியலும். பொதுவாகவே கவிதை வாசிப்பென்பது கவிஞன் குறிப்பிடுகிற உலகைக் கடந்து வாசகனின் அகஉலகத்தோடு நெருங்கிய தொடர்புடையது. “நிலவு ஒரு கதைசொல்லி” எனும் இந்தத்தொகுப்பு எனக்கு வாசிக்கக் கிடைத்ததும், என்னுடைய வாழ்பனுவங்களுக்கு உட்பட்டு நான் கண்டடையும் உலகமும் தனித்துவமானது. அவ்வகையில் இந்தத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வேறொரு அனுபவ அல்லது இரசனைக்கு உட்பட்ட வாசகனுக்கு வேறுவிதமான கதைகளை உணர்த்தக்கூடும். இவரது கவிதைகளிலிருந்து வெளியேறுகையில், ஒரு பதில் அல்ல, மனத்துக்குள் ஒரு கேள்வி மட்டுமே உடன் வருகிறது. இது, நவீனத் தமிழ்க் கவிதையின் உள்ளுணர்வு மரபில் முக்கியமான, ஆனால்  மெளனமான இடம்.

***

வெளியீடு: கொன்றை, சென்னை-116; விற்பனை உரிமை: தமிழ்வெளி: விலை, ரூ.120, பேச: 9094005600

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram