வட இலங்கையில் ஒரு கிராமத்தில் வாழும் குடும்பமொன்றின் கதையாக விரிகிறது இந்நாவல். ஒரு சகோதரி ஐந்து சகோதரர்கள் கொண்ட குடும்பம். இந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்து புறச்சூழல்களால் இளையவன் மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்வது வரைக்குமான கதை.
எந்த வம்பு தும்புக்கும் போகாத, கோபித்துக்கொண்டால் கோயிலுக்குப் போய் தேவாரம் சொல்லிக் கொண்டிருக்கும் துரை என்கிற பலசரக்குக் கடை ஊழியர்தான் குடும்பத் தலைவர். அவரது மனைவி பார்வதி, கணவனுக்கு ஏற்ற பெண்மணி.
1973-இல் தொடங்கும் இக்கதையில் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி மணமாகி பிள்ளை பெற்று ஆளாகும் வரையிலான சின்னச் சின்ன நிகழ்வுகள் பதிவாகி இருக்கின்றன. அந்த இலங்கைப் பகுதியின் கல்விச்சூழல், சமூகச் சூழல், அரசியல் சூழல், சாமானிய மக்களின் ஆசைகள் எல்லாம் பதிவாகின்றன. கடைக்குட்டி ஸ்ரீதர் வேலைக்குப் போகும்போது இயக்கத்தவரால் பிடித்துச் செல்லப்பட்டு, அவனது நிறுவனத்தார் தலையீட்டால் விடுவிக்கப்படுகிறான். பின்னர் ஆராதனா என்னும் பெண்ணை போராடி மணந்து நாட்டை விட்டே வெளியேறுகின்றான். ஈழ மண்ணில் இருந்து போர்ச்சூழலால் வெளியேறிய ஏராளமான இளைஞர்களில் ஒருவரின் கதையாக இது பதிவாகிறது.
1995-இல் இது முடியும்வரை அந்நாட்டில் ஏற்பட்ட பெரிய அரசியல் மாற்றங்கள் படிப்படியாக அங்கங்கே பதிவானாலும் சாமானியமானதொரு குடும்பத்தின் கதையாகவே இது செல்கிறது. எளிமையும் சுவாரசியமும் கொண்டதொரு நடை.
சொல்லில் வருவது பாதி, கே.எஸ்.சுதாகர், வெளியீடு: சுவாசம், சென்னை -127 விலை ரூ 380.