நூல் அறிமுகம்

பொறுப்பும் பொதுநலனும்

மதிமலர்

அதிகாரமிக்க பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கலை ஈடுபாடு என்பது மிக மிக அரிதான ஒன்று. அப்படிக் கலை ஈடுபாடு கொண்ட அதிகாரியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அரிதான ஒருவர்தான் ஞான ராஜசேகரன் ஐ ஏ எஸ். அவர் எழுதிய நூல், ‘நேர்மை படும் பாடு’ . இந்த நூலில் ஓர் அதிகாரிக்கு நேர்மையைக் கடைப்பிடிக்கவும் செயல்படுத்தவும் குறுக்கே விழும் தடைகள், இடையூறுகள், மன ஊசலாட்டங்கள் போன்றவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புறத்தாக்கங்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு வென்று உளச்சான்று வழியில் நின்று வென்ற பல்வேறு தருணங்களை உண்மை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கி உள்ளார்.

அளவுக்கு மிஞ்சி நேர்மையாக இருந்த ஆர்டிஓவை பஸ் முதலாளி கத்தியால் குத்திய சம்பவம், திருச்சூருக்கு நீர் வழங்கும் அணைக்கட்டு நீரில் விஷம் கலந்து பரவிய போது பிரச்சினையைச் சமாளித்தது,அரசியல்வாதிகள் கட்சிக்காரர்களிடம் ஒரு விதம் அதிகாரிகளிடம் வேறு விதம் என நடத்தும் நாடகங்கள், பாலா பகுதி தொழிலாளர் முதலாளிகள் பிரச்சினையைத் தீர்த்தது, படசென்சாரில் தலையிட்ட அமைச்சரை சமாளித்தது, பிரதமர் ராஜீவிடமே தைரியமாகக் கருத்து சொல்லி அதையும் ஏற்க வைத்த கிராம நிர்வாக அலுவலர், தேர்தலின் போது வாக்குச்சாவடியில் ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கப்பட்டும் ஒன்றும் நடக்கவில்லை என்று கூறி அதை மறைத்த தேர்தல் அதிகாரி என பல சம்பவங்கள் இதில் உள்ளன. ஓர் அரசு அதிகாரி எதிர்கொண்ட சம்பவங்களின் தொகுப்பாகவும் அவர் காலத்து கேரளத்தின் கண்ணாடியாகவும் இதைப் படிக்கலாம்.

நேர்மை படும் பாடு, ஞான ராஜசேகரன், வெளியீடு: டிஸ்கவரி புக் பப்ளிகேஷன்ஸ், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை 600078. போன்: 87545 07070 விலை : ரூ.240

-அபூர்வன்

சுவாரசியமான கதைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் ம,நவீன் எழுதிய எட்டு சிறுகதைகள் வேப்டியான் என்ற தலைப்பில் நூலாக வெளியாகி உள்ளன. தலைப்புச் சிறுகதையான வேப்டியான- வேம்படியான் என்கிற சொல்லின் மருவிய வடிவம் -மிகத் தரமான பேய்க்கதை. யாரும் சட்டென குறும்படமாக எடுக்க விழையக்கூடிய கதை. தாத்தா பேத்திக்குச் சொல்லும் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இக்கதையில் உள்ளாகவும் கதைக்கு வெளியாகவும் என அமைக்கப்பட்டிருக்கிறது. நாய் வளர்ப்பு பற்றி இரு சிறுகதைகள் உள்ளன. அகநக என்கிற கதையில் சிறுவன் ஒருவன் நாய்க்குட்டியை வளர்த்து எதிர் வீட்டுக் கிழவரிடம் படாத பாடு படும் கதை. மிருகம் என்ற இன்னொரு கதை மிக உருக்கமான நாயன்பர்களை மிகவும் கவரக்கூடிய கதை. குரைப்பதெல்லாம் நாய் எனக் கருதும் ஒருவன் நாய்க்குட்டி ஒன்றை வளர்க்கிறான். அவனது காதல் மனைவிக்கு அதைப் பிடிப்பதில்லை. அவளுக்கு உயர் ரக நாய்களே பிரியம். தெருநாய் என இதைக் கரித்துக் கொட்டுகிறாள். இரு நாய்களுக்கும் இடையே.. மன்னிக்கவும். நாய்க்கும் மனைவிக்கும் இடையே அவன் கிடந்து படும் அவஸ்தையை சிரித்துக்கொண்டே படிக்கலாம். முடிவு உருக்கமானது.

தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பில் யுவன் சந்திரசேகர் தமிழகச் சூழலில் எழுதப்படும் சமகாலக் கதைகளுக்கு நிகரான பெறுமதி கொண்ட கதைகள் இவை எனக் குறிப்பிடுகிறார். மிகச் சரியான மதிப்பீடு. மலேசியத் தமிழ்ச்சூழலில் எழுதப்பட்டிருப்பதால் கூடுதல் சுவாரசியம். எதார்த்த நிகழ்வுகளுடன் கூடிய கதைகளுடன் மாயங்கள் நிகழும் கதைகளும் கலந்து கட்டி இந்த தொகுப்பு வெளியாகி உள்ளது.

வேப்டியான், ம.நவீன், வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ், எஸ்ஜிபி நாயுடு காம்ப்ளக்ஸ், தண்டீஸ்வரம் பேருந்து நிலையம், வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி, சென்னை -42 பேச: 9042461472, விலை ரூ: 180

காலவெளிக் கோலங்கள்!

எழுத்தாளன் காலத்தைப் பதிவு செய்கிறான். புகைப்படக் கலைஞனோ அதே காலத்தை உறைய வைக்கிறான் என்று சொல்லும் புதுவை இளவேனில், காலத்தை உறைய வைத்த தன் சில புகைப்படங்களை நிச்சலனத்தின் நிகழ்வெளி என்ற தலைப்புல் நூலாக ஆவணப்படுத்தி இருக்கிறார். ஆதிமூலத்தில் தொடங்கி விக்கிரமாதித்தன் வரையிலான கலைஞர்களை காலத்தில் உறைய வைத்து வண்ணப்படங்களாகத் தந்துள்ளார். சு.ரா., கிரா., பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களிடம் இளவேனில் கொண்டிருந்த நெருக்கம் அந்த படங்களில் தெரிவதை உணர முடியும். எந்த தயக்கமும் இன்றி தங்கள் ஆளுமைகளை அவர் முன்னே வைத்திருப்பர். பாண்ட் சட்டையில் தோற்றமளிக்கும் நாஞ்சில்நாடன், குழந்தைத்தனம் இழந்திராத கனிமொழி கருணாநிதி, கம்பீரமான எஸ்.ரா., கேளிக்கையும் தீவிரமும் கொண்ட சாரு நிவேதிதாவின் முகங்கள் ஆகியவற்றை இதில் காணமுடிகிறது. ஜெயமோகன், பாவண்ணன், ரவிகுமார், பெருமாள் முருகன், பவாசெல்லதுரை, அழகிய பெரியவன், டிஎம் கிருஷ்ணா, மருது ஆகிய ஆளுமைகளையும் அழகியதருணங்களாக உறையச் செய்துள்ளார்.

நிச்சலனத்தின் நிகழ்வெளி, புதுவை இளவேனில், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், எண் 9, பிளாட் எண்1080ஏ, ரோஹிணி ப்ளாட்ஸ், முனுசாமி சாலை, கேகே நகர் மேற்கு, சென்னை-600078 பேச: 994040 46650 விலை: ரூ 600

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram