நூல் அறிமுகம்

தொல்காப்பியத் தொண்டர்

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம்

மதிமலர்

தொல்காப்பிய அறிஞர்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருபவரான புதுச்சேரியைச் சேர்ந்த தமிழாய்வாளர் மு.இளங்கோவன், தற்செயலாக தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம்(1957) என்ற நூலைக் கண்ணுற்றார். இதை எழுதிய பெருமகனான நெல்லை இரா.சண்முகத்தைப் பற்றிய தகவல்கள் தெரியாத நிலையில் மலேசியா, மும்பை, நெல்லை போன்ற இடங்களுக்கு நேரில் சென்று தகவல்கள் சேகரித்து அவரைப்பற்றிய இந்நூலை எழுதிஇருக்கிறார்.

 நெல்லை இரா.சண்முகம், தந்தை பெரியார் மீது ஈடுபாடு கொண்டவராகவும் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவராகவும் இருந்திருக்கிறார். சுமார் ஏழு நூல்களை அவர் எழுதியிருக்கிறார். திரு.வி.கவின் எழுத்துகளால் உந்தப்பட்டு தொல்காப்பியத்தின் பால் ஈடுபட்டவர். திருசெந்தூர் அருகே அங்கமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மலேசியாவுக்கு தொழில்நிமித்தமாகச் சென்று வாழ்ந்தவர். தொல்காப்பியம் குறித்து நூல்களும் கட்டுரைகளும் எழுதியதுடன் பொதுமக்களிடம் இதைப் பரப்பிடவும் உழைத்தவர். ஆனால் இவரைப்பற்றிய எந்த தகவலும் பொதுவெளியில் இல்லை. இவரது மகன் தமிழப்பன் என்பவர் மருத்துவம் படித்து அரசுப்பணியில் இருந்தவர். அவரல் குடும்பம் உயரும் என்று எண்ணியபோது பாம்பு கடித்து தமிழப்பன் இறந்துவிடுகிறார். மெல்ல மெல்ல சண்முகம் பற்றிய தகவல்கள் வந்து சேர, புகைமடிந்து இருக்கும் சண்முகத்தின் ஆளுமை இந்நூலில் துலக்கம் பெறுவதைக் காணமுடிகிறது.

இந்நூலின் நோக்கம் மறைந்த தமிழறிஞர் ஒருவர் மீது ஒளிபாய்ச்சுவதுடன் தற்போது சராசரியான வாழ்க்கையில் இருக்கும் சண்முகத்தின் வாரிசுகளுக்கு  நல்லதொரு எதிர்காலம் அமையாதா என்பதும்தான்.

தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்), முனைவர் மு இளங்கோவன், வெளியீடு: வயல்வெளி பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம்(வழி), அரியலூர் 612 901. விலை ரூ 200

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram