இமையம் 
நூல் அறிமுகம்

பலியாடுகள்

இமையத்தின் புதிய நாவலான உப்பு வண்டிக்காரன் விமர்சனம்

அசோகன்

சமகாலப் பேரழிவுகளில் ஒன்றாக நாம் கண்டது கொரோனா பெருந்தொற்று. சுமார் ஈராண்டுகாலம் உலகையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஆட்டம் போட்டது கொரோனா. அது கொடுத்த அனுபவங்களும் பாடங்களும் இன்று பழங்கதை ஆகிவிட்டன. இமையத்தின் புதிய நாவலான உப்பு வண்டிக்காரன் அதைத்தான் பேசுகிறது. கொத்துக்கொத்தாக மனிதர்கள் செத்துப்போனார்கள். ஊருக்குள் புகுந்து ஆட்களை அரசே வண்டி வைத்து கொரோனா சந்தேகம் என்றபெயரில் ஏற்றிச் சென்று காப்பகங்களில் அடைத்தது. அங்கு பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தவர்களை மருத்துவமனைகளை ஒட்டிய இடங்களில் வைத்துக் கண்காணித்தது. தனிமைச் சிறையில் அடைப்பதுபோன்ற துன்பத்தில் உழன்ற பலர் மீண்டு வராமலே போனார்கள். தினமும் அச்சத்துடன் படுக்கப்போய் காலையில் விழித்ததும் உயிருடன் இருப்பதற்காக திருப்திப் பட்டுக்கொண்டது மானுடம்.

உப்பு வண்டி ஓட்டியான சண்முகமும் அவர் மனைவு முத்துக்கருப்பாயியும் தங்கள் மகனுடன் சேர்த்து கொரோனா தொற்று என சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். திருமணமாகி இரு பிள்ளைகளுக்குத் தகப்பனான அவர்களின் மகன் பார்வையில் இந்த கதை சொல்லப்படுகிறது. சொல்லொணாத வேதனைகளுக்குப் பிறகு மகன் மட்டுமே கிராமத்துக்கு வருகிறான். செத்த தகப்பன் முகத்தைக் கூட பார்க்க அனுமதிக்கப்படுவது இல்லை. விட்டேத்தியாக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் மகனுக்கும் பெற்றோருக்குமான உறவு அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம் கொரோனா பணியில் இருக்கும் அலுவலர்கள், காவலர்களின் நடத்தையும் துயரமும் கூட பதிவாகிறது. கொரோனா வந்து எல்லோரையும் சுயநலக்காரர்களாக ஆக்கிவிட்ட அவலத்தை இமையம் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். அந்த பேரழிவுக் காலத்தை மீண்டும் வாழ்ந்தது போன்ற அனுபவத்தைத்தருகிறது அதன் சாட்சியமாக வெளியாகி இருக்கும் இந்நாவல். கொரோனாவில் தங்கள் நட்புகளையும் உறவுகளையும் இழந்தவர்கள் இந்நாவலை வாசித்தால் மீண்டும் கதறி அழப்போவது உறுதி.

அரசாங்கத்தால் லாக்டவுன் போடப்பட்டு அள்ளிச் செல்லப்பட்டு பந்தாடப்பட்ட இந்த கதையின் நாயகனுக்கு இமையம் சூட்டி இருக்கும் பெயர் கவர்னர். இந்த பெயரின் மூலமாக ஒட்டு மொத்த அரசு எந்திரத்தையே விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது இந்நாவல்.

உப்பு வண்டிக்காரன்

ஏற்கெனவே கவர்மெண்ட் பிணம் என்ற சிறுகதையை இந்த கொரோனா அவலத்தை ஒட்டி எழுதி உள்ளார் இமையம். இறந்து போன கணவனின் உடலை அரசு எடுத்துச் சென்று புதைத்துவிடுகிறது. அரசு அதிகாரிகள் அதை கவர்மெண்ட் பிணம் என்கிறார்கள். கொள்ளி போடக்கூட சிறு பையனுக்கு உரிமை இல்லை என்கிற சூழலைச் சுட்டிக்காட்டிய கதை அது.  இதனுடைய தொடர்ச்சியாகவே கூட இந்த நாவலையும் வாசிக்கலாம்.

கவர்னரைக் கொண்டுபோய் தனி அறையில் அடைக்கின்றனர். அவனுக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. தனக்கு இன்னும் சில நாட்கள் கழித்து செய்யப்படும் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால்தான் ஊருக்குப் போகமுடியும். தந்தையும் தாயும் அதே இடத்தில் வெவ்வேறு தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தந்தைக்கு ஜுரம் என்று வந்ததும் அவரை மருத்துவமனைக்கு கவச உடைப்பணியாளர்கள் அழைத்துச் செல்கின்றனர். தாயையும் அப்படியே. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என அறிந்துகொள்ள ஒரு பிச்சைக்காரனை விட மோசமாக அரசு எந்திரத்திடம் கெஞ்சவேண்டி இருக்கிறது. ஆம்புலன்சில் மூடப்பட்ட பிணத்தை தூரத்தில் இருந்து பார்க்கிறான். சாவுச் செய்தி கூட ஏதோ வானிலை அறிக்கை போல் எந்திர கதியில் சொல்லப்படுகிறது.

கிராமங்களில் திருமணத்துக்குக் கூட போகாமல் இருப்பார்கள். சாவு என்றால் தவற விடமாட்டார்கள். அப்படியொரு சூழலில் அரசே செத்துப்போனவர்களின் பிணத்தைக் கொண்டு வந்து குழி வெட்டி மூடிவிட்டுப் போகிறது. யாரையும் கிட்டே சேர்ப்பதில்லை. தொற்றுநோய்க்காலங்கள் இப்படித்தான் மனித குலத்தை சீரழித்து வந்துள்ளன. பழங்காலத்தில் புதைக்க ஆளில்லாமல் தெருத்தெருவாய் காலரா, ப்ளேக் பிணங்கள் கிடந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வாயு வேகத்தில் விரைந்துகொண்டிருந்த மனிதனை பிடரியில் தட்டி வீட்டில் உட்கார் எனச் செய்த வலிமை அந்த கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியிடம் இருந்தது.

இந்த காலகட்டத்தை எழுத்தில் பதிவு செய்யும் கடமையை இமையம் செய்திருக்கிறார்.

இமையம்

அரசாங்கம் அரசாங்கம் என்கிறோமே அவர்கள் யார்? கொரோனா காலத்தில் பரிசோதனை செய்ய முழு கவச உடை அணிந்து அஞ்சி அஞ்சி பணி செய்த மருத்துவத் துறை முன் களப்பணியாளர்கள், தொற்று சந்தேகத்தின் பேரில் ஆட்களைப் பிடித்து தனிமைப்படுத்திய காவலர்கள், விஏஓ, தாசில்தார் உள்பட்ட வருவாய்த் துறையினர் இவர்கள்தான் அதன் கரங்கள். இந்தத் தொற்றால் அவர்களும்தான் பாதிக்கப்பட்டு மாண்டுபோயினர். இந்த நாவல்  முழுக்க, உயிரச்சத்துடன் கூடிய, கிட்ட வராதே என்ற குரல் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  ‘பொணத்தைச் சொந்தம் கொண்டாடினா நீயும் பொணமாயிடுவே...’ஒரு போலீஸ்காரர் கவர்னரை விரட்டி அடிக்கிறார். அந்த ஒற்றை வரியில் இருக்கிறது ஒரு பெருந்தொற்றின் கோரத்தாண்டவம்.

உப்பு வண்டிக்காரன், இமையம், க்ரியா, எண் 58, டி என் ஹெச் பி காலனி, சானடோரியம், தாம்பரம், ஹென்னை -600047 பேச: 7299905950 விலை ரூ 350