அன்றாடச் சூழல்களை, நிகழ்வுகளை கதைகளாக்கிப் பார்த்திருக்கிறார் நள்ளிரவு சூரியன் என்ற இந்த தொகுப்பில் நூலாசிரியர். இதில் 20 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் பெண்களின் கோணத்தில் இருந்து எழுதப்பட்டவை. காதல் கணவனை அவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக தூக்கி எறிந்து, சொந்தக்காலில் நிற்கும் பெண் பற்றி ஒரு கதை வருகிறது. கணவனைவிட கூடுதல் சம்பளம், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட கணவன், கோபத்தில் அவளுடைய நடத்தையைப் பற்றி தப்பாகப் பேசிவிட, இனி ஏன் நீ எனக்கு எனத் தூக்கி எறிகிற தற்காலப் பெண்ணின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்தரம் வேண்டும் என்பதையும் இவரது கதைகள் வலியுறுத்துகிறது. கற்பு கற்பு என கதைத்து மனம் புழுங்குவதையும் தூக்கிப்போடுகிறது இன்னொரு கதை. ஆணுக்கும் அது பொதுவில் வைக்கப்படாதபோது பெண்மட்டும் ஏன் அதைத் தூக்கிச் சுமக்கவேண்டும்? இப்படிச் சில கதைகளுக்கு நடுவில் தொலைக்காட்சி குடும்ப சீரியல் எழுத்தாளர்களுக்கு உதவும் நிகழ்வுகள் கொண்ட அழகான கதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. எதார்த்தமும் மீறலும் கொண்ட கதைகளின் தொகுப்பு.
நள்ளிரவு சூரியன், டாக்டர் கவிதா, வெளியீடு: பரிதி பதிப்பகம், 56 சி/128, பாரதமாதா கோவில் அருகில், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் -635851 பேச: 7200693200, விலை ரூ.200