நூல் அறிமுகம்

கால் நூற்றாண்டுக் கண்ணீர்

மதிமலர்

ராஜீவ் காந்தி படுகொலையில் சிபிஐ நடத்திய விசா ரணையில் ஏராளமான குழப்பங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி பல்வேறு நூல்கள் வெளிவந்துவிட்டன. அந்த விசாரணையே பல கோணங்களில் மறு

விசாரணைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கால் நூற்றாண்டாக சிறையில் இருக்கும் நளினி, விசாரணை என்ற பெயரில் தான் எதிர்கொண்ட சித்திரவதை அனுபவங்களை நூலாக வெளிக்கொணர்ந்து இருக்கிறார். பத்திரிகையாளர் ஏகலைவனின் எழுத்தாக்கத்தில் இது வெளியாகி இருக்கிறது.

எதையும் மறைக்காமல் நடந்தது நடந்தபடியே விவரிக்கும் இந்த நூல் இளகிய மனம் படைத்தவர்கள் படிக்கக்கூடாத நூல். நளினி கைது ஆனபோது இரண்டுமாத கர்ப்பிணி. அவரை அறுபது நாட்கள் விசாரணைக்குள்ளாக்கியபோது நடைபெற்ற விசாரணை நடைமுறைகளை சித்திரவதைகளை அப்படியே விவரிக்கிறார். தன்னை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டு, கடைசியில் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார்கள், சிறைக்குள் அடைக்கப்பட்ட பின்னர் குழந்தை பிறந்தது, அதற்கான அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் தான் இருந்தது என்று அவர் சொல்லிக்கொண்டே போகும்போது கட்டுப்படுத்தமுடியாமல் நம் கண்களில் நீர் ஆறாகக் கொட்டுகிறது. சிறைக்குள் பிறந்த மகள் பின்னர் இலங்கைக்குச் சென்று உறவினர்      

அரவணைப்பில் வளர்ந்து இன்று லண்டனில் இருக்கிறார். அவரும் கூட லண்டனுக்கு படகில் புறப்பட்டுச் சென்று ஓர் இஸ்லாமிய நாட்டின் கடற்கரையில் ஒதுங்கி, மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட திகிலான நிகழ்வும்  நளினியால் சொல்லப்படுகிறது.

ஒவ்வொருமுறை தூக்குத் தண்டனை உறுதியாகும்போது அதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அவர் பட்ட துயரம் நெகிழ்வுக்கு உள்ளாக்குகிறது. கடந்த இருபத்தி ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 365 நாட்கள்  கணவனும் மனைவியுமாக நளினியும் முருகனும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைத்துறையிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த போராட்ட சமயங்களும் இதில் இடம்பெறுகின்றன.

நளினியின் மன உறுதியும் பல இடங்களில் மலைக்க வைக்கிறது. உறுதியாக இருந்திருக்காவிட்டால் அந்த குழந்தையை அவரால் வளர்த்திருக்கவே முடியாது. இன்றைக்கு தூக்குத்தண்டனை பெற்ற அனைவருக்குமே ஆயுள் தண்டனையாக அது குறைக்கப்பட்டிருக்கிறது. இனி சிறையிலிருந்து வெளியே வர இவர்கள் தொடர்போராட்டம் நடத்தவேண்டும். அது தனிக்கதையாகவே நீளும்.

ராஜீவ் படுகொலையையொட்டி ஏராளமானபேர் கைதாகி, சித்திரவதை செய்யப்பட்டு நிர்க்கதியாக விடப்பட்டதன் பின்னிலும் சிறைக்குள் வாடவிட்டிருப்பதன் பின்னிருப்பது  ஒரு மிகப்பெரிய அரசு எந்திர  தடுப்பு நடவடிக்கையாக இன்றைக்குப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையில் நசுக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் துயரை எப்படிப் புரிந்துகொள்வது? இந்த நூல் அதற்கான ஓர் சிறந்த ஆவணம். இந்த நூலை சிறைக்குள் வாடும் நளினிக்காக ஒரு கணம் இரங்காமல், ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காமல் வாசித்துவிட யாராலும் இயலாது! அரஸ், புகழேந்தியின் ஓவியங்களும் ஏகலைவனின் சிக்கலற்ற மொழிநடையும் பாராட்டத்தக்கவை.

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்- சிறைவாசி நளினி முருகன் எழுத்தாக்கம்- தொகுப்பு: பா.ஏகலைவன், யாழ் பதிப்பகம், எண் 10/61,  7வது தெரு, கம்பர் நகர், சென்னை- 82. பேச: 8939899113.

விலை ரூ 500

சூழலைப்  பாடுவோம்  -இயற்கையின் கவிஞர் பழநிபாரதி

சங்க இலக்கிய மரபில் வேர் ஊன்றி நவீனத்துவத்தின் பரப்பில் அசைகின்றன இவரது கவிதைகள். வனரஞ்சனி அவரது புதிய கவிதைத் தொகுப்பு.

பனை நார்க்கட்டிலில்  படுத்திருக்கும்

வேப்ப மர நிழலுக்கு

சொற்கள் இல்லை

ஆனாலும் சொல்லிக்கொண்டிருக்கிறது

 ஒரு காதல் கதை.

இந்த கவிதையில் வருகிற பனைநார் கட்டிலும் வேப்பமர நிழலும் காதல் கதையும்  நேரடியாகச் சொல்வதையும் தாண்டி நுட்பமாகப் பார்த்தால் இழப்பின் நினைவூட்டல் சித்திரங்களாகவும் நிலைக்கின்றன. சொற்களையும் தாண்டிய பொருளை, உணர்வை நோக்கி கவிதை பயணம் மேற்கொள்ளும் தருணம் இது.

சித்ரா பௌர்ணமி

 நிலவில் தெறித்தது

யாருடைய ரத்தம்

இந்த மூன்று வரிகள் ஒரு பொருளை நமக்கு அளிக்கின்றன. இக்கவிதையின் தலைப்பு மரக்காணம். தலைப்போடு  சேர்த்துப் படிக்கையில் இது ஓர் அரசியலைப் பகிர்ந்துகொள்கிறது.

சூழலைப் பற்றிக் கவலைகொள்ளும் கவியின் மனது நுட்பமாக தன்னை வெளிப்படுத்துவதை இத்தொகுப்பு முழுக்கக் காண இயலும்.

வனரஞ்சனி, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், கண்ணதாசன்

சாலை, தியாகராயர் நகர், சென்னை-17 பேச: 24353742.

 விலை: ரூ 80.

பேராளுமைகளின் தொகுப்பு

ஆ.இரா.வேங்கடாசலபதியின்  கடினமான உழைப்பில் சில ஆளுமைகள் பற்றி சேகரிக்கப்பட்ட அரிய தகவல்கள் நிறைந்த கட்டுரைத் தொகுப்பு ஆஷ் அடிச் சுவட்டில் என்ற பெயரில் கிடைக்கிறது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் டி.வி.சாம்பசிவம் பிள்ளை என்ற காவல்துறை அதிகாரி தொகுத்த மருத்துவ அகராதி பற்றிய கட்டுரை உண்மையிலேயே மிகவும் நெகிழ வைக்கிறது. ஐந்து பெருந்தொகுதிகள் கொண்ட இந்த அகராதியை சாம்பசிவம் பிள்ளை தனி ஆளாக எப்படி தொகுத்து எழுதினார் என்பதே தலை சுற்றும் சாதனை. ஆனால் அவரால் இந்த அரிய களஞ்சியத்தைப் பாதியே வெளியிட முடிந்திருக்கிறது. அவர் இறந்தபின் மீதி கையெழுத்துப்படிகள் தாசில்தார் அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட, அவற்றை வ.சுப்பையா பிள்ளை(மறைமலையடிகள் நூல் நிலையத்தைத் தோற்றுவித்தவர்) தேடிக் கண்டடைந்திருக்கிறார். இந்த அகராதி பின்னர் மறுபதிப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட குழப்படிகளையும் இக்கட்டுரை விளக்குகிறது. இப்படி ஒவ்வொரு ஆளுமைகள் பற்றியும் முழுமையான தகவல்கள் நிரம்பியிருக்கின்றன.

ஆஷ் அடிச்சுவட்டில் என்ற கட்டுரை மிகமிகச் சுவாரசியமானது. ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார் என்பதோடு நம் வரலாற்று அறிவு முடிந்துவிடுகிறது. ஆஷ் எப்படி இருப்பார் என்று நமக்குத் தெரியாது. நூலாசிரியரோ முன்னோக்கிச் சென்று ஆஷின் பேரனை டப்ளின் நகருக்கு அருகே சந்திக்கிறார். தாத்தாவைக் கொன்ற  வாஞ்சிநாதனின் படத்தைப்பார்க்கும் பேரன் சொல்கிறார்: எவ்வளவு பொலிவான இளம் முகம்!’

எல்லீசன், உவேசா, ம.வீ. இராமானுஜாசாரியார், எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு. வ.உ.சி., ஏகே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ். சுப்பிரமணியம், எரிக் ஹாப்ஸ்பாம், தே.வீரராகவன் ஆகிய மேலும் பல ஆளுமைகளைப் பற்றி உண்மையான, மிகைப்படுத்தல் இல்லாத தகவல்களைப் படிக்கவேண்டுமானால் இந்த நூலைத்தான் படிக்கவேண்டும்.

ஆஷ் அடிச்சுவட்டில், அறிஞர்கள், ஆளுமைகள்: ஆ.இரா.வேங்கடாசலபதி, வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. பேச: 04652-278525,  விலை ரூ 225

உரையாடல்

தன்னுடைய தூரிகை மட்டுமல்லாது எழுத்துகள் மூலமும் தமிழ்ச்சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதில் பெரிதும் விருப்பம் உடையவர் ஓவியர் புகழேந்தி. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையைச் சூழ்ந்த வெள்ளம் பற்றிய சாட்சியமாக ஒரு நூலை எழுதியிருக்கிறார். வெள்ளப்பாதிப்பின்போது அவர் கண்ட காட்சிகள், அடைந்த சிரமங்கள், அப்போதிருந்த உணர்வுகள் ஆகியவற்றை எழுதி உள்ளார். பேரழிவின் போதான மனித உணர்வுகளும் நிகழ்வுகளும் பதிவாவது நாளைய வரலாற்றுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். புகழேந்தி தொடர்பாக வெளிவந்திருக்கும் இன்னொரு நூல் மனிதம் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அவரது நீண்ட நேர்காணலின் தொகுப்பு. பாலா இளம்பிறை தொகுத்திருக்கிறார்.

விஜயலட்சுமி,ஜீவகரிகாலன், அகரமுதல்வன், பாலா இளம்பிறை ஆகியோர் உரையாடி இந்த நேர்காணலை நிகழ்த்தி இருக்கிறார்கள். புகழேந்தி என்கிற ஓவிய, சமூக ஆளுமையின் பன்முக சித்திரத்தை இந்த நூல் வழங்கக்கூடியது. இவ்விரண்டு நூல்களுமே தூரிகை வெளியீடு.

 தூரிகை வெளியீடு, எஸ்பி 63, 3-வது தெரு,  முதல் செக்டார், கேகே நகர் சென்னை 78.பேச:9444177112