நூல் அறிமுகம்

பேசும் பேனா

மதிமலர்

மூத்த பத்திரிகையாளர் ஜே.வி. நாதனின் பத்திரிகைப் பணியின்போது அவர் எழுதிய பல கட்டுரைகளே இந்நூல். அவர் புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனில் பணியாற்றியமையால் அப்போது எழுதிய கட்டுரைகள் பல அக்காலத்து ஊழல்கள், குற்றங்கள் போன்றவற்றை வெளிக்கொணர்ந்தவையாக அமைந்துள்ளன. 1985-லிருந்து பல ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகள் இவை.

வீரப்பனைப் பிடிக்க கர்நாடக அதிரடிப்படையினர் முயற்சி செய்தபோது 112 அப்பாவி தமிழர்களைப் பிடித்து மைசூர் சிறையில் அடைத்தது. அவர்களின் நிலையைப் பற்றி ஜேவி நாதன் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் நூலின் கடைசிப் பகுதியில் உள்ளன. 1995-இல் வேலூர் சிறையில் இருந்து 43 விடுதலைப்புலிகள் சுரங்கம் தோண்டி தப்பிய செய்திகளையும் தொகுத்து பல கட்டுரைகளாக அவை இடம் பெற்றுள்ளன. 1985-இல் குடிநீர் வடிகால் வாரியத்தின் ஊழல்களைப் பற்றி மூன்று வாரங்களாக இவர் எழுதிய தொடர் கட்டுரையும் இந்நூலில் உள்ளது. 1988-இல் ஒரு கிராமத்தில் போலீஸ் உதவியுடன் அடாவடி செய்த பெண்மணியைப் பார்த்து பேட்டி கண்டு ஒரு கட்டுரை எழுதினார் நாதன். இதழ் வெளியானதும் அந்த பெண்மணி, நான் அப்படி ஒரு பேட்டியே தரவில்லை என இதழ் ஆசிரியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார். அதை எப்படி இவர் சமாளித்து தன் தரப்பை நிரூபித்தார் என்பது சுவாரசியம். சாதாரண மனிதர்களுக்காக நியாயம் வேண்டி எழுதப்பட்ட கட்டுரைகளும் இந்நூலில் உண்டு. கட்டுரைகள் வெளியானபின் நடந்த எதிர்விளைவுகளும் இணைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது நூலை மேலும் சுவையாக்குகிறது.

முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்கள் – மூத்த இதழியலாளரின் இதயப் பதிவுகள், ஜே வி நாதன், வெளியீடு: புஸ்தகா, விலை ரூ: 390