இலக்கியம்

மத்திய அரசு திடீர் முடிவு... தமிழ் எழுத்தாளர்கள் கொந்தளிப்பு!

Staff Writer

சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பில் மத்திய பாஜக அரசு தலையிடுவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், எம்.பிக்கள் ரவிக்குமார், சு.வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி அறிவிப்பு நேற்று அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சாகித்ய அகாடமி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து மத்திய கலாச்சார அமைச்சகம் ஆய்வு செய்ய வேண்டும் என கூறியதால் விருது அறிவிப்பு ரத்துசெய்யப்பட்டது என்றது.

இதற்கிடையே, தமிழில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு (தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்) அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சாகித்ய அகாடமி விருதாளர்கள் தேர்வில் மத்திய பாஜக அரசு தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதை உறுதிப்படுத்தும் விதமாக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. தன்னுடைய சமூக ஊடகப்பக்கத்தில், “இனிமேல் பாஜககாரர்களுக்கு மட்டும்தான் சாகித்ய அகாடமி விருது? சாகித்ய அகாடமி விருதுகளை அறிவிக்க பாஜக அரசு தடை

அரசாங்கம் ஒப்புதல் ளிப்பவர்களுக்குத்தான் விருது தரவேண்டும் என ஒன்றிய கலாச்சார அமைச்சகம் உத்தரவு. பாஜகவில் சாகித்ய அகாடமி விருதாளர்கள் அணி உருவாக்கப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல், சு.வெங்கடேசன் எம்.பி, ”சாகித்ய அகாடமியின் தேசிய நிர்வாக குழு நேற்றைய தினம் கூடியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதாளர்களை தேர்வு செய்ய அந்தந்த மொழிக்கான நடுவர் குழுவின் பரிந்துரைகளுக்கு தேசிய நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஒன்றிய கலாச்சார அமைச்சகம் தலையீட்டு நிர்வாக குழுவின் முடிவுகளை நிறுத்திவைத்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட சாகித்ய அகாடமி தனது முடிவை அறிவிக்க திறனின்றி மெளனம் காப்பதை ஏற்க முடியாது. உங்களது மெளனமும், இயலாமையும் செம்மாந்த இலக்கிய மரபுக்கும், அகடமியின் புகழ் மிக்க வரலாற்றுக்கும் செய்யும் துரோகமாகும். அகடமியின் நிர்வாக குழு தனது முடிவுகளை துணிவோடு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் புகழ்மிக்க கலாச்சார நிறுவனங்களையெல்லாம் மோடி அரசு தனது காலடியில் மண்டியிடச்செய்யும் வேலையை அப்பட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

இலக்கியத்தையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து, நமது கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை எதிர்க்க முன்வர வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாகித்ய அகாடமி நிறுவனத்தால் இந்தியாவில் உள்ள 24 மொழிகளின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குரிய விருதுப் பட்டியலை அந்தந்த மொழியைச் சேர்ந்த சாகித்ய அகாதமி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுயேச்சையான குழு தேர்வு செய்து வெளியிடும்.

இந்த ஆண்டும் அதே போல் 24 மொழிகளின் குழுக்களும் தங்கள் தேர்வுப் பட்டியலை தயார் செய்துவிட்டன. அதன் அடிப்படையில் நேற்று 18.12.2025 மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற இருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விருது அறிவிப்பு வெளியாகும் என்று இருந்தது. நாடு முழுக்க உள்ள இலக்கிய ஆர்வலர்கள் சாகித்ய அகாடமி விருதுப் பட்டியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தச் சூழலில் திடீரென்று அந்தச் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சாகித்ய அகாடமி குழுக்களின் தேர்வுகளில் ஒன்றிய அரசின் அமைச்சகம் தலையீடு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது சாகித்ய அகாடமி எனும் நிறுவனத்தின் சுயேச்சையான செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இது போன்ற நேரத்தில் சாகித்ய அகாதமி நிறுவனம் தனது தன்னாட்சி அதிகாரத்தை காத்திட உறுதியோடு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றும் அரசியல் வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதைப்போல சாகித்ய அகடமி நிறுவனத்தின் சுயேச்சையான செயல்பாட்டை முடக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது. அனைத்து மொழிகளின் குழுக்களும் தேர்வு செய்த விருத்தாளர்களின் பட்டியலை எந்தத் திருத்தமும் இல்லாமல் வெளியிடும் அதே முறையை இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் கடைபிடிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.