அந்திமழை கால்நூற்றாண்டு சிறப்பிதழுக்கு தன் பங்குக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் இயக்குநர் பாலா தனது திரையுலகப் பயணத்தின் 25 -வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ’99 டிசம்பரில் ரிலீஸாகி ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் கழுத்து வலிக்க, மனசு வலிக்க திரும்பிப் பார்க்கவைத்த படம் அவரது ‘சேது’ என்று சொன்னால் அது மிகையில்லை.
தற்போது பொங்கல் ரிலீஸுக்கு ‘வணங்கான்’ படத்தோடு காத்திருக்கும் பாலாவுக்கு இந்த 25 ஆண்டுகளில் இது 9-வது படம்.
மற்ற இயக்குநர்களைப் போலவே இமாலய வெற்றி, பரவாயில்லை, மோசம் என்று அனைத்து வகையறா படங்களையும் இயக்கியிருந்தாலும் இன்றும் பாலா என்கிற பெயர் மிடுக்கான துடுக்கான இயக்குநர் என்கிற அடையாளம்தான். அதற்கு முதன்மையான காரணம் ஸ்டார்களை நம்பியிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் தன்னை ஒரு ஸ்டார் என்கிற அந்தஸ்தில் வைத்துக்கொண்டு கதைகளை நம்பி படங்கள் இயக்கினார் என்பது.
ஶ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன்களுக்கு அடுத்த தலைமுறையில் சினிமாவில் கொம்பாதி கொம்பன் என்பவன் இயக்குநர்தான் என்று ஆணி அடித்து நிரூபித்தவர் பாலாதான்.
அதற்கு அவரது முதல் மூன்று படங்களே அத்தாட்சி.
சேது இயக்கும்போது அதன் நாயகன் விக்ரம் சில தோல்விப்படங்களைக் கொடுத்து பிரபல டப்பிங் கலைஞராக மட்டுமே அறியப்பட்டிருந்தார். அடுத்த நந்தாவின் கதையும் அதேதான். அதன் நாயகன் சூர்யா சுமார் அரைடஜன் படங்களில் நடித்து முடித்து ராசியில்லா ராஜாவாக வலம் வந்துகொண்டிருந்தார். சேதுவின் ராட்சச வெற்றிக்குப் பின் ரஜினியும் கமலுமே அவரது இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருந்தபோது துணிந்து சூர்யா போன்ற ஒருவரை வைத்து நந்தாவை இயக்கிய தில்லாதி தில்லன் தான் பாலா.
சேது அளவுக்கு நந்தா வெற்றியடையவில்லை என்றாலும் ஒரு இயக்குநராக பாலா, குறிப்பாக சூர்யாவை ஒரு மிரட்டல் நடிகராகக் கொண்டு வந்து நிறுத்திய நிலையில் கொஞ்சமும் குறைவின்றி கொண்டாடப்பட்டார்.
மூன்றாவது படம் பிதாமகன் தான் இன்றளவுக்கும் பலருக்கும் மனசுக்கு நெருக்கமான படம். இன்றும் சினிமாக்காரர்கள் வியந்து பார்க்கும் மணிரத்னம் ‘பிதாமகன்’ பார்க்க சென்னை ஆல்பட் தியேட்டருக்கு முதல் நாள் முதல் காட்சி தனது மனைவி சுஹாசினியோடு வந்தவர் அடுத்த காட்சியும் அமர்ந்து பார்த்த கதை பலருக்கும் தெரியாது. சேதுவும் பிதாமகனும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட வகையில் தமிழ் சினிமா முதல் பான் இந்தியா இயக்குநர் என்று பாலாவைத்தான் சொல்லவேண்டும்.
இந்த தொடர்ச்சியான மூன்று படங்களுக்குப் பிறகு சற்று ஓய்வு எடுக்கும் பாலா அவரது நான்காவது படமான நான் கடவுளை இயக்க ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக்கொள்கிறார்.
‘நடிகர்களை ரொம்ப அடிக்கிறார்ங்க வலிக்குது’ என்றும் எடுத்த சீனையே திரும்பத் திரும்ப எடுக்கிறார்; 100 நாள்ல படத்தை முடிச்சுத் தர்றதா சொல்லிட்டு 300 நாள் ஆக்கிட்டார்’ என்றும் சில பஞ்சாயத்துகள் வரத் தொடங்குகின்றன. இப்படம் முதல் மூன்று படங்கள் கொடுத்த தாக்கத்தைத் தராததோடு வசூல் ரீதியாகவும் ஏமாற்றத்தையே கொடுக்கிறது.
ஆனால் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைத் தட்டித்தூக்கி காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறார் பாலா. நெட் ரிசல்ட் ஆபரேஷன் சக்சஸ். பேஷண்ட் அவுட் கதைதான்.
ஐந்து, ஆறு, ஏழு, எட்டாவது படங்கள் முறையே அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகியன. நந்தா, பிதாமகன்களில் வில்லன்களுக்கு அதுவரை தமிழ் சினிமா தராத விபரீத தண்டனைகளைக் கொடுத்து ரசிகர்களைத் திகைக்க வைத்திருப்பார் பாலா. நந்தாவில் பாலியல் குற்றம் புரிந்தவனின் ’அதை’ கட் பண்ணுவார். பிதாமகனில் வில்லனின் குரல்வளையைக் கடித்துத் துப்புவார் விக்ரம். அந்தக் கொடூர தண்டனைகள் ரசிக்கப்பட்டன.
பிரச்னை இங்கேதான் ஸ்டார்ட் ஆகிறது. பாலாவின் அடுத்தடுத்த படங்களில் இவை தொடர்ந்து அரங்கேறவே ஒருவித சலிப்புத் தன்மை ரசிகர்கள் மத்தியில் ஏற்படத் தொடங்கியது.
அவரது பரதேசி தவிர்த்து மற்ற படங்கள் அனைத்திலும் வில்லன்களுக்கு பாலா ஸ்டைல் தண்டனை என்பது ஓர் இயக்குநராக அவரை அடுத்த கட்டத்துக்குக்கொண்டு செல்ல உதவில்லை.
இதனாலேயே முதல் மூன்று படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் டாப் டென் டைரக்டர்களில் முதன்மை இடங்களில் இருந்த அவர் அடுத்தடுத்து மெல்ல சறுக்கலானார். ரொம்ப சிம்பிளாக, அதே பாலுமகேந்திரா பள்ளியிலிருந்து வந்த வெற்றிமாறனோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே பாலா ஏன், எப்படி வீழ்ந்தார் என்பதை சுலபமாக புரிந்துகொள்ளமுடியும்.
பொல்லாதவன் தொடங்கி விடுதலை 2 வரை வெற்றிமாறனின் முந்தைய படத்தில் பார்த்த எதையும் அடுத்த படத்தில் பார்க்க முடியாது.
வெற்றிமாறன் போலவே இந்த 25 ஆண்டுகளில் எத்தனையோ இயக்குநர்கள் தங்கள் முத்திரையைப் பதித்து மேலே ஏறிச் சென்றுவிட்டார்கள். ’காக்கா முட்டை’ மணிகண்டன், ’மேற்குத் தொடர்ச்சி மலை’ லெனின் பாரதி, பா.ரஞ்சித் ஆகியோர் சின்ன உதாரணங்கள்.
கொஞ்சம் கசப்பான உண்மைதான் என்றாலும் இன்றைய தமிழ் சினிமாவின் டாப் டென் டைரக்டர்கள் என்று பட்டியலிட்டால், அந்தப் பட்டியலை பாலாவின் ரசிகர் ஒருவரே தயாரித்தாலும், அதில் அவர் பெயரைக் கொண்டுவர முடியாது.
காரணம் இந்த 25 ஆண்டுகளில் அவர் இயக்கிய நம் பார்வைக்கு வந்திருக்கிற எட்டுப் படங்களில் கடைசி 5 படங்கள் ரசனை ரீதியாக, வசூல் ரீதியாக அவ்வளவு சுகப்பட்டு வரவில்லை. தனது ஃபார்முலாவை விட்டு அவர் வெளியே வரத்தயங்குவதுதான் இந்தப் பின்னடைவுக்குக் காரணம் என்று மிகச் சுலபமாக சொல்லிவிட முடியும். இப்படங்களில் ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நடிகர்கள் பேர் வாங்கினார்களே ஒழிய, ஒரு இயக்குநராக பாலா பின் தங்கிக்கொண்டே இருந்தார்.
ஆனாலும் ஒரு கலைஞனாக, ஸ்டார்களுக்குப் பின்னால் ஓடி கோடிகளில் சம்பாதிக்க ஆசைப்படாத ஒரு ரோசக்கார இயக்குநராக பாலா இன்னும் தாக்குப் பிடித்துக்கொண்டிருப்பது நிச்சயம் பாராட்டத்தக்க அம்சம்.
ஏனெனில் பணம் சம்பாதிப்பது ஒரு குறியாக இருந்திருந்தால் இந்த 25 ஆண்டுகளில் அவர் குறைந்தபட்சம் 25 படங்களையாவது இயக்கியிருக்க முடியும். தனுஷ் வீட்டுக்குப் பக்கத்தில் போயஸ் கார்டனில் ஒரு வீடாவது வாங்கியிருக்க முடியும்.
இன்னும் இரு வாரங்களில் பொங்கலை முன்னிட்டு அவரது 9 வது படமான ‘வணங்கான்’ ரிலீஸாக உள்ள நிலையில், பழைய பாய்ச்சலுக்கு பாலா தயாராகவேண்டுமென்று மதுரை சிம்மக்கல் சியான் ரசிகர் மன்றம் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம்.
ஏனென்றால் எதுவும் இன்னும் முடிந்துவிடவில்லை. இப்போதிருந்தே கூட தொடங்கலாம்.