கட்டுரை

டோரதி: செங்காட்டுக் குன்றிமணி

சரவணன் சந்திரன்

ஊடகங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துவிட்டு முற்றிலும் எல்லாவற்றில் இருந்தும் விலகியிருந்த நேரம். இலக்கிய எழுத்துக்கள் மட்டுமே துணையென இருந்த காலமும். அந்த நேரத்தில்தான், கார்த்திக் சுப்புராஜிடம் இணை இயக்குநராக இருந்த என்னுடைய குடும்ப நண்பரான சீனிவாசன் இளங்கோவன் அழைத்து, ஒரு சந்திப்பை ஒழுங்கு பண்ணினார். அப்போது பார்பி நாவல் வெளியாகி இருந்த காலகட்டம்.

கார்த்திக் சுப்புராஜ் பார்பி நாவலை அச்சிற்கு முன்னரே படித்து இருந்தார். அதைப் படமாக எடுக்க வேண்டும் என்கிற திட்டமும் அவரிடம் இருந்தது. அவர்களது நிறுவனத்தின் வழியாக அந்நாவலின் உரிமத்திற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த போது, கார்த்திக் சுப்புராஜை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் ஜிதர்தண்டா இரண்டாம் பாகத்திற்கான கதைத் தயாரிப்பு வேலைகளில் இருந்தார்.

அந்தப் படத்திற்கு அவர் சொன்ன கதையை விரித்து எழுதிக் கொடுத்தேன். ஆனால் அந்தப் பிரதியில் இருந்த தீவிரத் தன்மை அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவர் ஜிதர்தண்டா வழியாக ஒரு இலகுவான கதையையே சொல்ல நினைத்து இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த இடைவெளியில் புதிதாக ஒரு கதையைக் கொஞ்சநேரம் போல விவரித்தார்.

அந்த விவரித்தலில் ஒரு வரைபடம் இருந்தது. அது எனக்குள் முழுமையாக இறங்கியதால், அந்தச் சரட்டில் ஒரு புதுக்கதையைத் தீவிரமான தொனியில் எழுதித் தர ஒத்துக் கொண்டேன். இந்த இடத்தில் இன்னொன்றையும்் சொல்ல விரும்புகிறேன். ஊடகப் பயணங்களில் இருந்திருந்தாலும், வணிக வட்டத்தைத் தாண்டி மண்சார்ந்த கதைகளையே ஆழமாக எழுத வேண்டும் என்கிற தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன். சினிமாவில்தான் இலக்கியம் வரவேண்டும். இலக்கியத்தில் சினிமா அல்ல? அதன் காரணமாக வணிக சினிமா அழைப்புகளுக்குச் செவிமடுக்கத் தயக்கமும் இருந்தது. அப்புறம் இன்னொரு தடையும் இருந்தது.

கூட்டமாக அமர்ந்து ஆளுக்கொன்று சொல்ல, தனித்தனியாக மலர்களை எடுத்து ஒரு சரட்டில் கோர்க்கும் கதை விவாதச் சூழல் எனக்கு ஒத்துவராதது. கதை என்றால், சரியோ தவறோ, அது தனியாக ஆழ்ந்து எழுதப்பட வேண்டும் என்பதில் உறுதியான கொள்கையுண்டு எனக்கு. எந்த வடிவமாக இருந்தாலும் முதலில் அதன் அடிப்படைக் கதையை முழுமையாக எழுதி முடித்துவிட்டே அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும் என்கிற விடாப்பிடியும் உண்டு. அதனால் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன வாய்வழிக் கதையை முழுமையான சிறுகதை வடிவில் எழுதினேன்.

நான் கடந்து வந்த கோவில்பட்டி வாழ்வில் எனக்குக் கிடைத்த அனுபவங்களையும் சந்தித்த மனிதர்களையும் சேர்த்துப் புனைந்து இரண்டாயிரம் வார்த்தைகளில் முழுமையான கதையாக எழுதிக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு இயக்குநர், மேலும் கதையில் அவர் எதிர்பார்க்கிற விஷயங்களைச் சேர்த்து எழுதித் தரச் சொன்னார். மேலும் சேர்த்து அதை நான்காயிரம் வார்த்தைகள் கொண்ட முழுமையான அடிப்படைக் கதையாக உருவாக்கினோம்.

பிறகு அதற்கு என்னையே திரைக்கதையும் எழுதித் தரப் பணித்தார். உண்மையிலேயே அவர் கொடுத்த சுதந்திரத்தை அந்த நேரத்தில் ரசித்தேன். பொதுவாக இயக்குநர்கள் திரைக்கதை வடிவத்தை யாருக்கும் விட்டுத்தர மாட்டார்கள். வீம்பிற்கேனும் அதில் போய் மாவிடித்துக் கொண்டு இருப்பார்கள். மாறாக கார்த்திக் சுப்புராஜின் அந்த விசாலமான பார்வை என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஊடகத் தொழிலில் இருந்ததால் திரைக்கதை குறித்த அறிமுகமும் ஏற்கெனவே உண்டெனக்கு.

அதனடிப்படையில் அடுத்த பதினைந்து தினங்களில் முழுத் திரைக்கதையையும் எழுதி முடித்துக் கொடுத்து விட்டேன். அதற்குப் பிறகு திரைக்கதையின் அடுக்கில் புதிய சேர்ப்புகளையும் கோணங்களையும் கூரிய பார்வைகளையும் சேர்த்து கார்த்திக் சுப்புராஜ் எழுதித் தந்தார். கடைசியாக அதில் இருந்த இடைவெளிகளை நிரப்பி அவர்களிடம் கொடுத்து விட்டு, என் வழக்கமான இயல்புப்படி அந்தக் கதையில் இருந்து விலகி விட்டேன்.

ஓர் எழுத்தாளனாக செயல்படுவதற்கு தகுந்த வெளியை உருவாக்கித் தந்ததோடு முறையான பணப்பலன்களையும் உடனடியாகச் செய்து கொடுத்த விதமுமே என்னை ஆச்சரியமூட்டியது. ஏனெனில் இந்தத் துறையில் புழங்கிப் பல இடங்களில் கையைச் சுட்டுக் கொண்டவன்தானே? அதற்குப் பிறகு கொரானா பெருந்தொற்றுக் காலம் வந்தது. கார்த்திக் சுப்புராஜின் பிறபடங்களுமே வந்தன. என்னுடைய நாவல்கள் சிலவுமே வந்தன. டோரதி தன்னை வெளிக்காட்டாமல் ஆழமாக உறைந்து இருந்தாள் பூட்டப்பட்ட அறையில். ஒருவேளை புடம்போட்டுக் கொண்டு இருந்து இருப்பாளோ? ஆரம்பத்தில் அந்தத் திரைப்படத்திற்கு நான் வைத்திருந்த தலைப்பு ஏக இறைவி. ஏனெனில் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.

அவருடனான நேர்ப்பேச்சில்கூட அந்தப் படத்தைப் பற்றித்தான் அதிக நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அந்த இறைவியின் பாதிப்பினாலேயே ஏக இறைவி எனத் தலைப்பு வைத்திருந்தேன். கதையில் இருக்கும் இன்னொரு பாத்திரத்திற்கு டோரதி எனத் தற்செயலாக வைத்து இருந்தேன். கார்த்திக் சுப்புராஜ் மிகச் சரியாக டோரதி என்பதை அதன் முழுமையான அர்த்தத்தை உணர்ந்து கொத்தினார். உடனடியாக வேறொரு பரிமாணத்திற்கு நகர்ந்து விட்டது கதை.

பழக்கப்பட்ட கிளி மிகச் சரியாகச் சீட்டைக் கொத்தி விட்டது என்பதை அக்கணத்தில் உணர்ந்தேன். அதற்குப் பிறகு முற்றிலும் அந்தக் கதையில் இருந்து விலகி விட்டேன். அதற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜை இன்றுவரை நேரில் சந்திக்கவும் இல்லை. வெளியில் எங்கும் செல்வதில்லை என்கிற என் இயல்புப்படி படம் சம்பந்தப்பட்ட எந்த விழாக்களிலும் கலந்துகொள்ளவும் இல்லை.

முற்றிலும் டோரதி என்கிற படத்தை, அது தயாரான விதத்தை வெளியில் இருந்து பார்த்தேன். அந்தக் கதைக்காக கார்த்திக் சுப்புராஜ் பல்வேறு இடங்களில் முட்டிமோதிய கதைகளையுமே சீனிவாசன் மூலம் அறிந்து கொண்டேன். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகே டோரதி என்கிற திரைப்படம் வெளியே வந்தது என்பதன் வெளிவட்டச் சாட்சியாகவும் இருந்தேன். தொடக்கத்தில் ஒரு விலகல் மனநிலையுடன்தான் உலவிக் கொண்டு இருந்தேன்.

படம் வெளியான முதல்நாளிலேயே அந்தப் படம் உருவாக்கிய மஞ்சள் பூரணவொளி எனக்குத் தெரிந்து விட்டது. என்னையும் விடாமல் விரட்டி வந்தது அவ்வொளி. சீனிவாசனை அழைத்து, இனி மக்கள் கையில் ஏந்திக் கொள்வார்கள் என்று சொன்னேன். செங்காட்டில் ஆங்காங்கே மிகச் சாதாரணமாக, எவ்விதப் பொருள் மதிப்புமில்லாமல் சிதறிக் கிடக்கிற குன்றிமணிகளைப் பொறுக்கி எழுதிய உணர்வே எனக்கு முன்பு இருந்தது. ஆனால் படம் வெளியான பின்னர் வேறு ஓர் உயரத்திற்கு அவ்வுணர்வு கடத்தப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் வழியாக எனக்கு மரியாதையையும் பெற்றுத் தந்திருக்கிறார். அது எப்போதும் முக்கியம் எனக்கு. ஊரில் சொல்வதைப் போல கரும்பும் கொடுத்துத் தின்னக் காசும் கொடுத்து இருக்கிறார்.

தற்செயலாக வந்து விழுந்த செங்காட்டுக் குன்றி மணியை, அரியதொரு முத்துமணியாக கார்த்திக் உருவாக்கி உலகிற்குத் தந்துவிட்டார். மஞ்சளொளியில் தகதகவென ஜொலிக்கும் முத்துமணியின் முழுமையான சொந்தக்காரர் என்றென்றும் அவர்தான். இப்படத்தின் வழியாகத் தன்னுடைய ஆன்மாவில் அவரொரு வனக்கிளியாகவுமே மாறிவிட்டார். இனி காட்டில் இருக்கிற பழங்களெல்லாம், அவருக்குப் போகத்தான் மிச்சம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram