அரசியல் என்பது வெறும் அதிகாரமோ, கொள்கையோ மட்டுமல்ல. அது மனிதர்களைப் புரிந்துகொள்ளும் கலை. அந்த கலையின் மிக முக்கியமானதொரு பரிமாணம், நகைச்சுவை உணர்வு!.
இறுக்கமான சூழலையும் இளக வைக்கும், கோபத்தையும் கரைக்கும், மிகப்பெரிய நெருக்கடியையும் ஒரு புன்னகையால் கடக்க வைக்கும் வல்லமை நகைச்சுவைக்கு உண்டு. இதை என் பொதுவாழ்வில் இரண்டு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் நேரடியாகக் கண்டு, உணர்ந்து, வியந்திருக்கிறேன். அந்த இரண்டு அனுபவங்களும் எனக்கு நகைச்சுவை என்பது வெறும் சிரிப்பல்ல, அது ஒரு தலைமைப் பண்பு, ஒரு நிர்வாக திறன் என்பதையும் உணர்த்தியது.
முதல் அனுபவம் - 2007-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வீற்றிருந்த நேரம். அப்போது வடநாட்டைச் சேர்ந்த வேதாந்தி என்ற ஒரு நபர் தலைவர் கலைஞரின் தலைக்கு விலை வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட அது தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது. தி.மு.கழகத் தோழர்கள் எல்லாம் கடும் கோபத்திலும் கொந்தளிப்பிலும் இருந்தோம். அந்தச் சூழ்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியரகளுக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது . அந்த மாநாட்டில் அமைச்சர்களாகிய நாங்கள் அனைவரும் மிகுந்த கோபத்தோடும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் உரையாற்றினோம். நாடு முழுவதும் ஒரு பதற்றமான, கொந்தளிப்பான சூழ்நிலையில், மாநாட்டுப் பேச்சுகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கலைஞர் அவர்கள் உரையாற்ற வருகிறார். ஒரு சிறு தீப்பொறி கூட பெரிய தீயாக மாறும் அளவுக்கு உணர்ச்சி நிறைந்த சூழல். அவர் பேசத் தொடங்கியவுடன் இந்தப் பிரச்னையைத் தொட்டார். 'என்னுடைய தலைக்கு விலை வைத்திருப்பதாக இங்கே அனைவரும் உணர்ச்சிவசமாக குறிப்பிட்டார்கள்' என்று சொல்லிவிட்டு, தன்னுடைய தலையை லேசாக தொட்டுக்கொண்டு, 'என்னுடைய தலையை நானே சீவி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன' என்றார். அவ்வளவுதான். கூட்டம் முழுவதும் ஒரே ஆரவாரம். பதற்றம் நொடியில் கரைந்து, சிரிப்பொலி எழுந்தது. தலைவர் அவர்கள் சிரித்துக்கொண்டே தொடர்ந்து, ‘என் தலையை சீவுவதற்கு எதற்கு ஒரு கோடி ரூபாய்? பத்து ரூபாய் சீப்பு இருந்தாலே போதும்' என்று சொன்னபோது, கூட்டத்தில் இன்னும் பெரிய ஆரவாரமும் சிரிப்பும் எழுந்தது. உணர்ச்சிவசமான, கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை கூட தன்னுடைய நகைச்சுவை உணர்வால் மிகுந்த சாதுரியமாகக் கையாண்ட அந்த திறமை தனித்துவமானது. அந்த நொடியில் நான் உணர்ந்தேன் - நகைச்சுவை என்பது பிரச்னையை மறைப்பது அல்ல, அதன் வீரியத்தைக் குறைத்து, மக்களை சிந்திக்க வைப்பது. கோபத்தை கோபத்தால் அணைக்க முடியாது, ஒரு புன்னகையால் தான் அணைக்க முடியும் என்பதை அன்று கலைஞர் நிரூபித்தார்.
இரண்டாவது அனுபவம் - புதிய தலைமைச் செயலக வளாகம் அமைந்தபோது, அங்கே புதிய சட்டமன்றக் கூடத்தினைக் குறித்த காலத்தில் நிர்மாணிக்கும் பொறுப்புகளை மேற்கொள்ளும்படி முதல்வர் கலைஞர் அவர்கள் என்னை பணித்திருந்தார். புதிய சட்டமன்றம் கூடுவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு பேரவை அரங்கத்தைப் பார்வையிட முதல்வர் வந்திருந்தார். அங்கே அமைக்கப்பட்டிருந்த புதிய இருக்கைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்டிருந்த காரணத்தால் ஆங்காங்கே சில ஈக்கள் வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. முதல்வர் அவர்கள் எல்லா பணிகளையும் பார்த்துவிட்டு வெளியே செல்கிற போது, பொதுவாக தனது திருப்தியைத் தெரிவித்தார். எனினும் என் அருகில் வரும்போது சற்று நின்று, என்னை அழைத்துச் சொன்னார் - 'தென்னரசு, இந்த சட்டமன்றத்தில் “ எம்.எல். ஏக்கள்” மட்டும்தான் அமர்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் புரிகிறது, “ எம். எல். ஈக்களும்” கூட இங்கே அமர்வார்கள் என்று.' இதனை அவருக்கே உரித்தான புன்னகையுடன் சொல்லிவிட்டு சிரித்தார். பக்கத்தில் இருந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அவர் சொன்னதின் உள் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அவரது அபாரமான நகைச்சுவை உணர்வை ரசித்து மகிழ்ந்தோம். வெளியே பார்த்தால் அது ஒரு சாதாரண நகைச்சுவை போலத் தெரியும். ஆனால் அதில் இருந்த நுட்பத்தை இன்று நினைத்தாலும் வியக்கிறேன். அங்கே ஈக்கள் அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்கத்தக்கது அல்ல. அது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அதனை உறுதி செய்ய வேண்டும் என்பதைக் கடிந்துகொள்ளாமல், கோபப்படாமல், தனக்கே உரிய நகைச்சுவை மூலம் நாசுக்காக உணர்த்திச் சென்றார். ஒரு தலைவன் எப்படி தன் கீழ் பணியாற்றுபவரைக் காயப்படுத்தாமல் குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முடியும் என்பதற்கு இதுசிறந்த உதாரணம்.
இந்த இரண்டு அனுபவங்களும் எனக்கு தனிப்பட்ட வகையில் மறக்க முடியாதவை. முதல் சம்பவத்தில், கொந்தளிப்பான சூழலை சமாளிக்க நகைச்சுவையை ஆயுதமாக அல்ல, மருந்தாகப் பயன்படுத்தினார். இரண்டாவது சம்பவத்தில், நிர்வாகக் குறையை சுட்டிக்காட்ட நகைச்சுவையை கண்டிப்பாக அல்ல, கனிவாக பயன்படுத்தினார். தமிழக அரசியலில் கலைஞரின் நகைச்சுவை அறிவு சார்ந்தது, இலக்கியம் சார்ந்தது, அதே நேரம் சாதாரண மக்களுக்கும் புரியும் எளிமை கொண்டது.
இன்றைய தேவை புன்னகையின் அரசியல் தான்.
இன்று அரசியலில் கோபம் அதிகமாகிவிட்டது. சமூக ஊடகங்களில் கிண்டல் என்ற பெயரில் வெறுப்பு விதைக்கப்படுகிறது. ஆனால் கலைஞர் போன்ற தலைவர்கள் காட்டிய நகைச்சுவை வேறு. அது படிப்பிலிருந்து, அனுபவத்திலிருந்து வந்தது. அது யாரையும் காயப்படுத்தாமல் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தது. அரசியலில் நகைச்சுவை இல்லாதபோது மக்கள் சோர்ந்து போகிறார்கள். ஒரு தலைவரின் சிறு நகைச்சுவை, நம்பிக்கையைத் தருகிறது. அரசியலில் நகைச்சுவை உணர்வு என்பது ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியம். அது வெறுப்பை கரைக்கிறது, அச்சத்தைப் போக்குகின்றது. மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கின்றது. அரசியலின் இறுதி இலக்கு ஆட்சி அல்ல; மக்களின் புன்னகை. எனது இந்த இரண்டு அனுபவங்களும் அதற்கு சாட்சி.