கட்டுரை

தமிழ் மண்ணில் தொடங்கிய இரும்புக் காலம்!

அசோகன்

முதல்நாளே அறிவிப்பு தந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், உலகிலேயே தமிழ்நிலப்பரப்பில்தான் இரும்புக்காலம் தோன்றியது என்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் இருந்தது என்று கூறும் அறிவியல் ஆய்வு முடிவுகளையும் தமிழக தொல்லியல் துறை சார்பாக அவர் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை என்ற இடத்தில் கிடைத்த 160 முதுமக்கள் தாழிகளில் பல பொருட்கள் கிடைத்தன. அவற்றில் இரும்புப் பொருட்களும் அடங்கும். இதில் இருந்து கரித்துண்டுகளை கரிம ஆய்வுவுக்கு உட்படுத்தியதில் இவற்றின் காலம் கிமு 3350 என்று ஆய்வகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

’ஆரம்பத்தில் வேட்டை சமூகமாக இருந்தவர்கள் வேளாண் சமூகமாக மாறுவதற்கு இரும்பின் பயன்பாடு மிக முக்கிய காரணியாக இருந்தது. உலகில் இதே காலகட்டத்தில் வேறு இடங்களில் இரும்புப் பயன்பாடு இல்லையா என்றால் இருந்திருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் விண்கல்லில் இருந்த இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். எகிப்தில் இதற்கான ஆதாரம் இருக்கிறது. அங்கே அல் கெர்சே என்ற இடத்தில் கல்லறைகளில் இருந்து இரும்பால் ஆன மணிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை விண்கல்லில் இருந்த இரும்பால் ஆனவை. அவற்றின் காலம் சுமார் கிமு 3400 -3100 என்கிறார்கள்.

ஆனால் இரும்புத் தாதுகளை 1200-1400 டிகிரி செல்சியசில் உருக்கி இரும்பைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்தியது என்பது தமிழகத்தில் தான் முதன்முதலில் நடந்துள்ளது. அதைத்தான் இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன’ என்கிறார் முனைவர் இரா.சிவானந்தம். இவர் தொல்லியல் துறை துணை இயக்குநர். இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்ட இரும்பின் தொன்மை என்ற நூலின் ஆசிரியர்களில் ஒருவர்.

தற்கால துருக்கியில் உள்ள அனடோலியா பகுதியில் ஹிட்டைட் ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலாக இரும்புத் தாதுவில் இருந்து இரும்பு உற்பத்தி செய்யும் முறை கிமு 1800 இல் தொடங்கி, உலகெங்கும் பரவி இருக்கலாம் எனக் கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் சிவகளைக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறையில் அகழாய்வு செய்தபோது கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கிமு 2172 என்று தெரியவந்தது. சிவகளை ஆய்வு முடிவுகள் இதை மேலும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளி உள்ளன. இதன் மூலம் இரும்புக் காலம் என்பது தென்னிந்தியாவில் தமிழ் நிலப்பரப்பில்தான் தோன்றியது என்று வரலாற்றை மாற்றும் ஆதாரங்கள் கிட்டியுள்ளன.

ஆனால் இந்த முடிவுகள் சரியானவை அல்ல என்றும் சில விமர்சனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவகளையில் மூடப்பட்ட தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியே கிடைத்த பொருட்களின் காலத்துக்கும் இடையே பெருத்த வித்தியாசம் உள்ளது என்பதும் ஒன்று. இதற்குப் பதிலளிக்கும் சிவானந்தம் இவ்வாறு கூறுகிறார்:

‘ ஹரப்பா நாகரிகத்தை முற்கால ஹரப்பா நாகரிகம், ஹரப்பா நகர நாகரிகம், பிந்தைய ஹரப்பா நாகரிகம் என மூன்றாகச் சொல்கிறார்கள். அதில் நடுவே வரும் ஹரப்பா நாகரிகமும் கூட தொடக்ககாலம்( கிமு 3300- 2500), முதிர்ந்த காலம்(2500-1900), பிந்தைய காலம்( கிமு 1800-1500) எனப் பிரித்துள்ளனர். பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தாலும் அவை இதில் எக்காலத்தை சேர்ந்தவை என்பதை காலக்கணக்கீடு ஆய்வுகள் மூலம் நிர்ணயிக்கிறார்கள். அதேதான் இங்கும் செய்யப்பட்டுள்ளது. சிவகளை என்பது சில ஏக்கர் நிலம் அல்ல. சுமார் 500 ஏக்கர்கள் கொண்ட ஈமக்காடு. மக்கள் வாழிடம் அல்ல. சிறிது காலம்முன் வரை அப்படியே இருந்து வந்துள்ளது. முதுமக்கள் தாழிகள் பல்வேறு காலகட்டங்களில் புதைக்கப்பட்டிருக்கும். மேலடுக்கு கீழடுக்கு என்று தொல்லியல் அகழாய்வின் படியான காலக் கணிப்புகள் இங்கே பொருந்தாது.

ஓர் இடத்தில் தாழி புதைக்கப்பட்டால், பின் வந்தவர்கள் வேறிடத்தில் தங்கள் வசதிக்கு ஏற்ப மேலும் ஆழமாகத் தோண்டி புதைக்கும் வாய்ப்புள்ளது. தாழிகளில் உள்ள கரித்துண்டுகள், தாழி ஓடுகள் ஆகியவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியே அவற்றுடன் உள்ள இரும்புப் பொருட்களின் காலக்கணிப்புக்கு வந்தடைந்துள்ளோம்’ என்கிறார்.

‘கரிமக் காலக்கணிப்பு செய்வதுபோல் இரும்பையும் நேரடியாகச் செய்யாமல் கரித்துண்டின் காலத்தை இரும்புப் பொருட்கள் மீது கூறுகிறார்கள் என்றும் விமர்சனம் உள்ளது?’

’அகழாய்வில் கிடைக்கும் உலோகப்பொரு ட்களின் நிலை என்பது அவற்றின் சேர்மானம் எப்படி உள்ளது என்றுதான் பார்க்கும் நிலையில் உள்ளன. ஏனெனில் தமிழகத்தில் அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்களில் கரிமம் குறைந்த அளவில் இருக்கிறது. காலப்போக்கில் அவை இங்குள்ள வெப்பமண்டல தட்பவெப்பத்தால் சிதைந்து விடுவதால் அவற்றை ஆய்வு செய்ய முடியாது. எனவே அவற்றுடன் கிடைக்கும் வேறு கரிமப்பொருட்களின் காலத்தை ஆய்வு செய்வதே சாத்தியமானது.’ என்று விளக்கம் அளிக்கிறார் சிவானந்தம். கர்நாடகம், ஆந்திரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள இரும்புக் காலத் தொல்லியல் இடங்களிலும் கரிம மாதிரிகளைக் கொண்டே காலக்கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் நூலில் காலக்கணக்கீடு பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முடிவுகளின் படி பார்த்தால் வட இந்தியாவில் ஹரப்பா நாகரீகம் உச்சகட்டத்தில் இருந்தபோது தமிழ்நாட்டில் மக்கள் இரும்பின் பயன்பாட்டை பரவலாக அறிந்திருந்தார்கள் என்று கொள்ளவேண்டும். ஹரப்பாவில் இரும்பு இல்லை. அங்கு செம்புக் காலமே நிலவியது. பொதுவாக புதிய கற்காலம் முடிந்து பழங்கால வட இந்தியாவில் செம்புக்காலம் நிலவியபோதே, தமிழ்நிலப்பரப்பில் இரும்புக் காலம் தொடங்கிவிட்டது. இரும்பும் பொன்னுமாக கனிமவளங்கள் இங்கே கிடைத்ததே அதற்குக் காரணமாகக் கொள்ளவெண்டும் என்று சொல்லப்படுகிறது.

‘தமிழரின் சங்ககாலம் என்பது புறநானூற்றில் உள்ள மாமூலனாரின் பாடலில் மௌரியர் படையெடுப்பு பற்றிய குறிப்பை வைத்து கி.மு.300 - முதல் கி.பி. 300 வரை இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இது இலக்கியச் சான்று. கீழடியில் கிடைத்த பொருட்களின் அறிவியல் ஆய்வுகள் மேலும் 300 ஆண்டுகள் பழமையானது சங்ககாலம் என்று உணர்த்தின. இந்த சிவகளை இரும்புக்கால சான்றுகள், தமிழர்களின் இலக்கியத் தொன்மையை மேலும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளும் சாத்தியக் கூறு இருக்கிறது’ எனக்குறிப்பிடுகிறார் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக இணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணன்.

இரும்புக் காலத்தை உலகில் தமிழன் தான் தொடங்கினான் என்பது கரும்பாக இனிக்கிற செய்தி தானே? ஆனால் இடையில் எங்கே கோட்டை விட்டான் என்பதுதான் கவலைப்படவேண்டிய செய்தி.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது நான் மாணவனாக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் இரும்பின் தொன்மை என்பது கிமு ஆறாம் நூற்றாண்டுதான் என்று கற்பிக்கப்பட்டது. ஆனால் இன்று 3000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையானது என்று தமிழக அரசின் தொல்லியலாளர்கள் நிரூபித்திருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல் இந்தியாவின் இன்னொரு கலாச்சாரத்துக்கும் இவர்கள் பங்களித்துள்ளனர். இந்தியாவில் எழுத்துமுறை என்பது கிமு ஏழாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது என்ற கண்டுபிடிப்புதான் அது.

- திலீப்குமார் சக்கரவர்த்தி, பேராசிரியர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

வட இந்தியாவில் 1995-இல் நாங்கள் செய்த அகழாய்வில் கண்டறிந்த இரும்புப் பொருட்களின் தொன்மை கிமு 1300 என்று சொன்னபோது பலர் சந்தேகப்பட்டார்கள். பின்னர் மேலும் சில இடங்களில் நடந்த அகழாய்வுகளுக்குப் பின்னால் அந்த காலம் கிமு 1800 என்று மேலும் பின்னகர்ந்தது. அந்த இரும்புபொருள் தயாரிப்பு தொழில்நுட்பத்தைக் கவனித்தபோது, இந்தியாவின் இரும்பின் தொன்மை 3000 ஆண்டுகள் பழைமையாக இருக்கலாம் என அறிக்கை ஒன்றில் கூறி இருந்தேன். இப்போது தமிழக அரசுத்துறையின் ஆய்வு முடிவுகள் அதை நிரூபித்துள்ளன. இது நாட்டின் பிற இடங்களிலும் மேற்கொள்ளவேண்டிய ஆய்வுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

- ராகேஷ் திவாரி, முன்னாள் தலைமை இயக்குநர்,இந்திய தொல்லியல் துறை

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram