கவிஞர் கலாப்ரியா 
கட்டுரை

கவிப்பறவைக்கு அலகில் புதிய பூ!

கலாப்ரியா 75 - ஒரு கலைடாஸ்கோப் அனுபவம்!

அருள் செல்வன்

கவிஞர் கலாப்ரியாவின் 75-வது பிறந்த நாளையொட்டி 'பஃறுளி' என்கிற பெயரில் ’கலாப்ரியா 75’ மலர் உருவாகி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலை கவிநயா பதிப்பகம் ,4/53, ஏ.ஆர்.எஸ்.தெரு, இடைக்கால்,தென்காசி மாவட்டம் 627804 முகவரியிலிருந்து வெளியிட்டுள்ளது. விலை ரூ.350.

ஒரு கையால் எளிதில் தூக்க முடியாத அளவிற்கு எடை கொண்ட இந்த 368 பக்கங்கள் கொண்ட இந்த நூல், உள்ளடக்கத்திலும் அடர்த்தி மிக்கதாக அமைந்துள்ளது.

இம்மலர் கவிஞர் கலாப்ரியா மீது பல்வேறு நறுமணப் பூக்களைப் தூவிக் கொண்டாடியுள்ளது.

இந்த நூலில் 60 பேருக்கு மேல் பங்களிப்பாற்றியுள்ளார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், கலாப்ரியாவின் நண்பர்கள், தோழர்கள், குடும்பத்தினர் என்று பல்வேறுபட்டவர்களின் உணர்வுகள் கட்டுரை வடிவில் பதிவாகி உள்ளன.

கலாப்ரியா மீது தாங்கள் கொண்டுள்ள அன்பை, நட்பை, காதலை, நேசத்தை, பாசத்தை, புரிதலை, தொடர்பை, பிணைப்பை, பிரமிப்பை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியில் இதில் பேசியுள்ளார்கள்.

கலாப்ரியாவின் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், முன்னுரைகள், முகநூல் பதிவுகள் கூட விடாமல் எழுத்து சார்ந்தும் அவருடனான நட்பு சார்ந்தும் எழுதியுள்ளனர். கலாப்ரியாவைப் பற்றிப் பேசுவதன் மூலம் கவிதைகள் குறித்தும், அதன் ஆழ, அகலங்களையும் பேசுகின்றனர். கலாப்ரியா நினைவுகளினூடாக மொழி, கவிதை வளர்ந்த வரலாற்றைப் பற்றியும் எண்ணங்கள் விரிக்கப்பட்டுள்ளன. இவை மூலம் இலக்கிய இயக்கம், அவற்றின் வளர்ச்சி போன்றவை பற்றிய சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன.

ஒரு கவிஞருக்கு மலர் என்கிற முயற்சியின்போது பெரும்பாலானவை சம்பிரதாயமான கட்டகங்களில் இருக்கும்.உள்ளே உள்ளவை மேலோட்டமான, போலியான, விதந்தோதல்களாகவே இருக்கும். படிக்கப் படிக்க சோர்வூட்டும். ஆனால் இந்த மலர் ஒரு படைப்புக்கான வாசிப்பு அனுபவத்தை அளித்து ருசிக்க வைக்கிறது.

மலரிலுள்ள கட்டுரைகளில் கலாப்ரியா எழுதிய பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

சில குறிப்பிட்ட கவிதைகள் பலரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, விதி என்ற தலைப்பிலான

'அந்திக்கருக்கலில்

இந்தத் திசை தவறிய

பெண் பறவை

தன் கூட்டுக்காய்

அலை மோதிக் கரைகிறது

எனக்கதன் கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை புரியவில்லை'

என்ற

இந்தக் கவிதையைப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

கலாப்ரியா 75 விழா மற்றும் மலர் தயாரிப்பு முயற்சியில் "முதல் விதை போட்டவர் எழுத்தாளர் நாறும்பூநாதன் தான்" என்று நினைவு கூர்கிறார் கலாப்ரியாவின் மகள் டாக்டர் அகிலாண்ட பாரதி.

'காலத்தின் தாழ்வாரங்களில்' என்று தொடங்குகிற இந்த மலர் 1949 ஆம் ஆண்டி லிருந்து நாட்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளோடு

இணைந்த அவரது வாழ்க்கைச் சித்திரமாக வரிகளில் வரையப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் ’ஞாபக’ ஊற்று கட்டுரைத் தொகுதி வெளியானது ,கோவை கொடிசியா வழங்கும் ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றது ,’வெள்ளம்’ குறுந்தொகுப்பு 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீள் பதிவு கண்டது ,’சிற்றகல் ’ கவிதைத் தொகுப்பு வெளியானது வரை பதிவாகியுள்ளது.

கலாப்ரியா பற்றிப் பல ஆளுமைகள் எழுதியுள்ள கட்டுரைகளுக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்புகளே கவித்துவமாக உள்ளன.கவிப்பறவைக்கு அலகில் புதிய பூ - என் வாழ்த்து , சிற்பி பாலசுப்பிரமணியம்,

எமக்கிடையே பைத்தியக்காரத்தனங்களின் ஒப்புமையும் புரிந்துணர்வு அலைநீள ஒத்திசைவும் - வே.மு.பொதியவெற்பன்,

பறவைகளின் மொழியறிய ஏங்கும் கவிஞன் -சுதீர் செந்தில்,

கலாப்ரியாவின் தனி வழிப் பயணம் - பாவண்ணன்,

திராவிட மரபின் ஓர் இழை - சா. தேவதாஸ்,

பசித்த குரல்கள் - எஸ். ராமகிருஷ்ணன், கலாப்ரியாவின் கை நிறைய மலர்கள் - ஜெயமோகன்,

கலாப்ரியாவின் பனிக்கால ஊஞ்சல் - ராஜ சுந்தரராஜன்,

அழிவற்ற வண்டித்தடம் - மனுஷ்யபுத்திரன்,

கருவிழி நுழைந்து கனக்கின்ற கங்குப் பூ - தமிழச்சி தங்கபாண்டியன்,

தன்னை வெறுக்கா தன்மையர் -மரபின் மைந்தன் முத்தையா,

புனல் பொய்யாப் பொருநை -க மோகனரங்கன்,

தயக்கங்களின் பேரரசன் - ஆத்மார்த்தி,

நகல் செய்ய முடியாத வெளிச்சம் - அசோகன் நாகமுத்து,

ஐவிரல் கையள்ளி அருந்தும் நீர் -ஏக்நாத்,

நினைவின் தாழ்வாரங்களில் நிலைத்து நிற்கும் கவி முகம் -சவிதா,

கண்ணாடிச் சுவர்களில் கல்லெறியும் கலைஞன் -டாக்டர் ஜி ராமானுஜம்,

ஆற்றுக்குத்தான் கரைகள் அருவிக்கு ஏது ? -ப்ரியா கண்ணன் ,

அன்பும் நேர்மையும் ததும்பி பொலியும் மனிதர் - மதுமிதா,

காலம் பாதுகாக்கும் தீராப் பொற்குவியல் - மு.ஈஸ்வரமூர்த்தி....

என்று இப்படி எத்தனை எத்தனை தலைப்புகள்!

இனி, அனுபவ முத்துகளை அள்ளி ரசிப்போம்.

கலாப்ரியா குறித்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதும்போது, "அவர் கவிதைகள் எழுதத் தொடங்கிய ஆதி நாட்களில் திசை தவறிய பெண் பறவையின் தவிப்பைச் சொன்ன கவிதையே என்னை இந்த மகத்தான கவிஞனிடம் நெருக்கமாக்கியது.

நுண்ணுணர்வின் மெல்லிய அசைவும் அந்த அசைவின் வழியே ஒரு காட்சியின் உரு வெளித் தோற்றமும் அத்தோற்றத்தில் புலனாகும் வாழ்க்கையின் முரண்மிகுந்த அடுக்குகளும் அவற்றினூடே வெளிப்படும் அபத்தத்தின் அதிர்வும் அழகியல் நேர்த்தியும் ஒருங்கே கலந்து கிடப்பவை கலாப்ரியாவின் கவிதைகள்" என்கிறார்.

வண்ண நிலவன் தனக்கும் கலாப்ரியாவுக்குமான நட்பும் இலக்கியமும் ஒருங்கிணைந்து வளர்ந்த கதையைக் கூறுகிறார்.

கையெழுத்து பத்திரிகை காலம் தொடங்கி வெள்ளம் கவிதைத் தொகுப்பு வரை பேசியவர்,

" கவிதை, உரைநடை இரண்டிலும் சாதனை புரிந்துள்ளவர் கலாப்ரியா. சாகித்ய அகாடமி போன்ற தமிழின் முக்கியமான விருதுகள் அவருக்கு என்றோ வழங்கப்பட்டிருக்க வேண்டும் . இன்று வரை அது நடக்கவில்லை. இது ஏனென்று புரியவில்லை" என்ற ஆதங்கப்படுகிறார்

விக்கிரமாதித்யன் கலாப்ரியாவின் ’வெள்ளம்’ கவிதைத் தொகுப்பு பற்றி விமர்சனம் போன்ற கட்டுரையாக எழுதியுள்ளார்.

'விமர்சனம் என்கிறபோது குறைகள் சொல்ல வேண்டும் அல்லவா? அவர்

தன் அவளைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பிரஸ்தாபிக்கிறார். பெயர் குறிப்பிடாமல் ஆயிரம் காதல் கவிதைகளை எழுதினாலும் அவை சலிப்பூட்டுவதில்லை. இங்கேயோ எதிர்மறையாக நிகழ்ந்திருக்கிறது"என்றவர்,

" சில நேரங்களில் உரைநடையை மடக்கி போட்டுக் கவிதை என நம்ப வைக்கிறார். மறதி, தோல்வி, சாபம் , ஆமென் ,பூவாய்ப் பிறக்கினும் முதலிய கவிதைகள் இதனாலேயே நீர்த்துப் போகின்றன. Poetic Sense இருந்தபோதிலும் கவிதா ரூபம் பெறாது போனால் அவை வசனமே" என்று விமர்சிக்கிறார்.

'எட்டயபுரம்' குறித்துப் பேசும்போது, கலாப்ரியாவுக்கு என்று உள்ள கவித்துவம் தனித்ததொரு வடிவம். சொல்முறை ,செய் நேர்த்தி எல்லாமே எட்டயபுரத்திலும் இயல்பாக வெளிப்படுகின்றன. இவருடைய சமூகப் பார்வை கவனத்திற்குரிய விஷயம், அதைக் கலைப்படுத்த முன் வந்திருப்பது நல்ல காரியம்" என்று சிலாகிக்கிறார்.

கலாப்ரியா மகள் தெய்வநாயகி (தரணி), தன் அப்பாவிடம் கற்றதும் பெற்றதும் பற்றிக் கூறும்போது,

"எங்கள் வீட்டில் படிக்கும் அறை, சமையலறை அனைத்திலும் வேலை செய்ய ஏதுவாகத்தான் விளக்குகளை அமைத்திருப்பார் அப்பா. நாங்கள் தற்சமயம் வாங்கி இருக்கும் வீட்டிலும் அப்படித்தான் அமைத்தேன். இந்த ’ஏஐ ’காலத்தில் நான் அப்படி இருப்பது வியப்பில்லை. 1995ல் அப்பாவுக்கு அப்படி ஒரு யோசனை இருந்ததுதான் வியப்பு.

நான் அதிகம் படிப்பதில்லை என்றாலும் அவர் எழுதிய சில கவிதை வரிகள் என்ன ஒரு ஆழமானவை. அவர் எப்படி இதை யோசித்து இருப்பார் என்று தோன்றும்" என்கிறார்.

கலாப்ரியாவின் பேத்தி கோ. அபர்ணா, "தாத்தாவிடம் கதைகள் கேட்போம். அவர் சொன்ன விக்ரமாதித்தன் கதைகளை எங்கள் கண்கள் படம் போல ஓட்டி மெல்ல மெல்ல தூக்கத்தின் கரங்கள் எங்களை அணைக்கும். அந்த பொன்னான நாட்கள் என் நினைவில் என்றென்றும் வாழும்" என்கிறார்.

வே.மு. பொதியவெற்பன், தனக்கும் கலாப்ரியாவுக்குமான அறிமுகத்திலிருந்து தொடங்கி நீண்ட முன் கதையைக் கூறியுள்ளார். அவரது கவிதைகள் பற்றியும் எழுதி , தன் பதிப்புப் பணிகளுக்கு கலாப்பிரியா உதவியதையும் குறிப்பிட்டுள்ளார்.

எம் எஸ் பெருமாள் நெல்லையின் முகவரி கலாப்ரியா என்றவர்,

"தஞ்சை தரணிக்கு தி.ஜானகிராமன், கொங்கு மண்டலத்துக்கு சண்முக சுந்தரம், கரிசல் காட்டுக்கு கி.ரா பாட்டையா, நெல்லைச் சீமைக்கு அன்று புதுமைப் பித்தன், இன்று கவிஞர் கலாப்ரியா " என்கிறார்.

மேலும்,

"கலாப்ரியாவின் கவிதைகளை அவ்வப்போது படித்து நண்பர்கள் மேற்கோள் காட்டி மேடையில் பேசும்போதும் கைத்தட்டி ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் வியந்து நின்றது அவரது முகநூல் பதிவுகளில்தான்." என்கிறார் .

பேராசிரியர் மு.ராமசாமி கல்லூரிக் காலத்திலிருந்து தனது நட்பைப் பற்றிக் கூறி இருக்கிறார் கல்லூரிக் கால போராட்ட நினைவுகளையும் பகிர்ந்துள்ளார் விரிவாக .

ஒரு வாசகராக அறிமுகமாகி மனதால் நெருங்கிய வாசகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல், 'கலாப்ரியா சாரும் மற்றும் நூல்களும்' என்று எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதேபோல் ஆர் .சிவகுமார்

ஜெயமோகன் எழுதியுள்ள 'கலாப்ரியாவின் கை நிறைய மலர்கள் 'கட்டுரையில்,

விஸ்தாரமாகப் பேசி உள்ளார் மொழி ,இலக்கியம், புனைவு காட்சி வடிவங்கள், காட்சிச் சித்தரிப்புகள் பற்றி விரிவாகவே பேசி உள்ளவர், காட்சிச் சித்தரிப்புக்கும் படிமத்துக்கும் உள்ள வேறுபாட்டு நுட்பத்தை விளக்கி இருக்கிறார்.

"காட்சி என்பது படிமமாகவே கதை, கவிதைகளில் வெளிப்பட முடியும் என்று தொடக்கத்திலேயே நவீன தமிழ் இலக்கியம் கண்டு கொண்டது. குறிப்பாக நவீன கவிதை" என்பவர்,

"படிமத்தை கவிதைகளில் தவிர்க்க முடியாது.படிமம் கவிதைகளில் தானாகவே நிகழ்ந்து கொண்டும் இருக்கும். வெறும் காட்சிச் சித்தரிப்பை ஒரு கவிஞன் அளித்தாலும் கூட எப்படியும் அது ஒரு படிமத்தன்மையை அடையவும் செய்யும்" என்கிறார்.

'தமிழ் நவீன கவிதையில் அவ்வாறு படிமப் பெருக்கு நிகழ்ந்து அதன் விளைவாக தன்னியல்பான கள்ளமற்ற காட்சிச் சித்தரிப்பு இல்லாமலே ஆகிவிட்ட ஒரு காலக்கட்டத்தில் தான் காட்சிச் சித்தரிப்பும் அழகும் மட்டுமே என வந்து நின்றார் கலாப்ரியா. தமிழில் கலாப்ரியாவின் இடம் என்பது மரபு மீட்புக்கான தன்னியல்பான கவிதை வெளிப்பாட்டுக்காகத் தான்".

மேலும் ஜெயமோகன்,அவரது கவிதைகள் பற்றிக் கூறும் போது,

"எண்ணி எடுக்கப்பட்ட சுருக்கமான சொற்களில் காட்சிகளை மட்டும் சொல்லி பார்ப்பவனின் உளநிலை வழியாக அவற்றைத் தொடுத்துச் சரமாக ஆக்கிக் கொண்டே சென்று ஒரு முழுமைச் சித்திரத்தை அளித்து நிறுத்தும் தன்மை கொண்டவை கலாப்ரியா கவிதைகள். தமிழில் அவர் அறிமுகம் செய்தது இந்தக் காட்சித்தொடுப்பின் அழகியலை. அதன் வேர்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன" என்கிறார்.

''பெரும்பாலான கவிதைகளில் ஒரு அதிநுட்பமான கேமரா மெதுவான ஒரு Pan நகர்வை அடைவதைத்தான் காண முடிகிறது. கேமராவுக்குள் வரும் காட்சிகள் அனைத்தும் துல்லியத் தன்மையுடன் அழகுடன் தங்கள் இருப்பைக் காட்டி தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு ஓர் உலகை உருவாக்கி நிறுத்துகின்றன.தமிழில் அவர் அறிமுகம் செய்திருக்கும் காட்சித் தொடுப்பு அழகியலின் வேர்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன "என்கிறார்.

மனுஷ்ய புத்திரன் தனுக்கோடி, ககனவெளி , அப்பாவின் சினேகிதர்கள், குறளி போன்ற கதைகளைக் குறிப்பிட்டு எழுதியவர், மேலும் கூறும்போது,

" கலாப்பிரியாவின் சிறுகதைகளில் வரும் அழகியல் என்பது வாழ்க்கையின் எதார்த்தத்தை அதன் உண்மையான பின்னணி மாறாமல் அதன் உணர்ச்சிகளை அப்படியே வடிப்பது தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது" என்கிறார்.

'கசடதபறவும் கலாப்ரியாவும்' என்கிற தலைப்பில் எழுதியிருக்கும் ஆர்.

சிவக்குமார் ஒரு வாசகராக தன்னுள் கலாப்ரியா நுழைந்து பரவிய அனுபவத்தைச் சொல்லி, கல்லூரிக் காலத்திலிருந்து அவருக்குள் கவிஞர் ஆக்கிரமித்த அனுபவத்தைக் கூறியதுடன் கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்புகள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.

கலாப்ரியாவின் ' நான் நீ மீன்' தொகுப்பு குறித்துப் பேச ஆரம்பித்த சுகுமாரன், தனக்குப் பிடித்த கவிதை ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். அதில் சுகுமாரனும் ஒரு பாத்திரமாக வருகிறார்.

"தமிழில் இன்று ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. அதைவிட அதிக எண்ணிக்கையில் கவிஞர்களும் இருக்கிறார்கள். சில கவிதைகள் பற்றிப் பேசலாம் அது நமது இலக்கிய அறிவுக்கு நல்லது. சில கவிஞர்கள் பற்றிப் பேசாமல் இருக்கலாம் .அது நம்முடைய உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது" என்கிறார் பகடியாக .

நவீன கவிஞர்களின் கலாப்பிரியாவை தீர்க்கதரிசி என்றும், இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளைப் பற்றி மிக நீண்ட காலத்திற்கு முன்பு ஆரூடம் எழுதியவர் என்று கூறிவர்,

’படிம உருவக

குறியீட்டு

இடையீடில்லாத

நிர்வாண கவித்துவம் வேண்டி

நீ

எப்போது தியானிக்கப் போகிறாய்?’

என்ற கவிதையைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகள் திறந்த கவிதைகளாக Plain Poetry -யாக இருப்பவை. கலாப்ரியாவைப் படித்து தான் இதை செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை. கவிதை ஆக்கத்தில் நிகழும் தொடர்ச்சியாக இதைச் சொல்லலாம்.

அதற்கு உந்துதல் கொடுத்த கவிஞர்களில் ஒருவர் கலாப்ரியா.

அவர் கவிதைகளில் காட்சிப்படுத்துதல் முக்கிய இடம் வகிக்கிறது. அவர் கவிதைகளை வாசித்ததும் இதைப்போல் நாமும் எழுதிவிட முடியுமே என்று சுலபமாக எண்ண வைக்கிற கவிதையாக்கம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல .அந்தக் காட்சிகளின் தேர்வில் அவர் காட்டுகிற கவனமும் அவை ஒன்று சேரும்போது பொருள் தருவதாக அமைவதும் தான் கவிதையாக மாறுகிறது.

காட்சிப்படுத்துதல் போல நவீன கவிதைகளில் ஓர் இடத்தின் சித்திரமும் அங்கே வாழ்பவர்களின் சூழலையும் சித்தரித்தவர் கலாப்ரியா. அடுத்ததாக தமிழ்க் கவிஞர்களில் வாசகர்களின் பங்களிப்பை அதிகம் கேட்கிற கவிஞர் அவர்தான்.

”மூன்று தலைமுறைகளைத் தாண்டி பேசப்படும் பெயராக கலாப்ரியா இருப்பது அவருடைய வாசகனாக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 'பெயர்களின் நிழலை அழிய விடுவதில்லை ஒளி 'என்று ஒரு கவிதையில் அவரே குறிப்பிடுகிறார்'' என்கிறார்.

ந. முருகேச பாண்டியன் தன் இலக்கிய நண்பராக கலாப்ரியா இருப்பது பற்றி எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

பஃறுளி தொகுப்பு

பல்வேறு இலக்கிய இயக்கங்கள் பற்றி குறிப்பிட்டவர், கலாப்ரியா நட்பு பற்றி விரிவாகப் பேசுகிறார்.

"அவருக்குப் பிடித்த கவிஞர்களை உயர்வாக மதித்து பேசுவார். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர். அவர் தனது 'கவிஞர்' நிலையை உறுதிப்படுத்துவதற்காகத் தந்திரங்களில் இறங்குவதில்லை. அவரது செயல்பாடு எப்போதும் வெளிப்படையாகவே இருக்கும் "என்று அவரது குணச்சித்திரத்தை வரைகிறார்.

"இப்போது தமிழில் நவீன கவிதை காட்டறாற்று வெள்ளம் போல சுழித்து ஓடுகிறது .கொஞ்சமும் இரக்கமற்று ஏற்கெனவே வலுவான ஸ்தானத்தில் அமர்ந்திருந்த பலரையும் இழுத்துச் சென்றுவிட்டது. இதனால் 70 - 80 களில் உச்சத்தில் இருந்த பல கவிஞர்கள் காணாமல் போய்விட்டனர். சிலர் இலக்கிய வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறும் பெயர்களாக மாறினர். இத்தகைய களேபரத்திலும் கலாப்ரியா தனது கவிதைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.பல்வேறு புதிய போக்குகளை முதன்மைப்படுத்தி மொழியின் வழியே ஆழமாகப் பயணம் செய்திடும், இளம் கவிஞர்களின் நம்பிக்கை தரும் கவிதைத் தொகுப்புகளுக்கு இடையில், கலாப்ரியா என்றும் அயனான கவிஞராக வெளிப்படுகிறார். இதுவே அவரது ஆகப்பெரிய சாதனை'' என்கிறார் -

சுதீர் செந்தில் தனது அனுபவங்களை 'பறவைகளில் மொழியறிய ஏங்கும் கவிஞன்' என்ற தலைப்பில் வெளிப்படுத்தி உள்ளார்.

"எனது பதின்ம வயதில்- தேடலும் தவிப்பும் நிறைந்த அந்தப் பருவத்தில் எதையும் தீவிரமாக அணுகும் குணமடையவனாக இருந்தேன். பொருளாதாரம், தத்துவம், காதல் என எந்தத் துறையில் எடுத்தாலும் தீவிர மனநிலையில் தேடுபவனாக இருந்தேன். அந்தத் தருணத்தில் தத்துவத்தையும் காதலையும் வித்தியாசமான கோணங்களில் கலாப்ரியாவின் கவிதைகள் பேசின. அவை என்னை வசீகரித்தன".

என்றவர் தனக்குப் பிடித்த கவிதைகளைப் பட்டியலிடுகிறார்.

"பல ஏற்றத்தாழ்வுகளோடு இருக்கும் ஒரு சமூகத்தில் வாழும் போது, எவ்வளவு பொறுப்புணர்வோடு எழுத வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் கலாப்ரியா".

என்று வியப்பதுடன்,கலாப்ரியாவின் நட்பை இந்தப் பிறவியில் நிகழ்ந்த தனது பிறவிப்பயன் என்று உணர்ச்சிவசப்படுகிறார்.

பாவண்ணன் எழுதியுள்ள நீண்ட கட்டுரையில் கலாப்ரியாவுக்கும் தனக்குமான அனுபவங்களையும் கவிதை இலக்கியம் சார்ந்த வரலாற்றையும் அவரது கவிதைகள் குறித்தும் ஆழமாகக் கூறி இருக்கிறார்.

'கூட்டிலிருந்து தவறி விழுந்த குஞ்சுப் பறவை',மற்றும் 'அந்தி கருக்கலில் இந்த திசை மாறிய பெண் பறவை' என்று தொடங்கும் இரு கவிதைகளைக் குறிப்பிட்டு "இறப்பின் சாட்சியாக ஒரு கவிதை, இயலாமையின் வெளிப்பாடாக இன்னொரு கவிதை என இரு கவிதைகளும் நான் படித்து ஏறத்தாழ 45 ஆண்டுகள் பறந்தோடி விட்டன. ஆயினும் இன்றும் ஒரு கனவு பொய்த்துப் போய் நிற்கும் தருணத்திலும் இறப்பைத் தரிசிக்கும் தருணத்திலும் இயலாமையில் ஒடுங்கி நிற்கும் தருணத்திலும் இக் கவிதைகளையும் அப்பாவிகளான அக்குருவிகளையும் நினைத்துக் கொள்கிறேன். அந்த அளவுக்கு அந்தக் காட்சிகள் என் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றன.

இன்று கட்டுரை, சிறுகதை, நாவல் என எல்லா வகைமையிலும் சிறப்பாக எழுதி வரும் மாபெரும் கலைஞராக மலர்ந்திருக்கிறார் .அதே சமயத்தில் அவர் எந்த வடிவத்தில் எழுதினாலும் அரிய காட்சி அனுபவங்கள் அவருடைய எழுத்துடன் இணைந்து கொள்கின்றன அவருடைய எழுத்துப் பயணம் ஓய்வின்றி தொடர்ந்தபடி இருக்கிறது. அது அவரே கண்டடைந்த தனி வழி. அவருடைய தனி வழிப் பயணம் இனிதே தொடரட்டும்" என்று வாழ்த்துகிறார்.

பேராசிரியர் அ .ராமசாமி, கவியாகவும் படைப்பாக்க ஆசிரியராகவும் கலாப்ரியாவை மதிப்பிட்டுப் பேசுகிறார்.

"இப்போது 75 வயதைக் கடந்தவராக இருக்கிறார் கலாப்ரியா .அவரது கவிதைகள் 25 வயதில் இருந்த வெளிப்பாட்டுத் தன்மைகளோடு தான் இருக்கின்றன .இலக்கிய வரலாற்றின் போக்கில் தமிழ் நவீனத்துவ கவிகளின் முன் வரிசையில் அவரது இடம் உறுதியானது. இப்படிச் சொல்வதற்கு வலுவான காரணங்கள் உண்டு. எனது முனைவர் பட்ட ஆய்வுக்கான இரண்டு தலைப்புகளில் ஒன்றாக' புதுக்கவிதைக்குள் கலாப்ரியாவின் தனிப்போக்கு' என்பது இருந்தது .

மொத்த கவிதைகளையும் வாசிக்கும் ஒருவருக்கு கலாப்ரியாவின் கவிதைகளுக்குள் அன்பின் ஐந்திணைகளுக்குரிய உரிப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகளுக்கு இணையான எண்ணிக்கையில் கைக்கிளையையும் பெருந்திணையையும் பாடும் கவிதைகளும் கிடைக்கும்"என்கிறார்.

ச. தமிழ்ச்செல்வன் தன் கட்டுரையில் பேசும்போது,

'சாப்பாடு இல்லாத பிள்ளைகள்

புழுதிக் காலுடன் அடுப்பெரிகிறதை

வந்து வந்து பார்த்து

விளையாடப் போகும்

பசியை வாசல் படியிலேயே விட்டுவிட்டு'

இப்படிப் பசியைக் காவலுக்கு நிறுத்திவைத்துச் செல்லும் குழந்தைகள் பற்றி அவர் எழுதிய இந்த கவிதையே எல்லாவற்றிற்கும் மேலாக மனதில் மேலெழும்பி வருகிறது.

70களில் அவருடைய 'சசி கவிதைகள் 'இளைஞர்களாக இருந்த எங்களை எல்லாம் ஈர்த்தன .இலக்கிய உலகில் என்னுடைய அண்ணன்மார் என்று வண்ணதாசன், கலாப்ரியா, வண்ண நிலவன், விக்ரமாதித்யன் ஆகிய நால்வரையும் இளம் வயதிலேயே வரித்துக் கொண்டவன் நான். என்னைப்போல பலரும் தான். என்னை விட மூன்று நான்கு வயது பெரியவர் அண்ணன் கலாப்ரியா" என்று தொடங்குகிறார்.

'அந்திக் கருக்கலில்

இந்தத் திசை தவறிய பெண் பறவை ' என்கிற அவரது கவிதை ஒரு தேசிய கீதம் போல எல்லோருக்கும் ஆகிவிட்டதைக் காண்கிறோம் என்று சில கவிதைகளை உதாரணப் படுத்துகிறார். கலாப்ரியாவிடம் தன்னைக் கவர்ந்த முக்கியமான அம்சம் என்று "அவரது ஒளிவு மறைவற்ற பூசி மெழுகாத வெளிப்படைத்தன்மை . தனக்கென்று எந்த பிம்பத்தையும் தனக்குள் கட்டமைத்துக் கொள்ளாத அவரது இயல்பு, எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை"என்கிறார்.

"கவிதையின் வழியே நீங்கள் கண்டறிய விரும்பும் உலகம் என்னவாக உள்ளது ? என்கிற கேள்விக்கு அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்த பதில். 'அன்புமயமான உலகம். ஆனால் அதன் சாத்தியப்பாடுகள் முழுக்க கேள்விகள் நிறைந்தவை." என்பதைக் குறிப்பிட்டவர்,

இறுதியில் கலாப்ரியாவின் கீழ்க்காணும் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் .

'பீர்பால் கதையில் வருகிற மாதிரி அரண்மனை முற்றத்தில் வைக்கப்பட்ட பெரிய பாத்திரத்தில் அடுத்தவன் பாலை ஊற்றுவான் என்று எல்லோருமே தண்ணீரை ஊற்றுகிற செயலைச் செய்யாமல் நாம் ஒரு குவளைப் பாலையே ஊற்றுகிற மனோதர்மம் வளர்கிற காரியத்தைக் கவிதை செய்தால் போதும்'

'எட்டயபுரம் கலாப்ரியாவின் குயில் கோட் காமிக்ஸ் புத்தகம்' என்ற தலைப்பில்,பேசியுள்ள கோணங்கி,

"நிழலைப் போல் பெண்ணின் சித்தத்தை இருளாக்கும் உணர்ச்சிகளைச் கருவாக நின்றுவிட்ட வேட்கைகளை வெகு நுட்பமாகவும் பிடிப்பதில் நிகரற்றவர் கலாப்ரியா " என்கிறார் .

திராவிட மரபின் ஓர் இழையாக கலாப்ரியாவைக் கூறும் சா .தேவதாஸ்,

"மற்றவர்களால் பொருட்படுத்தப்படாமல் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் உன்னதம் பொதிந்து இருப்பதை அடையாளம் காண வைப்பதுதான் கலாப்ரியாவின் பெரிய பொறுப்புணர்வு என்று சொல்லத் தோன்றுகிறது. கலாப்ரியா ஓர் அரை நூற்றாண்டு தென்னக வாழ்வின் சாட்சியம்" என்கிறார்.

பதிப்பாளர் சந்தியா நடராஜன் கூறுகிறார்.

"அவர் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை வள்ளுவ வாசனை வீசாத கலாப்ரியா கவிதைகளை நாம் காண முடியவில்லை. சங்கத் கவிதை பிழிந்து எடுத்த சாறு அவரது மைக் கூட்டில் கலந்து இருக்கிறது" என்கிறார்.

மேலும் "முன்னுதாரணங்களையும் பொன் உதாரணங்களையும் புறந்தள்ளிய கலாப்பிரியா நவீன கவிதையில் ஒரு திசை மாற்றி" என்கிறார்.

"கலாப்ரியாவின் வாழ்வையும் படைப்பையும் விண்டு சொல்ல அவரது ஆரம்பகால வாழ்வின் தாழ்ச்சியும் வீழ்ச்சியும் அவற்றின் தழும்புகளும் அவரின் உட் குரலின் ஓசையில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் 'பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரண மனிதன் தான்' என்று சொல்கிறார்" என்று கூறியுள்ளார்.

பேராசிரியர் சொர்ணவேல் எழுதியுள்ள கட்டுரையில் . கலாப்ரியாவும் சினிமாவும் கவி உள்ளமும், சினிப்பித்தும் ஒத்திசைவும் என்று பல்வேறு தலைப்புகளில் பல திரைப் படங்களைக் குறிப்பிட்டு கலாப்ரியாவின் திரைப் பார்வை, திரையுலகம் சார்ந்த கட்டுரைகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

எஸ் ராமகிருஷ்ணன் 'தனது பசித்த குரல்கள்' கட்டுரையில்.

"தமிழ் நவீன கவிதையின் வடிவத்தை மாற்றியதில் முக்கியமானவர் கவிஞர் கலாப்ரியா. தினசரி வாழ்வின் காட்சிகளைக் கவிதையாக மாற்றிய இவர் அதற்கான காட்சிப்பூர்வமான மொழிகளை முன்னெடுத்தவர். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களின் அழகைப் போன்றது அவரது கவிதைகள்" என்று கூறுகிறார்.

மேலும்,"கலாப்ரியா கவிதைகளில் பசி முக்கியமான கருப்பொருளாக அமைகிறது" என்று அவரது இரண்டு பசி குறித்த கவிதைகளை எடுத்துக்காட்டி,

"பசியைத் தமிழ் இலக்கியம் எழுதியது போல் உலகில் எந்த இலக்கியமும் இவ்வளவு விரிவாக எழுதியது இல்லை. அந்த மரபின் தொடர்ச்சியைக் கலாப்ரியாவிடமும் காண முடிகிறது "என்கிறார்.

இரா. முருகன் எழுதியுள்ள அனுபவக் கட்டுரையில் அவருக்கும் தனக்குமான அனுபவங்களும் இலக்கிய இயக்கம் சார்ந்த செயல்பாடுகளும் பரஸ்பரம் நிகழ்ந்த கடிதப் போக்குவரத்து பற்றியும் விரிவாக எழுதி இருக்கிறார்.அந்த கடிதங்களையும் வெளியிட்டுள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் 'கருவிழி நுழைந்து கனக்கின்ற கங்குப் பூ' கலாப்ரியாவின் கவிதைகள் என்று கூறுபவர்,

"அவரது கவிதைகளில் தன்னியல்பான ஒரு சந்த ஒழுங்கு உண்டு .சிறந்த கவிதைகள் தாமே உருவாக்கிக் கொள்ளும் இசையமைவு அது .

அதேபோல் வாழ்வு மீதான மெல்லிய கசப்பும் ஏமாற்றமும் தனிமை உணர்ச்சியும் அவரது கவிதைகளில் எப்போதும் ஊடாடி நின்று இருக்கின்றன. ஆனால் அவற்றை அவரது அழகியல் பார்வையும் தத்துவ நோக்கும் பட்டுத் துணியால் மூடி வேறொன்றாகப் பிரகாசிக்கச் செய்கின்றன"என்கிறார்.

தமிழச்சி அதே கட்டுரையில் , கலாப்ரியா கவிதைகளில் சுழித்தோடும் லயம் ,வால்ட் விட்மனும் கலாப்ரியாவும் சந்திக்கும் புள்ளி ,யாரும் காணாத கலாப்ரியாவின் கவிதைக் கோணங்கள், தாகூரின் காதலன் கலாப்ரியா, துயரங்களின் பாடலாக விரியும் கவிமொழி,காலத்தை திருப்பிக் கொணரும் மந்திரக் கவிஞன் என்ற தலைப்புகளில் விரித்தவர் , குறிப்பாக வால்ட் விட்மன் கவிதைகளையும் தாகூர் கவிதைகளையும் கலாப்பிரியாவின் கவிதைகளோடு ஒப்பிடுகிறார்.

அந்த இரண்டு கவிஞர்களின் கவிதைகளும் கலாப்ரியாவோடு எந்த புள்ளியில் இணைகின்றன என்று துல்லியமாகத் துலங்க வைக்கிறார்.

அத்துடன் தனது ஆதர்ச கவிதையினையும் கூறி இருக்கிறார்.

"கலாப்ரியா இலக்கிய ஆசிரியராகவும் மாணவராகவும் சலிப்பின்றிச் செயல்படுகிறார்.

கலாப்ரியா ஓர் இலக்கிய இயக்கம் அவரது வண்டித்தடங்கள் எந்த வெள்ளத்தாலும் மறையாது" என்றும் கூறியுள்ளார்.

தனது 'மனச் சுரங்கம்' திறந்து பேசி இருக்கிறார் திருமதி சரஸ்வதி கலாப்ரியா,

"திருநெல்வேலியில் எங்கள் திருமண வரவேற்புக்கு கி. ரா, வண்ணதாசன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் ஒருவரைப் பற்றியும் அப்போது எனக்குத் தெரியாது. அவர்களின் பெயரைக் கூட அறிந்திருக்கவில்லை.

கணையாழி, கசடதபற, அஃக் என்ற பெயர்களைக் கேட்டபோது புதுமையாக இருந்தது .அந்த இதழ்களை என் கணவர் சேகரித்து வைத்திருந்ததால் அவற்றைப் படித்து நவீன எழுத்து என்றால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்டேன்"என்று தொடங்கியவர்,

"இருவரும் எங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் எங்கள் மனதை இந்த எழுத்து உலகம் உற்சாகமாகவே வைத்திருக்கிறது .அவருக்கு வரும் பத்திரிகைகளை, புத்தகங்களை நானும் விருப்பமுடன் வாசிப்பேன்.

அவ்வப்போது நேரிலும் தொலைபேசியிலும் இலக்கியம் சார்ந்த நண்பர்களைப் பார்ப்பதும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதும் மிகுந்த மன நிறைவைக் கொடுக்கிறது" என்று முடிக்கிறார்.

'தன்னை வெறுக்காத தன்மையர் 'என்று கலாப்ரியாவை மதிப்பிடும் மரபின் மைந்தன் முத்தையா,"எளிதில் பழகி விடும் சுபாவம் உடையவர். மனிதர்களையும் விலங்குகளையும் பறவைகளையும் தாவரங்களையும் நுட்பமாக அவதானிக்கக் கூடியவர் அண்ணாச்சி கலாப்ரியா.

அவர் ஒரு பயணப் பறவை. எளிதாகவும் விரைவாகவும் பயணங்களுக்குத் தயாராகி விடுவார், வாழ்க்கை என்னும் பயணத்தோடும் அவரால் இணக்கமாகத் தொடர முடிவதற்கு இந்த இயல்பும் ஒரு காரணம் .தன்னைப் பற்றி எந்த புகாரும் இல்லாத மனிதர் அவர். அத்தகைய மனிதர்களைக் காண்பது அரிது''என்கிறார்.

'எங்கள் நெல்லை மண்ணின் காவியக் கவிஞர் கலாப்ரியா' என்று பெருமைப்படும் வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன்,

"எங்கள் மண்ணின் மைந்தராகத் தமிழ் கூறும் நல் உலகத்தின் மகாகவி ஆக வாழ்ந்து வருகிறார் கலாப்ரியா என்பதில் பெருமை கொள்கிறேன். இன்றைய முதிர்ந்த கனிந்த வயதில் அவரது வாழ்க்கையும் இலக்கியமும் ஒன்று போலவே பின்னிப் பிணைந்து வந்திருப்பதைக் காண முடிகிறது. அவரது படைப்புகள் தொடர்ந்து இன்றைய புதிய தலைமுறைகளால் வாசிக்கப்பட வேண்டும். அவர் இன்னும் எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்கிறார்.

"இலக்கியமோ சுய அனுபவமோ அல்லது கிறுக்குத்தனமான ஐடியாக்களோ, இதழ் தயாரிப்புக்காகக் கட்டுரையாக எங்கள் ஆசிரியர் குழுவினர் முதலில் பட்டியலில் எழுதிக் கொள்ளும் பெயர் கலாப்ரியா. 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தன் முக்கியமான கட்டுரைகளை 'அந்திமழை' இதழுக்காகத் தந்துள்ளார் என்பதில் எங்களுக்குப் பெருமை தான். என்ன கேட்டாலும் மறுக்காமல் இரண்டு நாட்களுக்குள் அனுப்பி விட்டுத் தயக்கத்துடன் ' நான் எனக்கு தோனியதை எழுதியிருக்கேன் .சரியா வந்திருக்கா? எனக் கேட்கத் தவறுவதில்லை" என்கிறார் ’அந்திமழை ’அசோகன்.

கலாப்ரியாவை ஒரு கவிதைக் கொண்டாட்டமாகப் பார்க்கிற இயக்குநர் லிங்குசாமி, "கலாப்ரியா இந்தப் பெயரிலேயே ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஒரு வசீகரம் இருக்கிறது ,ஒரு பிரியம் பொங்கி வழிகிறது. கலாப்ரியா என்பது கவிதையின் ஆத்மாவில், தமிழ் அன்னையின் இதயத்தில் பொன் எடுத்துக்களால் எழுதப்பட்ட பெயர் "என்று கூறுபவர், திரைப்பட தொழில் நுட்ப மொழியில் "Zoom லென்சை வைத்துக் கொண்டு வாழ்க்கை என்ற பரந்த நிலப்பரப்பின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் துல்லியமாகப் படம் பிடித்தவர் அவர்" என்கிறார்.

ஏக்நாத் 'ஐவிரல் கையள்ளி அருந்தும் நீர்' என்கிறார்.

"கலாப்ரியாவின் கவிதைகள் தனது அருகருகே இருக்கிற மனித மனத்தில் ஒரு அகச் சூழலை, மூச்சு முட்டுகிற வாழ்வின் 'தெவங்கல்' களை, காம அலைக்கழிப்பை, காதலை என, கொஞ்சம் மென்மையாகவும் கொஞ்சம் வன்மையாகவும் வெளிப்படுத்துபவை .முன்பு இந்தப் பார்வை எனக்கு வேறொன்றாக இருந்தது.

அவரது கவிதைகளின் குரல் எதுவாக இருந்தாலும் அவருடைய கவிதைகளின் ருசி அலாதியானது "என்கிறார்.

மேலும் கலாப்ரியாவின் கவிதைகள் குறித்து உதயசங்கர்,கண்டராதித்தன், க..மோகனரங்கன்,சங்கர் ராமசுப்பிரமணியன், முடவன்குட்டி, ஆத்மார்த்தி, சவிதா, பொன்.குமார் போன்றவர்கள் தங்கள் கட்டுரைகளில் பேசுகிறார்கள்.அவரது கட்டுரைகள், நாவல்கள், மட்டுமல்ல முன்னுரைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.

அவரது நட்பு பற்றி 'கலாப்ரியாவுடன் அரை நூற்றாண்டு 'என்று கூறும் எம். பீர் முகமது தொடங்கி க.முத்துகிருஷ்ணன், நந்தன் கனகராஜ் ,மதுமிதா, மதுரை வெற்றிவேல், ஆ. ஆனந்தன், மதுரை செந்தில்குமார், கீரனூர் ஜாகிர் ராஜா,கிருஷி, பக்ருதீன் அலி அகமது,மு.ஈஸ்வர மூர்த்தி போன்ற பலரும் பகிர்ந்துள்ளார்கள்.

பொதுவாக வெள்ளி விழா, பொன்விழாக் கொண்டாட்டங்களில் வெளியிடப்படும் மலர்களில் பெரும்பாலும் புகழ்ச்சி மொழிகளாகவே இருக்கும். அவை வாசிப்பதற்குச் சலிப்பூட்டக் கூடியதாக இருக்கும். ஆனால் கலாப்ரியா 75 ஒரு படைப்பிலக்கியத்தை வாசிப்பதைப் போலவும் ,ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை ,ஆய்வு என்று இலக்கிய வாசிப்பின் நிறைவை அளிப்பதாகவும் இருக்கிறது.பக்கத்துக்குப் பக்ககம் வெவ்வேறு எண்ணங்கள் மின்னும் இது, சிறு அசைவுக்கே பிம்பங்களை மாற்றிக்காட்டும் கலைடாஸ்கோப் போல வியப்பான அனுபவம் தருவதாக உள்ளது.

ரவி பாலேட் அட்டைப்படம் வரைந்திருக்கிறார். அதேபோல் உள் உள்பக்கங்களில் சுந்தரம் முருகேசன், ராஷ்மி, ஞானப்பிரகாசம், ஸ்தபதி, செல்வம் ஆகியோரின் ஓவியங்கள் மலருக்கு அழகு சேர்த்துள்ளன.மாரீஸின் பக்க வடிவமைப்பு நேர்த்தி. பொருளடக்கத்தின் தலைப்புகளை கொஞ்சம் பெரிய எழுத்தில் போட்டிருக்கலாம்.மொத்தத்தில் இம்மலர் பல்வேறு உச்ச தருணங்களைக் கொண்ட நாவலைப் படித்த திருப்தியை அளிக்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram