கட்டுரை

மதுரைத் தமிழை மேடையேற்றியவர்

திண்டுக்கல் லியோனி

புராணங்களிலும் இலக்கியங்களிலும் பேசப்படும் கருத்துகள், கதாபாத்திரங்களை வைத்து பேசப்பட்டு வந்த பட்டிமன்றம் என்ற பழமையைப் புதுமைப்படுத்தி, எளிமையான வாழ்வியல் தலைப்புகளையும் மக்கள் தளத்தில் பேசி, நகரங்கள், கிராமங்கள், திரு-விழாக்களின் மேடைகளில் அரங்கேற்றிய பெருமைக்குரியவர் பேராசிரியர், தமிழறிஞர், பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா.

திண்டுக்கல் தமிழ்ச்சங்கம் 1978 ஆண்டு நடத்திய பாரதி விழா. மாபெரும் கூட்டம். “பாரதி தந்த இலக்கியச் சுவை” என்னும் தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் ஆற்றிய உரையை, கல்லூரி மாணவனாக இருந்த நான் அன்று ரசித்துக் கேட்டேன். அதுவே அவரை நான் முதலில் நேரில் பார்த்தது.

பாரதியின் பாடலை அன்று தனது கம்பீரமான குரலில் முழங்கினார்:

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்,

வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்.

விழலுக்கு நீர் பாய்ச்சு மாயமாட்டோம்,

வீணருக்கு உழைத்து உடலம் ஓயமாட்டோம்.”

இதே கருத்தை “அரசிளங்குமரி” படத்தில் இடம்பெற்ற பட்டுக்கோட்டையாரின் பாடலோடு ஒப்பிட்டுக் கூறினார்:

“ஏற்றம் முன்னா ஏற்றம்,

இதிலே இருக்குது முன்னேற்றம்.

எல்லோரும் பாடுபட்டா,

இது இன்பம் விளையும் தோட்டம்.

எறும்பு போல வரிசையாக

எதிலும் சேர்ந்து உழைக்கணும்,

இடுப்பே வளையா மனிதர்

எதிர்பார்த்து பொழைக்கணும்.”

அதைக் கேட்டுவிட்டு பட்டுக்கோட்டை-யாரின் பாடல்களைக் கேட்க ஆரம்பித்து, மேடைகளில் பேச்சுப் போட்டியில், கல்லூரிகளில் பாடத் தொடங்கினேன்.

“முப்பது கோடி ஜனங்களின் சங்கம் -அதை

முழுமைக்கும் பொதுவுடைமை என்போம்”

என்று பட்டுக்கோட்டை, “தங்கப்பதுமை” படத்தில் காதல் இல்லற வாழ்வில் பொதுவுடைமைச் தத்துவத்தைக் கொண்டு வந்தார்.

“முகத்தில் முகம் பார்க்கலாம்,

விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்,

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்,

இருவருக்கும் பொதுவாக்கலாம்,

அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்.”

அவர் எழுதிய ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பார்வை’ என்ற ஒரு திறனாய்வு நூலை படித்து, அவருடன் மேடையில் பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்தேன். அந்த வாய்ப்பும் வந்தது.

1984 ஆம் ஆண்டு, திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில், டிசம்பர் 26ஆம் நாள் சாலமன் பாப்பையா தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்புப் பட்டிமன்றம் . அதில் பங்கெடுக்க வேண்டிய ஒரு பேச்சாளர் வரவில்லை என்பதால், எங்களது தமிழாசிரியர் இரட்சண்யதாசன் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். பாப்பையாவின் பட்டிமன்றத்தில் முதன்முதலாக ஒரு பேச்சாளராகப் பங்கேற்றேன்.

தலைப்பு: “ஏசு உருவாக்கியது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட்சியா?”

சமயப் புரட்சிக்கு அணித் தலைவராக புனிதஜோசப் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சாமிமுத்து அவர்கள் பேசினார். சமுதாயப் புரட்சிக்கு ஆதரவாக நான் பேசினேன். பதற்றமும் மகிழ்வும் கலந்த உணர்வில் பேசத் தொடங்கினேன்.

“நடு இடத்தை நல்லிடமாக வகிக்கும் பேராசிரியர் ஐயா பாலமன் சாப்பையா அவர்களை…” என்று உளறிவிட்டேன். அவரும், “என்னையா சர்ச்சுலே எனக்கு ஞானஸ்தானம் கொடுத்து, புதுப்பெயர் வச்சுட்டியே?’’ என்று இடைச்செருகல் செய்தார். மக்கள் பலத்த சிரிப்பும் கைதட்டலும் கொடுத்தனர். எனக்கு வியர்த்து கொட்டி நடுக்கம் இன்னும் அதிகமானது. அவர், “பயப்படாத ராசா, பேசு!” என்று உற்சாகமாக வெளிப்படுத்தினார். நான் அப்போது அருட்பணி சேகர் அவர்கள் எழுதி இசைமைத்து, பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய ஒரு பாடலை தலைப்புக்கேற்றபடி இசையுடன் பாடினேன்.

“எங்கே இறைவா இருக்கின்றாய்?

ஏழை மக்கள் குடிசையிலே,

நிதம் இறந்திடும் வறியோர் கைகளிலே,

வீங்கிய கண்ணீர் வழிகளிலே,

நிதம் விம்மி சிதறும் அழுகையிலே,

பசியின் பிடியில் இறைவன் இருக்கின்றான்.”

ஏழைகளையும், புறக்கணிக்கப்பட்ட-வர்களையும் தேடிச் சென்று சமூக விடுதலை தந்தார் என்று, இசையுடன் கலந்து பேசினேன்.

ஆனாலும் சரியாகப் பேசவில்லை என்ற குற்ற உணர்வு எனக்கு. இரவு உணவு உண்ணும்போது, பாப்பையா என்னை முதுகில் தட்டிக்கொடுத்து, “பேச்சுடன் பாட்டைக் கலந்து பேசு. நீ வெற்றி பெறுவாய்” என்று எனக்குப் புதிய பாதை வகுத்துத் தந்தார்.

அதுபோல, நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் விழாவில், “கண்ணதாசன் பாடல்களை விஞ்சி நிற்பது காதலா? சமூக நலமா?” என்ற தலைப்பில், ஒரு பேச்சாளர் வரவில்லை என்பதால், காதல் பாடல்கள் அணியில் பேசினேன்.

சொல்விளங்கும் பெருமாள், சக்திபெருமாள் ஆகியோர் அணித் தலைவர்களாக இருந்தனர்.

கண்ணதாசனின் காதல் பாடல்களை இலக்கியத்தோடு ஒப்பிட்டு, இசையுடன் பாடினேன்.

ராமனின் அழகைக் கம்பன் வர்ணிக்கும்போது,

“வெய்யோன் ஒளி தன் மேனியில் விரிசோதியில் மறைய, ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்” என்று சொல்வார். இந்த ஐயோ என்ற சொல்லை, கண்ணதாசன் பாடல்களில் அழகாகப் பயன்படுத்தியுள்ளார்.

“அன்னப் பொடிநடை முன்னும் பின்னும் ஐயோ, ஐயோ என்றது;

வண்ணக்கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ, பொய்யோ என்றது

மூடித் திறந்த இமை இரண்டும் பார், பார் என்றது,

முந்தானை காற்றில் ஆடி வா, வா என்றது,

ஆடிக் கிடந்த கால்கள் ரெண்டும் நில், நில் என்றன,

ஆசை மட்டும் வாய் திறந்து சொல், சொல் என்றது” என்று இசையுடன் பாடினேன்.

மக்களின் ஆரவாரத்தைப் பார்த்து, “அருமை தம்பி, அருமை!” என்றார்.

இலக்கியக் காதல் பாத்திரங்களை கண்ணதாசன் காதல் பாடல்களில் வரிசைப்படுத்தியுள்ளார்.

“ஆலய மணி” படத்தில்

“கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?

காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?

அம்பிகாபதி அணைத்த அமராவதி

சென்ற பின்பு பாவலருக்கு நீயே கதி,

நீயே கதி”

என்று பாடினேன். பட்டிமன்றம் முடிந்தவுடன், மக்கள் அனைவரும் என்னைப் பார்த்து சில பாடல்கள் பாடச் சொன்னார்கள். ஐயா, அனுமதியுடன் சில பாடல்களைப் பாடினேன். என்னை மனமார வாழ்த்தி மகிழ்ந்தார்.

அதன் பிறகு பல பட்டிமன்றங்களில் அவருடன் அணியில் பேச்சாளராக என்னை அழைத்து, என் பேச்சை ரசித்து உற்சாக படுத்தினார்.

மேடைக்கு என்று இருந்த, அந்த அலங்காரத் தமிழை எளிமையாக்கி மக்கள் மொழியில் பேசினார். மதுரை மண்ணின் அந்த அழகான தமிழை மேடையேற்றினார்: “என்ன செய்ய அவிங்க சொல்றாங்கள்ளே…”

அவர் ஆரம்பக் காலத்தில் இதற்குக் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார். ஆனால், அதுவே பின்னாளில் பலருக்கு மேடைத் தமிழாக மாறிவிட்டது.

சாலமன்-பாப்பையா

தலைப்புகளில் வாழ்வியல், குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து பேசிய அவரை இன்றும் மக்கள் மறக்காமல் நினைவுகூர்கிறார்கள். எளிமையான உடை, சிரித்துக்கொண்டே பேசுவது, இடையில் நகைச்சுவையாகப் பேசும் பாணி — இவை அனைத்தும் அவரின் சிறப்புகளாகும்.

நான் ஒரு முறை அவரைப் பாராட்டும்போது, “வெள்ளை ஆடையும், வெள்ளை மனமும் கொண்டு நடுவராக வருபவர்” என்று சொன்னேன். அதற்கு அவர் உடனே என்னிடம், “நான் கருப்பு உடையில் வந்தால் என்ன ஆகும்? இரவில் எருமை மாடு மேய்வது போல இருக்குமே!” என்று நகைச்சுவையாகச் சொன்னார். மக்களை சிரிக்க வைப்பதும், சிந்திக்க வைப்பதும் அவருடைய தனிச்சிறப்பு.

மக்களின் ஆரவாரச் சிரிப்புடன், “தாயா தாரமா? திருமணம் இன்பத்தில் தொடக்கமா? துன்பத்தின் தொடக்கமா?, மகனா? மகளா?, தனிக்குடும்பமா? கூட்டுக்குடும்பமா?, திருக்குறளின் இன்பத்துப்பால் இக்காலத்திற்கும் பொருந்துமா? பொருந்தாதா?”

என்ற தலைப்புகளில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நான் பங்கேற்றுப் பேசிய அனுபவங்கள் மறக்க முடியாதவை.

இரவு நேர வகுப்பறைகளாகப் பட்டிமன்றத்தை மாற்றியவர். அறிவியல் பூர்வமான கற்பித்தலை வகுத்தவர். புரிந்துகொள்ளக்

கூடியவற்றிலிருந்து புரிந்துகொள்ளச் சிரமமான கருத்துகளை நோக்கி, படிப்படியாக மக்களை அழைத்துச் செல்வார்.

அவர் ஒரு கிறிஸ்துவராக இருந்தாலும் , அனைத்து மதங்களையும் மதிப்பவராகவும் இருந்தார். எந்தக் கோயிலில் அவருக்கு மரியாதை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்; விபூதி குங்குமம் அணிந்து கொள்வார் அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக அவர் விளங்கினார்.

சமீபத்தில் ஒரு விழாவில், தற்போதைய அரசைப் பற்றி அவர் கூறிய கருத்துகளால், அவருக்கு அரசு மரியாதை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நான் அமைச்சர்களிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஊடகங்கள் மூலமாகவும் பேசி, அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு நன்றியும் தெரிவித்தேன். தமிழுக்கு அவர் செய்த தொண்டுக்காக இந்த முயற்சியை அனைவரும் மேற்கொண்டோம்.

அவருடைய இறுதிச்சடங்கில், பேச்சாளர் திருவாரூர் சண்முகவேல் தொடங்கி, பல மூத்த பேச்சாளர்கள் முதல் இளம் பேச்சாளர்கள் மதுரை முத்து, ஈரோடு மகேஷ் உட்பட பலரும் பங்கெடுத்தனர். இது அவர் பட்டிமன்ற உலகிற்கும், தமிழுக்கும் ஆற்றிய மாபெரும் தொண்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram