கட்டுரை

மேடையில் வீசும் நகைச்சுவைப் பூங்காற்று!

திண்டுக்கல் லியோனி

வாழ்க்கையில் எண்ணற்ற பிரச்னைகள் ஆயுதங்களாக நம்மைத் தாக்குகையில் அவற்றை எதிர் கொள்ளும் கேடயமாக இருப்பது நகைச்சுவை உணர்வு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் பிரச்னைகளை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுகிறார்கள்.

என் வாழ்க்கையில் நடந்த பலஅனுபவங்களை “வளர்ந்த கதை சொல்லவா” என்ற நூலில் எழுதியிருக்கிறேன். அதில் சில நகைச்சுவை அனுபவங்களை வாசகர்களுக்காக இங்கே புரட்டிப்பார்க்கிறேன்.

எனது தந்தை இன்னாசி ஒரு சிறந்த நகைச்சுவையாளர். நான் படித்த திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அவர் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். அவரிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருந்தது. குடும்பத்தில் நடந்த சாதாரண நிகழ்வுகள்கூட அவருடைய பேச்சால் சிரிப்புக்குரிய சம்பவங்களாக மாறிவிடும்.

எனது தங்கைக்கு அடிக்கடி ஆடைகள் வாங்கித் தருவார். ஆனால், எனது டவுசர் கிழிந்துபோனாலும்கூட வருடத்திற்கு ஒருமுறை கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதுதான் எனக்கு ஆடை வாங்கித் தருவார். ஒருநாள் பொறுக்க முடியாமல், “எனக்கு அடுத்துப் பிறந்த தங்கச்சிக்கு அடிக்கடி ஆடை வாங்கித் தருகிறீர்கள். எனக்கு மட்டும் ஏன் வாங்கித் தருவதில்லை?” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, “ஆம்பளப் பையன் கோமணத்தைக் கூட கட்டிக்கிட்டுப் போகலாம்டா... ஆனா, பொம்பளப் புள்ள போகமுடியுமா?” என்று கேட்டார். நான் விடுவேனா?

“நீங்களும் ஆம்பளைதானே! ஒரு நாள் நீங்களும் கோமணம் கட்டிக்கிட்டு ஸ்கூலுக்குப் போங்க, நான், “வருஷம் முழுவதும் கோமணத்தோட போறேன்!” என்று பதிலடி கொடுத்தேன்.

உடனே, “நம்ம போட்டியை தனியாக ராத்திரியில் வச்சுக்கலாமே!” என்று சொல்லிச் சமாளித்தார். குடும்பமே சிரித்துமகிழ்ந்தோம்.

இப்படியாக, வீட்டில் நடந்த சாதாரண உரையாடல்களே எனக்கு நகைச்சுவையின் ஆரம்பப் பாடங்களாக அமைந்தன.

அம்மாவின் சாபம்… எனக்குக் கிடைத்த வரம்!

எங்கள் குடும்பத்தில் மொத்தம் பத்து பிள்ளைகள். நான் மூன்றாவது பையன். குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை எங்கள் அப்பா மீறியதால் பிறந்த குழந்தைதான் நான் என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. எங்கள் வீட்டில் மாலை நேரத்தில் ஒரு வழக்கம் இருந்தது. என் மூத்த அண்ணன், இரண்டாவது அண்ணன், நான். மூவரையும் ஜன்னலருகே வரிசையாக அமரவைத்து, அம்மா உருண்டைச் சோறு ஊட்டுவார்.

நான் எப்போதும் ஓரத்தில்தான் அமர்ந்திருப்பேன். ஆனால், எனக்கு மட்டும் நடுவில் அமர வேண்டும் என்ற ஆசை. இரண்டாவது அண்ணன் இருக்கும் இடத்தில் அமர வேண்டும் என்று அடம்பிடித்து அழுவேன்.

ஒருநாள் என் தொல்லை தாங்க முடியாமல், அம்மா கோபத்துடன் என்னை நடுவில் அமரவைத்து, “வாழ்நாள் முழுவதும் நீ நடுவில்தான்டா உட்கார்ந்திருப்பே!” என்று சொன்னார். அது அம்மாவின் கோபத்தில் வந்த வார்த்தை. ஆனால், அந்த வார்த்தை என் வாழ்க்கையில் எவ்வளவு பொருத்தமாக அமைந்துவிட்டது தெரியுமா? சுமார் நாற்பது ஆண்டுகளாகப் பட்டிமன்றங்களில் நடுவராக நடுவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.

மைக்கோடு அலையப்போகும் பையன்

சிறுவயதில் ஒருமுறை நான் காணாமல் போய்விட்டேன். வீட்டில் எல்லோரும் என்னைத் தேடினார்கள். கடைசியில், மைக் செட் போடும் இடத்தில் என்னைக் கண்டுபிடித்தார்கள். அதைப் பார்த்த என் தந்தை, “வாழ்நாள் முழுவதும் மைக்கோடதான்டா அலையப் போறே” என்றார். அது ஒரு சாதாரணமான கிண்டல். ஆனால், பிற்காலத்தில் அதுவும் பலித்துவிட்டது. மேடைகள், பட்டிமன்றங்கள், பேச்சு நிகழ்ச்சிகள் என்று என் வாழ்க்கையின் பெரும்பகுதி மைக்கின் முன்னாலேயே கழிந்தது.

குற்றாலம் என்ற ஆசிரியர்!

நான் படித்த பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பட்டப்பெயர் வைப்பதும், அவர்களைப் பற்றிய வேடிக்கையான சம்பவங்களைப் பேசுவதும் மாணவர்களிடையே வழக்கமாக இருந்தது.

எங்கள் ஆசிரியர்களுக்கு நெஞ்சிருக்கும் வரை, ‘குற்றாலம்’ என்று பட்டப் பெயர்கள் வைத்திருந்தோம். ஒருவர் சிவாஜி கணேசனைப் போல இருந்ததால் அந்தப் பெயர் வந்ததல்ல. அவர் மார்பு வரை பேண்ட் அணிந்து பெல்ட் போட்டிருப்பார். அதனால் அவருக்கு நெஞ்சிருக்கும் வரை என்று பெயர். இன்னொருவர் பாடம் நடத்தும்போது வாயிலிருந்து எச்சில் சாரல் போலத் தெறிக்கும். அதனால்தான் அவருக்குக் ‘குற்றாலம்’ என்ற பெயர் பொருத்தமாக அமைந்தது.

ஆசிரியர்களின் குணாதிசயங்களை மாணவர்கள் கவனித்து, அவற்றை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் திறன் பள்ளிப் பருவத்திலேயே என்னிடம் வளர்ந்தது எனலாமா?

திரௌபதியின் சேலை

நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

மாணவர்களைக் கொண்டு மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி சபதம் காட்சியை நாடகமாக நடத்தத் திட்டமிட்டேன்.

ஒரு மாணவனுக்குப் பெண்கள் அணியும் நீளமான சேலையை அணிவித்துத் திரௌபதியாக நடிக்கச் செய்தேன். மற்றொருவனுக்கு மாணவனுக்குத் துச்சாதனன் வேடம். துச்சாதனன், சேலையை இழுப்பது போல் நடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.

ஆனால், அந்த இரண்டு மாணவர்களும் நாடகத்தில் ஏற்றிருந்த பாத்திரங்களை மனதில் முழுவதுமாக ஏற்றிக்கொண்டு விட்டார்கள்போல, துச்சாதனனாக நடித்த மாணவன் சேலையை முழுவதுமாக உருவிவிட்டான்! திரௌபதியாக நடித்த மாணவன் டவுசரோடு மேடையில்!

அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. மாணவர்கள் கூச்சலிட்டுச் சிரித்தார்கள். அப்போது டவுசரோடு நின்ற மாணவன் உடனே ஒரு வசனம் பேசினான்:

“கண்ணா! அன்று பாஞ்சாலிக்குச் சேலையைக் கொடுத்து மானத்தைக் காப்பாற்றினாய். இன்று எனக்குத் டவுசரைக் கொடுத்து மானத்தைக் காப்பாற்றினாய்! கண்ணா, You are great!”

அவ்வளவுதான்! அரங்கமே மீண்டும் சிரிப்பில் மூழ்கியது.

இறந்த ரசிகரின் கடைசி ஆசை!

அன்று சனிக்கிழமை. பள்ளிக்கு விடுமுறை. நான் திண்டுக்கல் ஹவுசிங்போர்டு வீட்டில் குடியிருந்தேன். காலை பத்து மணி அளவில் புதுக்கோட்டையிலிருந்து ஐந்து பேர் காரில் என் வீட்டுக்கு வந்தார்கள்.

“இன்று மாலை நான்கு மணிக்குப் புதுக்கோட்டையில் பட்டிமன்றம் நடத்த வேண்டும். உடனே புறப்படுங்கள்!” என்றார்கள்.

நிகழ்ச்சிக்கு இப்படி அவசரப்படுத்தினாலும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்க கொண்டேன். உடனே என் குழுவினரான வெண்மணி, மூரா, முல்லை, நடுவரசு, மாரிமுத்து ஆகியோரை வரவழைத்துப் புறப்பட்டோம். கந்தர்வகோட்டை அருகிலிருந்த ஒரு கிராமத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள்.

அங்கே ஒரு வீட்டின் முன்பு பந்தல் போடப்பட்டிருந்தது. தேவராசு என்ற பெரியவர் இறந்து போயிருந்தார். அவரது உடல் பந்தலில் நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.

அருகில் பட்டிமன்றம் நடத்துவதற்காக மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இறந்த வீட்டில் பட்டிமன்றமா?

தேவராசு என் மீது மிகுந்த அன்பும் பற்றும்கொண்ட மானசீக ரசிகர். தான் இறந்தபிறகு, லியோனி பட்டிமன்றம் நடத்தி, அனைவரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியுடன் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் எழுதி வைத்திருந்தாராம்.

அந்த ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காகத்தான் எங்களை அவசரமாக அழைத்திருந்தார்கள்.

இறந்த ரசிகரின் கடைசி விருப்பத்திற்காக, எழவு வீட்டில் பட்டிமன்றம் நடத்திய ஒரே நடுவர் நானாகத்தான் இருப்பேன்!

சால்வைக்கே சால்வை போட்டவர்!

சூலூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசினேன். அப்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரைச் சந்திக்க வரும் கட்சித் தொண்டர்கள் சால்வை அணிவிப்பதற்குப் பதிலாகப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவ்வாறு பெறப்பட்ட இரண்டு லட்சம் புத்தகங்களைப் பத்து நூலகங்களுக்கு வழங்கினார். இப்படியொரு சீரிய சிந்தனையுடன் அறிவுறுத்திய நம் தலைவர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்” என்றுகூறினேன்.

உடனே மேடையில் இருந்த ஒருவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை! “இந்தக் கருத்தைக் கூறிய அண்ணன் லியோனி அவர்களுக்கு இந்தச் சால்வையை அணிவிக்கிறேன்!” என்று சொல்லி எனக்குச் சால்வை அணிவித்தார். கூட்டத்தைப் பார்த்தேன். இந்த முரணான சம்பவத்தைப் பார்த்து கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

வங்கி ஊழியர் கோபம்!

வங்கி ஊழியர்கள் பங்கேற்ற ஒரு கூட்டம். வங்கியில் பணியாற்றுபவர்கள் ஏன் சில நேரங்களில் கோபக்காரர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதற்கான காரணங்களை நகைச்சுவையாக எடுத்துரைத்தேன்.

“வங்கியில் பணியாற்றுபவர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருப்பார்கள். 90,91 என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து, ‘ரெஸ்ட்ரூம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்பார். உடனே பணத்தை எண்ணும் எண்ணிக்கை தவறிவிடும். மீண்டும் ஆரம்பத்திலிருந்து எண்ண வேண்டியிருக்கும். அப்போது அவர்களுக்கு ஏற்படும் டென்ஷனை நினைத்துப் பாருங்கள்!

கோடிக்கணக்கான ரூபாயைக் கையாளுவார்கள். ஆனால், அதில் ஒரு ரூபாய்கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஸ்வீட் கடையில் வேலை பார்க்கும் ஒரு சர்க்கரை நோயாளியின் நிலைமையைப் போலத்தான்” என்றேன். இதைக் கேட்டதும் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது எனச் சொல்லவும் வேண்டுமோ?

நிறைவாக… இந்தச் சம்பவங்களைத் திரும்பிப் பார்க்கும் போது, நகைச்சுவை என்பது தனியாகக் கற்றுக்க கொள்ளும் கலை மட்டுமல்ல என்பது புரிகிறது. குடும்பத்தில் கேட்ட பேச்சுகள், பள்ளியில் பார்த்த நிகழ்வுகள், ஆசிரியர்களின் குணங்கள், மாணவர்களின் குறும்புகள், ரசிகர்களின் அன்பு, மேடைகளில் கிடைத்த அனுபவங்கள் என ஒவ்வொன்றும் என்னைச் செதுக்கியிருக்கின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram