மீளுரு நாடகம் 
கட்டுரை

‘நாங்க வந்துட்டோம்; போரை நிறுத்துங்கடா!’

ந.முருகேசபாண்டியன்

மதுரை நகரில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட முருகபூபதியின் போருக்கு எதிரான ‘மீளுரு’ என்ற நாடகத்தைப் பார்த்திடும் வாய்ப்புக் கிடைத்தது. திறந்தவெளியில் திரைச்சீலைகளின் பின்புலத்தில் காட்சிப் படிமங்கள்மூலம் நடைபெற்ற நாடகம், பார்வையாளரிடம் முடிவற்ற கேள்விகளை எழுப்பியது. வெறுமனே பொழுதுபோக்கு என்று கடந்துவிட இயலாமல் கடுங்கூத்தாக இன்றளவும் நாடகம் துரத்திக் கொண்டிருக்கிறது. மீளூரு நாடகப் பிரதியை எழுதி, இயக்கிய ச. முருகபூபதியின் போர் பற்றிய அவதானிப்பு உருவாக்கியுள்ள கேள்விகள் அரசியல் பின்புலமுடையவை. பள்ளிக்கூடத்தில் வரலாறு பாடப் புத்தகத்தில் மன்னர்களும் அரசியல்ரீதியிலான போர்களும் என்று எளிதில் கடந்துபோன விஷயங்களைச் சமூக அக்கறையுடன் மாறுபட்ட கோணத்தில் நாடகமாக்கியதில் இயக்குநரின் சமூக அக்கறை, வெளிப்பட்டுள்ளது. நடிகர்களின் உடல் மொழியும் உலுக்குகின்ற குரலும் இசைந்திட நிகழ்த்தப்பட்ட காட்சிகள், மனித இருப்பின் அவலத்தை முகத்தில் அறைந்ததுபோல காட்சிப்படுத்தின. ஏன் மனிதர்கள் கொலைவெறியுடன் சக மனிதர்களைப் போர் என்ற பெயரில் கொன்று குவித்தனர் என்று பார்வையாளரிடம் நாடகம், விவாதத்தை ஏற்படுத்தியது. நாடகக் காட்சிகளில் மங்கலான ஒளிக்கற்றையில் உயிர்த்தெழுந்த பிம்பங்களான நடிகநடிகையரின் உடல்களில் இருந்து வெளிப்பட்ட வாதைகள், வெளியெங்கும் மிதக்கின்றன.

காலந்தோறும் மனிதர்களுக்கும் போருக்குமான நெருக்கமான பிணைப்பைக் கண்டறிந்திட வேண்டியுள்ளது. போரையும் போரின் கொடிய விளைவுகளையும் நேரில் கண்டிராத/ அனுபவிக்காத நமக்குப் போர் வெறும் சொல்தான். ஏதோ ஒரு நாட்டில் எங்கோ ஓரிடத்தில் நடக்கிற போர் என்று சாதாரணமாகக் கடந்து போகிற விஷயமல்ல என்று நாடகாசிரியர் பதிவாக்கியுள்ளளார். போர் என்ற சொல்லின் பின்னர் புதைந்திருக்கிற அரசியலையும் வரலாற்றில் போர் விளைவித்துள்ள பேரழிவுகளையும் பேரவலத்துடன் காட்சிப்படுத்தியுள்ள இயக்குநரின் நோக்கம் முழுமையடைந்துள்ளது.

உலகில் வாழ்கின்ற எந்தவொரு உயிரினங்களும் மனிதர்களைப்போல லட்சக்கணக்கில் கூட்டமாக ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வாழ்கிற வழக்கமில்லை. அதேவேளையில் அவை இடம், உணவு போன்றவற்றுக்காக எதிர்க் குழுவினரைக் கூட்டக்கொலைகள் செய்வதும் இல்லை. பண்டைக்காலத்தில் மனிதர்கள் இனக்குழுச் சமூகமாகக் கூடி வாழ்ந்தபோது எதிர் இனக்குழுவுடன் ஏற்பட்ட மோதல்கள், போர் என்ற பெயரில் வீரயுகப் பாடல்களாகப் பதிவாகியுள்ளன. அகத்தில் பெண்ணுடலையும் புறத்தில் நிலத்தையும் துய்த்திட முயன்ற ஆண்களின் அதிகாரம்தான் போர்களுக்கான அடிப்படை. அண்டை நாடுகளை எதிரிகளாகக் கருதி, ஆக்கிரமிக்க முயலுகிற ஆட்சியாளர்களுக்குக் கொல்லப்படும் மனித உடல்கள் ஒருபொருட்டல்ல. மனிதகுல வரலாறு என்பது முழுக்க ரத்தம் சிந்துகின்ற அரசியல்தான். உலகமெங்கும் இதுவரை நடத்தப்பட்ட போர்களினால் நிகழ்ந்த கூட்டக்கொலைகளும் வன்புணர்வுகளும் சூறையாடல்களும் அளவற்றவை. ஜெர்மனியில் பாசிஸ்ட்களின் சித்ரவதைக்கூடங்களில் கொல்லப்பட்ட யூதர்களான ஆண்கள், பெண்கள் எண்ணிக்கைக்குக் கணக்கேது? யுத்தத்தின்போது இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க நுழைகின்ற ராணுவத்தினரினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணுடல்கள் அடைந்த வதைகள் கொடூரமானவை. ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட வீர்யமான கொலைகார ஆயுதங்களுடன் இன்று வல்லரசு நாடுகள் போருக்காகக் காத்திருக்கின்றன; சகமனிதர்களைக் கொல்வதற்காக உயிரியல் யுத்தம் என்ற பெயரில் பில்லியன்கணக்கில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. பாலஸ்தீனம், ஈழம் தொடங்கி அவ்வப்போது நடைபெறுகின்ற யுத்தங்களினால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும்தான். சர்வாதிகாரிகளான ஆண்கள் கட்டமைக்கின்ற அதிகாரத்தின் விளைவான போர்களுக்கு எதிராகப் படைப்பாளர்கள் காத்திரமான படைப்புகள்மூலம் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றனர். இலக்கியப் படைப்புகளும் நிகழ்த்துக் கலைகளும் போருக்கு எதிரான குரலை உலகமெங்கும் ஆவேசத்துடன் பதிவாக்கியுள்ளன. தமிழைப் பொறுத்தவரையில் போர் பற்றிய கலை, இலக்கியப் படைப்புகள் மிகவும் குறைவு. முருகபூபதி, அடர்ந்த வனத்துக்குள் வாழ்கின்ற பழங்குடியினரின் வாழ்க்கையைச் சிதலமாக்குகிற போர் என்ற கருத்தியலை முன்வைத்துக் கூத்து வடிவில் காட்சிப்படுத்தியுள்ள நாடகக் காட்சிகள் சமகால அரசியலைப் பேசுகின்றன.

நாடகத்தின் தொடக்கத்தில் கானகத்தின் பாறைக்குள்ளிருந்து மரத்தைத் தழுவியிருக்கும் குள்ளப் பெண், விரிந்த கூந்தலுடன் குலவை ஒலியுடன் கையில் சாவிக்கொத்துடன் அரங்கினுள் நுழைகிறாள். அவளுக்குப் பின்னர் அணங்குகளை நினைவூட்டுகிற மூகமூடி அணிந்த கூட்டம். கொதவளையில் தோட்டாக்கள் குத்தித் துளைத்திட துடிக்கிற கதைசொல்லிக்குத் தண்ணீர் கொண்டு வந்த சாவி எனப் பெண் உரத்த குரலில் ஓலமிடுகிறாள். அவள் யுத்தத்தினால் குண்டு துளைக்கப்பட்ட சால்வையை அவிழ்த்துப் போர்க்காயம் படிந்த நிலத்தைத் துடைத்து முனகல்களுடன் வெளியேறுகிறாள். யுத்தத்தின் முதல் பலி பெண் தான் என்று தொடங்கிடும் நாடகத்தின் காட்சிப் படிமம், பார்வையாளரைத் தொந்தரவு செய்கிறது.

பழங்குடியினரான ஆணும் பெண்ணுமான வனவாசிகள் தங்களுடைய வனத்தின் இசைக் கருவிகளையும் மர உரல்களையும் விதைகளையும் கொண்டு இசையுடன் சடங்கியல் நடனமாடுகின்றனர். நாடகம் முழுவதும் இசைக்கப்படும் பழங்குடியினரின் இசைக்கருவிகளில் இருந்து பீறிட்டெழும் இசை, வனவாசிகளின் ஆன்மாவாக வெளியெங்கும் நிரம்பி வழிகிறது. அடர்ந்த வனத்தின் மரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றுடன் ஒத்திசைந்து வாழ்கின்ற வனவாசிகள் மூங்கில் இசைக் கருவிகள், தோல் வாத்தியக் கருவிகளுடன் தங்களுடைய இருப்பை அர்த்தப்படுத்தியவாறு இருண்ட வனத்திற்குள் மறைகின்றனர். வனமும் மனிதர்களும் பிரிக்கவியலாதவாறு பிணைந்திருப்பதை நாடகக் காட்சிகள் காட்சிப்படுத்துகின்றன. காட்டுக்குள் மனிதர்கள் வாழும் குடியிருப்பையொட்டி வேங்கை இயல்பாக நடந்து செல்கின்ற குறிஞ்சி நிலக் காட்சியைப் பதிவாக்கியுள்ள சங்கப் பாடல் வரிகள் என் நினைவிலாடுகின்றன.

வன உயிர்களை மூதாக்கள் என்று கருதுகின்ற வனவாசிகள் வாழ்கின்ற காட்டுக்குள்ளே அதிகாரவர்க்கத்தினர் தொடங்கிய போரைக் கண்டித்து வனவாசி குரலெழுப்புகிறான். இரண்டாம் உலகப் போரின்போது உலகமே தன்னுடைய காலுக்குக் கீழ் என்று வதை முகாம்களைத் திறந்த சர்வாதிகாரி ஹிட்லரின் பேராசைக்குப் பலியான சைபீரியா காட்டுக்குள்ளே வாழ்ந்த ஷாமன்னு பழங்குடியினரின் துயரம் அளவற்றது. இரண்டாம் உலகப் போரில் கூண்டோடு கொல்லப்பட்ட ஷாமன் வனவாசிகளின் அவலக்குரல்கள் இன்றும் வனமெங்கும் ஒலிக்கிறதென முருகபூபதி சித்திரிக்கிற காட்சிகளும் உடல்களின் வெளிப்பாடுகளும் முக்கியமானவை. உலகில் எந்தவொரு விலங்கும் பிரயோகிக்காத வன்முறையைக் குற்றமனம் இல்லாமல் இயல்பாகச் செய்கின்ற வன்முறையாளர்களின் கொடுங்கோன்மையை நாடகம் வலியுடன் பதிவாக்கியுள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல பறவை, விலங்கு, மரம், செடி, புல் போன்ற உயிரினங்களும் பீரங்கிக் குண்டுகளால் நாசமாகின. அன்பின் கருணை மிக்க வனவாசிகளின் குரல்கள் போர்க் காதுகளுக்குக் கேட்கவில்லை. மூதாவின் ஆலோசனையின்பாடி வனவாசிகள் புதிய மூகமூடிகள் அணிந்து குண்டுச் சத்தத்துக்கு எதிராகக் கிள்ர்ந்தெழுகின்றனர். போர்த் தளபதியின் ஆணைக்கேற்ப ராணுவத்தினர் ஷாமன் பழங்குடியினரைக் கூட்டமாகச் சுட்டுக் கொல்கின்றனர். இசைக்கருவிகளை ஆயுதமாக ஏந்திய ஷாமன் வனவாசிகள், ரத்தக்கறை படிந்த பாறைகள்மீது நின்று வாசிக்கத் தொடங்கினர். மூதாவை வணங்கிய வனவாசிகள் இசைக்குள் அடங்கி வனத்தின் இருளுக்குள் மறைந்தனர். மனித உயிர்களைக் கொன்று குவிக்கிற போர்களைத் தேசத்தின் பெயரில் நடத்திட ஆணை பிறப்பிக்கின்ற சர்வாதிகாரிகளின் கொடூர வேட்டைக்கு முதலில் பலியாவது அப்பாவி மக்கள்தான். சைபீரியா காட்டையொட்டி வாழ்ந்த பழங்குடியினரைக்கூடப் போர் விட்டு வைக்காமல் உயிர்களைப் பலி வாங்கிடும் சூழலில், மாநகரங்களில் சொகுசாக வாழ்கின்றவர்கள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா? தேசம், இனம், மொழி, மதம் போன்ற பெயர்களில் விதைக்கப்படும் வெறுப்பு, கசப்பு போன்றவை பல்கிப் பெருகி, காலப்போக்கில் வன்முறையில் தோய்ந்து ரத்த வெள்ளம் தெருக்களில் பாய்ந்தோடும். அப்பொழுது நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை முரட்டு ஆடைகளுடன் மூகமூடி அணிந்து வனத்தின் வாத்தியக் கருவிகளை இசைத்துத் தாவிக் குதிக்கிற நடிகர்கள் எழுப்புகின்றனர்.

நாடக அரங்கில் எல்லைக்கோடு போல நீண்ட குறுகலான செவ்வகத் துணி விரிக்கப்பட்டுள்ளது. நடுவில் நீண்டிருக்கிற துணியின் இருபுறமும் பெரிய சாவியைத் தூக்கியவாறு வந்து அமர்ந்திடும் நடிகநடிகையர் போர் ஏற்படுத்திய துயரத்தில் தத்தளிக்கின்றனர். காட்சியின் படிமத்திற்கு ஏற்றவாறு புல்லாங்குழல்களின் இசையும் மணிகளின் ஒலியும் எங்கும் பரவிட கூட்டத்தினர் வேதனையுடன் முனங்குகின்றனர். எதிரே விரைத்திருக்கிற சுவருக்கு அப்பால் இருக்கிற மனிதர்களுடன் பேசுவதான பாவனையில் விரிந்திடும் காட்சித் துணுக்குகள் யுத்தத்தின் வலியைச் சித்திரிக்கின்றன. முருகபூபதியின் நெறியாளுகையில் போரில் கொல்லப்பட்ட மனிதர்களுடான உரையாடல்கள், உயிரோடு இருப்பவர்களின் துயரத்தையும் வேதனையையும் நுணுக்கமாக விவரிக்கின்றன. பால் பேதமற்ற வேறுபட்ட மனிதர்கள் போரின் காரணமாக எதிர்கொண்ட இழப்புகளின் வலியைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரும் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரும் அறமாக விளங்கிடும் தமிழர் வாழ்க்கையில் போரின் விளைவுகளாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாடகக் காட்சிகள், பார்வையாளர்களை யோசிக்கத் தூண்டுகின்றன. நடிகர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து அடைந்த துயர அனுபவங்களின் இறுதியில் நடுவில் இருக்கிற சுவரை உடைத்து எல்லோரும் ஒன்று சேர்கின்றனர். இதுவரை அடிமைத்தளையில் தகர்க்க முடியாமல் இருந்த தடையை மக்கள் உடைத்தனர் என்று இயக்குநர் காட்சிபடுத்துதல், ஒருவகையில் வன்முறைக்கு எதிரானது. போரினால் வீழ்ந்து மரித்துக் கிடந்த உடல்களை இசையினால் எழுப்பி, வனப்பெண்ணுடன் காட்டுக்குள் போய் மறைகின்றனர். வெறுமனே உருக்கமாகத் துயரத்துடன் காட்சிப்படுத்தப்படும் யதார்த்தமான நாடகக் காட்சிகளுக்கு மாற்றாக நடிகநடிகையரின் உடல், குரல், ஓசை, ஒளி, ஆடை மூலம் அரங்கில் நடைபெறுவது நாடகம் என்ற உணர்வை நாடகக் காட்சியாக்கம் உருவாக்குகிறது.

நாடகத்தின் நிறைவில் பெண்கள் “ நாங்க வந்துட்டோம். போர் நிறுத்த முரச இப்ப அடிங்கடா” என்று அணங்குகளாகக் கூடி நின்று இசையுடன் ஆடிப்பாடி உச்ச நிலைக்குப் போகின்றனர். ஒப்பீட்டளவில் போர் பெண்ணுக்கு எதிரானது என்ற கருத்தை வலியுறுத்துகிற காட்சியமைப்பு, இயக்குநரின் படைப்பாக்கத்திற்குச் சான்று. அரங்கில் ஒளி மீண்டும் மங்கலாக ஒளிர்ந்து மறைந்தபோது எங்கும் ஒருவிதமான இறுக்கம் சூழ்ந்திருந்தது. நாடகக் காட்சிகளால் உறைந்திருந்த பார்வையாளர்கள், மெல்லக் கரவொலி எழுப்பினர்.

முத்தமிழ் என்று போற்றப்படுகின்ற தமிழில் இன்று நாடகம் எழுதுதலும் நிகழ்த்துதலும் அருகிக் கொண்டிருக்கின்றன. மின்னணு யுகத்தில் ஸ்மார்ட் அலைபேசியின் தொடுதிரையில் ஒளிர்ந்திடும் காட்சித் துணுக்குகளுக்குள் பலரும் மூழ்கியிருக்கிற சூழலில் மீளூரு நாடகத்தை எழுதி , இயக்கியுள்ள முருகபூபதியின் பணி, நாடக வரலாற்றில் நிலைத்திருக்கும். உடல்களையும் குரல்களையும் முதன்மையாக்கி நாடகத்தில் நடித்த மணல் மகுடி நாடக நிலம் அமைப்பினைச் சார்ந்த நடிகநடிகையரின் நடிப்பு, அற்புதம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram