சிறுகதை, தொடர்கதை, நீதிக்கதை, காதல் கதை சொந்தக் கதை, சோகக் கதை என்று பல கதைகள் நம் வாழ்வில் உண்டு. ஆனால் ஒரு கதையை, உண்மை நிகழ்வை திரைக்கதையாக மாற்றும் திறன் சிலருக்குத்தான் வாய்க்கும். எழுத்து வடிவத்தில் உள்ள நாவல்களை நடிகர்களின் குரலில் நேரடியாக முகபாவங்களுடன் பேச வைக்க வேண்டும்.
அந்த ஆற்றலில் பலர் முத்திரை பதித்துள்ளனர். அவர்களின் திரைக்கதை வசனங்கள் இசைத்தட்டுகளாகவும் புத்தகங்களாகவும் வெளிவந்தன. அவ்வாறான வரலாற்றை படைத்தவர்களின் முதன்மையானவர்கள் கலைஞர் மு கருணாநிதி, திருவாரூர் தங்கராசு, ஆரூர் தாஸ் போன்றவர்கள் எளிய மக்களின் வாழ்வை நல்ல சமூக சிந்தனைகளுடன் முத்திரை பதித்தவர் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்.
எளிமையான காட்சிகளில் சமூக சிந்தனைகளை எடுத்து வைத்திருப்பார். திரைக்கதை, வசனம், இயக்கம் கே பாக்யராஜ் என்று எழுத்து போடும்போது அவர் காட்டும் காட்சிகள் முத்திரை பதித்தவையாக இருக்கும்.
“பவுனு பவுனுதான்” படத்தில் காவடி தூக்கிக் கொண்டு மலையேறும் காட்சியில் நடித்திருப்பார். அதில் அவருக்கு சாமி அருள் வந்து ஆடாமல் இருப்பார். எவ்வளவு சத்தமாக மேளங்கள் வாசித்தாலும் அவருக்கு ஆட்டம் வராமல் விழித்துக் கொண்டிருப்பார். உடனே ஒருவர் பின்பகுதியில் ஒரு ஊசியை வைத்து குத்துவார் வலி தாங்க முடியாமல் பாக்கியராஜ் அலறி ஆடுவார். உடனே அருள் வந்து விட்டது என்று அனைவரும் கும்பிடுவர். அந்த இடத்தில் தனது பெயரை கதை திரைக்கதை வசனம் இயக்கம் கே பாக்யராஜ் என்று போடுவார்.
இதேபோல் “சுந்தரகாண்டம்” திரைப்படத்தில் நிறைய பாரம் ஏற்றிய வண்டியை ஒருவர் இழுத்துக்கொண்டு முடியாமல் ஒருவர் சாலையில் செல்வார். அவருக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவர் இழுத்து உதவி செய்வார். வண்டி பின்னோக்கி இறங்கிவிடும். இவர் வண்டியின் முற்பகுதியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது தனது பெயரைப் போடுவார்.
“தாவணி கனவுகள்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். தேசிய கொடியை ஏற்றி அவர் சல்யூட் அடிக்கும் நேரத்தில் ஒருவர் கோவணம் கட்டிக்கொண்டு சாலையில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மணி அடித்துக் கொண்டே பாலும் தெளிதேனும் என்ற பாடலைப் பாடிக்கொண்டு அர்ச்சனை செய்வார். சிவாஜி கணேசன் தனக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சத்தம் போட்டு திட்டுவார். ‘எத்தனை வருஷமா இந்த மணி அடிக்கிற அவரு என்னைக்காவது கேட்டிருக்காரா? சாமி பக்தியோடு தேசபக்தியும் வேண்டும்’ என்று போகிற போக்கில் பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்திருப்பார்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாத்திரத்தின் தேவைக்காக கண்ணாடி போட்ட கதாநாயகர்கள் உண்டு. அனைத்து படங்களிலும் கண்ணாடி போட்டு நடித்த கதாநாயகன், முந்தானை முடிச்சு கனவு காட்சிகளில் ராஜாவாக வரும்போது கூட கண்ணாடி போட்டிருப்பார். கதாநாயகர்களுக்கு குரல் சிங்கம் போல இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் இவரது மூக்கில் பேசும் அந்த மென்மையான கீச்சுக் குரலே இவருடைய சிறப்பாக திறமையானது.
பலதரப்பட்ட நடனங்களை கற்றவர்கள் தான் கதாநாயகர்களாக இருப்பார்கள். ஆனால் உடற்பயிற்சி செய்வதுபோல் அவரது நடன அசைவுகள் மக்களால் பெரும் ரசிக்கப்பட்டது. எந்த தவறும் செய்யாதவர்கள் எல்லோராலும் நல்லவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களகத்தான் இருப்பார்கள். ஆனால் சாதாரண மனிதர்கள் செய்யும் தவறுகளைச் செய்பவராகவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுபவராகவும் பல கதைக்களங்களை அளித்து இருப்பார்.
“மௌன கீதங்கள்” படத்தில் அவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு மனைவிடம் மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே துரத்தப்படுவார் அவருடைய மகனும் அவருக்கும் ஏற்படும் உரையாடல் பாடலில் “அம்மாவும் கோபத்தில் புலி போல ஏன் பாயுது என்று கேட்பார்,
அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான் அடியேனும் அன்னாளில் செய்தேன் அப்பா” என்று வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆவார்.
“இது நம்ம ஆளு” என்ற படத்தில் ஒரு நாவிதர் குடும்பத்தில் பிறந்த பாக்யராஜ் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை தானும் ஒரு பிராமணர் என்று பொய் சொல்லி காதலித்து திருமணம் செய்து கொள்வார். அதனால் இருவருக்கும் ஏற்படும் போராட்டங்களை அழகாக எந்த ஜாதி பிரிவினரும் வேதனைபடாதபடி நாசுக்காக காட்சிகளை எடுத்திருப்பார். இறுதியில் உண்மை தெரிந்தவுடன் கிளைமாக்ஸ் காட்சியில் பிராமண சமூகத்தில் புனிதமாக கருதப்படும் கன்னிகாதானம் என்ற சடங்கினைக் கூறி சாதி மறுப்பு திருமணத்தை ஏற்றுக்கொள்ள செய்திருப்பார்.
‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் பெண் பார்க்கும் படலத்துடன் காட்சிகள் தொடங்கும். பிறகு வரதட்சணை, பல திருமண விஷயங்களில் இருவீட்டாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நின்றுவிடும். பிறகு அந்த ஊரில் உள்ள குஸ்தி வாத்தியாராக நம்பியாரின் துணை கொண்டு பெண் வீட்டை சம்மதிக்க வைப்பார். அதில் “ ஏன் சோக கதையை கேளு தாய்க்குலமே/ ஆமா தாய்க்குலமே அதை கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே” என்று ஊரில் உள்ள பெண்களிடம் தான் முறையிடுவது போன்ற காட்சிகளில் பெண்களின் மனதில் இடம் பிடிப்பார். “தாய்க்குலம்”என்ற வார்த்தையை உருவாக்கியதே அவர்தான்.
“விதி” படத்தில் ஒரு காட்சியில் ஆண்களிடம் பத்தினி தெய்வங்களின் பெயர்களைக் கேட்பார். ஒவ்வொருவரும் கண்ணகி, மாதவி, சீதா என்று பல பெயர்களை கூறுவார்கள் ஒருவர் நளாயினி என்று கூறுவார். பாக்யராஜ் அவர்களிடம் கேட்பார் யாருக்காவது அவர்களது மனைவி பேரை சொல்ல மனசு வந்ததா என்று பெண்களை கவரும் இதுபோன்ற பல கருத்துக்களை படங்களை எடுத்துக் கூறியிருப்பார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் தன் கலை உலக வாரிசு என்று அறிவிப்பு செய்யப்பட்டவர். அதை பயன்படுத்தி அரசியலில் மிகப்பெரிய இடத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் அவரது கவனம் திரையுலகில்தான் இருந்தது!