'வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்’, ‘பாய் விட்டுப் படுத்தா காய் விட்டுப் போயிடுவா’ இப்பிடியெல்லாம் என்னத்தையாச்சும் சொல்லுவானுக.
சிரிச்சுக்கிட்டு இருக்குறதும் நகைச்சுவை உணர்வோட இருக்குறதும் மனச லேசா வச்சிருக்கும்ங்கிறது உண்மைதான். ஆனா, எங்கெங்க சிரிக்கணும்னு ஒரு வெவஸ்த இருக்குல்ல...
என்னயக்கூட, ‘அண்ணென் ஒரே தமாசு, இவரு வந்தாலே ஏரியா கலகலன்னு ஆயிரும்’னு சொல்லி ஏத்திவிட்டுக்கிட்டு இருக்கானுக. உண்மயில, நா இன்னிவர எந்த ஜோக்குமே சொன்னதில்ல. ஏம் பிரச்னயச் சொல்லுவேன். சிரிப்பானுக. எருதின் நோவு காக்கைக்குக் கொண்டாட்டம்ங்கிற கத. அதென்ன கதன்னு அப்பாவியாக் கேக்கக் கூடாது. காளை மாட்டுக்குக் காயம் இருக்கும். அதுல காக்கா வந்து கொத்தும். காயம் இருந்தாத்தான கொத்த முடியும்? அதுதான் கத.
அது மாதிரி நாம வேதனயும் வெப்புறாளமுமாத் திரிஞ்சுக்கிருப்போம். அது பாக்குறவனுக்கு வேடிக்கையாத் தெரியும். நம்ம வேதனய ஆத்திக்க சிரிப்புப் போர்வயப் போத்திக்கிட்டு உலா வருவோம். அந்த நேரத்துல நமக்கு வந்த கஷ்டத்தச் சொன்னாக்கூட, ‘அண்ணெங்கூட ஒரே காமிடி’ன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பானுக.
பக்காவான சினிமா உதாரணம் ஒண்ணு சொல்றேன். கொஞ்சம் பழசுதான். ஊமை விழிகள் படத்துல ‘தோல்வி நிலையென நினைத்தால்’ பாட்டு வரும். ரொம்ப சோகமான வீரமான காட்சி. அப்ப, ‘உரிமை இழந்தோம் உடைமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா’ன்னு ஒரு வரி. சீன்ல அதைப் பாடுறது செந்தில். ஒடம்பெல்லாம் அடிபட்டு ரத்தக் காயமா இருக்கும். ‘இழக்கலாமாஆஆஆ’ன்னு செந்தில் இழுக்க, தியேட்டரே சிரிச்சுச்சு. ‘காமெடி ஆக்டர்தானே இவனுக்கென்ன சோகம்’னு ஒரு நெனப்பு. எப்பிடி இருக்கு பாருங்க.
இதெல்லாம் மனுசத்தனமா?
நம்மளுக்குமே இந்த மாதிரி நடக்குறது உண்டு. அறிஞர் வாழ்வில் அன்றாட நகைச்சுவை மாதிரி அறிஞர் வாழ்வில் அன்றாட அவலம்…
எனக்குச் சம்பிரதாயம் பிடிக்காது. அதுக்காக அதை அடுத்தவங்க மேல ஏத்த மாட்டேன். எனக்கும் தமிழ்தான் மூச்சு அதை அடுத்தவர் தோளில் விடமாட்டேன்ங்கிற மாதிரி. அதனால, போன் அட்டண்ட் பண்ணதும் “எப்டி இருக்கீங்க?”ன்னு கேப்பாங்கல்ல, “நல்லா இருக்கேன்”ன்னு சொல்லங்குள்ள ஆங்காரமாவும் ஓங்காரமாவும் இருமல் வெடிச்சுக் கிளம்பும். ‘கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ’ பாட்டுல எஸ்பிபியத் தாண்டி இருமல். ‘கொள்கொள்… நல்… லொக்லொக்… லாஇருக்… கொள்கொள்… கேன்… கௌகௌக்ர்ர்ர்…’ எதிராளி சிரிப்பாப்புல. அண்ணென் காமிடி பண்றாருன்னு நினைக்கிறாராம்.
ஒரு நாள் பெரிய அப்ஸெட். பேனாவை காதுல செருகியிருந்தேன். பக்கத்து டெஸ்க் பக்கி, “ஆஃபீஸ் ஸ்டேஷனரிய எடுத்துட்டுப் போறீங்களா”ன்னான். “ஏல எம் பேரு ஞாயமா மோகன்தாஸ் கரம்சந்த் ரமேஷ்வைத்யால. என்னயப் பாத்தா இப்பிடிக் கேக்கே?” என்று பொருமும்போதே சிரிச்சான். அன்னிக்கு சாயந்திரம் வண்டிவரைக்கும் போயிட்டு திரும்பவும் அவசரமா ஆஃபீசுக்குள்ள வந்தேன். “என்ன சார் எதையும் மறந்துட்டீங்களா?”ன்னான்.
“ஆமப்பா. கொஞ்சம் எங்கூட வா. நான் ஒண்ணுக்குப் போகணும்.”
“அதுக்கு எதுக்கு என்னயக் கூப்புர்றீங்க?”
“ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சேன். ஆஃபீஸ் சொத்தை நான் வீட்டுக்குக் கொண்டுபோறேன்னு நீ நினைச்சுக்கக் கூடாது இல்ல?”ன்னேன். எவ்வளவு வேதனையில அதைச் சொல்லியிருப்பேன்... அதுக்கும் சிரிக்கிறான் பக்கி.
இதே டாய்லெட்டுல இன்னொரு வேதன. ஆஃபீஸ்ல யாரையோ பாக்க வந்த ஆள், “சார், ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு”ன்னு கேட்டான். கையைக் காமிச்சேன். “வெஸ்டர்ன்?”னான்.
எனக்கும் போகணும் போல இருந்துச்சு. நானும் அவன்கூட நடந்தேன். அவன் பதறிப்போய், “சும்மா காட்டுனீங்கன்னா போதும் சார்”ங்கான். ஏலேய், அதுக்கு மேல என்ன செய்வேன்னு நெனைச்ச?னு நான் கோவப்பட்டாலும் ரெண்டு பேருக்கும் சிரிப்பு வந்துருச்சு. இந்த கண்டிசன் சிரிக்கிறதுக்கு உண்டானதா?
ஆஃபீஸ்லயே நான் ஓடியாடி வேலை பாக்கக்கூடிய ஆளு. விறுவிறுன்னு புயல் மாதிரிப் போயி, ஒரு டீயப் போட்டுட்டு பொகைய ஊதிட்டு சூறாவளி மாதிரி வருவேன். கால்ல அடிபட்டதால கால் தாங்கலா ஒக்காந்திருந்தேன். “எங்கப்பா அட்டண்டர் ஒருத்தனையும் காணம்?”னேன். “என்ன சார் வேணும்?” “கால்ல அடிபட்டிருக்கப்பா. எனக்காகப் போய் ஒரு சிகரெட் குடிச்சுட்டு வரச் சொல்லணும்”னேன். அதுக்கும் சிரிக்கிறானுக. நான் என்ன சொகுசுக்கா ஆள் கேட்டேன். அடிபட்டிருக்கு. வலி. வேதன. நடக்க முடியலைன்னுதானே அட்டண்டரத் தேடுறேன்... இதுல சிரிக்க என்ன இருக்கு? என்னமோ போங்கடா.
போன வாரம் ஆயுதபூசன்னு ஒருத்தன் வம்பிழுத்து என்னை அவங்க ஆஃபீசுக்கு வரவச்சுட்டான். ஏதோ படத்துக்கு மாலையப் போட்டு பொரியுஞ்சுண்டலுங் குடுப்பான்னு பாத்தா பெரிய ஹோமம் ஏற்பாடுல்லாம் பண்ணி வச்சிருக்கான். அரமணிநேரத்துக்குமேல பொறுக்க முடியாம வெளிய போயிட்டேன். ஒடன போனு.
“எங்கண்ணே பொய்ட்டீங்க?”
“பொக ஒத்துவரலப்பா. வெளிய நிக்கேன்.”
“ரெம்ப நேரமாச்சே... அங்க என்ன செய்தீய?”
“சிகரெட் புடிச்சிட்டிருக்கனப்பா.”
இதுக்கும் சிரிக்கான். இதுல சிரிக்க என்ன இருக்குங்கேன்...
இந்த சிகரெட் எளவுல எல்லாமே பெரச்சனதேன். நம்ம ஃப்ரெண்டு ஒருத்தன், லேயவுட் ஆர்ட்டிஸ்ட்டு. நல்ல ஸ்மோக்கரு. கல்யாணம் ஆனதும் பொண்டாட்டி பெரச்சன. குடும்பம், குடிய மட்டுமா கெடுக்கும்? சிகரெட்டையும்தேன் கெடுக்கும். சிகரெட் பிடிச்சாப் பக்கத்துல வரக்கூடாதுன்னுட்டா போலருக்கு. இனி சிகரெட் பிடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கான். ரெண்டு நா கழிச்சு அவன் பேன்ட் தொவைக்க எடுத்துருக்கா புதுப் பொண்டாட்டி. பாக்கெட்ல தீப்பெட்டி.
“சத்தியம் பண்ணுனயேய்யா...” கண்ணுல நெருப்பக் காட்டியிருக்கா.
நம்மாளு சொன்ன பதிலு கிளாஸிக் ரகம். “சிகரெட் பிடிக்க மாட்டேன்னுதான் சத்தியம் பண்ணுனேன். தீப்பெட்டி வச்சுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுனனா?”
என்ன சொல்ல வர்றேன்னா, அடுத்தவங்க சீரியஸாச் சொல்றதையும் ஜோக்கா எடுத்துக்கிட்டு சிரிச்சுத் தொலையாதீங்கேன்.