அந்திமழை இளங்கோவன் 
கட்டுரை

பல வண்ணக் கனவுகள் கண்டவர்

சுகுமாரன்

பட்டம் பெற்ற கால்நடை மருத்துவர்; அந்தத் துறையிலேயே பணியாற்றியவர்; அந்த அனுபவத்தின் வலுவில் அதே துறையில் தொழில் முனைபவராக உழைத்து வெற்றி கண்டவர். டாக்டர் இளங்கோவனை இந்த நிலைகளிலெல்லாம் நினைவு கூரலாம். ஆனால் அவர் தான் அறியப்பட விரும்பியது ஒரு பத்திரிகையாளராக; ஊடகக்காரராக. அந்த அடையாளத்துடன் தான்  அறிமுகமானார். முதல் சந்திப்பில் அவர் தன்னை அறிமுகப்படுத்துக் கொண்டதே ‘நான் அந்திமழை இளங்கோவன்’ என்றுதான்.

அன்று அந்திமழை  பத்திரிகையோ ஊடகமோ அல்ல. கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய கையெழுத்து இதழ். அதைத் தொடங்கியவர் அவர்தான். தனது கல்லூரிக் காலம் முடிந்த பின்னும் அந்த இதழைத் தொடர்ந்து கொண்டுவரக் கூடிய நண்பர் குழாமை உருவாக்கியிருந்தார். அதன் சுக துக்கங்களில் அக்கறை கொண்டிருந்தார். அவருக்குப் பின்னர் வந்த எல்லா இதழ்களிலும் நிறுவிய ஆசிரியர் என்று அவர் பெயர் மறக்காமல் குறிப்பிடப்பட்டிருந்தது. என் நினைவில் அவர் முதன்மையாக இடம் பெற்றிருப்பதும் அந்திமழையின் நீர்மேகமாகத்தான்.

அந்திமழை ஒரு சிறு வட்டத்துக்குள் உலவிய இதழ்தான். ஆனால் அதை எப்போதும் விமரிசையாகக் கொண்டாடினார் இளங்கோவன். ஒவ்வோர் இதழும் பிரபலமானவர்கள் பங்கேற்கும் விழாவில் வெளியிடப்பட்டது. அதன் பத்தாவது ஆண்டின் இதழ் ஒன்று 1999 டிசம்பர் மாத நாளில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. பிரபல பத்திரிகையாளரான ராவ், முன்னாள் திரைப்பட நடிகையும் பின்னாள் புகழ் பெற்ற மருத்துவருமான டாக்டர்.ஜெயா ஶ்ரீதர்  ஆகிய பிரபலங்களுடன் நானும் பங்கேற்றேன். ( அன்று நான் ‘குங்குமம்’ வார இதழின் பொறுப்பாசிரியர்.) இளங்கோவன் அறிமுகமானது அந்த நிகழ்ச்சியில்தான். நிகழ்ச்சி முடிந்து விடை பெற்றபோது,  “ஒரு சின்னப் பத்திரிகைக்கு இவ்வளவு பெரிய விழா. நல்லாருக்கு’’ என்றேன்.  “இன்னைக்குச்  சின்னப் பத்திரிகை சார், ஒரு நாளைக்குப் பெரிய பத்திரிகையா வரும்’’ என்றார்.

அது இளங்கோவன் கண்ட கனவு. அதைச் செயலாக்கும் வழியைத் தொடந்து சிந்தித்துக் கொண்டிருந்தார் என்பது பின்னாளில் தெரிந்தது. இதழியல் பணிகளிலேயே ஆர்வம் கொண்டவராக இருந்தார் என்பதை அவ்வப்போது நாங்கள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களிருந்து ஊகித்துக் கொண்டேன். பொதுவாக யாருக்கும் அறிவுரையோ ஆலோசனையோ சொல்வதில்  விருப்பமில்லை. ஆனால் ஒருமுறை அவரிடம்  “ஏங்க, நல்ல டிகிரி கையிலிருக்கு. தொழிலுக்கான சாத்தியங்கள் நிறைய இருக்கு. எதுக்காகப் பத்திரிகையில வந்து மாட்டிக்கணும்?’’ என்று கேட்டிருக்கிறேன். மறுமுனையில் திடமான மௌனம்தான் பதிலாக இருந்தது. அதன் பிறகான நாள்களில் எப்போதாவது தொலைபேசியில் அழைப்பார். பொதுவான விஷயங்கள் பற்றிப் பேசுவோம். அந்த அளவுக்குத்தான் நட்பு இருந்தது.

சிறிது காலத்துப் பிறகு ‘குங்குமம்’ வார  இதழில் பணிக்குச் சேரவிருப்பதாகத் தகவல் தெரிவித்தார். வாழ்த்துச் சொல்வதற்குப் பதிலாக அனுதாபங்களைத்தான் தெரிவித்துக் கொண்டேன். திறந்த சிரிப்புடன் அதை ஏற்றுக் கொண்டார். சில மாதங்கள்தான் அந்தப் பணியில் இருந்தார் என்பது என் யூகம். பின்னர் ‘விண் நாயகன்’ என்ற இதழுக்கு ஏதாவது எழுத முடியுமா என்று கேட்டு அழைத்தார். அந்த இதழில் பணியாற்றுவதாகத் தெரிந்தது. ஆனால் அந்த இதழ் தொடங்கிய அதே வேகத்தில் மூடுவிழாவும் கண்டது. இளங்கோவனும் தன்னுடைய இதழியல் கனவுகளைக் கைவிட்டிருப்பார் என்று நினைக்கும் வகையில் பின்னால் ஓரிரு வருடங்கள் எங்களுக்கிடையில் தொடர்பு இல்லாமல் போனது. சூரியா தொலைக்காட்சிப் பணிக்காகத் திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்தேன். அந்த நாள்களில் இளங்கோவனுடனான தொடர்பு ஏறத்தாழ இல்லாமலேயே இருந்தது. அவரும் இடப் பெயர்ச்சியில் இருந்தார் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.

2006 முதல் 2009வரை மிகக் கொந்தளிப்பான நாட்களில் உழன்று கொண்டிருந்தேன். பணி மூப்பு அடையும்வரை குஷாலாகக் காலந்தள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த தொலைக்காட்சி வேலையை விட நேர்ந்தது. பிழைப்பு நிமித்தம் மீண்டும் சென்னைக்கு வந்து ‘குமுதம்’ இணைய இதழில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பொருளாதாரச் சிக்கல்களும் மூச்சு முட்டச் செய்துகொண்டிருந்தன.  யாரிடமும் எதையும் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ள முடியாத அவஸ்தையில் திணறிக் கொண்டிருந்த அந்த  நாள்களில் ஒருநாள் அலுவலகத்தில் காட்சி தந்தார் இளங்கோவன். ஆளே மாறிக் காட்சியளித்தார். வெளியே சென்று ஓர் உணவகத்தில் அமர்ந்து பேசத் தொடங்கினோம். மாற்றத்துக்குக் காரணங்கள் இருந்தன. திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகியிருந்தார். ஒரு பெரிய நிறுவனத்தில் பணியில் இருந்தார். வெளிமாநிலத்தில் இருந்தார். நல்லவேளை மனுஷன் பத்திரிகை, ஊடகம் என்று கானலின் பின்னே அலையாமல் சமர்த்தராகி விட்டார் என்று நினைத்தேன். ஆனால் உரையாடல் தொடர்ந்த போது அப்படியெல்லாம் இல்லை என்று தெரிய வந்தது. நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்குப் பொருளாதார உத்தரவாதமில்லாமல்தான் பத்திரிகைகளில் வேலை பார்த்தார் என்று தெரிந்து கொண்டேன்.

பின்னர் இதழியல் ஆவேசத்தை ஒத்திவைத்து நிறுவனமொன்றில் பணிக்கமர்ந்தார். துறை சார்ந்த தொழிலில் ஈடுபாட்டுடனும் திறமையுடனும் செயல்பட்டு வந்தபோதும் தன்னுடைய  கனவைக் கலையாமல் வைத்திருந்தார். இந்த வேலை பார்ப்பதும் பொருள் ஈட்டுவதும் கூடத் தனது  இதழியல் கனவை நிஜமாக்கத்தான் என்ற அவரது வேட்கை பளிச்சென்று தெரிய வந்தது. அது அவருக்கு எந்த அளவு தன்னம்பிக்கை கொடுத்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவரிடம் என்னுடைய அப்போதைய சங்கடங்களை மனம்விட்டுச் சொல்லும் தைரியத்தை எனக்குக் கொடுத்தது. “சார், இப்ப இவ்வளவு கஷ்டம்னு சொல்ற விஷயமெல்லாம் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் வேடிக்கையாச் சொல்லிச் சிரிக்கிற சமாச்சாரம் ஆயிடும். தைரியமா இருங்க’’ என்றார். அந்த நொடியில் அந்த வார்த்தைகள் எனக்கு அளவிட முடியாத தெம்பைக் கொடுத்தன. ஒருவகையில் மீண்டும் சென்னையை விட்டுத் திருவனந்தபுரத்துக்குத் திரும்புவதற்கான காரணங்களில் ஒன்றாக அது இருந்தது. இந்த நேர்நிலை அணுகல் இளங்கோவனின் தனித்துவம். கல்லைக் கனியவைத்து விட முடியும் என்ற தன்னம்பிக்கையின் அடையாளம்.

திருவனந்தபுரம் திரும்பி வந்து வாழத் தொடங்கிய நாட்களில் மீண்டும் தொடர்புகள் புத்துயிர் பெற்றன. தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்தன. அதில் ஒருமுறை சொன்னார். “அந்திமழை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறேன். ஏதாவது எழுதமுடியுமா பாருங்கள்’’. மனிதர் தன்னுடைய கனவை ஏதோ ஒரு வகையில் எட்டிப் பிடித்திருந்தார். முதலில் அவ்வப்போது சில விஷயங்களை எழுதினேன். சில விஷயங்களை எடிட் செய்து கொடுத்தேன். அந்தப் பின்னணியில் அவர் முன்வைத்த யோசனைதான் இணையத்தில் தொடர் எழுத உந்துதலாக இருந்தது. ‘வேழாம்பல் குறிப்புகள்’ என்ற பெயரில் கேரளத்தின் அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளைப் பற்றிய பத்தியை எழுதவைத்தார். நூறு வாரங்களுக்கும் அதிகமாக அந்தப் பத்தி தொடர்ந்தற்குக் காரணம் இளங்கோவனின் ஆதரவுதான்.(சரஸ்வதியின் கனிவான வலியுறுத்தல்களும்).  இணைய இதழ்கள் வணிக அடிப்படியில் லாபகரமானவை அல்ல என்ற நிலைமையிலும் அதில் எழுதியதற்கு உரிமைத் தொகையை அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், காசு அல்ல; அந்தச் செயல் மூலம் அவர்  எனக்கு அளித்த தார்மீக ஆதரவு குறிப்பிடத் தகுந்தது.

2013 இல் தனது நீண்ட நாள் கனவை நனவாக்கினார் இளங்கோவன். அந்திமழையை ஓர் அச்சிதழாகக் கொண்டு வந்தார். அச்சிதழை உருவாக்கும் முன்பு எங்களுக்கிடையில் நடந்த உரையாடலில் கைப்பிரதிக் கனவை பெரிய பத்திரிகையாக மாற்றிய பெருமிதம் தொனித்தது. நியாயமான பெருமிதம். பத்துப் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் கால்நடைக் கல்லூரியில் வைத்துச் சொன்ன வாசகங்கள் அப்போது நினைவுக்கு வந்தன.

முதல் ஓராண்டு வரையும் அந்திமழை இதழுடன் தொடர்பு கொண்டிருந்தேன். பின்னர் அவ்வப்போதான பங்களிப்புகளாகக் குறைந்தது. எனினும் நட்புக்கு எந்தக் குறைவும் நேர்ந்ததில்லை. குறைவு நேர இளங்கோவன் அனுமதித்தில்லை. என்னுடன் மட்டுமல்ல. மற்ற நண்பர்களுடனும் அதே நலம் விரும்பலுடனும் உதவும் எண்ணத்துடனுமே உறவைப் பேணியிருந்தார். இதை அவரது இயல்பாகவே மதிக்கிறேன். திருவனந்தபுரத்தில் வசித்தபோதும் பின்னர் கோவைக்குக் குடிபெயர்ந்தபோதும் தனியாகவும் குடும்பத்துடனும் வந்திருக்கிறார். நற்செய்தி கொண்டுவரும் அதி தூதர்போல. அது இந்த உறவு பேணலின் இனிமையான நினைவுகளுக்கு அடையாளங்கள்.

அந்திமழை என்ன மாதிரியான இதழாக இருக்கும் என்பது முதலில் குழப்பமாகத்தான் இருந்தது. இளங்கோவனின் ஆர்வமும் உழைப்பும் எண்ணமும் அதை எது மாதிரியும் இல்லாத புது மாதிரியை உருவாக்கியது. அவர் பல வண்ணக் கனவுகள் கண்டவர். எழுத்தாளனாக, ஊடகக்காரனாக, பதிப்பாளனாக, சுய முன்னேற்ற ஆலோசகராக அவர் கனவுகளுக்குப் பல நிறங்கள் இருந்தன. (‘நீங்க மட்டும் சுயமுன்னேற்ற நூல்கள் எழுதினால் டேவிட் ஜே ஷ்வார்ட்சை பீட் பன்ணி விடுவீர்கள்’ என்று அவரைக் கேலியும் செய்திருக்கிறேன்). அந்த நிறங்களின் வானவில் அந்திமழை. அந்திமழையின் துளியில் முகம் தெரியுமோ என்னவோ? அந்திமழையின் எல்லா இதழிலும் இளங்கோவனின் நிறம் தெரியாமல் இல்லை.

சிலரது நட்பு  ஏதோ ஒரு கட்டத்தில் தார்மீக வலுவை அளித்திருக்கிறது. அப்படியான நட்புகளில்  டாக்டர் இளங்கோவனின் நட்பும் ஒன்று. சிலரது பிரிவை மனம் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. அந்திமழை இளங்கோவனின் பிரிவும் அப்படியான ஒன்று.

(அந்திமழை இளங்கோவனின் முதல் ஆண்டு நினைவுநாளுக்காக (ஜூலை 28) எழுதப்பட்ட கட்டுரை)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram