கவிஞர் வைரமுத்து 
கட்டுரை

வள்ளுவரும் வைரமுத்துவும்

மரு.சங்கர சரவணன்

தமிழ் கூறும் நல் உலகில் திருக்குறள் தெரியாதவர்கள் கூட வள்ளுவரின் பெயரை அறிந்து இருப்பார்கள். அது போல நம் காலத்தில் ஒரு கவிஞர் உண்டு என்றால் அது கவிப்பேரரசு வைரமுத்து தான். அதனால்தான் வைரமுத்து கவிதைகள் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரைக்கு மூத்த எழுத்தாளர் அசோமித்திரன் ‘வைரமுத்து – பாமரரும் அறிந்த கவிஞர்' என்று தலைப்பிட்டார்.

பாமரனுக்கு கவிதை தெரியாமல் இருக்கலாம். ஆனால், கவிஞரைத் தெரியும். தன் கவிதைகளின் மூலம் தமது பாடல்களின் மூலம் நம் காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை எட்டிய ஒரு கவிஞர் கவிப்பேரரசு அவர்கள்; வள்ளுவரின் குறள் எப்படி ஏழு சீர்களைக் கொண்டேதோ அதுபோல் தன் பாடல்களுக்கு ஏழு தேசிய விருதுகளைப் பெற்றவர் கவிஞர்.

வள்ளுவரும் வைரமுத்துவும் நான் துள்ளித் திரிந்த பள்ளிப் பருவத்திலேயே எனக்கு அறிமுகம் ஆனவர்கள். 1986ஆம் ஆண்டு நான் 11 வயதில் இருந்தபோது என் உடன்பிறந்த சகோதரரும், கவிப்பேரரசு வைரமுத்துவின் அதி தீவிர வாசகரும் ரசிகருமான கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிப்பேரரசின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கவிதை ஒன்றை எழுதி அனுப்ப, அதைப் படித்து ரசித்த கவிப்பேரரசு“ரசிகனே! நீ என் கவிதைகளை விட உயர்ந்தவன்” என்று எழுதி கையொப்பமிட்டு பதில் அனுப்பியிருந்தார். வைரமுத்து என்ற பெயரும் அவரின் முத்து முத்தான கையெழுத்தும் என் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டது அப்படித்தான். அதன் பின் அவருடைய நூல்களை வாசித்து வாசித்து, படித்துப் படித்து, ரசித்து ரசித்து, பேசிப் பேசி காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி பல நாள்கள் கழித்திருக்கிறேன்.

வள்ளுவர் சொல்வாரே, “யாரினும் யாரினும் காதலம் என்றோம்; ஊடினாள் யாரினும் யாரினும் என்று” அதைப்போல வள்ளுவர் மீதும் குறள் மீதும் கவிஞருக்கு இருக்கும் காதல் யாரினும் யாரினும் அரிதாகும். தன் கவிதை ஒன்றில் கவிஞர் பதிவு செய்கிறார்

"ஞாலம் கருதின் கை கூடும்

அவனும் நானும் ஒரு கட்சி

காலம் பதில்சொல்லட்டும்; நான் கடலை எரித்த தீக்குச்சி” என்று,

தமிழாற்றுப்படையில் திருவள்ளுவர் பற்றி எழுதுகின்ற பொழுது "நிலத்திற்குள் தான் புதைக்கப்படும் நாளிலும் தன் கரத்திற்குள் இருக்க வேண்டிய நூல் திருக்குறள்” என்று. இதை விடவும் வள்ளுவர் மீதான கவிஞரின் காதலுக்கு சான்று என்ன வேண்டும்?

கல்லூரிப் பருவத்திலேயே கவிஞருக்கு வள்ளுவரோடு போட்டி போடும் ஆசை வந்து விட்டது. அதை, ‘இதுவரை நான்' என்னும் தன் வாழ்க்கை சரிதத்தில் பதிவு செய்கிறார். திருக்குறளில் ஓர் இடத்தில் கூட அசை தட்டாதா? என்று இவருக்கு வியப்பு வருகிறது. அதற்காக, இரவு அமர்ந்து திருக்குறளை அசை பிரித்து பிரித்து பிரித்துப் பார்க்கிறார், குறள் குறளாகத் தாண்டுகிறார், அப்பொழுது எழுதுகிறார் கவிஞர் தனது அனுபவத்தை "வள்ளுவர் ஜெயித்துக் கொண்டே இருந்தார்: நான் தோற்றுக் கொண்டே இருந்தேன்.”

அப்படி வள்ளுவரை எழுத்தெண்ணி வாசித்ததால்தான் இன்று கவிப்பேரரசை உச்சாணிக் கொம்பில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது உலகம். தமிழ் இலக்கிய வரலாறு என்பதே தமிழின் கவிதை வரலாறு தானே. இலக்கியத்தை விடுங்கள் தமிழின் முதல் இலக்கண நூலான 'தொல்காப்பியம்' கூட நூற்பா என்னும் கவிதை வடிவத்தில் இருப்பது தானே. இந்த 2500 ஆண்டு இலக்கியப் பரப்பில் தமிழ்ப்படைப்பாளி ஒருவரை தொன்மமும், தொடர்ச்சியும் கொண்ட தற்காலத் தமிழ் படைப்பாளி என்று நாம் கொண்டாட வேண்டும் என்று சொன்னால் அவர் கண்டிப்பாக தமிழ் மரபுக் கவிஞராகவும், புதுக் கவிஞராகவும், பாடலாசிரியராகவும், நாவலராகவும், நாவலாசிரியராகவும், கலை பயில் தெளிவும், கட்டுரை வண்ணமும் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. இதில் மற்றவர்களுக்கு கருத்து மாறுபாடு இருக்கலாம். அது அவர்கள் உரிமை.

உரைநடை இலக்கியம் என்பது கடந்த இருநூறு ஆண்டுகளில் புகழ் பெற்றது. ஆனால் தமிழ் என்பது ஈராயிரத்து ஐநூறு ஆண்டு பாரம்பரியம் கொண்ட வாழும் உலகச் செம்மொழிகளில் ஒன்று. எனவே, முழு முதல்வனாகக் கொண்டாடப்பட வேண்டிய தமிழ் படைப்பாளி கண்டிப்பாக மரபுக் கவிஞராக இருக்க வேண்டும் என்பதை எனது மதிப்பீடுகளில் ஒன்றாக வைத்திருக்கிறேன். அதனால்தான் வள்ளுவரையும் வைரமுத்துவையும் ஒப்பீட்டு இந்தக் கட்டுரை வாசிக்கிறேன்.

2000 ஆம் ஆண்டில் குமரி முனையில் அய்யன் வள்ளுவர் சிலை நிறுவப்பட்ட போது 'கோட்டம் முதல் குமரி வரை' என்று ஒரு நூலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் பலரும் வள்ளுவரைப் பற்றி தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள். ஆனால், கவிஞர் பதிவு செய்தது மட்டும் தனித்துவமான தலைப்பு.

அந்த தலைப்பு 'அதிகாரம் 134'. அதில் வள்ளுவர் குறள் போல கவிஞர் 10 குறள்களை எழுதியிருந்தார்.

அதிலிருந்து 4 குறள்களை மட்டும் இந்த அவைக்கு படித்துக்காட்ட விழைகிறேன்.

சீர்தந்த வள்ளுவரின் செம்மாந்த பேரழகைப்

பார்வந்து பார்க்குதடா பார்!

திருக்குறளைக் கற்ற திருக்குவளை செய்த

திருப்பணிஈ தென்றே தெளி.

படையாளும் பைந்தமிழா வள்ளுவரே நம்மின்

அடையாளம் என்றே அறி!

வள்ளுவரின் சொல்வாக்கு வண்டமிழின் செல்வாக்கு

வள்ளுவரை வாழ்வாக்கு வா!

அதே அய்யன் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம் 2024 டிசம்பர் 31-இல் நடைபெற்ற பொழுது, கவிஞர் அந்த விழா மேடையில் வள்ளுவத்திற்கு உரைவகுப்பதாக சூளுரைத்து அந்தப் பணிகளில் இப்போது ஈடுபட்டு இருக்கிறார்.

கவிஞர் வள்ளுவர் கட்சி என்பதைச் சொன்னேன். வள்ளுவர் கவிஞர் கட்சி என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா? சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஒருதலைப்பு ஒரு திரைப்படப் பாடலில் இசை முக்கியமா? வரிகள் முக்கியமா? என்பது

அது குறித்து ஒரு நீதியரசர் கூட ,’ பாடலுக்கு இசையமைப்பாளர் உரிமை கோருவது போல பாடலாசிரியர்களும் உரிமை கோரலாம் அல்லவா? என்று கேட்டிருந்தார்.

கவிஞர் கூட அது குறித்த விவாதத்தில் நடுநிலையோடு தனது கருத்தைப் பதிந்திருந்தார். “இசையும், பாடலும் சேர்ந்துதானே ஒரு பாடல் உருவாகிறது என்றும், எனவே இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் சம பங்கு உண்டென்று”. பாடலாசிரியர்தான் முக்கியமென்று கவிஞர் சொல்லிவிடவில்லை. ஆனால், வள்ளுவரோ பாடல்தான் முக்கியம், இசை இரண்டாம்பட்சம் என்று ஒரு குறளில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, வள்ளுவர் வைரமுத்துவை விடவும் அதிகமாக வைரமுத்து கட்சியில் இருக்கிறார் என்பதற்கு சான்றாக அமைகின்ற குறள்

‘பண் என்னாம் பாடற்கியை பின்றேல், கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்' -இசையால் என்ன பயன் பாடலோடு பொருந்தாவிட்டால்? கண்ணால் என்ன பயன் கண்களில் இரக்கம் இல்லாவிட்டால்? என்பது இந்தக் குறளுக்கான பொருள். எனவே, இப்பொழுது வள்ளுவர் எப்படி கவிஞரின் கட்சியில் இருக்கிறார் என்று, இந்த அவை அறியும் என நினைக்கிறேன்.

கவிஞர் எழுதிய பாடல் ஒன்றில் சொல்கிறார்: ஒருவன் தன் காதலியைப் பார்த்துச் சொல்கிறான் “உன்னை போல் அழகி உலகினில் இல்லை - இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை” என்று.

அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஓர் இளைஞர் சொன்னார். ஏன் என்று கேட்டேன். ‘அந்தப் பாடல் வரியில் ஒருவன் தன் காதலியிடம் காதலைச் சொல்கின்ற பொழுதே மிக நயமாக - நீ தான் என் காதலி; நான் உன்னை மணப்பேன்; நமக்கு குழந்தை பிறக்கும்; அந்த குழந்தை உன்னை போல் அழகாக இருக்கும் அல்லது உன்னை விடவும் அழகாக இருக்கும் என்று சொல்கிறான். எனவே, சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் நிரம்பி வழிகிற வரிகள்’ என்று அந்த இளைஞர் சொன்னார். இப்படி திருக்குறள் மாதிரி எழுதக்கூடிய திறமை திரைப்பாடலில் கவிஞருக்கு மட்டுமே இருக்கிறது.

நான் கவிஞரைப்பற்றி பேசும்போதெல்லாம் என் நண்பர்கள் என்னிடம் சொல்வதுண்டு. நீ கவிஞரைப் பற்றி விவாதம் வரும்போதெல்லாம் கவிஞருக்கான டிபன்ஸ் தரப்பு லாயராக மாறி விடுகிறாய் என்று. குணம் நாடி குற்றமும்நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்னும் வள்ளுவத்தின் வழியிலிருந்து கற்றுக் கொண்ட பாடம்தான் அது. மிகை நாடி மிக்கக் கொளும் ஆளுமையாகவே கவிப்பேரரசு இருக்கிறார்.

(கவிஞர் வைரமுத்து படைப்புகள் குறித்து நடத்தப்பட்ட ’வைரமுத்தியம் ’என்ற பன்னாட்டு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram