கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“அண்ணே, ரொம்ப வருஷம் கழிச்சு அய்யா வந்திருக்காரு. நீங்க உடனே கிளம்பி வர முடியுமா?”
காலையிலிருந்து ஒரு கட்டுரைக்காக வாசித்துக் கொண்டிருந்தேன். இதை இங்கே விட்டால் தடைபட்டு விடும் என்று மனம் தடுக்க முயன்றது. ஆனால் அதற்குள் மீண்டும் கணேசனின் அழைப்பு:
“அண்ணே, இல்லண்ணே… அவர் ரொம்ப அவசரப்படுறாரு. நான் அவருக்கு சாப்பாடு வாங்கிக் குடுத்து எப்படியாவது இங்கே தங்கவைத்திருக்கேன். கட்டாயமாக வந்திருங்க.” அழைப்பு துண்டிக்கப்பட்டது.
தடபுடவென கிளம்பினேன். ரெட் டாக்ஸியில் ஆறு மணிநேரத்திற்கு ஒரு காரை வாடகைக்கு எடுத்தேன். வழக்கமாக வரும் டிரைவரே அன்றும் வந்தார். பயணம் தொடங்கியது.
அய்யா பூல்பாண்டியனைச் சந்தித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. நானும் கணேசனும் எப்படியாவது அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று நினைத்தாலும், நாங்கள் நினைத்தால் நடக்காத காரியம் அது. இது அவர் நினைத்தால் மட்டுமே நடக்கும் காரியம். அவரை இன்றைக்குச் சந்திக்கிறோம் என்பதே ஒரு பெரும் பேறு.
மீண்டும் இரண்டு முறை கணேசனிடம் பேசி, அவரை எப்படியாவது விட்டுவிடாதே என்றேன். எங்கள் உரையாடலை கேட்ட டிரைவர் தம்பி, “யார் சார் அவரு? ரொம்ப முக்கியமானவரா?” என்றார். “ஆமாம் தம்பி, இன்றைக்கு நான் ரொம்ப முக்கியமான மனிதரைச் சந்திக்கப் போகிறேன்,” என்றேன்.
மதுரை சப்பானி கோவில் ஸ்டாப் அருகிலுள்ள கணேசனின் யோகலட்சுமி பார்சல் சர்வீஸ் அலுவலகத்தை நெருங்கினோம். “அங்கே எதிரில் நிழலில் காரை நிறுத்துங்கள்,” என்றார். நான் இறங்கிக் கொண்டேன்.
எதிரில் சுவரை ஒட்டி காரை நிறுத்த டிரைவர் முயன்றபோது, அங்கே ஒரு பெரியவர் உறங்கியபடி இருந்தார். ஹாரன் அடித்து அவரை எழுப்பினார். அதற்குள் நான் ஓடிச் சென்று அவரை எழுப்பி, மெல்ல சாலையை கடக்கச் செய்து அலுவலகத்திற்குள் அழைத்து வந்து ஒரு நாற்காலியில் அமரச் செய்தேன்.
அவர்தான் இன்றைக்கு நான் சந்திக்க வந்திருந்த வி.ஐ.பி. அய்யா பூல்பாண்டியன்.
“யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்ற திருமூலரின் வாக்கிற்கு நம் காலத்து உதாரணமாகத் திகழும் அபூர்வ மனிதர் 75 வயதான பூல்பாண்டியன்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவின் ஆங்கினார் கிராமத்தில் 1950-இல் பிறந்தவர். 1977-இல் இல்லறம். 1979-இல் மஸ்கோத் அல்வா நிறுவனத்தில் வேலை. பின்னர் மும்பைக்குச் செல்கிறார்.
மும்பை அவரை வசீகரித்தது. பல வேலைகள், சிறு தொழில்கள். இரு குழந்தைகள், அவர்களை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார், அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிறது. ஒரு சாதாரண மனிதராக செய்ய வேண்டிய அனைத்தையும் திறம்பட செய்தார், ஆனாலும் மனதில் நிறைவு இல்லை.
மனைவி காலமானதும் வீட்டை விட்டு வெளியேறினார். அந்தத்தனிமை அவரை விரக்தி நோக்கித் தள்ளவில்லை. ஆனால் பூல்பாண்டியன் ஒரு தனித்து அலையும் பறவையாக சிறகிசைத்தார்.
அவர் யாசகம் கேட்பவராக மாறினார். கடை வீதிகளின் வழியே கைகள் ஏந்தியபடி தனது புதிய பயணத்தை தொடங்கினார். தர்மமாகக் கிடைத்த பணத்தில் தனது சொந்த ஊரிலுள்ள பள்ளிக்கு 400 நாற்காலிகளும் விளையாட்டு உபகரணங்களும் வாங்கித் தந்தார். அதில் அவருக்கு ஒரு சிறிய மன நிறைவு வாழ்வில் முதல் முறை எட்டிப்பார்த்தது.
புதிய திசையில் பயணம் தொடர்ந்தது. தன் சொந்த ஊருக்கு வருவதும், மீண்டும் பிற ஊர்களுக்குச் செல்வதுமாக — இவ்வாறு 40 பள்ளிகளுக்கு நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வாங்கிக் கொடுத்தார். மும்பைக்குச் சென்று அங்கும் யாசகம் கேட்டு அங்குள்ள பள்ளிகளுக்கும் கோவில்களுக்கும் உதவினார்.
வீதி வீதியாக, மாவட்டம் மாவட்டமாக கைகள் ஏந்தி வந்த பணத்தை தனக்காக ஒருபோதும் செலவழித்ததில்லை என்று கூறினார். “அய்யா, எனக்கு யாராவது சாப்பாடு வாங்கிக் கொடுத்திடுவாங்க. வேட்டி, துண்டும் யாராவது கொடுப்பாங்க. நான் தான் வேண்டாம், வேண்டாம்னு சொல்வேன்,” என்று சிரித்தார்.
ஒரு கட்டத்தில், “எதற்கு இந்தப் பணத்தை மட்டும் சொந்த ஊருக்கு கொண்டு போக வேண்டும்? ‘யாதும் ஊரே’ என்பதன் முழு அர்த்தம் தான் என்ன?” என்ற வெளிச்சம் மனதில் பிறந்தது. அதன் பிறகு, யாசகமாக ஒரு தொகை சேர்ந்ததும் அதை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அந்தத் தொகையை தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு கணக்கில் வரவு வைத்துக் கொண்டு ரசீதை வழங்கினார். இந்த ரசீதை தனது சேமிப்பில் பத்திரமாக வைத்துக் கொண்டார். வாரம் ஒரு முறை பத்தாயிரம் என்று மதுரையை வெயிலும் புழுதியிலும் சுற்றியலைந்து மதுரை ஆட்சியரிடம் கொடுத்தவாறு இருந்தார். இதை பார்த்து வியந்த மதுரை ஆட்சியர் உடனடியாக பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் அய்யா பூல்பாண்டியன் அவர்களைப் பாராட்டுகிறார், திரும்பும் பக்கமெல்லாம் நாளிதழ்களில் அய்யாவின் புகைப்படம். அதை எல்லாம் கத்திரித்து பத்திரப்படுத்திக் கொள்கிறார்.
“அய்யா, இதுவரை நான் ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் கொடுத்திருக்கேன். அதுல ஒரு கோடி ரொக்கமாவும், அறுபது லட்சத்துக்கு பொருட்களாவும்,” என்றார்.
அவரது ஜோல்னா பை முழுவதும் இதற்கான ஆவணங்கள். அவரது நேர்மையே அவரை ஒரு யாசகத் தொண்டராக உயர்த்துகிறது.
சில ஆண்டுகள் முன் ஒரு நாள் எங்கள் வீட்டு பக்கம் அவரை பார்த்தேன், உடனடியாக அவரை அழைத்து தண்ணீர் குடுத்து சோபாவில் அமர வைத்தேன், “அய்யா ஒரு தேநீர் குடிச்சிட்டு மேல என் நூலகத்துக்கு போயி கொஞ்சம் நேரம் பேசலாம்” என்றேன், ”ஆமாம் அய்யா வெயிலு நெருப்பா பொசுக்குது,’’ என்றார்.
தேநீர் பருகியபடி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன், “அய்யா இதை ஏன் அரசாங்கத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தீர்கள்?” என்று மெல்ல உரையாடலைத் தொடங்கினேன். அப்பொழுது அவர்.
“அய்யா இங்க பாருங்கள், நான் போகும் எல்லாம் ஊர்களுக்கும் ரோடு அரசாங்கம் தான் போடுது, மின்சாரம் அரசாங்கம் தான் கொடுக்குது, பள்ளிக்கூடம் அரசாங்கம் தான் எங்க ஊரல கட்டியிருக்கு, ரேசன் கடை அரசாங்கம் தான் நடத்துது, கிராமங்களுக்கு தண்ணீர் அரசாங்கம் தான் குடுக்குது, குழந்தை பெரிய ஆஸ்பத்திரியில பிறந்தும் சுடுகாட்டுக்கு போறவர எல்லாமே அரசாங்கம் தான்யா மக்களுக்கு செய்யுது, மக்கள் காக்குது,” என்றார்.
ஒரு பெரும் சமூகவியல் அறிஞரின் உரையை கேட்டது போல் இருந்தது, இவரது புரிதல் படித்தாக கூறிக் கொள்ளும் இன்றைய வர்க்கத்திடம் இருக்கிறதா? இவரது புரிதல் அபாரமானது, இந்தப் புரிதல் நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும் என்றே நான் எண்ணினேன்.
பணம் சேர்த்துக் கொண்டே இருக்கும் மனிதர்களை நான் அறிவேன், அவர்கள் காலை முதல் இரவு வரை பணம், பணம் மேலும் பணம் என்பதைத் தாண்டி எதையும் சிந்திக்க மாட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு கட்டத்தில் பணத்திற்கு அடிமையாக மாறிவிடுவார்கள். இன்னும் கொஞ்சம் கூடுதல் சம்பளம், இன்னும் பெரிய வீடு, இன்னும் அதிகமான வசதிகள், அட எல்லாம் சரி ஆனால் உங்களை சுற்றியுள்ள சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஏதாவது கவனிக்கிறீர்களா? என்றால் கவனிப்பா நாங்க எதுக்கு கவனிக்கனும் என்றே பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
பெரும் தொழில் அதிபர்களுக்கும், அசையா செல்வங்களை வாங்கிக் குவிப்பவர்களுக்கும், தன்னைச் சுற்றிய வறுமையை கண்டும் கானாமலும் இருப்பவர்களுக்கு, வருங்கால தலைமுறையினர் அனைவருக்குமே — பூல்பாண்டியன் அவர்களின் வாழ்க்கை ஒரு அறக்கல்வி, அவரது கதை கல்விக்கூடங்களில் போதிக்கப்பட வேண்டும், சமூகக் கல்வியாக மாற வேண்டும். சமூக அக்கறை இல்லாத வாழ்க்கை, ஒரு வெற்று வாழ்க்கை என்பதை இந்த கேளாத காதுகளுக்கு எப்படி உணர்த்துவது?
உண்மையில், ஒரு மனிதனின் உயரம் அவன் சேர்த்த செல்வத்தில் இல்லை; அவன் செய்த நன்மைகளில் தான் இருக்கிறது. ஒரு பசியானவனுக்கு உணவு அளித்தல், ஒரு குழந்தைக்கு கல்வி உதவி செய்தல், ஒரு முதியவருக்குட் துணை நிற்றல்—இவையே வாழ்க்கையின் உண்மையான செல்வங்கள்.
“காசு, நகை, வீடு” என்ற மூன்று வார்த்தைகளுக்குள் மனித வாழ்க்கையை அடைத்து விடாமல், “அன்பு, கருணை, பகிர்வு” என்ற மூன்று மதிப்புகளால் ஒருவன் தன் வாழ்வை நிரப்பினால் தான் சமூகம் அழகாகும்.
“இன்னும் நாற்பது லட்சம் திரட்டிவிட்டால், இரண்டு கோடி ரூபாய் மக்கள் பணிகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்ற நிறைவோடு விடைபெறலாம்… ஆனால் அதற்குள் இந்தப் புற்றுநோய் வந்துவிட்டது,” என்றார் சாதாரணமாக. கேட்டதும் அதிர்ச்சியில் என் கண்களில் நீர் வழிந்தது.
“அய்யா, அது எல்லாம் ஒன்றுமில்லை. கேரளாவில் எனக்கு வைத்தியம் முழுவதும் இலவசம். நம்ம கலெக்டர் லெட்டர் கொடுத்துட்டாரு… ஆனா இன்னும் அந்த நாற்பது லட்சம் தான் பாக்கி அய்யா…” மரணத்தை விட இலக்கு தடைபடுவதற்கான கவலையே அவரது குரலில்.
உடல் நலிவுற்ற நிலையிலும் பிறர் நலம் நாடும் அவரது உயர்ந்த உள்ளம் இப்பொழுதும் எனக்கு பெரும் வியப்பாகவே காட்சியளிக்கிறது.
பூல்பாண்டியன் போன்ற மனிதர்கள் இருக்கும் வரை இந்த பூமி இன்னும் ஈரமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
“எனக்கு நேரமாச்சு அய்யா,” என்று சொல்லிவிட்டு அவர் வேகமாக சப்பானி கோவிலிலிருந்து தெற்கு வாசல் மார்கெட் நோக்கி அந்த அடர்ந்த தூசிப் புழுதியில் மறைந்தார்.