திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் தமிழமுது அறக்கட்டளை தமிழ் இணையச் செம்மல் விருதை முனைவர் மு.இளங்கோவனுக்கு வழங்கியுள்ளது.
தமிழ்ப்பணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழமுது என்ற அறக்கட்டளை திண்டுக்கல் நகரில் சிறப்பாக இயங்கி வருகிறது. ஓய்வுபெற்ற தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து இந்த அறக்கட்டளையை ஏற்படுத்தித் தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், இந்த அறக்கட்டளையின் செயற்குழு கூட்டமும் விருது வழங்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) திண்டுக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்துக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் முனைவர் மு.இளங்கோவனனின் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி, தமிழ் இணையச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
தமிழ் இணையத்தை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுசென்ற மாண்புக்காகவும், இணையத்தில் தமிழறிஞர்களின் வாழ்வைப் பதிவுசெய்துவரும் தொண்டினுக்காகவும் முனைவர் மு. இளங்கோவனுக்குத் தமிழ் இணையச் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், புலவர் பெருந்தகையும் காப்பியக் கவிஞருமான அருணா பொன்னுசாமியார் (கருவூர்) அனைவரையும் வரவேற்றார். ஆன்மீகச் செம்மல் புலவர் க. வீ. வேதநாயகம் (ஈரோடு), புதுவெள்ளம் த. இராமலிங்கம் (நெய்வேலி), கவிஅருவி கரு. சின்னத்தம்பியார் (உடுமலைப்பேடை), இலக்கணச் செம்மல் பெ. கறுப்பண்ணனார் (கருவூர்), புலவர் பெருமான் ப. பா. கோபால் (திண்டுக்கல்) முதலானோர் உரைநிகழ்த்தியதோடு விருதுபெற்ற இளங்கோவனையும் அவர்தம் பணிகளையும் பாராட்டிப்பேசினர்.
தமிழமுது அறக்கட்டளையின் நிறுவுநரான புலவர் சு. நஞ்சப்பனார் அழகியதோர் உரையாற்றி, மு. இளங்கோவனின் பன்முகத் திறமையையும் தமிழ்ப் பணிகளையும் அவையினருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
மு. இளங்கோவன் அண்மையில் எழுதியுள்ள தகைசால் தமிழ்த்தொண்டர்கள் நூலினைச் சான்றோர்களுக்கு அறிமுகம் செய்து, இந்த நூலின் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார். இந்த நூலின் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது.
புலவர் சு. நஞ்சப்பனார், புலவர் துரை. தில்லான், புலவர் வேதநாயகம், தமிழ் வளர்ச்சித்துறையின் முன்னை உதவி இயக்குநர் முனைவர் சந்திரா உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் இணைந்து தமிழ் இணையச் செம்மல் என்னும் உயரிய விருதினை முனைவர் மு. இளங்கோவனுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வுக்கு மதுரை, சென்னை, ஊத்தங்கரை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ் மீது பற்றுக் கொண்ட பலரும் வந்திருந்தனர்.
நண்பகல் உணவுக்குப் பிறகு “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்(394)” என்னும் தமிழ் மறையை நினைவிலேந்தி, அனைவரும் விடைபெற்றனர்.