பேட்டிகள்

பகலில் கட்டடத் தொழிலாளி; இரவில் மொழிபெயர்ப்பாளர்! ஷாஃபி செறுமாவிலாயியுடன் ஒரு நேர்காணல்

அருள்செல்வன்
தமிழிலிருந்து மலையாளத்திற்குக் கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு படைப்புகளை மொழிபெயர்த்துள்ளவர் ஷாஃபி செறுமாவிலாயி. சாகித்ய அகாடமி பரிசு பெற்றுத் தமிழில் பேசப்பட்ட ஐந்து நாவல்கள் இவரது மொழிபெயர்ப்பில் மலையாளத்தில் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்டுள்ளன. பகல் முழுக்கக் கட்டுமானப் பணியாளராகப் பணி, இரவில் மொழிபெயர்ப்புப் பணி என்று இயங்கி வரும் ஷாஃபியுடன் ஓர் உரையாடல்!

உங்களைப் பற்றிய அறிமுகமாக எதைச் சொல்வீர்கள்?

எனக்குச் சொந்த ஊர் கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள
செறுமாவிலாயி என்கிற சிறிய கிராமம். நான் 1962 ஆம் ஆண்டுமே 1 ஆம் தேதி பிறந்தேன்.
அப்பா பெயர் மொய்தீன் அம்மா பெயர் ஆமீனா.
இருவரும் காலமாகி விட்டார்கள். எனக்கு மூன்று அக்காமார்கள், ஒரு தம்பி.தொழில் என்றால் மீன்பிடித்தொழில் தான்.
அப்பா ஆற்றில் மீன் பிடித்து எங்களை வளர்த்தார்.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கேதான்.

படிப்பு பற்றி?

நான் படிப்பில் சுமார் ரகம்தான். பத்தாவது வரைதான் படித்தேன். அதன்  பிறகு இரண்டு வருடம் எதுவும் செய்யாமல் சும்மா தான் இருந்தேன்.

சொந்த ஊரில் இருந்து வெளியூர் சென்றது எப்போது? தமிழ் கற்றது எப்படி?

பள்ளிப் படிப்புடன் படிப்பு முடிந்தது. 1980 இல் புனே சென்றுஅங்கே ஒரு மளிகைக்கடையில் வேலை பார்த்தேன் . ஒரு வருடம் தான் அங்கே இருந்தேன். அதற்குப் பிறகு ஊர் வந்து விட்டேன். புனேயில் பெரிய அனுபவங்கள் இல்லை .இருந்த ஒரு வருட காலத்தில் இந்தி கற்றுக் கொண்டதோடு சரி.

1984 இல் பெங்களூரு சென்றேன். பெங்களூரில் எனது மாமாவின் டீக்கடையில் வேலை பார்த்தேன்.
நான் இருந்தது கர்நாடக மாநிலம்தான் என்றாலும் நான் முழுதாகக் கன்னடம் கற்றுக் கொள்ளவில்லை. காரணம் நான் சென்றது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. அது குடிசைவாழ் மக்கள் நிறைந்த பகுதியாகும். அந்தக் காலத்தில் மக்கள் குடிசைகளில் தான் வாழ்ந்தார்கள். அப்பகுதி இன்று மெல்ல மாறி வருகிறது.என்னுடைய நண்பர்கள் எல்லாம் அங்கிருந்த தமிழர்கள்தான். அவர்களுடன் பேசிப் பழகி ,தமிழ் மொழிப் பரிச்சயத்தை வளர்த்துக் கொண்டேன் .இப்படி நண்பர்களிடம் கேட்டுக் கேட்டு ஒவ்வொரு வார்த்தையாகப் பழகி நினைவில் வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
அங்கே திரையரங்குகளில் தாராளமாகத் தமிழ் படங்கள் ஓடும். சுவரில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளைப் படித்துப் பார்ப்பேன். இப்படியே தமிழை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொண்டேன். தமிழ் நண்பர்கள் கொண்டுவரும் ராணி ,தேவி ,குமுதம் ,ஆனந்த விகடன், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளை அவர்களிடம் வாங்கி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கேட்டுப் படித்துப் பார்ப்பேன்.இப்படி மெல்ல மெல்ல கற்றுத் தமிழைப் புரிந்து வாசிக்கப் பழகிக் கொண்டேன்.

உங்கள் புத்தக வாசிப்பின் பயணம் எப்படி இருந்தது?

பள்ளிக் காலத்திலேயே எனக்கு வாசிப்பின் மீது ஆர்வம் வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அப்போதே மலையாளத்தில் வந்த கதைகள், நாவல்கள், பிற மொழியில் இருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் போன்றவற்றையெல்லாம் வாசிக்கத் தொடங்கி விட்டேன். பெங்களூர் சென்ற பிறகுதான் தமிழ்ப் படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன்.

நீங்கள் முதலில் மொழிபெயர்த்த 'அனந்த சயனம் காலனி' அனுபவம் பற்றி?
அந்தக் கதையில் அந்தப் பேராசிரியர் சீனிவாசனைத் தேடுபவர் போல நீங்கள் அலைக்கழிப்பின் வலியை உணர்ந்தவர் போல் தெரிகிறதே?

நான் முதன்முதலில் மொழி பெயர்த்தது என்றால் அது 1985 இல் தினத்தந்தி ஞாயிறுமலரில் வெளிவந்த ஒரு ரஷ்யன் சிறுகதையின் மொழிபெயர்ப்பு.அதை வேடிக்கையாக முதலில் மொழிபெயர்த்துப் பார்த்தேன். அப்போது அந்த மொழிபெயர்ப்பு அனுபவம் சவாலானதாகவும் ஒரு வகையில் மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது .முடித்த பிறகு பெரிதும் மன நிறைவு தருவதாகவும் இருந்தது.அதை ஒரு மொழிப் பயிற்சியாகவும் உணர்ந்தேன்.

’அனந்த சயனம் காலனி’ மொழிபெயர்ப்பு அனுபவம் அப்படித்தான் இருந்தது. அதில் வரும் கதாபாத்திரங்கள் அவர்களது உள்ளுலகம் மன உணர்வுகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன.
அந்த கதாபாத்திரத்து உணர்வுகளையும் சூழல்களையும் அப்படியே என் தாய்மொழிக்குக் கடத்த முடிந்தால் அது ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது. அது தோப்பில் முகமது மீரான் எழுதிய புகழ்பெற்ற கதை.
அவர் அதை அந்தக் காலத்திலேயே தொலைநோக்குப் பார்வையுடன் எழுதி இருந்தார். அந்தக் கதையில் வரும் பாத்திரம், பேராசிரியர் சீனிவாசனைத் தேடி அலையும் அந்த அலைச்சலை நானும் ஒரு வகையில் உணர்ந்திருக்கிறேன்.
ஒருவகையில் நம்மை நாம் கண்டடையும் ஒரு பயணமாகவும் அது எனக்குத் தோன்றியது.

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் இவற்றில் எது உங்கள் கோணம்? மொழிபெயர்ப்புக்கு நீங்கள் தரும் விளக்கம் என்ன?

மொழிபெயர்ப்பு மொழியாக்கம் இரண்டும் இரண்டு வேறு முறைகளையும் தளங்களையும் குறிக்கின்றன.மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியின் மூலப் பிரதியின் வார்த்தைகள், வாக்கியங்கள், இலக்கணம் ,மொழி அமைப்பு போன்றவற்றிற்கு அதிக,முக்கியத்துவம் கொடுத்துச் செய்வதால் அது மொழிபெயர்ப்பாக ஒரு மொழியை மற்றொரு மொழிக்கு மாற்றும் முறையாகும்.

மொழியாக்கம் என்பது வெறும் சொற்களை மாற்றுவதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.மூல உரையின் உணர்வுகள் மற்றும் பண்பாடு போன்றவற்றை வாசிப்பு அனுபவமாக மாற்றுவதற்கு மொழி பெயர்க்கப்படும் முறை இன்னொரு மொழியில் மறு உருவாக்கம் செய்யப்படும் முறையாகும்.

ஒரு படைப்பை மொழிபெயர்க்க வேண்டும் என்றால் அந்தப் படைப்பாளியின் மற்ற எல்லா படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டுமா?

எல்லா படைப்புகளையும் கட்டாயம் வாசித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை . ஆனால் அந்தப் படைப்பாளியின் உலகத்தைப் புரிந்து கொள்ள சில முக்கியமான படைப்புகளை வாசித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி வாசிப்பதற்கு எனக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது என்பதே நிதர்சனம். ஆனால் சம்பந்தப்பட்ட படைப்பாளியின் சில முக்கியமான படைப்புகளையாவது வாசிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

'தாய்மொழி அல்லாதவர்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கும் போது அவை மொழியாக்கம் ஆக இல்லாமல் மொழிபெயர்ப்பாக இருக்கின்றன' என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

இதை நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். தாய்மொழி அல்லாத போது அந்த மொழியின் நுட்பமான உணர்வுகளையும் பண்பாட்டுச் சூழலையும் நமக்குள்ளாக மொத்தமாக உள்வாங்குவது கடினம். இதனால் அவை இயல்பான மொழியாக்கமாக மாறாமல் வெறும் மொழிபெயர்ப்பாகவே அமைகிறது.

மொழிபெயர்ப்பு சார்ந்து உங்களது கொள்கை, வரையறை, பாணி, இயங்குமுறை பற்றி வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பிறமொழிப் படைப்புகளை மொழிபெயர்க்கும் போது அவற்றின் மூலப்படைப்பின் ஆன்மாவும் உணர்வும் சிதையாமல் எனது தாய் மொழிக்குக் கொண்டு வருவது என்பது ஒன்றுதான் எனது மொழிபெயர்ப்புக்கான முதன்மையான கோட்பாடு என்று கூறுவேன். மொழிபெயர்ப்பில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பது, அதன் பின்னர் உள்ள வாழ்க்கை கலாச்சாரத்தைக் கொண்டு வருவது, இதில் எது உங்கள் வழி என்கிற போது , என்னைப்பொறுத்தவரை நான் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப இந்த இரண்டு முறைகளையும் பின்பற்றி வருகிறேன் என்பேன் .சில இடங்களில் மூலப் படைப்பில் உள்ளது போல் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு தேவையாக இருக்கும் போது அப்படிச் செய்ய வேண்டி இருக்கிறது. அத்துடன் உணர்வுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சில இடங்களில் கலாச்சார பண்பாடு அம்சங்களை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் அதற்கேற்றவாறு இயல்புத் தன்மையுடையதாகவும் மொழிபெயர்க்கிறேன்.

ஒரு படைப்பை மொழிபெயர்க்கும் போது இது கலாபூர்வமான படைப்பு அல்லது அதைத் தவற விட்டு படைப்பு என்று   மொழிபெயர்ப்பாளர்  எடை போட முடியும். மூலக்கதையின் கலைத்தன்மையையும் கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறதா என்பதைக் கொண்டு ஒரு படைப்பை சிறந்ததா இல்லையா என்று மொழிபெயர்ப்பாளர் எடை போட முடியும்.

புனைவுகள் அபுனைவுகள் என்று மொழிபெயர்க்கும் போது எந்த வேறுபாடும் எனக்கில்லை; அதற்கான எந்த வரையறையும் எனக்கில்லை.

நான் மொழி பெயர்த்ததைப் பிறரிடம் கொடுத்து எடிட் செய்து திருத்தும் பழக்கம் எனக்கு இல்லை. அதே மாதிரி ஒரு முறை நான் மொழி பெயர்த்ததை மீண்டும் எடிட் செய்யும் பழக்கமும் எனக்கு இல்லை. 

நான் மொழிபெயர்ப்புக்கு வருவதற்கு முன்பு சில மாத, வார இதழ்களில் பிரசுரமான எனது சில கதைகள் மட்டுமே எனது சொந்தப் படைப்புகள் என்று கூறுவேன். ஆனால் எனது மொழிபெயர்ப்பு சரியாக அமைந்து பாராட்டப்பட்டால் அது எனது சொந்தப் படைப்பு போலவே தோன்றும்.

ஒரு மொழிபெயர்ப்பில் நேரடியான கருத்துக்கள் பொதுவான நிகழ்வுகள் மற்றும் எளிய உரையாடல்களை மொழிபெயர்க்கும் போது எளிதாக உணர்கிறேன் வட்டார வழக்குகள் ,கலாச்சாரம் சார்ந்த சூழல்கள் ,மரபுத் தொடர்கள் மற்றும் உணர்வு பூர்வமான கவிதைகளை மொழிபெயர்க்கும் போது அது பெரும் சவாலாக அமைகிறது.

ஒரு வாசகனாக ஒரு படைப்பின் உள்ளார்ந்த ஆன்மாவைக் கண்டறிய முடியும்.  ஒரு வாசகனாக ஒரு படைப்பை அவசரப்படாமல் ஆழமாக வாசிப்பதன் மூலம் அதன் ஆன்மாவைக் கண்டறிந்து வரிகளுக்கிடையே இருக்கும் மறைமுகக் கருத்துகளையும் ஆசிரியர் சொல்லாமல் சொல்லும் உணர்வுகளையும் கூர்ந்து கவனித்தால் அது சாத்தியம் என்பேன்.

'விசாரணைக்கமிஷன்', 'காதுகள்','மின்சாரப் பூ', 'சஞ்சாரம்','கிருஷ்ண பருந்து', 'அனந்த சயனம் காலனி','அர்த்தநாரி' என்று நீங்கள் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்துள்ள  படைப்புகள் பெரும்பாலும் துயரத்தைப் பற்றிப் பேசுகின்றன. அவற்றின் நாயகர்கள் துயரங்களின் நாயகர்களாக இருக்கிறார்கள். இது தற்செயலானதா?

ஒரு மொழிபெயர்ப்பாளராக நான் இந்த நூல்களைத் தேர்வு செய்தது தற்செயலானது அல்ல .தமிழ் இலக்கியத்தின் மிக ஆழமான படைப்புகளை மலையாள வாசகர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவற்றை நான் தேர்ந்தெடுத்தேன். மனித வாழ்வின் துயரங்களையும் எளிய மனிதர்களின் அறப்போராட்டங்களையும் பேசும் கதைகளுக்கே எல்லைகளைத் தாண்டி மனிதர்களைத் தொடும் அதிக ஆற்றல் உண்டு.

இந்தக் கதைகளில் வரும் நாயகர்களின் துயரமும் அவர்களின் மனிதநேயமும் என்னை ஆழமாகப் பாதித்தன.அதனால்தான் இந்த அற்புதப் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் தூண்டுதலாக வந்தது.
எனவே உணர்வு பூர்வமான சிறந்த இலக்கியங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எனது தேடலின் விளைவுதான் இந்த தேர்வு என்று சொல்ல வேண்டும்.

பெருமாள் முருகனுடன் ஷாஃபி

நீங்கள் கட்டடப் பணியாளராக வேலை பார்ப்பதை அனுதாபத்துக்குரிய ஒன்றாக ஊடகங்களில்
சித்தரிக்கப்படுவது பற்றி?

கட்டட வேலை என்பது ஒரு நேர்மையான உழைப்பு. அதை ஊடகங்கள் அனுதாபக் கண்ணோட்டத்தில் சித்தரிப்பது அவசியமற்றது. எந்த ஒரு வேலையும் போல அதுவும் மரியாதைக்குரிய ஒரு பணி தான். என்னுடைய உழைப்பை நான் பெருமையாகவும் சுயமரியாதையுடனும் பார்க்கிறேன். இதில் பரிதாபப்படுவதற்கு என்று எதுவும் இல்லை.

அதே நேரம் கட்டடத் தொழிலாளி அளவிற்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் இல்லாததாக இந்த இலக்கியப் பணி இருக்கிறதே என்று வருத்தம் உண்டா?

எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. கட்டட வேலை என்பது எனது வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது; எனது உழைப்பின் மதிப்பைக் கற்றுத்தருகிறது.
அதேபோல மொழியாக்கப் பணி என்பது வெறும் பணத்துக்காக செய்யப்படுவதும் அல்ல. அது எனது மனநிறைவிற்கும் ஆத்மார்த்தமான வெளிப்பாட்டிற்குமானது.
இரண்டையும் வெவ்வேறு தளங்களிலான அனுபவமாகவே பார்க்கிறேன். இதில் ஒப்பீடு செய்வதற்கு வருத்தப்படுவதற்கு ஏதும் இல்லை என்று நான் கருதுகிறேன்.

ஓரான் பாமுக் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் எழுத்தும் வாசிப்பும் என இருக்கிறார் . உங்கள் நேரமேலாண்மை எப்படி?

ஓரான் பாமுக் போன்ற எழுத்தாளர்கள் வாசிப்பையும் எழுத்தையும் மட்டுமே முழுநேரப் பணியாகச் செய்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற கட்டடத் தொழிலாளியாக இருக்கும் ஒருவர் அப்படிச் செய்வதற்குச் சாத்தியமில்லை. எனக்கு உடல் உழைப்பு சார்ந்த தொழிலே முக்கியமானதாக இருக்கிறது. எனவே என் சூழ்நிலைக்குத் தகுந்தபடி இரவு நேரத்தில் சோர்வினை அகற்றி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் எழுத்துப் பணியில் ஈடுபடுகிறேன்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு தொழில் முறையிலான சவாலாக இருக்கிறதா?

ஏ ஐ மொழிபெயர்ப்புத் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மைதான்.
தொழில்நுட்ப ரீதியான அல்லது சாதாரண உரைகளை மொழிபெயர்ப்பதில் ஏ ஐ வேகமாகவும் உதவுகிற ஒன்றாக இருக்கலாம்.
ஆனால் இலக்கிய மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை ஏ ஐ என்பதை மனித மொழிபெயர்ப்புக்கு மாற்றாக ஒரு போதும் நிறுத்த முடியாது .எனவே நமது பணி வேகத்தை உயர்த்தும் ஒரு துணைக் கருவியாக வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர ஒரு மொழி பெயர்ப்பாளரின் படைப்பாற்றலுக்கு அது சவாலாகவோ மாற்றாகவோ ஒருபோதும் அமைய முடியாது.

"மூலப் படைப்பாளியின் ஆன்மாவை என்னுள் முழுமையாக இறக்கி வைத்துக் கொண்டு என் மூலமாக தமிழ் மொழியில் அந்தப் படைப்பாளியை எழுத வைப்பதும் அதற்கு என்னை ஒரு மீடியமாக ஒப்புக் கொடுப்பதும் தான் மொழிபெயர்ப்பாளனாக எனக்கு திருப்தி அளிக்கும் விஷயம் "என்று  மொழிபெயர்ப்பாளர்   ஜி. குப்புசாமி கூறியுள்ளார் ?அந்த ஒப்புக்கொடுத்தலை நீங்கள் உணர்ந்ததுண்டா?

ஆம். இதை நான் நிச்சயமாக உணர்ந்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு என்பது வெறும் வார்த்தைகளை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுவது அல்ல. அது ஒரு படைப்பாளியின் ஆத்மாவை நமது உடலுக்குள் ஏற்றுக்கொள்ளும் ஒரு தவசீலமான செயல் , அதாவது தவம் போன்ற செயல் என்றே கூறுவேன்.

உங்களை இந்தப் பணியில் செயல்படத் தூண்டுவது எது? அந்தப் படைப்பா ? அதற்கான எதிர்வினைகளா?

என்னை இந்தத் துறையில் தொடர்ந்து இயங்க வைப்பது அந்த படைப்புதான் என்பதையே முதன்மையாகக் கூறுவேன்.
ஒரு பிரதியை வாசிக்கும் போது அது எனக்குள் ஏற்படுத்தும் ஆழமான உணர்வு பூர்வமான அசைவுகளும் பாதிப்புகளும் இந்த அற்புத அனுபவத்தை எனது மொழி வாசகர்களுக்கும் கடத்த வேண்டும் என்கிற தீராத விருப்பமே என்னை இயக்கும் முதன்மைச் சக்தியாக இருந்து ,நமது மொழியிலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும்.எனினும்
வாசகர்களின் எதிர் வினைகளும் பின்னூட்டங்களும் அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன.

மேலும் ஒரு படைப்பு எல்லைகளைத் தாண்டி விரிவான வாசகர்களைச் சென்றடைகிறபோது புதிய வாசகர்களை சென்றடைந்து அவர்கள் மனதைத்தொடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் இந்தப் பணியை மேலும் தீவிரத்துடன் தொடர்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.

’ஒரு படைப்பாளி இயல்பாக எழுதுகிறார். மொழிபெயர்ப்பாளர் மொழி நுட்பங்களை ஆராய்ந்து அணுகுகிறார்.
அந்த வகையில் படைப்பாளியை விடவும் மொழி அறிஞர்களை விடவும் அந்த மொழியின் பலம் ,வீச்சு ,மகத்துவம் ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தெரியும்’ என்பதை ஏற்கிறீர்களா?

ஆமாம். இதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் ஒரு படைப்பாளி தனது உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார் .
ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளர் இரண்டு மொழிகளின் பண்பாடு,மொழி நுணுக்கங்கள் மற்றும் வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்களை ஆராய்ந்து ஒப்பிடுகிறார். அதனால் மொழியின் பலம் ,வீச்சு மற்றும் மகத்துவத்தை மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டவராக  ஒரு மொழிபெயர்ப்பாளர்  இருக்கிறார் எனலாம்.

சுமார் 30 தலைப்புகளில் மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். இவற்றில்  பெண்படைப்பாளிகளின் படைப்புகள் 4 தான், இது ஏன்?

நான் எந்த நாவலையும் தேடித் தேர்ந்தெடுத்து மொழி பெயர்ப்பதில்லை. எழுத்தாளர்கள் கேட்டுக் கொள்வதையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தோன்றுவதையும் மட்டுமே நான் மொழி பெயர்க்கிறேன். நான் புத்தகங்களை ஆண் ,பெண் என்ற பேதம் இன்றி கதையின் நயத்தையும் உணர்வுகளையும் முதன்மையாகப் பார்த்துதான்  தேர்வு செய்கிறேன். பெண் எழுத்தாளர்களைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. அதிகம் பெண் எழுத்தாளர்களை எனக்குப் பரிச்சயம் இல்லை. எதிர்காலத்தில் நல்ல பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களை நிச்சயம் மொழி பெயர்ப்பேன்.

நீங்கள் மொழிபெயர்த்த ஜி. திலகவதியின்  ’ கல்மரம்’, சல்மாவின் ’ சாபம்’, தமயந்தியின் ’ நிழல் இரவு’, நசீமா ரசாக்கின் ’ மராம் பூ.’.. இந்தப்பெண் எழுத்தாளர்களின் படைப்புகளில் நீங்கள் காணும் ஒற்றுமை அல்லது தனித்துவம் என்ன?

பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் பெண்களின் மனப்போராட்டங்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான குரல் மற்றும் அவர்களின் சுயமரியாதை ஆகியவை மிக ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண் வாழ்வியலின் நுட்பமான உணர்வுகளையும் அணு அணுவான வலிகளையும் பாசாங்கு இல்லாமல் வெளிப்படுத்துவதே இவர்களது படைப்புகளின் பொதுவான தனித்துவமாகும்.

பவா செல்லத்துரையின் ’மேய்ப்பர்கள்’, ’சொல்வழிப் பயணம்’ ,’நிலம்’ என்ற மூன்று கட்டுரைத் தொகுப்புகளை மொழிபெயர்த்து இருக்கிறீர்கள் ? வீட்டிலேயே அவரது இணையரான கே.வி.ஷைலஜா என்கிற மொழி பெயர்ப்பாளர் இருக்கும்போது,அவர்  உங்களை அணுகியது எப்படி? பவாவுக்கும் உங்களுக்குமான நெருக்கம் எப்படிப்பட்டது?

பவா செல்லதுரை அவர்களுக்கும் எனக்கும் இடையே நீண்ட காலமாக நல்ல நட்பும் பரஸ்பர மரியாதையும் உள்ளது. அது ஓர் அண்ணன் தம்பி உறவு போன்றது . ஷைலஜா அவர்கள் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஷைலஜா தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழி பெயர்ப்பதில்லை. அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்குத்தான் மொழிபெயர்த்து வருகிறார். இந்தக் குறிப்பிட்ட கட்டுரைகளின் நடைக்கும் உணர்விற்கும் என் மொழி பெயர்ப்பு சரியாக இருக்கும் என்று பவா தோழமையுடன் நம்பி என்னை அணுகினார். அதனால்தான் அவருக்காக மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.

கவிதை நூல்களை மொழிபெயர்க்க ஆர்வம் காட்டாத நீங்கள் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் நூலை மட்டும் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

பொதுவாகக் கவிதை நூல்களை மொழிபெயர்ப்பது சவாலானது. அது மட்டுமல்லாமல் மலையாளத்தில் கவிதை நூல்கள் அதிகமாக விற்றுப் போவதில்லை. பதிப்பாளர்கள் மொழிபெயர்ப்புக் கவிதை நூல்களைப் பிரசுரம் செய்ய விரும்புவதும் இல்லை.
சீனு ராமசாமி அவர்கள் நேரடியாகக் கேட்டுக்கொண்டதனாலேயே அக்கவிதை நூலை மொழிபெயர்த்தேன்.

ஐந்து சாகித்திய அகாடமி நாவல்களை மொழிபெயர்த்து இருக்கிறீர்கள் அந்த அனுபவங்களை ஒப்பிட முடியுமா?

ஐந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்களை மொழி பெயர்த்தது எனக்குப் புதிய தளங்களையும் நுண்ணிய அனுபவங்களையும் தந்தது என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு காலகட்டங்களின் வெவ்வேறு மனித உறவுகளைப் பற்றிய கதைக்களங்களைக் கொண்டிருந்தன. அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான கதைக்களத்தாலும் மொழியாலும் என் மொழிபெயர்ப்புப் பயணத்தை வளப்படுத்திய சிறந்த அனுபவங்களாகும்.

எம்.வி.வெங்கட்ராமின்’காதுகள்’ மொழிபெயர்ப்பு உங்களைத் திடுக்கிட வைத்ததா? அந்தப் பிளவு மனம் கொண்ட மாலி பாத்திரம் உங்களைத் திகைக்க வைத்துத் தாக்கத்தை ஏற்படுத்தியதா?

’காதுகள்’ நாவலை மொழிபெயர்த்த அனுபவம் மறக்க முடியாது.’காதுகள்’ நாவல் என்னை மனதளவில் மிகவும் உலுக்கியது. அதில் வரும் மாலி என்ற கதாபாத்திரத்தின் பிளவு பட்ட மனநிலையும் அவன் சந்திக்கும் உளவியல் போராட்டங்களும் என்னை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு அந்தப் பாத்திரம் என் மனதை ஆக்கிரமித்து இருந்தது. அதிலிருந்து மீண்டு வெளிப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்புவது எனக்கு எளிதாக இருக்கவில்லை. அது ஒரு நீண்ட நெடிய மனரீதியான போராட்டமாகவே இருந்தது.

ஈழத்தின் போர்க்காலச் சூழல் தமிழர்களுக்குப் பரிச்சயமானது. இந்நிலையில்  கேரளத்தைச் சேர்ந்த நீங்கள் தீபச்செல்வனின் ’நடுகல் ’ நாவல் மொழி பெயர்த்த போது  அந்தச்சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்?

ஈழத்து போரின் வடுவையும் மனித துயரத்தையும் வெறும் செய்தியாக வாசிப்பதற்கும் அதை ஒரு இலக்கியப் படைப்பாக மொழிபெயர்ப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. தீபச்செல்வனின் 'நடுகல்' நாவலை மொழிபெயர்த்தபோது அதிலுள்ள ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் இருக்கும் மக்களின் வலியையும் அவர்களின் வாழ்வியலையும் ஆழமாக உணர முடிந்தது.ஈழத்தின் தனித்துவமான மொழியையும் அதன் அமைப்பையும் போராளி அமைப்புகளின் வீரியத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் குறையாமல் மலையாள வாசகருக்குக் கொண்டு சேர்ப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் பொறுப்பாகவும் இருந்தது. அந்த வரலாற்றுப் பதிவை என் மொழியில் கடத்தியது ஒரு கனமான அனுபவம்.

மொழிபெயர்ப்பில் யார் உங்களுக்கு முன்னோடிகள், வழிகாட்டிகள் ?

மொழிபெயர்ப்பில் எனக்கு எல்லா வகையிலான ஆதரவையும் வழங்கி ஊக்கப்படுத்தி வரும் குறிஞ்சி வேலன் அவர்கள் தான் என் வழிகாட்டி,முன்னோடி எல்லாமே.

மொழிபெயர்ப்பின் வழியாக வரும் படைப்புகள் அந்த மொழி படைப்பாளர்களை ஊக்கப்படுத்துமா ?

மொழிபெயர்ப்புப்படைப்புகள் ஒரு மொழியில் உள்ள எழுத்தாளர்களுக்குப் புதிய சிந்தனைகளையும் பாணிகளையும் கற்றுக் கொடுக்கின்றன. இது அவர்களை மேலும் சிறப்பாக எழுத ஊக்குவிக்கும்.

மூலப்பிரதியின் எழுத்தாளர்களைச் சந்தித்த அனுபவம் உண்டா? சந்திக்க விரும்பும் எழுத்தாளர் யார் ?

நான் பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடிய அனுபவம் பெற்று இருக்கிறேன். அவர்களை நேரில் சந்திக்கும் போது அவர்களின் படைப்புகள் மற்றும் இலக்கிய சிந்தனைகள் குறித்து உரையாடுவது என் வழக்கம். அப்படி பொன்னீலன்,தோப்பில் முகமது மீரான், அ.மாதவன், எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன், பவா செல்லத்துரை, சுப்ரபாரதிமணியன், யெஸ். பாலபாரதி, சல்மா , நரேன் ஆகிய எழுத்தாளர்களை நான் சந்தித்து இருக்கிறேன். அதே போல தில்லை, தீபச்செல்வன் ஆகியோரைச் சந்திக்கவும் விருப்பமாக இருக்கிறேன்.

உங்கள் மொழிபெயர்ப்புப் பணிகளுக்கான அங்கீகாரம், பாராட்டு பற்றி?

எனது மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரங்களும் விருதுகளும் எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் மேலும் தீவிரமாகப் பணியாற்றுவதற்கான ஊக்கத்தையும் அளித்துள்ளன. நல்லி திசைஎட்டும் விருது, உள்ளூர் பரமேஸ்வரன் ஐயர் விருது, படைப்புச் சுடர் விருது,கோவை விஜயா வாசகர் வட்டத்தின் கே .எஸ் .சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு விருது போன்று எனக்குக் கிடைத்த விருதுகள் பெருமைக்குரியவையாக இருக்கின்றன. வாசகர்களின் வரவேற்பும் இது மாதிரியான விருதுகளின் அங்கீகாரங்கள் அனைத்தும் எனக்கு மொழிபெயர்ப்புப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்கள் ஆகும் .இவை எனது உழைப்பிற்குச் சான்றாகவும் சிறந்த இலக்கியங்களைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சேர்க்கும் எனக்கு என் பொறுப்பை மேலும் உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.

உங்கள் அடுத்த இலக்கு ? திட்டங்கள் ?

என் மொழிபெயர்ப்புப் பணியில் திட்டங்கள் என்று நான் வகுத்துக் கொள்ளவில்லை.அப்படி வரையறுக்கப்பட்ட திட்டங்கள் என்று எனக்கு எதுவும் இல்லை. சிறந்த தமிழ் இலக்கிய படைப்புகளை மலையாள மொழியில் மொழிபெயர்த்துச் சேர்க்க வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது.அதற்கான பாதையில் முயற்சி செய்து கொண்டு இருப்பேன் அவ்வளவுதான்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram