கால் நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழிலிருந்து தெலுங்கிற்கு ஏராளமான இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்து வருபவர் ஜில்லேள்ள பாலாஜி. இவர் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
நேரடியாகத் தெலுங்கில் எழுதும் ஓர் எழுத்தாளராகவும், தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழிபெயர்ப்பவராகவும் இயங்கி வருகிற பாலாஜி திருப்பதியில் வசிக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்!
உங்களைப் பற்றிய அறிமுகம் ?
தெலுங்குக்காரர்கள் அனைவருக்கும் குடும்பப் பெயர் இருக்கும். அப்படி எங்கள் குடும்பப் பெயர் 'ஜில்லேள்ள' என்பது இணைந்து என் பெயர் ஜில்லேள்ள பாலாஜி என்றானது.
நான் 1961 இல் திருத்தணியில் பிறந்தேன். எனது அப்பா திருத்தணியில் சர்வேயராக வேலை பார்த்தார்.
என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்காக்கள். மூன்றாவதாக நான். எனது மூன்று வயதில் அம்மா இறந்து விட்டார்.
நான் திருத்தணியில் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். சிறுவயதிலேயே எங்கள் அம்மா இறந்து விட்டதால் எங்களைக் கவனித்துக்கொள்ள அப்பா மறுமணம் செய்து கொண்டார். என்னுடைய சித்திக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். தந்தையின் வேலை காரணமாகக் குடும்பம் சித்தூருக்கு இடம் பெயர்ந்தது. அங்கே தான் எனது பள்ளிப்படிப்பு முடிந்து
இன்டர்மீடியட், டிகிரி எல்லாம் படித்தேன். சித்தூரில் 1969 முதல் 1995 வரை இருந்தேன். தந்தை மறைந்த பிறகு எனது சித்தியின் முயற்சியால்தான் எனது திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் நான் 1995 இல் திருப்பதிக்கு வந்து விட்டேன் .
திருத்தணியில் பிறந்ததால் தமிழ் சுலபமாக வந்ததா? தமிழ் மொழி கற்றுக் கொண்டது எப்படி?
திருத்தணியில் தமிழ் பேசுபவர்களுடன் பேசிப்பேசி தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பேன். சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர் படங்களைப் பார்ப்பேன். சினிமா போஸ்டர்களில் இருக்கும் பெரிய பெரிய எழுத்துக்களை வாசித்து வாசித்துக் கற்றுக் கொண்டேன். அப்போது நூலகங்கள் செல்வது என் வழக்கம். அங்கே ராணி, குமுதம், ராணி முத்து, கல்கி, ஆனந்த விகடன்… போன்றவற்றைப் பார்த்துப் படிக்கக் கற்றுக் கொண்டேன். இப்படி நான் பள்ளிக்கூடம் செல்லாமலேயே தமிழ் மொழியை நன்றாகப் படிக்கக் கற்றுக் கொண்டேன். தமிழ் எழுத்து வகை எனக்கு ஏறக்குறைய இந்தி போலவே தெரியும். எனக்கு இந்தி எழுத்துக்கள் தெரியும், தமிழ் சற்றுக் கடினமாக இருந்தது. இருந்தாலும் தெரிந்து கொண்டு வாசிக்கக் கற்றுக் கொண்டேன்.
புத்தகங்கள், வாசிப்பு உலகம் என்று எப்போது நுழைந்தீர்கள்?
எங்கள் சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் தொடங்கிவிட்டது. காரணம் எனது அப்பா. அவர் வீட்டுக்கு புத்தகங்கள் வாங்கி வருவார். அதை நாங்கள் மூவரும் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்து படிப்போம். இது எங்களுக்குப் பழக்கமாகவே இருந்தது. சித்தூரில் இருந்து திருப்பதி வந்தது எனது வாழ்க்கையில் மட்டும் அல்ல எழுத்து, இலக்கியம் சார்ந்தும் ஒரு புதிய திருப்பு முனையான காலம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அங்கே வந்து தான் நான் நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். தெலுங்கு மட்டுமல்ல தமிழையும் மெல்ல மெல்ல படிக்கக் கற்றுக் கொண்டு தமிழில் உள்ள பிரபல வார இதழ்களையெல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்கும்போதே எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் வந்து எழுதிப் பார்க்க வேண்டும் என்றும் தோன்றியது.
இலக்கிய ஈடுபாட்டை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்? முதலில் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்? இதுவரை தாய் மொழி தெலுங்கில் எழுதியவை?
எனக்குச் சிறுவயதிலேயே எழுத்தார்வம் வந்துவிட்டது. நான் எனது இளமைக் காலத்தில் எனது 20 வயதிலேயே கவிதைகள், சிறுகதைகள் எழுத ஆரம்பித்து விட்டேன். எனது முதல் எழுத்து என்று எனது கவிதை 1983 இல் பிரசுரமானதைத் தான் கூற வேண்டும். பிறகு நிறைய கதைகள்,கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். திருப்பதியில் வாராவாரம் சனிக்கிழமை தோறும் எழுத்தாளர்கள் ஓரிடத்தில் கூடுவார்கள். அப்படிக் கூடித் தங்கள் எழுத்து, இலக்கியம் பற்றிப் பேசுவார்கள். தங்களுக்குள் விமர்சனம் செய்வார்கள். நான் ஒரு பார்வையாளனாக அங்கே செல்வதுண்டு. எல்லாவற்றையும் அமைதியாக உற்றுக் கவனிப்பேன். இலக்கியம், படைப்பு, விமர்சனம் பற்றிய ஒரு புரிதல் என்பது அங்கே தான் எனக்கு ஏற்பட்டது. நான் அப்போது எழுதத் தொடங்கி விட்டாலும் எதுவும் பேச மாட்டேன். அப்படிப் போய்க் கொண்டிருந்த போது அங்கே மதுராந்தகம் நரேந்திரா அவர்களைச் சந்தித்தேன். அவர் ஆங்கிலப் பேராசிரியர், திருப்பதி பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தார். அவரது அப்பா மதுராந்தகம் ராஜாராம், தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். தெலுங்கில் புகழ்பெற்ற பெரிய எழுத்தாளர். 800 கதைகளுக்கும் மேல் எழுதியவர்.அப்படிப்பட்ட பெரிய எழுத்தாளரின் மகனான நரேந்திராவைச் சந்தித்தபோது அவர் என்னைப்பற்றி விசாரித்தார். நான் நன்றாகத் தமிழ் பேசியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எனக்குத் தமிழில் பேச மட்டுமல்ல படிக்கவும் தெரியும் என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் தமிழ் கற்றுக் கொண்ட கதையை எல்லாம் அவரிடம் சொன்னேன்.நான் மொழிபெயர்ப்புக்குள் வர அவர்கொடுத்த ஊக்கம் ஒரு காரணம் என்பேன்.
மொழிபெயர்ப்பு உலகத்திற்குள் எப்படி வந்தீர்கள்?
நான் எழுதத் தொடங்கிய காலத்தில் தெலுங்கில் பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் இரண்டு மொழிகளும் எனக்குத் தெரிந்ததால் நான் முதலில் ஒரு முயற்சியாக இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'சுமங்கலி பிரார்த்தனை' என்ற கதையைத் தெலுங்கில் 2002 இல் மொழிபெயர்த்து இருந்தேன். அது மதுராந்தகம் நரேந்திராவுக்குப் பிடித்திருந்தது. அவர் என்னைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக அறிமுகம் செய்வார். பாலாஜிக்கு தெலுங்கு மட்டுமல்ல தமிழும் நன்றாக வரும் என்று கூறுவார். அவர் ஒருநாள் "பாலாஜி… இரண்டு மொழிகளும் தெரிந்த நீங்கள் ஏன் தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது?'' என்று கேட்டார்.அன்று அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் தூண்டப்பட்டேன். ஒருநாள்
நீங்கள் ஜெயகாந்தனின் நாவலை மொழிபெயர்க்க முடியுமா? என்று கேட்டார். நான் பதறினேன். அவரை எனக்குத் தெரியாது. அவர் நாவல்களை நான் படித்ததில்லை. அவரது முகவரி கூடத் தெரியாது. அதற்கு அனுமதி எல்லாம் வாங்க வேண்டும். ஒன்றுமே எனக்குத் தெரியாது, என்னால் முடியுமா? என்றேன் .அவர் ஒரே வாரத்தில் ஜெயகாந்தனின் நாவலை மட்டுமல்ல, அவர் தந்த அனுமதிக் கடிதத்தையும் வாங்கிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார். நான் ஆச்சரியப்பட்டேன். இப்படித்தான் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' நாவலைத் தெலுங்கில் மொழிபெயர்த்தேன். அது 'ஆந்திர ஜோதி 'நாளிதழில் திங்கள் முதல் சனி வரை மூன்று மாதங்கள் தொடராக வெளியானது. அது 'கல்யாணி வெட்ஸ் திவாகர்' என்ற பெயரில் வந்தது.
எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்தித்ததுண்டா?
நான் மொழி பெயர்த்த ஜெயகாந்தனின் நாவல் ஆந்திர ஜோதி நாளிதழில் தொடராக வந்த போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. அந்தத் தொடர்கதை முடியும் தறுவாயில் ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயகாந்தன் பேட்டி அடுத்த வாரம் இடம்பெறும் என்று பத்திரிகையில் அறிவிப்பு செய்து விட்டார்கள். அதற்காக ஜெயகாந்தனைப் பேட்டி எடுக்க வேண்டும். ஆனால் எந்த முன் முயற்சியும் எடுக்கவில்லை, தைரியமாக அறிவிப்பு கொடுத்து விட்டார்கள். அந்த நிலையில் சென்னையிலிருந்த ஆந்திரஜோதி நிருபரை ஜெயகாந்தனிடம் பேசி சந்திக்க நேரம் கேட்டு அனுப்பி வைத்தார்கள். அவர் அரை மணி நேரம் தாமதமாகப் போயிருக்கிறார். "உனக்கு நேரத்தின் அருமை தெரியவில்லை, உனக்கு பேட்டி எல்லாம் கொடுக்க முடியாது போ…" என்று அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்.
இதைக் கேள்விப்பட்டபோது அலுவலகத்தில் பதற்றமாகி உடனே எனக்கு போன் செய்தனர். "என்ன செய்வீர்களோ எங்களுக்குத் தெரியாது, நீங்கள் தான் ஜெயகாந்தனிடம் பேசி பேட்டி எடுத்துக் கொண்டு வர வேண்டும்" என்றார்கள். நான் ஜெயகாந்தனிடம் தொலைபேசியில் பேசி அந்த நபர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு சந்திக்க நேரம் கேட்டேன். அவரும் வரச் சொன்னார். அப்படி நாங்கள் மூன்று பேர் சென்னைக்குச் சென்றோம். நான், நரேந்திரா, ஆந்திரஜோதியின் துணை ஆசிரியர் ஒருவர் என்று மூன்று பேர் சென்றோம். எதற்கு வம்பு என்று அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விட்டோம். அந்த மூன்று பேரில் தமிழும் தெலுங்கும் தெரிந்தவன் நான் மட்டும்தான். நரேந்திராவுக்கு தெலுங்கும் ஆங்கிலமும் தெரியும். உடன் வந்த ஒருவருக்குத் தெலுங்கு மட்டுமே தெரியும். எனவே நான் தான் ஜெயகாந்தனிடம் கேள்விகளைக் கேட்டேன். நேர்காணலில் உரையாடலுக்காக எங்களை வீட்டுமாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே குடிசை போல் ஒரு வீடு இருந்தது. அங்கே தான் இலக்கிய சம்பந்தமான சந்திப்புகள், உரையாடல்களை எல்லாம் வைத்துக் கொள்வாராம். அங்கே தான் உட்கார்ந்து நாங்கள் பேசினோம். நான் பேசியபோது என்னிடம் நன்றாக மனம் திறந்து பேசினார். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகவும் சுவாரஸ்யமாகவும் பதில் கூறினார். அந்த நேர்காணலுக்காக இரண்டரை மணி நேரம் பேசினார். தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்கிற எண்ணம் இல்லாமல் மிகவும் எளிமையாகவும் மனம் திறந்தும் பேசினார். அந்தப் பேட்டி மிகவும் சிறப்பாக வந்திருந்தது. அவரிடம் பேட்பதற்கு என்னிடம் ஒரு கேள்வி மீதம் இருந்தது. அடுத்ததாக நான் மொழி பெயர்க்க வேண்டிய நாவல் எதுவென்று அவரிடமே கேட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் ‘உங்கள் எழுத்தில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது?’ என்று கேட்டேன். அவர் ‘பிடிக்காமலா நான் எழுதுகிறேன்?’ என்றார் சற்றே கோபமாக. ‘நான் எழுதியது எல்லாமே எனக்குப் பிடித்தது தான்’ என்றார். அதற்கு மேல் நான் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் அவர் பேச்சில் ஒரு நாவலைப் பற்றி கொஞ்சம் சிலாகித்துப் பேசினார். அதையே அவரது அடுத்த நாவலாக நான் எடுத்துக் கொண்டேன். அதுதான் ' ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'. அதையே நான் பிறகு 'ஒக மனுஷி ஒக இல்லு ஒக பிரபஞ்சம்' என்று மொழிபெயர்த்தேன். அது 2006 ஆம் ஆண்டு சதுரா மாத இதழில் வெளியானது.
தொடர்ந்து உங்கள் மொழிபெயர்ப்புப் பயணம் எப்படி இருந்தது ?
நான் ஆரம்பத்திலேயே கதை, கவிதை என்று எழுத ஆரம்பித்தவன்.நான் ஒரு பெரிய எழுத்தாளராக வேண்டும் என்ற நினைப்பில் இருந்தவன்.ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மொழிபெயர்ப்பிலேயே இறங்கி மூழ்கி விட்டோமோ, இது நமது படைப்பு ஊக்கத்தைக் குறைத்து விடுமோ என்ற ஒரு பயம் எனக்குள் இருந்தது. அப்போது நண்பர்கள் சிலர் மட்டும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அப்படியே தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்தேன். நண்பர்கள் கொடுத்த தூண்டுதலால் தொடர்ந்து ஜெயகாந்தனின் 16 கதைகளை மொழிபெயர்த்தேன். அவருடைய ஐந்து நாவல்களை மொழிபெயர்த்தேன். காத்திருக்க ஒருத்தி, இறந்த காலங்கள்… குறு நாவல்கள் , பாரிசுக்குப் போ, கங்கை எங்கே போகிறாள்… போன்றவை தினசரிகளில் தொடர்களாக வெளிவந்தன.இப்படித் தமிழிலிருந்து 13 நாவல்களை மொழிபெயர்த்தேன்.
என் அக்கா பரிமளா ஒரு ராஜேஷ்குமார் ரசிகை. சாப்பிடும் போது கூட அவரது நாவல்களைப் படித்துக் கொண்டிருப்பார். அவர் ஒரு மாறுதலுக்காக ராஜேஷ்குமார் நாவலைத்தான் மொழிபெயர்த்துப் பாரேன் என்று கூறியதால் 2008 இல் ‘உன்னை விட்டால் யாரும் இல்லை, ஒன்றும் ஒன்றும் மூன்று, நீல நிற நிழல்கள்’… போன்றவற்றை மொழி பெயர்த்தேன். ஜெயகாந்தனின் பால் வடியும் முகம், பிழைப்பு, இயந்திரம், கேவலம் ஒரு நாய், பாவம் அந்தப் பசு, சுமைதாங்கி, கண்ணாமூச்சி, நான் ஜன்னல் அருகே உட்கார்ந்திருக்கிறேன், பூ வாங்கலையோ பூ… போன்ற படைப்புகளை மொழிபெயர்த்தேன்.சுஜாதாவின் கதைகளையும் மொழிபெயர்த்தேன்.இது மட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய ‘செவ்வாழை’, மற்றொரு முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய ‘அணில் குஞ்சு’ போன்ற கதைகளையும் மொழிபெயர்த்தேன்.
மொழிபெயர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் நாம் செல்லும் பாதை சரிதானா என்கிற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அப்போது எனக்கு மொழிபெயர்ப்புக்காக திசை எட்டும் விருது கிடைத்தது.
அது மட்டுமல்ல 2010 இல் எனக்கு 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அப்போது எனக்குள் ஒரு நம்பிக்கையும் உத்வேகமும் பிறந்தது. நாம் செல்கிற பாதை சரிதான் என்கிற தெளிவும் கிடைத்தது. அந்த விருதுகள் எனக்குப் பெரிய அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தன.
நவீன இலக்கியப் பக்கம் வந்து எஸ். ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலை மொழி பெயர்த்த அனுபவம் எப்படி இருந்தது?
மொழிபெயர்ப்புப் பணியில் தரமான படைப்புகளை அறிமுகம் செய்யும் வகையில் எனது நண்பரும் மொழி பெயர்ப்பாளருமான குறிஞ்சிவேலன் அவர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். எனக்குப் பலவற்றையும் படிக்க நேரம் இல்லாததால் எதையெல்லாம் மொழிபெயர்க்கலாம் என்று குறிஞ்சிவேலன் அவர்கள் எனக்குப் பரிந்துரை செய்வார்.அப்படி அவர் பரிந்துரைத்தபடி 'யாமம்' நாவலை 2014 இல் நான் மொழிபெயர்த்தேன்.
ஜெயகாந்தன் தொடங்கி கல்கி வரை பலரது கதைகளைத் தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்திருந்தாலும் 'யாமம்' அனுபவம் புதிதாக இருந்தது.அந்த நாவலைப் பற்றி தெரியாது என்றும் அளவில் பெரியதாக இருக்கிறது என்றும் அதை வெளியிடுவதற்கு யாருமே முன்வரவில்லை. பலரிடம் வேண்டுகோள் வைத்தேன். யாரும் தயாராக முன்வரவில்லை. கடைசியில் ‘சதுரா’ இதழ் ஆசிரியரிடம் கேட்டேன். இவ்வளவு பெரிய புத்தகத்தைப் போட முடியாது சின்னதாகச் சுருக்கித் தாருங்கள் என்று கேட்டார். அப்படி 30 சதவீதம் எடிட் செய்து ,மேலும் 10 சதவீதம் ,மேலும் 5 என்று சுருக்கி அதைக் கொடுத்தேன். அதை சதுரா இதழில் வெளியிட்டார். அதற்காக அந்த இதழில் வழக்கமாக வரும் பகுதிகளை எல்லாம் நிறுத்திவிட்டு இந்த நாவலை மட்டும் வெளியிட்டார். இருந்தாலும் எனக்குத் திருப்தி வரவில்லை. அந்த நாவலைத் தெலுங்கில் முழுமையாகப் படிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
பலரிடம் கேட்டுப் பார்த்தேன். யாரும் ஆர்வம் காட்டவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் அது சாத்தியமாகி இருக்கிறது. அண்மையில் சென்ற மாதம் தான் ஹைதராபாத்தில் அந்த 'யாமம்' முழு நாவல் தெலுங்கில் வெளியிடப்பட்டது. நான் அந்த விழாவில் கலந்து கொண்டு நாவலின் மொழிபெயர்ப்பு அனுபவத்தைப் பற்றிப் பேசினேன்.
நாவல்கள் மட்டுமல்ல எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்று நிறைய மொழிபெயர்த்தேன். தமிழில் வந்த தலித் சிறுகதைகளையும் மொழிபெயர்த்தேன்.
பிறகு எஸ். ராமகிருஷ்ணனின் 'சஞ்சாரம்' நாவலைத் தெலுங்கில் மொழிபெயர்த்தேன். பிறகு பவா செல்லத்துரையின் 'மேய்ப்பர்கள்', 'சொல்வழிப் பயணம்' போன்றவற்றை மொழிபெயர்த்து சென்ற 2025 ஆம் ஆண்டு வெளியானது.
நீங்கள் இதுவரை தாய் மொழி தெலுங்கில் எழுதியவை ?
நான் 170 சிறுகதைகளும், 'ஜீவிதமொக பயணம் 'என்று ஒரு நாவலும் எழுதி இருக்கிறேன். என்னுடைய 10 சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. 'கவன கதம்பம்' என்கிற கவிதை தொகுப்பும் வெளியாகி உள்ளது.
எனது தெலுங்குப் படைப்புகளுக்கு… ‘குரு ஜாதா கதை விருது, குப்பம் ரெட்டம்மா இலக்கிய விருது இரண்டு முறை, தெலுங்கு பாஷா விகாச விருது, குரு தேவோ பவ விருது, உகாதி விசிஷ்ட விருது, ஸ்ரீமதி காமாட்சி பாய் ஸ்ரீ நாராயணராவ் இலக்கிய விருது, விஸ்வஸ்ரீ சாஹிதி சமக்யா விருது’… போன்ற சுமார் 10 விருதுகள் வாங்கி இருக்கிறேன்.
தெலுங்கில் ஏதாவது படைப்புகள் எழுதிக்கொண்டிருக்கும் போது,மொழிபெயர்ப்புக்கான பாராட்டுகள், விருதுகள் என்று எனக்கு வரும்போது மீண்டும் மொழிபெயர்ப்பில் இறங்கி விடுவேன். இப்படியே மாறி மாறி நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
மொழிபெயர்ப்பை இரண்டாம் பட்சமாகப் பார்க்கும் போது என்ன உணர்வீர்கள்?
மொழிபெயர்ப்பின் மீது இங்கே ஒரு இளக்காரப் பார்வை உள்ளது.மொழிபெயர்ப்பையும் மொழிபெயர்ப்பாளர்களையும் தெலுங்கில் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.சிலர் இந்தப் பணியை மதிப்பதில்லை. ஏளனமாகப் பேசுவார்கள்.
மொழிபெயர்ப்பு என்ன பெரிய வேலையா? ஒருவர் எழுதியதை அப்படியே காப்பி அடிப்பது போன்றது தானே என்று கேட்பார்கள். அப்போதெல்லாம் நான் சோர்வடைந்து விடுவேன். இடைவெளி விட்டு விடுவேன். அப்படி இரண்டு ஆண்டுகள் எதையுமே மொழி பெயர்க்காமல் கூட இருந்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து என்னால் அப்படி இருக்க முடியாது. ஒரு நல்லதொரு படைப்பு அமைந்து மொழிபெயர்ப்பு சரியாக அமைந்து பாராட்டுகள் வரும்போது மாறிவிடுவேன். அண்மையில் 'யாமம்' நாவல் வெளியீட்டு விழாவில் கூட எனது இந்தக் குமுறலை நான் வெளியிட்டிருந்தேன். தமிழில் எனக்கு மொழிபெயர்ப்புக்காக நான்கு விருதுகள் கிடைத்தன. ஆனால் தெலுங்கில் மொழி பெயர்ப்பாளர்கள் என்றால் யாரும் மதிப்பதில்லை, கண்டு கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தேன் .
மொழிபெயர்ப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதை ஏதோ நகல் எடுக்கும் பணி போலப் பார்க்கிறார்கள். அது மறு உருவாக்கம் செய்வதாகும். மொழிபெயர்க்கப்படும் படைப்பின் மூல எழுத்தாளரின் ஆழ்மனத்தை அறிந்து கண்டுபிடிப்பது, அந்த மொழியைக் கொண்டு வருவது போன்றவை அடங்கியது தான் மொழிபெயர்ப்பு. அது அத்தனை சுலபமல்ல.
மொழிபெயர்ப்பு சார்ந்த உங்களது அணுகுமுறை நீங்கள் பின்பற்றும் வரைமுறைகள் அளவுகோல்கள் என்று ஏதாவது இருக்கிறதா?
மொழிபெயர்ப்பையும் செதுக்க வேண்டி இருக்கும். அதை இரண்டு வகையாகக் கூறுவார்கள். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பதை ’யதாதத அனுவாதம்’ என்பார்கள். அதே பெயர், அதே ஊர் என்று அப்படியே எழுதுவது எந்த மாற்றமும் செய்யாமல் இருப்பதை இப்படிக் கூறுவார்கள். அதில் எந்த மாற்றம் செய்தாலும் அது அநியாயம், அந்தப் படைப்புக்குச் செய்யும் துரோகம் என்பார்கள். இன்னொன்று ’ஸ்வேச்சானுவாதம்’ எனப்படும். அது சிறு மாற்றங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் இருக்கும்.
மொழிபெயர்ப்பாளருக்கு எடிட்டிங் அறிவு இருக்க வேண்டும். சிலவற்றை முன்பின் மாற்றினாலே அதன் அழகும் தெளிவும் வெளிப்படும். அப்படி மாற்ற முடியும் ஒரு படைப்பு நாம் நினைத்த மாதிரி வந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு ஒன்றும் இல்லை.
நான் முதலில் மொழி பெயர்த்த போது தமிழில் இருந்ததைத் தெலுங்கிற்கு பெயர்களை மாற்றி ஊர்களை மாற்றி மொழிபெயர்த்திருந்தேன்.
அதைப் பார்த்த மூத்த மொழிபெயர்ப்பாளர் ஏ.ஜி. எத்திராஜுலு என்னிடம் வருத்தப்பட்டார்.'' உன் விருப்பத்திற்கு இதையெல்லாம் மாற்றி விட்டாய் இது மிகவும் தவறு. கதாபாத்திரங்களை மாற்றுவதற்கு நமக்கு உரிமை இல்லை. அப்படி மாற்றினால் அது அவர்களுக்கு செய்யும் துரோகம்" என்றார். அதிலிருந்து நான் எதையும் மாற்றுவதில்லை.
ஆனால் மூலப்படைப்பு சிக்கலாக இருக்கும் போது அதை எளிமைப் படுத்துவது தவறில்லை என்று நான் நினைக்கிறேன். அது அவர்கள் கதையை மாற்றுவதாக ஆகாது. அவர்களது படைப்பை வாசகனுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் நாம் செய்வது என்று நான் அதைக் கூறுவேன். படிக்கும்போது நெருடும் இடங்களில் , உறுத்தும் இடங்களில் வாசகன் திணறும் இடங்களில் அந்த மொழியை நாம் சற்று எளிமையாகத் தரலாம். அது ஒரு மொழிபெயர்ப்பாளரின் கடமை என்று நான் நினைக்கிறேன். இதனை மூலப்பிரதியை மாற்றுவதாக எண்ணக் கூடாது.
ஒரு படைப்பை எந்தச் சிக்கலும் இல்லாமல் வாசகனிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. அதற்காகக் கூடுதலாகவும் குறைத்தும் செய்யக்கூடாது. உள்ளது உள்ளபடி செய்ய வேண்டும். இரண்டு பிரதியை அருகருகே வைத்துப் பார்த்தால் கண்ணாடி போல் ஒன்று போல் தெரிய வேண்டும். அந்தப் படைப்பைத் தாண்டிச் செல்லக்கூடாது.
அந்த மீட்டர் சரியாக இருக்க வேண்டும். நான் ஓர் எழுத்தாளராக இருப்பதால் அந்த மொழியைச் சிறப்பாகக் கையாள முடிகிறது.
மொழிபெயர்ப்பாளன் என்பவன் இரண்டு மொழிகளையும் சந்திக்க விட்டு உரையாட விடுகிறான்; உறவாட விடுகிறான். அந்தப் பணி உன்னதமானது. நான் எனக்கு திருப்தியானது வரும் வரை மாற்றி மாற்றி நான் மேம்படுத்திக் கொண்டே இருப்பேன். பிரதி அச்சுக்குச் செல்லும் வரை இந்த மாற்றங்களைச் செய்து கொண்டே இருப்பேன்.
என் வேலையில் திருப்தி ஏற்பட்டால்தான் நான் அதை இறுதிப்பிரதியாகக் கொடுப்பேன்.
இது உழைப்பை வாங்குகிற பணிதான் என்றாலும் அந்தப் படைப்புக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அதை நான் சமரசம் இல்லாமல் செய்ய முயற்சி செய்வேன்.
நான் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மட்டுமே மொழிபெயர்ப்பு செய்வேன். ஒரு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதை மீண்டும் நான் மொழி பெயர்க்க மாட்டேன். அதில் அவ்வளவு துல்லியம் கிடைக்காது என்பது என்னுடைய நம்பிக்கை.
மொழிபெயர்ப்பு செய்யும் அந்த படைப்பாளியின் பிற படைப்புகளைப் படித்தால் அந்தக் கதாசிரியரின் மொழியைப் புரிந்து கொள்ள உதவும். ஆனால் அதற்கு நேரம் கிடைப்பதில்லை.
ஒரு படைப்பை மொழிபெயர்க்கும் போது எழுதியவர் நல்லவரா கெட்டவரா, அவர் குடிகாரரா, போதை அடிமையா போன்ற தனிப்பட்ட விஷயங்களை மறந்து விட வேண்டும். படைப்பை மட்டுமே பார்க்க வேண்டும். அந்த எழுத்தாளர் எந்தச் சூழலில் எப்படி எழுதி இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் ஒருவர் மொழிபெயர்த்த அதே படைப்பை மீண்டும் மொழி பெயர்க்க மாட்டேன்.
அப்படி நேஷனல் புக் ட்ரஸ்ட்க்காக மூத்த மொழிபெயர்ப்பாளர் ‘மாலதி செந்தூர்’ என்பவர் 'சில நேரங்களில் சில மனிதர்களை' மொழிபெயர்த்திருந்தார். அவர் காலமாகிவிட்டார். மீண்டும் என்னிடம் கேட்டபோது எனக்கு மூத்தவரான அவருக்கு மரியாதை செய்யும் வகையில் அதை நான் மொழி பெயர்க்கவில்லை.
நான் மொழிபெயர்ப்பு செய்யும் நூலை அந்த மூலக்கதாசிரியருக்கு அனுப்பி விடுவேன். அதை எனது வழக்கமாக வைத்திருக்கிறேன். இணையத்தில் வந்தால் அதை இணைப்பையும் அவர்களுக்கு அனுப்பி வைப்பேன்.
நான் நல்ல படைப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கிறேன். சிலவற்றைப் பதிப்பகத்தார் கொடுப்பார்கள். அதன்படி செய்வேன்.
உங்கள் பணி எப்போது இலகுவாக இருக்கிறது? எப்போது கடினமாக சவாலாக மாறுகிறது?
சமகாலப்படைப்பு என்றால் அதை மொழிபெயர்ப்பது சுலபம். ஜெயகாந்தன் படைப்புகளை வாசித்து அவருக்கும் எனக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. அவரது படைப்புகளைப் புரிந்து கொள்வதிலோ மொழிபெயர்ப்பதிலோ எனக்கு எந்தச் சிரமமும் ஏற்பட்டதில்லை. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'யாமம்' நாவலை மொழிபெயர்த்த போது சில சொற்கள் சில இடங்களில் சந்தேகங்களை எழுப்பியது. அதையெல்லாம் குறித்துக் கொண்டு அவரிடம் விளக்கம் பெற்றுத்தான் அதை நான் மொழிபெயர்த்தேன்.
சாகித்ய அகாடமியிலிருந்து கவிஞர் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' படைப்பை மொழிபெயர்க்கச் சொல்லி 5 அத்தியாயங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் முதலில் படித்தபோதே இது நம்மால் செய்ய முடியாது என்று தோன்றியது. ஏனென்றால் அந்த அளவிற்கு வட்டார வழக்கும் அந்த பேச்சுமொழியும் வார்த்தைகளும் வேறு மாதிரியாக இருந்தன. எனவே நான் மொழிபெயர்க்க மறுத்து விட்டேன். இப்படி என்னால் முடிந்ததை மட்டுமே செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் விளையும் பயன் என்ன?
ஒரு மொழியிலுள்ள இலக்கியத்தின் போக்கையும், தரத்தையும் அறிவதற்கு மொழிபெயர்ப்பு நூல்கள் உதவிகரமாக இருக்கும். 'யாமம்', 'சஞ்சாரம்' தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தபோது அதைப் படித்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்படிக் கூட எழுதுவார்களா என்று பேசிக்கொண்டார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘நீங்கள் இப்படி முயற்சி செய்யலாமே’ என்று கேட்டேன். ‘எஸ் ராமகிருஷ்ணன் மிகவும் செறிவாக எழுதியிருக்கிறார். அது பெரிய விஷயம்’ என்று ஆச்சரியப்பட்டுப் பேசினார்கள். தமிழ்நாட்டில் இலக்கியத்திற்காக எவ்வளவோ செயல்கள் நடக்கின்றன. புத்தக கண்காட்சியில் ஏராளமான ஸ்டால்கள் வைக்கிறார்கள். பதிப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகம்.
மொழிபெயர்ப்புக்காக எவ்வளவோ செலவு செய்கிறார்கள். தெலுங்கில் அப்படி இல்லை. ஆனால் தங்கள் இலக்கியம் உலகம் பூராவும் செல்ல வேண்டும் என்று மட்டும் விரும்புகிறார்கள். முயற்சியும் செய்யாமல், பணமும் செலவழிக்காமல் இது எப்படிச் சாத்தியமாகும்? தமிழில் நடக்கும் முயற்சிகள் பெரிய அளவிலானவை. அவையெல்லாம் மொழிபெயர்ப்பின் மூலம் தான் தெலுங்கிற்குத் தெரிய வருகின்றன.
அறிவியல் முன்னேற்றம் தொழில்நுட்ப மாற்றம் இந்தப் பணியைப் பாதிக்கிறதா?
நான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் இயங்கி வருகிறேன். முதலில் பேனாவால் எழுதுவேன். பிறகு யாரிடமாவது கொடுத்து டிடிபி செய்வேன். அதை திருத்தம் பார்க்க வேண்டும். இப்போது நேரடியாகவே கணினியில் டைப் செய்து விடுகிறேன். திருத்தித் திருத்தி அதை மேம்படுத்துவேன். இப்படி நானும் மாறி இருக்கிறேன்.
கால மாற்றத்தில் இன்று எல்லா இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை மொழிபெயர்க்கப் பயன்படுத்தக் கூடாது. அது மிகவும் தவறான முடிவாக இருக்கும். ஒரு மனிதனின் இடத்தை எப்போதும் தொழில் நுட்பங்கள் ஈடு செய்ய முடியாது. குறிப்பாகப் படைப்பு பணியில் மாற்றாக இருந்து கொண்டு செயல்பட முடியாது. நான் கதைகளுக்கான ஓவியங்கள் புத்தக அட்டைகளுக்கு மட்டும் செயற்கை நுண்ணறிவை ஏஐ-ஐப் பயன்படுத்துகிறேன். அதற்கும் சரியான துல்லியமான உள்ளீடு செய்தால்தான் ஓரளவுக்கு முடிவுகள் சரியாக வரும். அதுவும் 90% தான் வரும். அப்படி நான் பயன்படுத்தி இருக்கிறேன்.
மொழிபெயர்ப்புடன் இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுவது உண்டா?
நான் எந்த இலக்கிய இயக்கங்களிலும் பங்கெடுப்பதில்லை. ஆனால் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்னை மதித்து அழைத்தால் செல்வதுண்டு. ஆலோசனைகள் கூறுவது உண்டு. மற்றபடி எந்தக் குழுவிலும் நான் இருப்பதில்லை. குறிப்பாக இளைஞர்கள் அழைத்தால் சந்தேகங்கள் எழுப்பினால் பதிலாக விளக்கங்கள் கொடுப்பேன். அதற்காக வாட்சப்பில் கதைகள் அனுப்பிக் கருத்துக் கேட்டால் என்னால் கூற முடியாது; அதற்கு நேரமில்லை. மற்றபடி படைப்புகளைக் குறித்து அபிப்பிராயம் கேட்டால் நான் சொல்வதில்லை. ஏனென்றால் எழுத்தாளர்களுக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்கிற மனநிலை இல்லை. விமர்சனங்களை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் போக்கு இன்றைய எழுத்தாளர்களிடம் யாருக்கும் கிடையாது.
எழுத்தாளர்களுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி உள்ளது?
தெலுங்கில் கேசவரெட்டி, நாமினி சுப்பிரமணியம் நாயுடு, புலிகண்டி கிருஷ்ணா ரெட்டி, எண்டமூரி வீரேந்திரநாத், மல்லாதி வெங்கட கிருஷ்ணமூர்த்தி போன்ற எழுத்தாளர்கள் எனக்குப் பிடித்தவர்கள்.
தமிழில் எனது குரு என்று ஜெயகாந்தனைச் சொல்வேன். அவரது படிப்பு மிகவும் குறைவானது. ஆனால் வாழ்க்கையை மனிதர்களை அவர் ஏராளமாகப் படித்திருக்கிறார். அதனால்தான் ஞானபீட விருது வரை சென்று இருக்கிறார். அவர் மீது எனக்கு பெரிதும் மரியாதை உண்டு.எஸ். ராமகிருஷ்ணன் படைப்புகளை மொழி பெயர்த்த போது அவரிடம் பேசி இருக்கிறேன், நேரில் சந்தித்து இருக்கிறேன். எனக்கு அவர் பரிந்துரைத்த க்ரியா அகராதி மிகவும் உதவிகரமாக இருந்தது. அவர் நாவலை மொழிபெயர்ப்பதற்கு ஒப்பந்தம் போட்ட போது மொழிபெயர்ப்பாளரான எனக்கும் ஒரு தொகை வாங்கிக் கொடுத்தார்.
பவா செல்லத்துரையைத் திருவண்ணாமலை சென்று சந்தித்து இருக்கிறேன். நன்றாகப் பழகுவார். எனது பணியில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்.
மற்றபடி பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன், ஆதவன் தீக்ஷன்யா, அழகியபெரியவன் போன்ற எழுத்தாளர்களைச் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் எப்போதும் என்னுடன் அன்பாகப் பழகுவார்கள்.
ஜெயகாந்தனுடன் மட்டும் எப்படி உங்களுக்கு ஆழமான நட்பு அமைந்தது ?
ஒரு முறை ஜெயகாந்தன் உடல் நலிவுற்று அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு போன் செய்தார். தான் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியவர், அப்போலோ மருத்துவமனை உரிமையாளர் பிரதாப் ரெட்டியிடம் தனது நாவல் தெலுங்கில் வந்திருப்பதையெல்லாம் கூறியிருக்கிறார். தெலுங்கில் வெளிவந்த நாவலைப் படிக்க ரெட்டி ஆவலாக இருப்பதாகக் கூறி அந்த நாவலை அனுப்பி வைக்குமாறு என்னிடம் கேட்டார். நான் 'கல்யாணி' நாவலை அனுப்பினேன். அதைப் பார்த்து மகிழ்ந்த ரெட்டி, தன்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார் என்று பிறகு கூறினார். எனக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட போது நான் ஜெயகாந்தனுக்கு போன் செய்தேன்.
அவருக்கு அந்தத் தகவலை சொல்லி 'இப்போது உங்கள் நாவலுக்குப் பரிசு கிடைத்திருக்கிறது' என்று சொன்னேன். அப்போது அவர், ''தமிழில் வேண்டுமானால் நான் பெரிய எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் தெலுங்கில் என்னை யாருக்கும் தெரியாது. என்னைத் தெலுங்கில் கொண்டு சேர்த்தவன் நீதான். எனவே இதன் முழுப் பெருமையை நூறு சதவிகிதம் உனக்குத்தான் சேரும்'' என்று என்னை வாழ்த்தினார். ஒரு மொழிபெயர்ப்பாளர் மீது அவர் வைத்துள்ள மரியாதை எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. பிறகு சந்தித்தபோதெல்லாம் அன்பு காட்டினார். என்னிடம் கடைசி வரை அன்பாகவே பேசினார்; பழகினார்.
இந்தத் துறையில் உங்களது ஆதங்கம் என்ன?
ஆந்திராவில் எழுத்தாளர்களுக்கு என் மீது கோபம் இருக்கிறது. தமிழில் இருந்து தெலுங்குக்கு செய்கிறாய், ஏன் தெலுங்கில் இருந்து தமிழுக்குச் செய்யக்கூடாது என்று.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்படி நான் முயற்சி செய்தேன். எனக்குத் தமிழ் எழுதுவது வரவில்லை. தப்புத்தப்பாக செல்வது போல் இருந்தது. எனவே அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.
சாகித்திய அகாடமிக்கு ‘அலை ஓசை’ நாவலை பத்து ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்தேன். இன்னும் வரவில்லை. இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடித்தேன். இன்னும் வெளிவரவில்லை. இது மாதிரியான வருத்தங்கள் உண்டு.
நீங்கள் எழுதித் தொகுப்பாக வந்த 'சவுரிக்கூந்தல்' சிறுகதைகள் எழுதிய பின்னணி பற்றி?
அந்த 'சவுரிக் கூந்தல்' தொகுப்பில் ஒன்பது கதைகள் உள்ளன. அதில் புரட்சி இருக்கிறது, வாழ்க்கை, பரிதாபம், துக்கங்கள் போன்ற அனைத்தும் இருக்கிறது. இவை நான் கண் முன் கண்ட வாழ்க்கை. அப்பா பெரியப்பா போன்றவர்கள் சந்தித்தது, கூறக் கேட்டது, கற்பனை எல்லாம் கலந்தது.எனது குடும்பத்தினர் நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அம்மாவின் அப்பா நாதஸ்வரக் கலைஞராக இருந்தார்கள். பெரியப்பா தவில் கலைஞர்.அத்தை வைத்தியத்தில் கெட்டிக்காரர். அவரைத் தேடி நிறைய பேர் வருவார்கள். பெண்களுக்கு வைத்தியம் செய்து கொள்ள காத்திருப்பார்கள். நாட்டு வைத்தியத்தில் அவர் கொடுக்கும் மருந்துகள் லேகியம், சூரணங்கள் எல்லாம் நோயை குணப்படுத்தும்படி இருந்தன.முன்பெல்லாம் நிறைய பெண்கள் மருத்தும் பார்க்க அவரைத் தேடி வருவார்கள். இப்போது யாரும் வருவதில்லை.அப்போதெல்லாம் சவுரி விற்பனை செய்வார்கள். மருந்தும் செய்வார்கள். இவற்றை அடிப்படையாக வைத்து தான் அந்தக் கதைகளை எழுதினேன்.
அந்தத்தொகுப்பிலுள்ள கதைகள் நாவிதர்கள் வாழ்க்கை சார்ந்தவை;அது மட்டுமல்ல,பெரும்பாலான கதைகள் நாதஸ்வர வித்வான்களின் அவலம் பற்றிப் பேசுகின்றன. நீங்கள் மொழிபெயர்த்த 'சஞ்சாரம்' நாவலும் இதே அவலத்தைப் பற்றிப் பேசுகிறது. அதை மொழி பெயர்த்த போது என்ன உணர்ந்தீர்கள்?
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'சஞ்சாரம்' நாவலை நான் வாசிக்கத் தொடங்கி முதல் 10 பக்கங்களிலேயே இந்தக் கதை இதைப் பற்றியது,இவர்கள் சார்ந்த வாழ்க்கையைக் கொண்டது என்பதைப் புரிந்து கொண்டேன். போகப் போக அவர் எழுதியிருந்ததைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.தொடர்ந்து படிக்கப் படிக்க அந்தக் கதையை எனக்கு மிகவும் நெருக்கமாகவும் உணர்ந்தேன். எப்படி இவ்வளவு அழகாக ஆழமாக நாதஸ்வர வித்வான்களின் வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் சந்திக்கும் அவலங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார் என்று எனக்கு நினைக்கும் போது மிகவும்ஆச்சரியமாகவும் இருந்தது . அதனால் அந்த நாவல் எனது மனதுக்கு நெருக்கமாக அமைந்தது. எனவே அதை மகிழ்ச்சியோடு மொழிபெயர்த்தேன்.
உங்கள் மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கான அங்கீகாரம் பாராட்டு பற்றி?
எனது மொழிபெயர்ப்பு பணிகளை அங்கீகரித்தும் பாராட்டியும் தமிழ் இலக்கிய உலகிலிருந்து தான் எனக்கு ஊக்கம் கிடைத்துள்ளது. நல்லி திசை எட்டும் விருது, சாகித்ய அகாடமி விருது, விஜயா வாசகர் வட்டம் வழங்கும் மொழிபெயர்ப்பாளருக்கான ‘கே. எஸ். சுப்பிரமணியன்’ விருது, படைப்புக்குழும ‘இலக்கியச் சுடர்’ விருது போன்றவை தமிழில் எனது பணிகளுக்காகக் கிடைத்துள்ளன.
ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் சார்ந்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
திருமணத்திற்கு முன் நான் யோகாசனம் கற்றுக் கொள்வதற்காகக் கன்னியாகுமரி சென்றேன்.
அங்கே ஒருவரைச் சந்தித்தேன். என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டவர் எனக்கு வாரங்கல்லில் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். அப்படி பிகாம் படித்த நான்,வாரங்கல்லில் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். முதலில் 250 ரூபாயில் சரஸ்வதி வித்யாபீடத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு திருப்பதியில் பிரசாந்த் இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் 11 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு பல தனியார் பள்ளிகள் என மொத்தம் 30 ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்தேன்.
'வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை' என்ற தமிழ்ப் பழமொழி போல தெலுங்கிலும் ’பதக லேகா படி பந்தலு’ என்றொரு கூற்று உண்டு.அதாவது 'பிழைக்கத் தெரியாதவனுக்கு வாத்தியார் வேலை' என்று . அப்படித்தான் நான் பி.காம் படித்த பிறகு பல வேலைகள் செய்துவிட்டு ஆசிரியராக வேலை பார்த்தேன்.பள்ளியில் மாணவர்களுக்கு நான் பாடத்தோடு பல்வேறு கதைகளைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்துவேன். என்னை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே அந்தப் பணியில் ஒரு திருப்தி இருந்தது. நான் ஓய்வு பெற்ற பிறகு முழுமூச்சாக எழுதுவதில் இறங்கி விட்டேன்.
உங்கள் குடும்பம் பற்றி?
குடும்பம் என்று நினைத்ததும் எனது அப்பா போலவே சித்தியின் நினைவைக் கடந்து என்னால் போக முடியாது.
தாய் இல்லாத என்னையும் எனது இரண்டு சகோதரிகளையும் தனது பிள்ளைகளைப் போலவே அவர் வளர்த்தார். கணவனை இழந்த நிலையிலும் எனது திருமணத்திற்காக அவர் அவ்வளவு சிரமப்பட்டு செய்து வைத்தார்.
சிறுவயதில் நாங்கள் திருத்தணியில் இருந்த போது எனக்கு காலில் எலும்பு வளர்ந்தது. அப்போது என்னால் நடக்க முடியாது; நடக்கக்கூடாது. எனவே திருத்தணி மலைமேல் உள்ள வைத்தியர் வீட்டுக்கு என்னை அவர் சுமந்து சென்றது இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு தவம் செய்வது போல் என்னைச் சுமந்து கொண்டு சென்றார்.
ஒருமுறை 'சரஸ்வதி சபதம்' படம் பார்க்க திருத்தணியில் உள்ள தியேட்டருக்குச் சென்றோம். அங்கே சிறுவர்கள் சோடா விற்றபோது ஒரு சோடா பாட்டில் வெடித்து அந்தக் கண்ணாடி என் கன்னத்தில் தெறித்துக் குத்தி ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்து என் சித்தி கதறியது ,வைத்தியம் செய்ய நீண்ட தூரம் அழைத்துச் சென்று பார்த்துக்கொண்டது எல்லாம் இன்னும் என் நினைவில் உள்ளது. அந்த சித்தி இப்போது இல்லை.
என் மனைவியின் பெயர் ரெட்டெம்மா. அவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சத்தியவேடு ஊரைச் சேர்ந்தவர். பிகாம் பட்டதாரி. எனக்கு மேகனா, நவீனா என்று இரண்டு மகள்கள். மூத்தவள் பி ஃபார்மசி முடித்து அரசுப் பணியில் இருக்கிறாள். இளையவள் எம்எஸ்சி பயோடெக் முடித்துள்ளாள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் என் இளைய மகளுக்கு மட்டும் வாசிப்பு ஆர்வம் உண்டு. மற்றபடி நான் என்ன எழுதுகிறேன் என்று என் மனைவிக்குத் தெரியாது. அவருக்கு வாசிப்பில் ஆர்வம் இல்லை என்பதால் நான் அவரை வாசிக்கச் சொல்லியும் வற்புறுத்துவதில்லை. ஆனால் அவர் எனது பணியில் எந்த இடையூறும் செய்வதில்லை. எனது பணியை நான் சுதந்திரமாகச் செய்வதற்கு வசதியாக குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுவே எனக்கு அவர் செய்யும் பெரிய உதவி என்று கருதுகிறேன்.