யோ.ஞானசந்திர ஜாண்சன் 
பேட்டிகள்

‘தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் படாமல் கிறித்தவ இலக்கியத்தைப் படைக்க முடியாது!’

தமிழ்விக்கி -தூரன் விருது பெறும் யோ.ஞானசந்திர ஜாண்சன்

அருள்செல்வன்

சுமார் கால் நூற்றாண்டுக்கு மேலாகக் கிறித்தவப் பண்பாடு, இலக்கியங்கள் சார்ந்து ஆய்வு செய்து வருபவர் யோ. ஞானசந்திர ஜாண்சன். இந்தத் துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட இவர், தமிழகம், இலங்கை போன்ற பல பகுதிகளில் பதிவு செய்யப்படாத கிறித்தவக் கீர்த்தனைகளையும், கிறித்தவ இலக்கியங்களையும் தேடிப் பிடித்துத் தொகுத்தவர். இது சார்ந்து விரிவாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தி, கிறித்தவ இலக்கிய மரபை ஒரு ஒட்டுமொத்த சித்திரமாக வழங்கியவர்.  சுமார் இருபது நூல்கள் எழுதியிருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டுக்கான தமிழ் விக்கி- தூரன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருடன் அந்திமழைக்காக அருள்செல்வன் நிகழ்த்திய ஓர் உரையாடல்!


உங்கள் குடும்பப் பின்னணி எப்படி?
எனக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மயிலாடி என்கிற கிராமம். என் ஊர் அருகே மருங்கூர் என்கிற ஊர் உள்ளது. அந்த ஊரில் மலை மேல் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரபலம். அங்கே மயில்கள் நிறைய இருக்கும். அதேபோல் ஒரு காலத்தில் எங்கள் ஊரிலும் மயில்கள் நிறைய இருந்து ஆடியிருக்க வேண்டும். அதனால் தான் மயிலாடுதுறை போல  மயிலாடி என்ற பெயர் வந்திருக்க வேண்டும். இவ்வூர்  சிறிய கிராமமாக இருந்து, இன்று பேரூராட்சி அளவில் வளர்ந்துள்ளது. எனது தந்தையார் பெயர் ஞா. யோவான்; தாயார் பெயர் பரமாயி.
என் தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். எனக்கு இரண்டு தம்பிகள்; ஒரு தங்கை. என் மூத்த தம்பி  யோ. நெல்சன் சாம்ராஜ்,  தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இளையவர் யோ. மோகன் சுவாமிதாஸ்  உள்ளூரில் விவசாயத்தைக் கவனிக்கிறார். என் தங்கையின் பெயர் யோ. சிந்து ராஜம். முதுகலைப் பட்டதாரி,  குடும்பத்தலைவியாக இருக்கிறார்.
எனக்கு 1990 இல் திருமணம் நடைபெற்றது. என் மனைவியின் பெயர் ஞா. ஷீபா நேசகுமாரி. முதுஅறிவியல் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்க்கிறார்.
எனது மகன் பெயர் ஞா. இம்மானுவேல் ஜாண்சன், நியூயார்க்கில் எம்எஸ் படித்துவிட்டு சியாட்டில் வாஷிங்டனிலுள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். என் மகள் பெயர் கீர்த்தனா காலேப். அவள் கணவர் திரு. காலேப்; இவர்களுக்கு ஜிசல், ஜெனிசி என்று இரண்டு மகள்கள்.

அந்தக் காலத்தில் உங்கள் பெற்றோர் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் எப்படி இருந்தது ?
எங்களுக்குச் சொந்தமாக நிலங்கள் இருந்தன. சாகுபடிகள் நடந்தன. நில புலன்கள் மூலம் வருமானம் உண்டு. என் தந்தை தென்திருவிதாங்கூர்  அரசாங்கத்தில் காவல்துறையில் பணியாற்றினார்.  பின்னர் தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த போது தமிழ் நாடு காவல்துறையில் பணிசெய்தார்.  எனவே பொருளாதாரத்தில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை திருப்திகரமான குடும்ப பொருளாதாரச் சூழல் இருந்தது  என்றுதான் சொல்ல வேண்டும். அன்பும் கண்டிப்பும் கொண்ட குடும்பச் சூழல். எனவே நாங்கள் குடும்பச் சூழ்நிலையில் இருந்து கல்வி கற்பதற்காக வெளியே பள்ளி செல்வதில் எந்தத் தடையும் இருக்கவில்லை.

நீங்கள் கல்வி கற்ற சூழல் பற்றிச் சொல்லுங்கள்?
முன்பே சொன்னபடி எங்களுக்குக் குடும்பத்தில் எந்தப் பொருளாதாரச் சிக்கலும் கிடையாது. எனவே  படிப்புக்குத் தடங்கல்கள் இடையூறுகள் இருந்ததில்லை. ஆனால் அரசுப் பணி அதுவும் காவல்துறைப்  பணியில் இருந்ததால் அப்பா பல ஊர்களுக்கு மாறுதலில் சென்றதால்,   குடும்பம் பல ஊருக்கு இடம்பெயர்ந்ததால் நானும் பல ஊர்கள் பள்ளி என்று மாறி மாறிப் படித்தேன்.

பள்ளிநிலைக் கல்வி கற்கவே   பல ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது? பலவூர்கள் மாறுகிற பள்ளிச் சூழல் படிப்புக்குத் தடையாக இருந்ததா?
அப்பா  திருவனந்தபுரம் தொடங்கி பல ஊர்களுக்கு மாறுதலில் சென்றார். அதை ஒட்டி எனது பள்ளிக்கூடங்களும் மாறின. என் சிறு வயதிலேயே கீழவளவு, மயிலாடி, திருவட்டாறு, மார்த்தாண்டம், மணவாளக்குறிச்சி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி என்று பல ஊர்களில் என் பள்ளிக்காலம் சென்றது..

மதுரைப் பக்கம் கீழவளவு அரசு தொடக்கப்பள்ளியில்  படித்தேன்.அப்போதெல்லாம் தனியாகவே சாலையைக் கடந்து செல்ல வேண்டும். வீட்டிலிருந்து யாரும் துணைக்கு வர மாட்டார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டு வந்து விட்டு, மாலை அழைத்துச் செல்லும் பழக்கம் எல்லாம் அப்போது இல்லை. அப்படி நாங்கள் தனியாகத்தான் பள்ளிக்குச் சென்று வந்தோம். மயிலாடி தொடக்கப் பள்ளியில் மூன்று மாதம் தான் படித்திருக்கிறேன். திருவட்டாறு நல்ல இயற்கை வளம் உள்ள ஊர் என்பது நினைவில் உள்ளது. ஆரல்வாய்மொழி என்றால் அங்குள்ள மலைகள், கோட்டைகள் எப்போதும் நன்றாகக் காற்று வீசும்  அந்தச் சூழலும் நினைவுக்கு வரும். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நினைவு உள்ளது.

சிறுவயதிலேயே ஊர் மாறி மாறிச் சென்றதால் எனக்கு நிலையான பள்ளிக்கால நண்பர்கள் என்று அமையாமல் போய்விட்டது. ஒரு வகையில் அது ஒரு குறைதான். புதிய ஊர் சென்று பழக ஆரம்பிப்போம். அதற்குள் அடுத்த ஊருக்கு மாற்றலில் அப்பா செல்வதால் குடும்பமும் சென்றது. வேறொரு புதிய ஊரில்  பழக வேண்டும். ஆனாலும் பல ஊர்கள், பல மக்கள், பல விதமான மனிதர்கள் என்று அது ஒரு புது அனுபவமாகத்தான் இருந்தது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து நான் பழகிக் கொண்டேன். எந்த ஊர் சொந்த ஊர் என்றால் இருக்கும் ஊரே சொந்த ஊர் என்று மனம் பழகிக் கொண்டது.

கல்லூரி வாழ்க்கையும் ஆரல்வாய்மொழி, புதுக்கோட்டை , நாகர்கோவில் என்று பல ஊர்களில் இருந்தது.எல்லாமும் கடந்து கடைசியில் பணி நிமித்தமாக சென்னை வந்து தங்கி விட்டேன்.

நீங்கள் படிப்பில் எப்படி? சராசரி மாணவரா? மீத்திறன் கொண்ட மாணவரா?
உண்மையைச் சொன்னால் நான் படிப்பில் சுமாரான மாணவன் தான். இதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை.  நான் சராசரியாகப் படிக்கக்கூடிய ஒருவன் தான். அந்தக் காலத்தில் பாஸ் ஆனால் போதும் என்ற மனநிலை தான்  இருந்தது. அப்போதெல்லாம் படிக்கிற பிள்ளைகளை பாஸா? பெயிலா ? என்று மட்டும் தான் கேட்பார்கள். ’பாஸ் ஆவதே பெரிய சாதனை’ என்று இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் தான் என் பள்ளிக் காலம் இருந்தது. பள்ளியில் இருந்து கல்லூரி சென்ற பிறகுதான் எனது கல்விச் சூழல் மாறியது. பள்ளியில் படித்ததெல்லாம் ஒரு சிறு அறிமுகம் என்ற நிலையில் தான் இருந்தது. கல்லூரி சென்ற பிறகுதான் நூலக வாசிப்பு, கல்வி அல்லாத அறிவை வளர்த்துக் கொள்வது போன்ற எல்லாவற்றிற்கும் இடம் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் நான் உண்மையிலேயே கற்க ஆரம்பித்தேன் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் கல்லூரி வாழ்க்கை விசாலமாக இருந்தது. எனக்குக் கற்பித்த பேராசிரியர்கள் கல்வி மீதும் தமிழ் மீதும் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்.

நான் படித்த கல்லூரி நூலகத்தில் நிறைய படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் இளங்கலை படித்த போது அங்கே நான் படித்த முதல் நாவல் 'சிற்பியின் கனவு ' என்பது இப்போதும் நினைவில் இருக்கிறது.பள்ளியில் நான் என்சிசி மாணவர் படையில் செயல்பட்டு இருக்கிறேன். ஆனால் கல்லூரியில் ஏனோ அதில் நான் சேரவில்லை. கல்வி என்கிற போது எனது கல்லூரி வாழ்க்கையையும் அங்கே நான் கற்றவற்றையும் என்னால் என்றும் மறக்கவே முடியாது. அதனால்தான் நான் படித்த இரு கல்லூரிகளையும் இன்றும் ஒரு கோயிலைப் போல் நான் நினைக்கிறேன். இப்போதும் அந்தக் கல்லூரி வழியாகக் கடந்து செல்லும்போது நான் கும்பிட்டுக் கொள்வேன். அந்த அளவிற்கு கல்லூரி வாழ்க்கை என்னை மாற்றியது.

நாகர்கோவில் இந்து கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம்  படித்தேன். பின்னர் புதுக்கோட்டையிலுள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் பிஎட்  படித்தேன். அதனைத் தொடர்ந்து தெ.தி. இந்துக் கல்லூரியில் பயின்று எம்ஃபில் பட்டம் பெற்றேன். அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியின் வாயிலாக பி.எச்டி ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன். எனது முனைவர் பட்டத்திற்கு இந்துக் கல்லூரிப் பேராசிரியர் வே. சிதம்பரநாத பிள்ளை அவர்கள் வழிகாட்டியாக இருந்தார். பிறகு அவர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் பழங்குடிகள் மக்கள் ஆய்வு மையத் துறையின்  தலைவர் ஆனார். அவர் ஆய்வுக்கு மட்டுமன்றி வாழ்வுக்கும் வழிகாட்டும் வள்ளல்; நிர்வாக நிபுணர்; மனிதநேய அன்பர்.

முதுநிலை பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியம் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
நான் இளநிலைப் படிப்பாக வரலாறு தான் படித்தேன். அப்போது வரலாறு படிப்பதே பெரிய காரியமாக இருந்தது. எனக்கு வரலாற்றுப் பாடம் எடுத்த பேராசிரியர் ஜி .ஆல்பி அவர்களை மறக்க முடியாது. கிராஸ் மேஜர் என்று சொல்லப்படுகிற  இளங்கலை வேறொன்றும் முதுகலை வேறொன்றும் படித்துப்  பட்டம் பெறுவது அப்போது சகஜமாக இருந்தது. எனவே இளங்கலை வரலாறு படித்த நான், முதுகலையில் தமிழ் படித்தேன். நான் இளங்கலை படித்த போது, முனைவர் அ.கா. பெருமாள் அவர்கள் எனக்குத்தமிழ் இலக்கியம் பயிற்றுவித்தார்கள். அவரது கற்பித்தல் மிகவும் அருமையாக இருக்கும்.   அவர் கொடுத்த ஊக்கத்தால் தமிழின் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் உள்ளார்ந்த ஆர்வம் வந்தது. தமிழ் இலக்கியத்தின் மீதும் பெரிய காதல் வந்தது. அதேபோல நான் படித்த கல்லூரிகளின் பிற தமிழாசிரியர்களும் எனக்கு சிறப்பாகப் பாடம் நடத்தினார்கள். 

'நீல பத்மநாபன் நாவல்களில் பாத்திரப்படைப்பு' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து இருக்கிறீர்கள். அந்தத் தலைப்பு தேர்வு செய்த பின்னணி பற்றி ? உங்கள் பகுதியில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கும்போது குறிப்பாக அவரைத் தேர்ந்தெடுத்த காரணம்?
எங்கள் ஊரில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருங்கூரில் ஒரு பழைய நூலகம் இருக்கிறது. அங்கே ஏராளமான புத்தகங்கள் உண்டு. சைக்கிளில் சென்று அங்கே நாங்கள் படிப்பதுண்டு. எனது கல்லூரிக்காலத்தில்,  கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்றவற்றைப் படித்தேன். ஜெயகாந்தன், சாண்டில்யன் போன்றோரின் நாவல்களை  ஒன்று விடாமல் படித்தேன்.   சமூக நாவல்களைப் படிக்கும் போது கதை நிகழ்வுகள் சினிமாக்  காட்சிகள் போல மனதில் தெரியும். வரலாற்று நாவல்களைப் படிக்கும் போது அந்த அரசர் காலத்துக்குள்ளே சென்று விடுவேன்.

இப்படியாக நான் வாசித்துக் கொண்டிருந்தபோது சமூக நாவல்கள் படிக்கும் சூழலில் நீல பத்மநாபனின் ’தலைமுறைகள்’ நாவலைப் படித்தேன். அதில் வட்டார வழக்கு பயன்படுத்தப்பட்டு  இருந்தது. எனக்கு அது வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது. அவர் பயன்படுத்திய வட்டார வழக்கு நடை, பேசும் மொழி, சொலவடைகள்  என்னை மிகவும் கவர்ந்தன. அதில் வரும் கதைமாந்தர்கள் எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்தித்தது போல் மிகவும் நெருக்கமாக எனக்குத் தோன்றின. கண்ணில் உலவுகிற பாத்திரங்கள் போல் உணர வைத்தன. அவரது பிற நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன். அதில் தாக்கம் பெற்று ஏன் இது பற்றி நாம் ஆய்வு செய்யக்கூடாது என்று நினைத்தேன்.

நீல பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் பிறந்தவர்.  பொறியியல் பட்டம் பெற்று கேரளாவில் மின்வாரியத்தில் பணியாற்றினார். அதில் இளநிலையிலிருந்து  முதன்மைப் பொறியாளராக  உயர் நிலைக்குச் சென்றவர்.  அவரது எழுத்து பற்றி  நான் ஆய்வில் ஈடுபட்ட போது, திருவனந்தபுரம் சென்று அவரை அடிக்கடி சந்தித்து வருவேன். சந்திக்கச் செல்வதற்கு முன்பு அவருக்கு ஒரு தபால் அட்டையில் விவரம் அனுப்புவேன். பலமுறை சந்தித்ததால் நன்றாகப் பழகி நண்பர் போல் ஆகி விட்டார். அவர் பெரிய எழுத்தாளர், நான் ஒரு ஆய்வு மாணவர் என்றெல்லாம் பார்க்க மாட்டார்.  சரிசமமாக மதித்து அன்பாகப் பழகுவார்.  மனிதாபிமானம் கொண்ட நல்ல மனிதர். அவரை நான் என் குடும்பத்தினருடனும் கூட சென்று சந்தித்து இருக்கிறேன். ஆய்வு பற்றி நிறைய அவரிடம் பேசி இருக்கிறேன்; சந்தேகங்களுக்குத் தீர்வு கண்டிருக்கிறேன்.

அவரது ஒவ்வொரு நாவலும் நிஜ வாழ்க்கைப் பின்னணியை வைத்து எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக 'போதையில் கரைந்தவர்கள்' மதுவுக்கு அடிமையானவர்களின் அவலத்தைப் பற்றி எழுதியது. 'மின் உலகம் 'அவர் பணியாற்றிய மின்சாரத்துறைப் பின்னணியில் எழுதப்பட்டது. இப்படி ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கும். அவர் 20 நாவல்களுக்கு மேல் எழுதினாலும் நான் ஆய்வு செய்த காலத்தில் வெளிவந்திருந்த 15 நாவல்களை எடுத்துக்கொண்டு இந்த ஆய்வினைச் செய்தேன். அவரது நாவல்கள் சார்ந்த ஆய்வை முன்னிட்டு அவரது படைப்புகள் மட்டுமல்ல மற்றவர்களது படைப்புகளையும் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனது வாசிப்பு உலகம் விரிந்ததாக அமைந்தது.

உங்களது மேற்பார்வையில் 25 பேர் முனைவர் பட்டமும், 32 பேர் இளங்கலை ஆய்வுப் பட்டமும் பெற்றுள்ளனர். அந்த வழிகாட்டி அனுபவம் எப்படி இருந்தது? வழிகாட்டும் பணியில் கூட ஏதாவது உங்களால் கற்றுக் கொள்ள முடிந்ததா?
முனைவர் பட்டத்துக்கு வழிகாட்டியாக இருக்கும் போது நாமும் படிக்க வேண்டும். மாணவர் விரும்பி தேர்வு செய்துள்ள தலைப்பு பற்றியும் அது சார்ந்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஊக்கம் கிடைக்கும். எனவே இந்த வழிகாட்டுதலின் மூலம் நிறைய  படிப்பதற்கான வாய்ப்பாக வழிகாட்டும் பணியைப் பயன்படுத்திக் கொண்டேன். அந்த 25 பேர் கொடுத்த தலைப்பு பற்றி நானும் நிறைய படிக்க வேண்டி இருந்தது. வழக்கமாக அல்லாத வித்தியாசமான தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்து ஆய்வு செய்ய வைத்தேன்.
கிறித்தவ இலக்கியம் சார்ந்து 12 பேரும்; நாவல் இலக்கியம் சார்ந்து 11 பேரும்; பொதுவான தலைப்புகளில் 2 பேரும் ஆய்வு செய்தார்கள்.இந்த 25 பேரில் பெரும்பாலானோர் இன்று கல்லூரிப் பேராசிரியர்கள். இருவர் கல்லூரி முதல்வர்கள். முதல் மாணவர் முனைவர் ஏ. பால்பிரபு சாந்தராஜ் சென்னைக் கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றார்.25 ஆவது மாணவர் முனைவர் அ. ராஜன். தற்போது மதுரையிலுள்ள அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார்.இருவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். மேலும் இருவர் பணியாற்றி வருகின்றனர்.

என்னிடம் ஆய்வுக்கு வருபவர்களிடம் நான் கறாராகச் சொல்லி விடுவேன். தலைப்பு பற்றிச் சரியான தெளிவான சிந்தனையோடு வரவேண்டும். தலைப்பு புதுமையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கால அட்டவணை  போட்டுச் செயல்பட வேண்டும். காலத்தை இழுத்துக் கொண்டு நேர விரயம் செய்யக் கூடாது  என்றெல்லாம் சொல்வேன். அதன்படி ஆய்வு  மாணவர்களும் நடந்து கொண்டனர்.
ஒரு நல்ல ஆசிரியர் என்றும் கற்பவராக இருக்க வேண்டும். அப்படி நான் அந்த ஆய்வுகளின் மூலம் அவர்களது பார்வைகள் மூலம் நானும் கற்றுக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

உங்கள் ஆசிரியர் பேராசிரியர் அ.கா. பெருமாள் பற்றியும் அவருடனான  அனுபவங்கள் பற்றியும் கூற விரும்புவது என்ன?
எனது ஆசிரியர்களில் அ.கா. பெருமாள் அவர்களை என்னால் மறக்கவே முடியாது. ஆரல்வாய்மொழியிலுள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் நான் பியூசி படிக்கும்  காலத்தில் இருந்து எனக்கு அவருடன் தொடர்பு உண்டு.   ஆசிரியர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் விளங்கினார். கற்பித்தல் என்பது இப்படிக் கூட சுவையாக இனிமையாக இருக்கும் என்பதற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். அவரது தமிழ்ப் புலமையும் அறிவும் இலக்கியத்தில் ஆழங்கால் பட்ட அவரது அனுபவங்களும் எங்களை எப்போதுமே ஆச்சரியமூட்டிக் கொண்டே இருந்தன.
பெரிய தமிழறிஞர், அவர் வகுப்பு எடுக்கும் போது அந்த ஒரு மணி நேரம் எப்படிப் போகும் என்று தெரியாது. அவ்வளவு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கும். இலக்கிய நிகழ்வுகளை அவர் விவரிக்கும் பாங்கு, அந்த வேகம், அந்தத் தொனி, அவரது மொழி வளம் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும். அதனால் மாணவர்களுக்கு அவர் மீது எப்போதும் ஈர்ப்பு அதிகம். அவரது வகுப்பில் மாணவர்கள் வைத்த கண் வாங்காமல் லயித்துக் கவனிப்பார்கள்.  அவரது விரிவுரை சீராக இருக்கும். அவரது மொழி நடை இனிமையாக இருக்கும். சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
 ம. பொ. சியின்  ’கம்பர் கவியின்பம்’ நூல் பற்றியும், வ. சுப மாணிக்கம் அவர்களின்   ’கம்பர்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள மூன்று பார்வைகள் பற்றியும் அவர் அருமையாக நடத்துவார்.  அது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் எப்போதும் அவர் உரையாடலில் இருப்பார். நேசமுடன் பழகுவார். நான் நியூ செஞ்சுரி புத்தக  நிறுவனத்திற்கு நூல் எழுதிய போது அவர் எனக்குப் பல தகவல்களைக் கொடுத்து உதவினார். அவரிடம் நிறைய நூல்கள் வாங்கிப் படித்திருக்கிறேன். எனது பல நூல் முயற்சிகளுக்கு அவர் எப்போதும் உதவி இருக்கிறார். ஆசிரியர் மாணவர் பாகுபாடு இல்லாமல் அன்புடன் பழகுபவர். அந்த அளவிற்குப் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர். சிறந்த நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.

கிறித்தவ இலக்கியம் பற்றி நான் ஆய்வு செய்தபோது எனக்கு பல நூல்களை அறிமுகம் செய்தவர் அவர். குமரி மாவட்டத்து வரலாறு, அதன் பின்னணி பண்பாடு, புழங்கும் வழக்காறுகள் பற்றியும் லெமூரியாக் கண்டம் பற்றியும் வள்ளுவ நாடு பற்றியும் சின்ன முட்டம் துறைமுக அழிவு, ஆரல்வாய்மொழியில் இருந்த கோட்டைகள் அழிந்த வரலாறு பற்றியெல்லாம் எனக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

ஓய்வு பெற்று விட்டால் கூட சும்மா இருக்கக் கூடாது படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்று கூறுவார். உழைப்பது தான் ஆரோக்கியம் என்றும் கூறுவார். அதன்படி  நான் எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன் அதைப் பார்த்து அவர் என்னிடம் 'நீ உழைப்பாளி' என்று  என்னைப் பாராட்டுவார். அது எனக்குப் பெருமையாக இருக்கும்.

’நீ இப்போது இவ்வளவு சிரமப்பட்டு செய்வதைப் பார்த்து அங்கீகாரம் இல்லை என்று கவலைப் படக் கூடாது. இதெல்லாம் நீ எதிர் காலத்துக்குக் கொடுக்கக்கூடிய உனது பரிசு’ என்பார். அப்படிப்பட்ட அந்த ஆசிரியரை என்னால் மறக்கவே முடியாது. வெவ்வேறு காலகட்டங்களாக இருந்தாலும் அவருக்கும் எனக்கும் முனைவர் பட்ட ஆய்வுக்காக வழிகாட்டி நெறிப்படுத்தியவர் பேராசிரியர் வே. சிதம்பரநாத பிள்ளை ஐயா என்பதை  மறக்க முடியாது. மாணவனாகிய எனக்கும் ஆசிரியரான அ.கா. பெருமாள் ஐயா அவர்களுக்கும் முதன்மை ஆசான் ஒருவரே.


கிறித்தவ இலக்கியத்தின் மேல் ஆய்வு செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் எப்படிக் கிடைத்தது?

கல்லூரியில் நான்  இளங்கலையில் வரலாறு தான் படித்தேன். தமிழ் படித்த போதும் எனக்கு வரலாற்றின் மீதும் ஆர்வம் உண்டு. ஒரு கட்டத்தில் வரலாறும் இலக்கியமும் தொடர்பானது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.   ஒரு நாள் டாக்டர் சவரிராயன் ஏசுதாசன் வெளியிட்டிருந்த “ஆசிரமப் பாமாலை” என்னும் நூலைப் பார்க்க நேரிட்டது.  அந்நூலில் பல கிறித்தவக் கவிஞர்களின் 400 கீர்த்தனைகள் தொகுக்கப்பட்டு இருந்தன. அந்நூலில் ஜான் பால்மரின் கீர்த்தனைகள் சில இடம்பெற்றிருந்தன. ஜான்பால்மர்  1812 முதல் 1883 வரை வாழ்ந்தவர் என்றும்; அவர் மயிலாடியைச் சேர்ந்தவர் என்றும்; அவர் காப்பியம், கீர்த்தனைகள், சிற்றிலக்கியங்கள் படைத்துள்ளார் என்றும் குறிப்புகள் இருந்தன. மிகவும் ஆச்சரியமுற்று அக்குறிப்புகளை எடுத்துக் கொண்டு தேடத் தொடங்கினேன்.  இது பற்றி நாம் ஏன் ஒரு ஆய்வு செய்யக்கூடாது என்று நினைத்தேன். அப்போது  “சர்ச் ஹிஸ்டரி ஆப் திருவிதாங்கூர்” என்ற ஆங்கில நூல் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அதில் ஏராளமான வரலாறு மற்றும் இலக்கியச் செய்திகள் இருந்தன. கிடைக்கிற செய்திகளையெல்லாம் தொகுத்துக் கொண்டே வந்தபோது விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.  1903 ல் வெளிவந்த அந்த நூல் 1118 பக்கங்களைக் கொண்டது.   இப்படித் தேடுதலின் போது கிடைத்த குறிப்புகளும் பல்வேறு ஆதாரங்களும் என்னை இதில் தீவிரமாக ஈடுபட வைத்தன. இது பற்றிய முயற்சியில் யாரும் ஈடுபடாததால் நான் இதில் முனைப்பாக இறங்கினேன்.


யோ.ஞானசந்திர ஜாண்சன்

’கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள்’நூல் மேம்பட்டு மேம்பட்டுப் பல வேறு வேறான பதிப்புகள் கண்ட அனுபவம் எப்படி இருந்தது ?
முதலில் குமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களைத் தொகுத்த நான், பிறகு மேலும் அதை விரிவாகத் திரட்ட ஆரம்பித்தேன். 1988 இல் சென்னை கிறித்தவக்  கல்லூரிப் பணியில் சேர்ந்த பிறகு எனது தேடுதல் ஆர்வத்திற்கு ஊக்கம் கிடைத்தது. தொடர்ந்து இயங்க ஆரம்பித்தேன். கல்லூரியைப் போலவே கிறித்தவ இலக்கிய சங்கமும் பேருதவி செய்தது. அதன் பொதுச்செயலாளர் அருள்திரு டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ், அவரே ஒரு எழுத்தாளர் என்பதால்  கிறித்தவ இலக்கியம் பற்றி நிறைய பேசுவார். கிறித்தவ இலக்கிய சங்கத்திற்கு பல எழுத்தாளர்களை அழைத்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தன். சு. சமுத்திரம், டேவிட் சித்தையா போன்றோரை  அழைத்து சந்திப்புகள் நடத்தியவர். அப்படிப்பட்டவர் எனக்கு பெரிதும் ஊக்கம் தந்தது மட்டுமல்லாமல் எனக்கு நிறைய நூல்கள் கொடுத்து உதவி இருக்கிறார்.
 அதேபோல சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் கிரேஸ் செல்வராஜ் அவர்கள் கிறித்தவ இலக்கியம் குறித்து எனக்கு எடுத்துரைத்தார்கள்; பழைய கிறித்தவ நூல்களும் தந்து உதவினார்கள்.  அவர்  வேதநாயக சாஸ்திரியார் மற்றும் கிறித்தவக் கம்பன் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளையின் நெருங்கிய உறவினர். இத்தகையோரது ஊக்கத்தால் 2003 இல் ’கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள்’ நூல் வெளிவந்தது.

போகப் போக நிறைய தேடலில் நிறைய கவிஞர்களும் கீர்த்தனைகளும் கிடைத்ததால் சேர்த்துக்கொண்டே வந்தேன். ஆய்வு  என்பதைப் பொறுத்தவரை இத்துடன் முடிந்தது என்று எதுவும் கிடையாது. அதற்கு எல்லையும் கிடையாது, தொடர்ந்து கொண்டே இருப்பது தான் ஆய்வு. முதலில் 2003  இல் 45 கவிஞர்களின் வாழ்வும் படைப்புகளும்  பற்றி வெளியிட்டேன். தொடர்ந்து ஆய்வு செய்து 70 பேரைப் பற்றி இரண்டாவது  பதிப்பாக 2009 இலும், மூன்றாவது பதிப்பாக  2017 இலும்  வெளியிட்டேன். பிறகு தொடர் தேடுதலின் மூலம்  91 பேர் பற்றி நான்காவது விரிவாக்கப்பட்ட பதிப்பாக 2024 இல் வெளியிட்டேன்.   அந்த 91 பேரில் 59 பேரின் படங்களும் நூலின் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொடர் தேடுதலில் கிடைத்தன. இப்படி போகப்போக அதுவாகவே மேம்பட்டு மேம்பட்டு வேறு வகையில் அந்த நூல் மாறியது. அந்த 91 பேருக்கு மேல் தேடிய போது வாழ்க்கைக் குறிப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு மேல் தேடிய போது பழைய ஆவணங்கள் கிடைக்காத நிலை இருந்தது. இந்த நூலை இன்று பார்ப்பவர்களுக்கு அதன் அருமை தெரியாது. இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பேசுவார்கள்.
 

 ’சீர்திருத்தக் கிறித்தவர்களின் புண்ணிய பூமி’, ’ஆதித் திருச்சபை’ என்ற பெருமை கொண்ட உங்கள் ஊர் மயிலாடியின் பின்புலம் உங்கள் ஆய்வுக்குத் தூண்டுதலாக இருந்ததா?

எனக்குக் கிறித்தவ இலக்கியங்கள் பற்றிய ஆர்வம் வந்ததற்கு முதல் காரணமே எங்கள் ஊர் தான். நான் முன்பே கூறியபடி ஜான் பால்மர் எங்கள் ஊர்க்காரர் என்கிறபோது அது ஒரு மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது . தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சீர்திருத்தக் கிறித்தவம்   என்பது  எங்கள் ஊரில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அருள்திரு வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே என்பவர் மூலம் தொடங்கப்பட்டது. அவர்  தரங்கம்பாடியிலிருந்து, மயிலாடியைச் சேர்ந்த மகராசன் வேதமாணிக்கம் என்பவரின் வேண்டுகோளினை ஏற்று, 1806 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள்  மயிலாடி வந்தார்.   1809 ஆம் ஆண்டு மயிலாடியில் ஒரு தேவாலயம் கட்டி அதன் அருகில் ஒரு பள்ளியையும் திறந்தார். பிறகு 1810 இல் அதே போல ஆறு ஊர்களில் கோவில் கட்டிப் பள்ளிக்கூடத்தையும் திறந்தார்.
அவர் கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்தாலும் கல்விப் பணியும், மருத்துவப் பணியும் ஆற்றினார் என்பதை மறுக்க முடியாது.  அவரிடம் ஞானஸ்நானம் பெற்ற பலருள் ஒருவர் ஜான் பால்மர். இவரைப் போலவே தேவவரம் முன்ஷியார், மாசிலாமணி ஐயர் போன்றவர்களும் தமிழில் புலமை பெற்று கீர்த்தனைகள், சிற்றிலக்கியங்கள்  எழுதி இருக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது தொடக்கக் காலத்தில் மயிலாடியைச் சேர்ந்தவர்கள்  தமிழிலும் கிறித்தவத்திலும் எத்தனை புலமை கொண்டிருந்தார்கள் என்பதை அறிய முடிந்தது.  .திருவிதாங்கூர் அரசாட்சிக் காலத்தில் குமரி மாவட்டம் இலக்கியத்தில் செழித்திருந்தது.


மயிலாடி சபை என்பது குமரிப் பேராயம், தென்கேரளப் பேராயம், கொல்லம் கொட்டாரக்கரா பேராயம் என்னும் மூன்று பேராயங்களின்  ஆதி சபை.  அதனால்தான் அது இறைவனின் தெரிந்து கொள்ளப்பட்ட ஊராகக் கருதப்பட்டு, “சீர்திருத்தக் கிறித்தவர்களின் புண்ணிய பூமி” எனப்படுகிறது.

மயிலாடி கிராமத்தில் இந்து மக்களும் கிறித்தவ மக்களும் மத வேறுபாடு இல்லாமல் பாகுபாடில்லாமல் நல்லிணக்கத்தோடு இருக்கிறார்கள். சாலைக்கு இந்தப் பக்கம் கிறித்தவர் அந்தப் பக்கம் இந்துக்கள் என்று இருந்தாலும் ஒருவர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிகளில் இன்னொருவர் கலந்து கொள்வது சகஜமாக இருக்கும். அதே போல் பரஸ்பரம் -ஒருவருக்கொருவர் பண்டிகைகளிலும் கலந்து கொள்வார்கள்.

கிறித்தவக் கீர்த்தனைகளைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது? அது கடந்து வந்த பாதை, பயணம் எப்படி?

கீர்த்தனைகளைத் தொகுப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. சிரமமான காரியம் என்று இறங்கிய போதுதான் புரிந்தது. இருந்தாலும் நான் விடவில்லை.
ஜான் பால்மர் கீர்த்தனைகள் என்று எடுத்துக் கொண்டால் அவை ஒரே நூலில் இருக்காது. பல்வேறு நூல்களில் இருந்து எடுத்துத் தொகுக்க வேண்டும். இப்படித் தேடத் தேட 61 கீர்த்தனைகள் அவரது என்று கண்டுபிடித்தேன். அதற்குப் பிறகு தேடும் படலம் தொடங்கியது. அப்படி சேகரிக்க கிறித்தவ சங்கத்தைச் சார்ந்த டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ்  வழிகாட்டினார். பாரம்பரிய கீர்த்தனைகள் சுமார் 2000 சேகரித்துவிட்டேன். அவற்றை அப்படியே வைத்திருந்தால் ஒரே இடத்தோடு அழிந்து போவதற்கு வாய்ப்பு உண்டு என எண்ணி  அதை ஆவணப்படுத்த நினைத்தேன். அப்போது ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் ஜி. ஜான் சாமுவேல் அவர்களிடம் இக்கீர்த்தனைகளைத் தொகுத்து வெளியிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். அவர்கள் இந்தக் கீர்த்தனைகளை வாங்கிப் பார்த்து ஆச்சரியமடைந்து, அவற்றைத் தொகுத்து வெளியிட ஏற்றுக் கொண்டார்கள். அவர்களின் துணையோடு சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனத்தின் வாயிலாக வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நூல் 2244 பக்கங்களில் மூன்று தொகுதிகளாக, ’கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் ஓர் ஆய்வுப் பதிப்பு’ என்னும் பெயரில் 2021 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
இத்தொகுப்பு நூலில் 2221 கிறித்தவப் பாரம்பரியக் கீர்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. 

ஆலயங்களில் கீர்த்தனைகளைப் பாடுவதற்கான வழிபாட்டு நூலில் கீர்த்தனைகளின் சில சரணங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.  அவற்றை மட்டுமே பாடுவர்.  ஆனால் நான் பதிப்பித்துள்ள மூன்று தொகுதியிலும்,  ஒரு கவிஞர் ஒரு  கீர்த்தனையை எத்தனை சரணங்களுடன் பாடியுள்ளாரோ, அத்தனை சரணங்களும் இடம்பெற்றிருக்கும்.   நான் திரட்டி வெளியிட்டவை அனைத்தும் முழுமையான சரணங்களைக் கொண்ட கீர்த்தனைகள் ஆகும். உதாரணமாக ஆபிரகாம் பண்டிதரின் ’கருணாமிர்த  சாகர’த்தில்  இடம்பெற்றுள்ள கீர்த்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கும். வேதநாயகம் சாஸ்திரியார் இயற்றியுள்ள கீர்த்தனைகளின் முழுமையான சரணங்களும்  என் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இப்படி ஒரு முழுமையான தொகுப்பு. அது பெரிய அளவிலான புத்தகம். அதில் 90 கவிஞர்களின் வரலாறும் இடம்பெற்றுள்ளது. அதன் முன்னுரை  அணிந்துரை, ஆய்வுரைகள் 108 பக்கங்கள் இருக்கும். டாக்டர் ஜி. ஜான் சாமுவேல், ஆபிரகாம் பண்டிதரின் வழிவந்த முனைவர் அமுதா பாண்டியன் மற்றும் சென்னைக் கிறித்தவக் கல்லூரி முதல்வர் முனைவர் பால் வில்சன் அவர்களின் துணைவியார் முனைவர் ஜாஸ்மின் வில்சன் ஆகியோரின் ஆய்வுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
 

’கிறித்தவக் காவியங்கள்’ தொகுப்பு அனுபவங்கள் பற்றி?

ஜான்பால்மர் எழுதிய ’கிறிஸ்தாயணம்’ என்னும் காப்பியத்தைப்பற்றி அறிந்து கொண்ட பின்னர், சுமார்  22 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதன் பிரதி எனக்குக் கிடைத்தது. அதற்குப் பலரும் துணை நின்றனர். இப்படி முப்பது காப்பியங்களைத் திரட்டி, அவற்றைப் பற்றி நூல் எழுதினேன். அந்நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி  நிறுவனத்தினர் 2013 இல் வெளியிட்டனர். மேலும் என் உழைப்பின் மூலம் திரட்டி  48 காப்பியங்களைப் பற்றி எழுதினேன்.  அதை நியூ செஞ்சுரி புத்தக  நிறுவனத்தினர் நூலாக 2024 இல் வெளியிட்டனர்.
தேம்பாவணி 1726 இல்எழுதப்பட்டது. அது முதல் காப்பியம் என்று கூட சொல்வார்கள்.  ஆனால் அதைவிட 125 ஆண்டுகளுக்கு முன்பு ’பன்னிரு புனிதர் காதை’ என்ற ஒரு காப்பியம் எழுதப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன். அது 1603-ல் எழுதப்பட்டுள்ளது. இக்காப்பியத்தைக் கருவைநகர் சிதம்பரநாதன் என்பவர் எழுதியிருக்கிறார். இதுவே முதல் காப்பியம் எனத் தற்போது பேசப்படுகிறது. இக்காப்பியத்தையும் சேர்த்து 55 காப்பியங்களைப் பற்றி எழுதியுள்ளேன். இந்நூல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூலம் விரிவாக்கப்பட்டப் பதிப்பாக வெளிவரவிருக்கிறது.

முக்கியமான கிறித்தவக் காப்பியங்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?

தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு காவியம் என்பதுதான் கிறித்தவக் காப்பியங்கள் என்று பலரும் கேள்விப்பட்டிருப்போம். காரணம் அவை மக்களிடம் புகழ் பெற்றிருந்தன. ஆனால் இதைப் போன்று மேலும் பல காவியங்கள் உள்ளதைப் பிறகு தான் அறிந்து கொள்ள முடிந்தது. கிறிஸ்தாயணம், ஆதியாகம காவியம், அர்ச் சவேரியார் காவியம், திரு அவதாரம், சுடர் மணி, அருளவதாரம், இயேசு புராணம், எஸ்தர் காவியம், மீட்பரசி, பவுலடியார் காவியம், உலக ஜோதி, திருத்தொண்டர் காப்பியம், பரவர் புராணம், விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம், அருள்நிறை மரியம்மை காவியம், கிறிஸ்து காவியம் போன்றவை முக்கியமான காப்பியங்கள் என்று கூறலாம்.

கருவை நகர சிதம்பரநாதர் எழுதிய ’பன்னிரு புனிதர் காதை’ வீரமாமுனிவருக்கு 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதாவது தேம்பாவணிக்கு முன்பே எழுதப்பட்டது. அதன் ஓலைச்சுவடி வாடிகனில் இருந்தது. அதை மைக்ரோ பிலிம் செய்து கொண்டு வந்து பதிப்பிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு அருட்தந்தை அமுதன்  அடிகள்  பெரிதும் உதவினார்.


இந்தக் காப்பியங்களை எந்த அடிப்படையிலாவது வகைப்படுத்த முடிந்ததா?
நான் இந்தக் காப்பியங்களை ஏழு வகைமையாகப் பகுத்து வைத்திருக்கிறேன்.

1. திருமறை வரலாற்றுக் காவியம்

 விவிலியத்தின் பழைய, புதிய ஏற்பாடு என்னும் இரு பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ள முழு வரலாற்றையோ அல்லது பழைய ஏற்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள தொடக்ககால வரலாற்றை மட்டுமோ அல்லது விவிலியத்திலுள்ள ஒரு தனி நூலின் வரலாற்றையோ எடுத்துரைக்கும் காப்பியங்கள் இப்பகுப்பில் அடங்கும். 

 
2. கிறிஸ்துவின் வரலாற்றுக் காவியம்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக விரித்துரைப்பவை. 


3.திருமறை மாந்தர் வரலாற்றுக் காவியம்

விவிலியத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய மாந்தர் சிலரது வரலாற்றை விளக்கும் காப்பியங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

4.  திருமறை சாரா மாந்தர் வரலாற்றுக் காவியம்

இப்பகுப்பில் விவிலியத்தில் இடம்பெறாத கிறித்தவ அருட்தொண்டர்கள் மற்றும் புனிதர்களின் வரலாற்றைக் கூறும் காப்பியங்கள் இடம்பெற்றுள்ளன.  சான்றாக புனித சவேரியார், அன்னை தெரேசா, தேவசகாயம்பிள்ளை, வேதமாணிக்கம் தேசிகர்  போன்றோரைக் குறிப்பிடலாம்.

 5. தழுவல் காவியம்

 பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள நூல்களைத் தழுவி தமிழில் எழுதப்பட்டுள்ள காப்பியங்கள் இப்பகுப்பில் அடங்கும். சான்றாக தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், திருச்செல்வர் காவியம், மோட்சப் பயணக் காவியம் என்பனவற்றைச் சுட்டலாம்.

  6. மொழிபெயர்ப்புக் காவியம்

ஜான் மில்டனின் ’பாரடைஸ் லாஸ்ட்’ என்னும் ஆங்கில நூலின் சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் காப்பிய வடிவில் வெளியிட்டுள்ளனர்.  சான்றாக  பூங்காவனப் பிரளயம், சொர்க்க நீக்கம் என்பவை.

  
7.மக்களினக் காவியம்

ஓர் இன மக்களின் தொன்மை வரலாற்றை விவரிக்கும் வகையில் மக்களினக் காப்பியம் என்னும் வகை அமைந்துள்ளது.  இதற்குச் சான்றாக பரவர் புராணத்தைக் குறிப்பிடலாம்.


 இப்படி ஏழு தலைப்புகளில் நான் அவற்றைத் தொகுத்திருக்கிறேன்.

யோ.ஞானசந்திர ஜாண்சன்

பொதுவாக ஆய்வு மாணவர்களே அவர்களது ஆய்வேடுகளை நூலாக்குவர். நீங்கள் 'ஆய்வுச் சுவடுகள்' என்று தொகுப்பதற்குக் காரணம் என்ன?  

ஆய்வுக்கட்டுரைகளை மாணவர்கள்தான் பதிப்பிப்பார்கள். இருந்தாலும்   ஆய்வேட்டிலுள்ள  கருத்துகளும் சிந்தனைகளும் பிற ஆய்வு மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில்   இந்தத் தொகுப்பை நான் வெளியிட்டு இருக்கிறேன்.  ஒவ்வொரு மாணவரிடமும் ஆய்வேட்டின்  சாரத்தை சுமார் 6 பக்கங்களில் சுருக்கி எழுதிக் கேட்டு, அதைத் தொகுத்து  நூலாக்கியிருக்கிறேன். இதில் கிறித்தவ இலக்கியம் பற்றி 11 ஆய்வுகள், நாவல்கள் பற்றி 12, பொதுவானவை இரண்டு என்று 25 தலைப்புகள் இடம் பெற்றுள்ளன.

உங்களது நூல்கள் பெரும்பாலும் கிறித்தவம் சார்ந்தவையாக உள்ளன. அப்படி இருக்கும்போது ’ம.பொ.சியின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்’மற்றும் ’நம்பியகப்பொருள் விளக்கம்’ என்று உங்கள் வரிசை நூல்களில் இருந்து தனித்து வெளியே வந்து வரலாறு, இலக்கணம் சார்ந்த நூல்கள் எழுதக் காரணம் என்ன?

நான் கிறித்தவ இலக்கியம் சார்ந்து ஆய்வு, ஆவண சேகரிப்பு என்று இறங்கிய பிறகு மற்ற எதிலும் கவனம் செலுத்த எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது. அப்படி இருக்கும்போது கல்லூரிக் காலத்திலேயே ம.பொ.சியின் எழுத்து எனக்குப் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை சொற்பொழிவு ஒன்று நடத்துவார்கள். அதில் சொற்பொழிவு செய்யப்படுபவை பெரும்பாலும்  நூலாக  வரும். அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக அப்படி ஒரு சொற்பொழிவுக்காக நான் எழுதியது தான் மபொசி பற்றிய ’ம.பொ.சி. யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்’ என்ற அந்த நூல் .
நான் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு நம்பியகப்பொருள் பற்றி மாணவர்களிடம் பாடம் நடத்த வேண்டும். அதற்கு முழுமையான உரை அப்போது இல்லை. தெளிவான விளக்கங்களும் கிடையாது. கழக வெளியீட்டு நூலில்  சில குறிப்புகள் மட்டுமே இருக்கும்.
ஆனால் அதைப்பற்றி விளக்கினால் போய்க்கொண்டே இருக்கும். சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நான் பலவற்றை ஆய்வு செய்து பல நூல்களை ஒப்பிட்டு ஒரு உரையைத் தயாரித்தேன். இதற்கு பேராசிரியர் சா. பாலுசாமி  உதவினார். அப்படி நான் கற்பிப்பதற்கு   தயாரித்தது தான் அந்த நம்பியகப் பொருள் உரை. நான் எழுதிய விளக்கங்கள் குறிப்புகளைத் தொகுத்து  ’நம்பியகப்பொருள் விளக்கம்’ நூலாக வந்தது. பாரி நிலையம் 2010 இல் வெளியிட்டார்கள். பல கல்லூரிகளில் இந்நூலைப் பயன்படுத்துகிறார்கள்.

’மில்லர் என்னும் மாமனிதர்’ நூல் எழுதிய பின்னணி ?

மில்லர் சென்னை கிறித்தவக் கல்லூரியை நிறுவியவர். அவர் ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவர் 1923 இல் காலமானார். அவரைப் பற்றி கந்தசாமி செட்டியார் ஆங்கிலத்தில் எழுதிய ’வில்லியம் மில்லர்’ என்ற நூலைத்தான் நான் தமிழில் எழுதி இருந்தேன். அறிவர் வில்லியம் மில்லரை ஸ்காட்லாந்து சென்று கந்தசாமி செட்டியார் சந்தித்து இருக்கிறார். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். இரண்டு முறை பட்டமளிப்பு விழா உரையை நிகழ்த்திய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அவர் கல்விக்காகச் செய்த பணிகள் அளப்பரியவை. அவர் பெரிய செல்வந்தராக அங்கே வாழ்ந்தவர். அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் அங்குள்ள சொத்துகளை விற்றுக் கொண்டு வந்து, அந்நிதியில் இங்கே கட்டடங்கள் கட்டுவார்; விடுதிகள் கட்டுவார்; மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்துவார்.

பரிதிமாற் கலைஞர் உடல்நிலை நலிவுற்றிருந்த போது எனது மாணவனுக்கா இந்த நிலை என்று அவரை வீடு  தேடிச் சென்று சந்தித்து மிகவும் வருந்தினார். அப்படி பரிவுணர்வு கொண்ட அவர், தனது மாணவர்களை வீட்டுக்குச் சென்று சந்திப்பார். மிகவும் உயரமான தோற்றம் கொண்டவர் . எழுத்தாளர் அ. மாதவையா எழுதிய 'பத்மாவதி சரித்திரம்' நாவலில் மில்லரை ஒரு கதைமாந்தராகக் கொண்டு வந்திருப்பார். மில்லரைச் சந்தித்தது ஒரு மாணவர் கல்லூரியில் சேர்ந்த அனுபவத்தை எல்லாம் அதில் காட்சிகள் ஆக்கி இருப்பார். அவரது நல்லியல்புகளை எல்லாம் அதில் பாராட்டிருப்பார்.

அப்படிப்பட்ட மில்லர்  உருவாக்கியதுதான் சென்னைக் கிறித்தவக் கல்லூரி. அவருக்கு அப்போது ஜார்ஜ் டவுனிலிருந்த கல்லூரியின் முன்பாக 1901 இல் சிலை வைத்தார்கள். ’மில்லர் என்னும் மாமனிதர்’ என்னும் நூல் எங்கள் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர் .பல வெளிநாட்டு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அதைப் படித்த போது பலரும் நெகிழ்ந்து அழுது விட்டதாகக் கூறினார்கள். ’மில்லர் என்னும்  மாமனிதர்’ என்பதை மில்லர் என்றும் மாமனிதர் என்று கூறலாமே எனப் படித்தவர்கள் மகிழ்ந்து  கூறிய பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
 

நீல பத்மநாபன் பற்றிய ஆய்வு செய்த நீங்கள் அதற்குப் பிறகு வெகுஜன, தீவிர இலக்கியப் பக்கமே வராமல் கிறித்தவ இலக்கியத்திலேயே மூழ்கிப் போனது ஏன்?

நாவல் இலக்கியம் பற்றி ஆய்வு செய்ய, அது பற்றி தொடர்ந்து எழுதுவதற்குப் பலரும் இருக்கிறார்கள். ஏனென்றால் நாவல் இலக்கியங்களும் அதை எழுதியவர்களும்  மக்களிடம் கவனம் பெற்றவர்கள். மக்களிடம் கவனம் பெறாத கிறித்தவ இலக்கியங்கள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று  முடிவு செய்து நான் அதில் முழு மூச்சாக இறங்கினேன். வேறு யாரும் அதைச் செய்வதற்கு முன்வராத காரணத்தாலும் நிறைய அதற்கு உழைப்பு தேவைப்பட்டதாலும் அந்த உலகத்திலேயே நான் வாழ்ந்தேன்.  எனவே இந்தப் பக்கம் நான் வரவில்லை என்று சொல்ல வேண்டும். கிறித்தவ இலக்கியத்தில் ஆய்வு செய்வதற்கு  டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ், டாக்டர் கிரேஸ் செல்வராஜ், டாக்டர் ஜி. ஜான் சாமுவேல், டாக்டர் மோசஸ் மைக்கேல் பாரடே போன்றவர்கள்  கொடுத்த ஊக்கம் தொடர்ந்து அதில் ஈடுபட வைத்தது.

200 கீர்த்தனைக் கவிஞர்கள் 2000-க்கு மேற்பட்ட கீர்த்தனைகள் உள்ள கிறித்தவ இசைப் பாடல் ஆசிரியர்கள் பட்டியலில் 35 இலக்கிய நூல்கள் படைத்த வேதநாயக சாஸ்திரியார் இருக்கிறார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை பெயர் இல்லையே?

மாயூரம் வேதநாயகம் பிள்ளை திருச்சி அருகே பிறந்தவர். அவர் ரோமன் கத்தோலிக்க கிறித்தவர். மாயூரத்தில் சிறந்த சமூகத் தொண்டாற்றியவர். முதல் இந்திய நீதிபதி என்று பெயர் பெற்றவர். அவர் ஆங்கிலேயருடன் நல்ல நட்பில் இருந்தவர். மிஷினரிகளுடன் நல்ல தொடர்பில் இருந்தவர். அவர் தமிழின் முதல் நாவல் ’பிரதாப முதலியார் சரித்திரம்’  எழுதியவர் .அவர்  மேல் தட்டு ஆங்கிலேயருடன் நல்லுறவில் இடம்பெற்றவர். அவர் கற்ற  ஆங்கிலத்தின் தாக்கத்தில் தான், ஆங்கில இலக்கிய வடிவங்களின் தாக்கத்தினால் தான் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தமிழின் முதல் நாவலை எழுதினார்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை ’சர்வ சமய சமரச கீர்த்தனைகள்’ எழுதியவர். அவர் கிறித்தவம் சார்ந்த தனிப்பட்ட கீர்த்தனைகள் எழுதவில்லை. கிறித்தவம் சார்ந்த கீர்த்தனைப் பாடல்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் செய்த அற்புதங்கள், பாடுகள், உயிர்ப்பு போன்றவை பற்றி எழுதப்பட்டிருக்கும். ஆனால் அவர் எழுதிய தன்மையை வேறு. எனவே அவர் பெயர் எனது  பட்டியலில் இடம்பெறவில்லை.

திருச்சபையில் வழிபாட்டு முறையில் ஆராதனை முறைகளில் பாடுவதற்காக (1400 காலகட்டம்) மார்ட்டின் லூதரும் ஜோகன் வால்த்தரும் புதிய பாடல்களை எழுதி இசையமைத்தனர் என்று வரலாற்று பூர்வமாகக் கூறும் நீங்கள்,  கிறித்தவக் கீர்த்தனைகளைத் தொகுக்கும் போது அதன் இசை வடிவத்தை  ஆவணப்படுத்தி இருக்கிறீர்களா? வேதநாயக சாஸ்திரியார் கீர்த்தனைகள் இசை வடிவமாக இருக்கின்றனவா?
வேதநாயக சாஸ்திரியார் கீர்த்தனைகள் பல ஒலிவடிவில் கேசட்டுகளாக உள்ளன. கிறித்தவ சீர்திருத்த இயக்கம் தோன்றிய போது புதிய முறை விவிலியம் எழுதப்பட்டது. வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்டன. அதற்கான பாடல்கள் உருவாக்கப்பட்டன. அப்படித்தான் ஞானப்பாடல்கள்  எழுதப்பட்டன. சீகன் பால்கு ஐயர் 1706-ல் தரங்கம்பாடிக்கு வந்தார். அவர் தமிழ் கற்று ஆங்கிலம் ஜெர்மன் போன்ற மொழிகளில் உள்ள பாடல்களை நேரடியாக மொழிபெயர்த்தும் தழுவியும் எழுதினார். அதைப் பார்த்துவிட்டு அந்தத் தூண்டுதலில் இங்கே உள்ளவர்கள் படித்து ஏன் நாம் தமிழில் எழுதக் கூடாது என்று நினைத்தார்கள். அப்படித்தான் வேதநாயக சாஸ்திரியார் முதல் பலரும் கிறித்தவக் கீர்த்தனைப் பாடல்கள் எழுதினார்கள். அதற்கு இசை தேவைப்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரியாக அவர்கள் எழுதினார்கள். வீரமாமுனிவர் எழுதிய கித்தேரியம்மாள் அம்மானை ஓலைச்சுவடி பிரதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதில்  'ஜெகநாதா குருபரநாதா' என்கிற 10 சரணங்களைக் கொண்ட கீர்த்தனை இடம்பெற்றுள்ளது. அந்தக் கீர்த்தனையை வழிபாட்டுப் பாடல்கள் தொகுப்பில் சேர்த்தனர். இன்றும் இக்கீர்த்தனைப் பாடப்பட்டு வருகின்றது.  வேதநாயக சாஸ்திரிகள் ஏராளமான கீர்த்தனைகளை எழுதினார்.
தமிழில் மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் பாடல்களை ’ஞானப் பாடல்கள்’ என்று  வகைப்படுத்துவார்கள். இவ்வகையில்  நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. இவை ஆங்கிலம், ஜெர்மனி போன்ற மொழிகளில் இருந்து தழுவியவை, மொழிபெயர்க்கப்பட்டவை. அடுத்ததாகக் குறிப்பிடப்படும்  ’கீர்த்தனைகள்’ பெரும்பாலும் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. இசை மரபு கொண்டவை. மூன்றாவதாக விவிலியத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை ’புத்தெழுச்சிப் பாடல்கள்’. இவற்றுக்கு மெட்டுகள் அமைத்துப் பாடுவார்கள்


தேவாரம் திருவாசகத்தில் இசை, பண் உள்ளது போல் கிறித்தவக் கீர்த்தனைகளுக்கும் பண், இசை குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ் மரபின் தாக்கமா?

நிச்சயமாகத் தமிழ் மரபின் தாக்கம் கிறித்தவ இலக்கியங்களில், பாடல்களில்  நிறைய இருக்கின்றன. இந்தத் தாக்கம் இல்லாமல் எழுத முடியாது என்கிற நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் கம்பராமாயணத்தின் தாக்கம்  எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை எழுதிய ’இரட்சணிய யாத்திரிக’த்தில் காணப்படுகின்றது. இதுபோன்று தேம்பாவணியிலும் தமிழ் இலக்கியத்தின் தாக்கம் உள்ளது.
தேவாரம், திருவாசகம், திருக்குறள், கம்பராமாயணம் போன்றவற்றின் தாக்கமும் அதன் இசை மரபு போன்றவை கிறித்தவ கீர்த்தனைகள், காவிய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்களில் காணப்படுகின்றன என்று எனது நூலில் குறிப்பிட்டு இருக்கிறேன்.


முதலில் தமிழில் கீர்த்தனை எழுதியவர் வீரமாமுனிவர் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டீர்களா? அதற்கு முன்பு யாரும் எழுதவில்லையா?

வீரமாமுனிவர் எழுதிய கித்தேரி அம்மாள் அம்மானையில் அந்தக் கீர்த்தனை இருக்கிறது. அது ஜெகநாதா குரு பரநாதா என்று பாடப்படுகிறது. அதற்கு முன்பு எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கான வரலாறுகள் தரவுகள் ஆதாரங்கள் இல்லை.


கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் உங்கள் ஊர்க்காரர் என்பதில் எந்த அளவிற்குப் பெருமைப்படுகிறீர்கள்?
இந்தத் தகவலுக்காக நான் முக்கியமாக பெருமைப்படுகிறேன். எனது கிறித்தவ இலக்கிய ஆய்வுகளுக்கு அது பெரிதும் தூண்டுதலாக இருந்தது என்பதையும் கூறிக் கொள்கிறேன்.


கலாச்சாரப் பரிமாற்றங்கள் காலத்தால் தவிர்க்க முடியாதவை. அதேபோல் கிறித்தவக் கீர்த்தனைகளில் இந்து சமய  தமிழிசை மரபு எந்த அளவிற்குத் தாக்கம் பெற்றுள்ளது ?

நிச்சயமாக. கிறித்தவ இலக்கியங்களில் சைவ, வைணவ இலக்கிய மரபுகளின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்றவற்றின் சந்த அமைப்பும் ஓசை நயமும்  கிறித்தவ இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஏன் சித்தர் பாடல்களில் உள்ள மரபும் கூட காணப்படுகிறது. தமிழ் இலக்கியம் கற்றுத் தமிழ் இலக்கணம் கற்றுத் தமிழ் இசையும் கற்றுப்  பல்வேறு வகையான இலக்கியங்களையும்  சரியாக உள்வாங்கியவர்கள்தான் கிறித்தவக் கீர்த்தனைகளையும் இலக்கியங்களையும்  எழுதி இருக்க முடியும் என்பது தெளிவாகிறது.


கிறித்தவ இலக்கியம் என்றாலே தேம்பாவணி மற்றும் இரட்சணிய யாத்திரிகம் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் நீங்கள் ஏகப்பட்ட இலக்கியங்களைக் கூறுகிறீர்கள். அவை பிரபலமாகாமல் போனதற்கு என்ன காரணம்? அவை தரத்தில் மேற்கண்டவற்றை எட்டவில்லையா?

தரத்தில் குறைபாடு என்று கூற முடியாது. நான் வெளியிட்ட 55 காப்பியங்களும் ஒவ்வொரு வகையில் தரமானவை தான். சில காப்பியங்கள் முழுக்க முழுக்க வெண்பாவால் முறையான இலக்கணத்தோடு எழுதப்பட்டுள்ளன. அப்படி என்றால் சரியான இலக்கணம் இல்லாமல் எழுத முடியாது. எனவே இவற்றுக்கெல்லாம் விளம்பரம் இல்லாமல் போய்விட்டது என்று கூற வேண்டும். எடுத்துச் செல்ல யாரும் இல்லை என்று நினைத்துக் கொள்ளலாம். வீரமாமுனிவரும் எச்.ஏ. கிருஷ்ண பிள்ளையும் கண்ணதாசனும் மக்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். மற்றவற்றை எழுதியவர்களுக்கு விளம்பரமோ எடுத்துச் செல்ல ஆட்களோ அமையாமல் போய்விட்டது என்று கூற வேண்டும். அதனால் அவை காலத்தால் அமுங்கிப் போய்விட்டன. சுவிகரனார் என்பவர் திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். அவர்  1887 இல் ஜான் பனியனின் ’பில்கிரிம்ஸ் புராகிரஸ்’ என்னும் நூலைத் தழுவி,  ’முக்திவழிஅம்மானை’ என்று நானூறு  பக்கத்தில் ஒரு சிற்றிலக்கியம்  படைத்திருக்கிறார். அதில் 5978 கண்ணிகள் உள்ளன. இடையில் 165 விருத்தப்பாக்கள் வேறு உள்ளன.  இலக்கண, இலக்கிய பரிச்சயம் இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்க முடியுமா? இப்படிப்பட்ட நூல் வெளியே தெரியவில்லை. ஏனென்றால் அதற்கு விளம்பரம் இல்லை. அதை எடுத்துச் செல்வதற்கு ஆள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். எனவே அவை தரத்தில்  எட்டவில்லை என்று கூற முடியாது.

நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட, ஆவணப்படுத்திய கிறித்தவ இலக்கியங்கள் கிறித்தவ மதத்தின் எந்தப் பிரிவைச் சார்ந்தவை?
நான் அணுகிய, சேகரித்த, ஆவணப்படுத்திய  கீர்த்தனைகள், இலக்கியங்கள் அனைத்தும் பொதுவான கிறித்தவ சமயம் என்கிற பொதுமையான தலைப்புக்குள்தான் அடங்கும். இதில் ரோமன் கத்தோலிக்க, சீர்திருத்தக் கிறித்தவ இலக்கியங்கள் எல்லாமே கலந்து இருக்கும். பொதுவான கருத்துகளில் எவ்வித வேறுபாடும் இல்லை.


கிறித்தவக் காப்பியங்களில் தமிழ்ச் சமயக் காப்பியங்களின் தாக்கம் உள்ளது பற்றியும் திருக்குறள் கம்பராமாயணம் தேவாரம் திருவாசகம் போன்றவற்றின் தாக்கங்கள் உள்ளவற்றைப் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். அவை எந்த அளவிற்கு உள்ளன?

தமிழ் இலக்கியத்தின் ஆழங்கால் படாமல் கிறித்தவ இலக்கியத்தைப் படைக்க முடியாது. பெரும்பாலும் சைவ வைணவ இலக்கியங்களின் தாக்கத்தில் தான் கிறித்தவ இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை கொண்டுள்ள உட்பொருளைப் பின்பற்றியே அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மரபு, காப்பு, தசாங்கம், நாயகன் நாயகி பாவம் போன்றவை  பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற சமய இலக்கியங்களில் தமிழ் இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடும் கற்பனையும் இருந்தால் தான் இப்படி எழுத முடியும். வேதநாயக சாஸ்திரியார் எழுதியவற்றில் தேவாரம், திருவாசகம், சித்தர் பாடல், தாயுமானவர் பாடல்கள் போன்றவற்றின் பாதிப்பு உள்ளது. அருணகிரிநாதர் பாதிப்பும் நிற்கிறது. பழைய தமிழிசை மரபும் உள்ளது. மாணிக்கவாசகரின்  ’போற்றித் திரு அகவல்’ அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு, சாஸ்திரியார்  ’ஜெபமாலை’ என்னும் நூலினை இயற்றியுள்ளார். தாயுமானவரின் பராபரம் என்ற சொல் சாஸ்திரியாரின் படைப்பில் பராபரன் என்று வந்துள்ளது. பராபரக்கண்ணி என்ற நூலே எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல  சித்தர் பாடல்களின் தாக்கமும் உள்ளன. பக்தி இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கேசாதிபாத வருணனைகளை முன்னோடியாகக் கொண்டு, கிறித்தவ இலக்கியங்களிலும் இவ்வருணனைகள் இடம்பெற்றுள்ளன.பக்தி இலக்கியங்களில் உள்ள நாயகன் நாயகி பாவனை அதாவது இறைவனை தலைவனாகவும் (நாயகன்), பக்தர்களைத் தலைவியாகவும் (நாயகி) பாவித்துப் பாடுவது தமிழ் இலக்கிய மரபிலுள்ள முக்கிய அம்சம். ஆன்மாவாகிய தலைவி இறைவனை அடையத் துடிக்கிறாள்; தலைவனின் வருகைக்காக அவனைக் காண விரும்பி ஏங்குகிறாள். இதுவே நாயகன் நாயகி பாவம் என்பதன் மையக் கருத்து. இந்த உறவு நிலைகளை இறைக்காதல் என்பர். தமிழ் இலக்கிய மரபில் நாயகன் நாயகி பாவம் திருநாவுக்கரசர், ஆண்டாள் போன்றோரால் சிறப்பிக்கப்பட்டுள்ளன.  இம்முறையைக் கிறித்தவப் படைப்பாளர்களும் தங்கள் இலக்கியங்களில் கையாண்டுள்ளனர்.   கிறித்தவ இலக்கியங்கள் சிற்றின்பத்தைத் தவிர்த்து பேரின்பத்தை மையப்பொருளாக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. 
 

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் சங்கீதத்தில் புகழ்பெற்ற தியாகராஜரும்  வேதநாயகரும் சமகாலத்தவர்கள். தியாகராஜர் பாடிய பல பாடல்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு முறை தியாகராஜரின் சீடர் ஒருவர் தெருவில் ’ ராமா கருணை வல்லையோ’  என்று பாடிக்கொண்டு சென்று உள்ளார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சாஸ்திரியார்,   ’ தேவா இரக்கமில்லையா’  என்று அதே இசையுடன் பாடி இருக்கிறார். இப்படித் தமிழ் மரபின் தாக்கம் இல்லாமல் யாரும் எழுதி இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

உங்கள் கல்லூரிப்பேராசிரியர் வாழ்க்கை அனுபவம் எப்படி இருந்தது ? உங்கள் ஆய்வுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது ? எந்த வகையில் தடையாக இருந்தது ?

சென்னை கிறித்தவத் கல்லூரியில் 1988 இல்  டாக்டர் மித்ரா ஜி அகஸ்டின் முதல்வராக இருந்தபோது பணியில் சேர்ந்தேன்.
சென்னைக் கிறித்தவக் கல்லூரி எனக்கு வழங்கிய பல வாய்ப்புகளை மறக்க முடியாது.கல்லூரி எனக்கு வழங்கிய பல வாய்ப்புகளில்  நான் முக்கியமாகக் கருதுவது என்சிசி வாய்ப்பு. நான் பள்ளிக்காலத்திலேயே தேசிய மாணவர் படையிலிருந்தேன். துப்பாக்கிச் சுடும் பயிற்சி எல்லாம் பெற்றேன்.  கல்லூரியில் படிக்கும்போது அதில் சேரவில்லை.ஆனால் கல்லூரிப் பணிக்கு வந்த பிறகு நான் என்சிசி அதிகாரியாக கப்பற்படைப் பிரிவில் (நேவி) 20 ஆண்டுகள் பணியாற்றி, லெப்டினண்ட் கமாண்டரானேன். அந்தப் பொறுப்பு எனக்குப் புதிய அனுபவங்களைத் தேடிக்கொடுத்தது. பல கப்பற்படை அதிகாரிகளுடன் பழகுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.  மாணவர்களை அழைத்துக் கொண்டு கப்பலைப் பார்க்கச் செல்வது,  பயிற்சிக்காக என்னைப் போன்றவர்கள்  கப்பலில் செல்வது போன்ற அனுபவங்கள் கிடைத்தன. இந்தியா முழுக்க அப்படி நான் சுற்றி இருக்கிறேன். பலதரப்பு மாணவர்களை, பலதரமானவர்களை, பல மொழியினரைக் கண்டு உரையாடி உறவாட நல்லதொரு வாய்ப்பாக இருந்தது. ’ஷிப் அட்டாச்மென்ட் கேம்ப்’  என்று போடுவார்கள். அதற்கு மும்பை போன்ற பல நகரங்களுக்கும் சென்றிருக்கிறேன்.   பல பெரிய அளவிலான போர்க்கப்பல்களைப்   பார்க்க முடிந்தது. ஜ.என்.எஸ். சுஜாதா என்கிற  போர்க்கப்பலில் கொச்சியிலிருந்து லட்சத் தீவுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். கொச்சியில் என்னைப் போன்ற ஆசிரியர் அலுவலர்களுக்கு  சுமார் 25 பேருக்கு பயிற்சி அளித்தார்கள். நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. சென்னைத் துறைமுகத்திற்கும் மாணவர்களை அழைத்துச் சென்றிருக்கிறேன். 2002இல் பெண்கள் கப்பல் படைப் பிரிவும் தொடங்கப்பட்டது.இப்படி கப்பல் பயணம் சார்ந்த அனுபவங்கள் புதுமையானதாகவும், ஆர்வமானதாகவும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதாகவும்  இருந்தன. எனது மாணவர்கள் பலர் டெல்லியில் நடைபெறும் குடியரசுத்தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

 கல்விப் பணியல்லாத நிர்வாகப் பணிகளிலும் பங்கு பெற்றுள்ளேன். 2007 இல் கிறிஸ்தவத் தமிழியல் தேசியக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். 117 ஆய்வுக் கட்டுரைகள் வந்தன. கல்லூரி வளாக ஒருங்கிணைப்பாளர் பணி, விடுதி உணவுக்கூட ஒருங்கிணைப்பாளர் பணி ,மலர்க் குழு இணையாசிரியர், கல்லூரி நிர்வாகத்தில் இயங்கும் ஆர்எஸ்எல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் என்று கடமையாக்கியிருக்கிறேன்.

கிறித்தவக் காப்பியங்கள் என்னும் நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடுவதை அறிந்த ஒருவர், இந்த நூலை வெளியிடக் கூடாது என்று அனாமத்துக் கடிதம் அனுப்பினார்.    ஆனாலும்  அந்தக் கடித நகல் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு அது யாருடைய வேலை என்று தெரிந்தது.  அந்தக் கடித்தின் நகலைப் பிரதியெடுத்து, எழுதியவர் உட்படப் பலருக்கும் கொடுத்தேன்.  அதை அனுப்பியவரும் பார்த்தார். பொறாமையின் வெளிப்பாடு தான் அக்கடிதம். நன்மை, தீமை அடங்கியது தான் இந்த உலகம் என்பது எனது அனுபவம்.
அதையும் மீறி என்னை ஊக்கப்படுத்துவதற்கு பலரும் இருந்தனர். நூல் வெளியீடுகளின் போது வருமானம் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நூல்வெளியீடுகளில் எனக்கு இழப்புகள் தான் இருந்தன. ஆனால் எதிர்கால நன்மைகளைக் கருதித்தான் இதைச் செய்து வருகிறேன். இந்த நூற்கள் ஆய்வு மாணவர்களுக்கும், பிற்காலத்தவர்களுக்கும் பயன்பட்டால் போதுமானது. அதுவே எனது விருப்பம். பழைய இலக்கியங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

உங்கள் தேடுதல் பயணத்தில் கிடைத்த அனுபவங்களில் மறக்க முடியாதவை, கசப்பானவை, நெருடல் தருபவை ஆச்சரியம் தருபவை என்று ஏதாவது உள்ளனவா?

ஆய்வுகளுக்காக நாம் தேடுகிற தரவுகள், இலக்கியங்கள், ஆதாரங்கள் போன்றவை எதுவும் எளிதாகக் கிடைக்கும் என்று கூற முடியாது. தேட வேண்டும்; தொடர வேண்டும். அருகில் நெருங்கும் போது கூட கிடைக்காமல் தோல்வியில் முடியும்.
’சுவிசேஷ புராணம் ’ என்னும் காவியத்தை எழுதியவர் சுகாத்தியர்.  ஸ்காட் என்பது அவர் இயற்பெயர். அவர் சுகாத்தியர் என்று தமிழில் தனது பெயரை மாற்றிக் கொண்டவர். மதுரையில் வாழ்ந்தவர். மேற்கு மதுரையில் தபால் அலுவலகம் அருகே உள்ள தெருவுக்கு ஸ்காட் தெரு என்று அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  நான்கு நற்செய்தி நூல்களின் அடிப்படையில் அந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

எனது தேடல்  பயணத்தில் திருநெல்வேலியிலுள்ள ஒருவரிடம் ’சுவிசேஷ புராணம் ’ என்ற  இலக்கிய பிரதி ஒன்று இருப்பதாக  அறிந்தேன். பலமுறை போய் அலைந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் மிகவும் என்னை இழுத்தடித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் கொடுக்க மாட்டார் என்று தெரிந்தது. ஆனால் இதை மதுரையிலுள்ள ஒரு நூலகரிடம் கூறினேன். எனது தேடலின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட அவர் இன்னொரு இடத்தில் இருப்பதாகக் கூறினார். அவர் மீதுள்ள நம்பிக்கையில் அதற்கான பிரதி செலவு, தபால் செலவு போன்றவற்றை உடனே நான்  அவர் கையில் கொடுத்தேன். ஒரே வாரத்தில் எனக்கு அந்தக் காப்பியத்தின் நகல் கிடைத்தது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அருள்திரு. ஸ்தொஷ் என்னும் இறைத்தொண்டர் எழுதிய  ’கிறிஸ்து மான்மியம்’ என்னும் காப்பியத்தை, சென்னைப் பல்கலைக்கழகக் கிறித்தவ இலக்கியத்துறையின் தலைவர் முதுமுனைவர் சூ. இன்னாசி ஐயா கொடுத்து உதவினார்.

இலங்கையில் இருந்து நிறைய கீர்த்தனைகள், காவியங்கள், சிற்றிலக்கியங்கள் எனக்குக் கிடைத்தன. அவை கிடைப்பதற்கு யாழ்ப்பாணத்தில் இருந்த பேராயர் பேரருள்திரு. எஸ். ஜெபநேசன் அவர்கள் பெரிதும் உதவியாக இருந்தார். இலங்கையிலிருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களைக் கொண்டு அவற்றை என்னிடம் சேர்ப்பித்தார்கள்.
இதுபோன்று  பல காப்பியங்களை நூலாகவும், சில மென்பிரதிகளாகவும் இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்றன.  ’இயேசு புராணம்’ என்ற காப்பியத்தை எழுதிய ஈழத்துப் பூராடனார்  இலங்கைக்காரர். அவர் கனடாவில் வாழ்ந்து வந்தார்.  அவரிடம் இருந்த ஒரே பிரதியை, லண்டனில் உள்ள எனது மாணவர் மூலம்  பெற்றது இன்னொரு அனுபவம். இதுபோன்று ஏராளமான அனுபவங்கள் உண்டு.


நான் தேடுபவை எதுவும் எளிதாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஒருமுறை வாடிகனில்  இருந்த   ’பன்னிரு புனிதர் காதை’  என்னும் ஓலைச்சுவடி இருப்பதை அறிந்த அருட்தந்தை அமுதன் அடிகளார் எடுத்த முயற்சிகள் மூலம் அதன் பிரதி எடுத்துக் கொண்டு வரப்பட்டது. அக்காப்பியம் இப்போது பதிப்பு முயற்சியில் உள்ளது.

இப்படி எனது தேடுதல் முயற்சிகளுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்ல இலங்கையில் இருந்தும் எனக்குப் பல நூல்கள் கிடைத்தன. எனது முயற்சிக்கு நான் சந்திக்காத மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாத பல கரங்கள் எனக்கு உதவி செய்துள்ளன.

எனது பாதையில் ஒருவர் சோர்வூட்டினால் இன்னொருவர் ஊக்கம் தருவார் . இப்படியே என்னைப் புதுப்பித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறேன். சில நேரம் சோர்வடைந்து விட்டாலும் நான் இந்தப் பாதை கரடு முரடானது தான் என்பதை அறிந்து கொண்டவன் என்பதால் துவண்டு விடுவதில்லை.


காலத்தையும் உழைப்பையும் விழுங்கக்கூடிய இந்த ஆய்வுப் பணிகளுக்குப் பொதுவாக சமூகத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதை எண்ணி வருந்தியது உண்டா? சலிப்பு ஏற்பட்டதுண்டா?
வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் இருக்கும். மகிழ்ச்சியும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. அதை இயல்பாக எடுத்துக் கொண்டு சென்றால் ஒன்றும் இல்லை. அதற்காக நான் வருந்தியதே கிடையாது. சமூக அங்கீகாரம் குறித்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனாலும் எனக்குச் சிலர் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.  சில முயற்சிகளுக்குப்  பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். சிலவற்றுக்குக் கிடைக்காது. ஆனால் என் பணியைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன். இதன் பெருமை இப்போது உங்களுக்குத் தெரியாது.உங்களுக்குப் பிறகு வரும் தலைமுறையினர் இவற்றைப் படிப்பார்கள் என்றே தொடர்ந்து நண்பர்கள் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

’கிறித்தவ இலக்கியம் நானூறு’ என்னும் நூல் ஜனவரி 2026இல் வெளிவந்தது. இந்த நூலுக்கான பல மூல நூல்களை அருட்தந்தை முனைவர் மணிவளன் அவர்கள் வழங்கினார்கள். இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்க பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களிடம் நேரில் சென்று கேட்டேன். அவர் எனது நூலைப் படித்துவிட்டு  இந்நூல்களை எல்லாம் எங்கே பிடித்தீர்கள்? எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? எப்படிச் சிரமப்பட்டு அலைந்து திரிந்து இதைச் செய்தீர்கள் என்று மிகவும்  மகிழ்வுடனும், ஆச்சரியத்தோடும் கேட்டார். இந்நூலுக்கு நல்லதொரு முன்னுரையை மிகவும் மகிழ்ச்சியுடன் வழங்கினார்கள். தொடர்ந்து பணி செய்ய அன்புடன் வாழ்த்தினார்கள். இப்படி அவ்வப்போது ஊக்கம் வரும்.

 
உங்கள் குடும்பம் உங்களுக்கு எந்த அளவிற்கு ஒத்துழைப்பாக இருக்கிறது? என்றைக்காவது குடும்பப் பொறுப்புகளைத் தடையாக உணர்ந்தீர்களா?
நான் எனது கல்லூரிப் பணி மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையிலும்  பொறுப்போடு நடந்து கொண்டேன் என்றுதான் கூற வேண்டும். குடும்பத்தையும் நான் கவனித்துக் கொண்டேன். அதேபோல் அவர்களும் என்னைக் கவனித்துக் கொண்டார்கள்.
வெட்டி அரட்டை அடிப்பது, வெறுமனே ஊர் சுற்றுவது, பொழுதுபோக்கு என்று ஏதாவது செய்வது, டிவி பார்ப்பது, சினிமா பார்ப்பது போன்ற பல்வேறு விஷயங்களையும் பொழுதுபோக்குச் செயல்பாடுகளையும் குறைத்துக் கொண்டு, எழுதுவது படிப்பது என்று இருந்தேன். அவற்றைத் தியாகம் செய்தேன் என்று சொல்ல முடியாது. புறந்தள்ளிவிட்டு இயங்கியதால் இவற்றைச் செய்ய முடிந்தது என்று கூறுகிறேன்.
ஓய்வு நேரங்களை எப்போதும் பயனுள்ளதாக்க வேண்டும் என்று நினைப்பேன்.  


இதுவரையிலான உங்களுக்கான அங்கீகாரங்கள் பற்றியும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் தமிழ் விக்கி -தூரன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?


நான் எப்போதும் அங்கீகாரத்துக்காக  ஏங்குவதில்லை. இருந்தாலும் சில அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. அவை எனக்கு ஊக்கமளித்துள்ளன. தமிழ் மாமணி ,கீர்த்தனைப்புரவலர், தமிழ் நிதி, அருட்கலைஞர், கிறித்தவ இலக்கியச் செம்மல், பைந்தமிழ் பாணர் போன்ற பட்டங்களை வழங்கிப் பல்வேறு அமைப்புகள்  என் பணிகளை அங்கீகரித்துள்ளன. ஆனால் தூரன் விருதுக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிந்தபோது எனக்கு நம்ப முடியாத மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விருதை என்னால் நம்ப முடியவில்லை. அதற்குப் பிறகு எனது நூல்களைப் பலரும் படிப்பார்கள், படிக்காதவர்கள் படிப்பதற்கு வாய்ப்பாக அமையும், இதற்குப் பிறகு எனக்குப் புதிய வெளிச்சம் கிடைக்கும், புதிய வாசகர்களைக் கொண்டு வந்து சேர்க்கும் என்றெல்லாம் நண்பர்கள் கூறினார்கள். பெருமையாக உணர்ந்தேன். இதை எனது உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். மேலும் ஊக்கம் பெற்றவனாகத் தொடர்ந்து என் பாதையில் செல்ல இந்த அங்கீகாரம் உதவும். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினருக்கு என் மனமார்ந்த நன்றி.

அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறீர்கள்?
’கிறித்தவ இலக்கியம் 400’  என்னும் நூல் வெளிவந்த பின்னர், ’கிறித்தவ உரைநடை இலக்கியம் 500’ என்னும் நூலைத் தொடங்கி இருக்கிறேன். அதற்காக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வு நூல்கள் என்று திரட்டி வருகிறேன். இதுவரை 100 ஐத் திரட்டி எழுதி விட்டேன்.  இன்னும் 400 திரட்ட வேண்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அறிவர் வில்லியம் மில்லர் வாழ்க்கை வரலாற்றை  நானே நேரடியாகத் தமிழில் எழுத வேண்டும் என்னும் நோக்கில், எனது முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுள் ஒருவரின் தூண்டுதாலால் எழுதத் தொடங்கி இருக்கிறேன். முக்கால் பாகம் முடிந்திருக்கிறது.

நான் எப்போதும் பெரிதாகவே நினைப்பேன். சிறிய முயற்சியில் திருப்தியடைய மாட்டேன். என் கனவும் திட்டமும் பெரிதாகவே இருக்கும். கிறித்தவக் காப்பியம் அறுநூறு பக்கங்கள் கொண்டது. மேலும் மேலும் கூடிக்கொண்டே செல்கிறது. கிறித்தவக் காப்பியங்களின் விரிவாக்கப்பட்டப் பதிப்பு 640 பக்கங்களில் வெளிவரப்போகிறது. ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே 480 பக்கங்களையும், கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள் 352 பக்கங்களையும், அருட்பணியாளர் கால்டுவெல் 400 பக்கங்களையும் கொண்டவை. சாகித்ய அகாடமிக்கு பக்க எல்லைகள் கொடுப்பார்கள்.  எச். ஏ. கிருஷ்ணபிள்ளை மற்றும் வேதநாயக சாஸ்திரி பற்றி எழுதிய போது 128 பக்கங்களில் சுருக்கமாக எழுதினேன்.
ஆனால் எனக்குப் பிடித்த கிறித்தவ உரைநடை இலக்கியம் 500 பிரம்மாண்டமாக இருக்கும். நான் எப்போதும்  பெரியதையே கேட்டுக் கொள்வேன். பெரிய உயரத்தையே இலக்காகக் கொண்டு அதை நோக்கியே பயணப்படுவேன். வெற்றியும் பெறுவேன்.






அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram