மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பி  
பேட்டிகள்

‘திருமண சீர் கொடுத்த தட்டில் வைக்கப் பட்ட புத்தகம்!’

கே.நல்லதம்பி நேர்காணல்

அருள்செல்வன்

தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் என இதுவரை 70-க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செய்து இருப்பவர் கே. நல்லதம்பி. சாகித்ய அகாடமி விருது ,விஜயா வாசகர் வட்ட கே எஸ் சுப்பிரமணியன் விருது, திசை எட்டும் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்ற அவருடன் ஓர் உரையாடல்!

உங்கள் தாத்தா காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் அழகாபுரியில் இருந்து மைசூருக்குப் புலம்பெயர்ந்த கதையைச் சொல்ல முடியுமா? உங்கள் ஊரில் அப்படி என்ன பொருளாதார நெருக்கடி ? மைசூரில் என்ன வசதி வாய்ப்பு கிடைத்தது?

1940-களில் என்று நினைவு. நான் அப்போது  பிறந்திருக்கவில்லை. இரண்டாம் உலகப்போரால் 1943 வங்காளப் பஞ்சம் போன்ற நிகழ்வுகள் தமிழ் நாட்டில் (அப்போதைய மதராஸ் மாகாணத்தில்) பொருளாதாரச் சுமையையும் அரிசித் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தின. பெங்களூரின் கேவல்ரி தெரு (இன்றைய காமராசர் தெரு) இன்றைய பெங்களூரின் அந்தத் தெரு அன்றைய மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்திருந்தது. பஞ்சம் பிழைக்கப் புலம் பெயர்ந்த என் தாத்தாவின் குடும்பம் அங்கே வந்து நிலைத்தது. என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன், ‘வெள்ளைச் சோற்றை தேடி வந்தவர்கள் நாம்’ என்று. என் அப்பாவுக்குத் திருமணம் பெங்களூரில் எங்கள் உறவில் நடந்தது. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து மைசூர் வந்து சேர்ந்தோம். நான் பிறந்தது மைசூரில். எங்கள் சமுதாயம் வணிக சமுதாயம். சிறிய அளவில் நெய்  வியாபாரத்தை என் தாத்தாவும், அவரது மூன்று மகன்களும் சேர்ந்து தொடங்கினார்கள்.    

 வீட்டில் தமிழ் பேசிக்கொண்டு மைசூரில் கன்னட வழி படிப்பு அனுபவம் எப்படி இருந்தது ?

எங்கள் சமுதாயத்திற்கு நானூறு ஆண்டுகள் கதை உண்டு என்று நம்புகிறார்கள். விஜயநகரத்தின் பகுதியான காஞ்சிக்கு வடக்கிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்  என்ற கதையுண்டு. விஜயநகர ஆட்சிக்குப் பின் பல இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றார்கள். அதில் ஒரு கூட்டம் தமிழ் நாட்டுக் கரூர் சுற்று வட்டாரத்தில்   நிலைத்தார்கள். அதில் எங்கள் முப்பாட்டன் குடும்பமும் ஒன்று. அழகாபுரியை சொந்த ஊராக ஆக்கிக்கொண்டது எங்கள் முப்பாட்டன் காலத்தில் இருக்கலாம். பிறகு எங்கள் தாத்தா காலத்தில் மைசூருக்குப் புலம் பெயர்ந்தோம். அப்போதே எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 25 குடும்பங்கள் மைசூரில் குடியிருந்தன. அனைவரின் வீடுகளும் ஓரிரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளேயே இருந்தன. மைசூரில் தமிழ் படிக்க வாய்ப்பிருக்கவில்லை. பள்ளிகளில் கன்னடம் மட்டும். இங்கிலிஷ் கற்க வேண்டுமென்றால் கான்வெண்ட்களில் சேரவேண்டும். தாய்மொழியான தமிழைக் கற்பிக்க எங்கள் சமுதாயத்தின் பெரியவர்கள் கும்பகோணத்திலிருந்து ஒரு தமிழ் ஆசிரியரை வரவழைத்து  தமிழ் கற்க ஏற்பாடு செய்தார்கள்.

கும்பகோணத்திலிருந்து வந்த தமிழ் ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டது எப்படி? கற்றது பள்ளிக்கூடத்திலா? அல்லது வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுத்தாரா ?

கும்பகோணத்திலிருந்து வந்த தமிழ் ஆசிரியருக்கு ஒரு வீடு அமைத்துக்கொடுத்து,  10 ரூபாய் வாடகையையும் எங்கள் பெரியவர்கள் செலுத்தினார்கள். சனி ஞாயிறு என வாரத்தில் இரண்டு நாள்கள் . ஓரிரு பெரிய வீடுகளைத் தெரிவு செய்து அங்கே சமுதாயத்தின் பிள்ளைகளுக்கு (சுமார் 50 பிள்ளைகள்) தமிழ் கற்றுக்கொடுப்பார். ஒரு மாணவனுக்கு ரூபாய் 2 கட்டணம் வசூலிப்பார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியரே ஒரு சிறு பள்ளியைத் துவங்கினார். அங்கே தமிழ், கன்னடம் இரண்டும் சொல்லிக் கொடுத்தார்கள். எங்கள் சமுதாயத்துப் பிள்ளைகளைத் தவிர மைசூரில் குடியிருந்த மற்ற தமிழ் சமுதாயத்து பிள்ளைகளும் அந்தப் பள்ளியில் படித்தார்கள்.  

பள்ளியில் பல ஆண்டுகள் ஒரு மொழியைக் கற்றுத் தேறுவது என்பது வேறு. ஆனால் ஒரு தனி நபர் பயிற்சி மூலம் தமிழ் மொழியை எப்படி எழுதப் படிக்கத் தரமானதாக கற்க முடிந்தது? தமிழில் மொழி நிபுணத்துவம் பெற என்ன செய்தீர்கள்?

நாங்கள் படித்தது வெறுமனே தமிழ் எழுதப் படிக்க மட்டுமே. தரமான கல்வி என்று சொல்லிவிட முடியாது. வெறுமனே ஆரம்பக் கட்டப் பாடங்கள் மட்டும் படித்தோம். வீட்டிற்கு தினத்தந்தி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் வரும். அதையும் ஆர்வத்துடன் நான் வாசிப்பேன். ஒரே ஒரு அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இரண்டாம் பாடமாக கற்கும் வாய்ப்பிருந்தது. அங்கேதான் தமிழை இரண்டாம் பாடமாக எடுத்து நான் படித்தது. பிறகு இளம்கலையில் (பி.ஏ) அந்த வாய்ப்புக் கிடைத்தது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பெரிய நிபுணத்துவம் என்பதெல்லாம் கிடையாது. ஒரு ஆர்வம், கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் வாசிப்பது. 

வாசிப்பில், இலக்கியத்தில் எப்படி ஆர்வம் வந்தது? உங்கள் தமிழ், கன்னட வாசிப்பு அனுபவம் பற்றிக் கூற முடியுமா?

எனக்கு ஒரு மூத்த நண்பர் இருந்தார். அவர் ஸ்ரீகாந்த என்ற புனைப்பெயரில் கன்னடத்தில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். 1960-70 களில் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராக இருந்தார். பல விருதுகளையும் பெற்றவர். அவர் ஒரு நாள் எனக்கு சரத்சந்திர சட்டர்ஜியின் ‘ஸ்ரீகாந்தா’ வங்கப் புதினத்தின் கன்னட மொழிபெயர்ப்பை வாசிக்கக் கொடுத்தார். அப்போது எனக்கு வயது 14. என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ஆனால் கண்ணில் கண்ணீர் வந்தது மட்டும் நினைவிருக்கிறது.  கன்னட இலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் மைசூரில் வசித்து வந்தார்கள். குவெம்பு, ஜி.எஸ்.சிவருத்திரப்பா, எஸ்.எல். பைரப்பா,  யு.ஆர். ஆனந்தமூர்த்தி, சதுரங்கா, ராமதாஸ், கிருஷ்ணா ஆலனஹள்ளி, சாதாசிவா, ராமதாஸ், சிவதீர்த்தன், திரிவேணி போன்றவர்கள். என் நண்பர் ஸ்ரீகாந்த் அவர்களைச் சந்திக்கும்போது சில சமயம் என்னையும் அழைத்துப்போவார். அப்போது இலக்கியவாதிகள் மீது ஒரு வகையான ஈர்ப்பு இருந்தது.

 திரு மணியன் அவர்களின் பயணக் கட்டுரைத் தொடர் சாவி அல்லது ஆனந்தவிகடனில் வரும். எனக்கு அது அப்போது மிகவும் பிடித்திருந்தது, சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம், தி.ஜாவின் மோகமுள் போன்றவை வாசித்திருக்கிறேன். சில ஆங்கில நூல்களும், ’My God Died Young’ –Sashti Brata, Domique Lappier –Larry Collins அவர்களின்    ’Freedom at Midnight’  போன்றவை. 

கலை ,இலக்கியத்திற்கும் வணிகத்திற்கும் வெகு தூரம் என்பார்கள். ஆனால் நீங்கள் எப்படி ஒரு தனியார் நிறுவனத்தில் வணிகப்பிரிவுக்கு மேலாளராக 35 ஆண்டுகள் பணியாற்ற முடிந்தது?  அந்தப்பணி அனுபவம் எப்படி இருந்தது ?

வம்ச விருட்சம் வெளியீடு எஸ். எல் .பைரப்பா, பாவண்ணன் ராம்ஜியுடன்

ஒரே சொல்லில்  சொல்வதென்றால் ‘விதி’. எங்கள் குடும்பம் வணிகக் குடும்பம். என்  தந்தையின் வியாபாரம் மிகச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. 30 பேர்கள் கொண்ட பெரிய கூட்டுக் குடும்பம்.  பெரிய வீடு. எங்கள் குடும்பத்தின் நான் அறிந்த 3 தலைமுறையில்   நான்தான் முதல் முதலாகக் கல்லூரிப் படியை ஏறியவன். என் தந்தை மிகவும் நல்லவர். அந்தப் பெரிய குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக நடத்தி வந்தவர். ஆனால் முன்கோபி. எப்படியோ சூது விளையாடப் பழகிவிட்டார். வியாபாரம் சரியத் தொடங்கியது, குடும்பத்தில் குழப்பம். அண்ணன் தம்பிகளுக்கு இடையே மனக்கசப்பு. குடும்பம் பிரிய நேர்ந்தது. 

 என் அம்மா மிக புத்திசாலி. அவர் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலீடாகப் போட்டு  என் தம்பிகளும் நானும் சிறிய அளவில் தொழிலைக் கவனித்துக் கொள்ளவேண்டிய கட்டாயம். எனக்குத் தொழிலில் ஆர்வமில்லை. என் தம்பிகளுக்கு  வழியில்லை. அவர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். செழிப்பான குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்ததால் மிகச் செல்லம். விட்டேற்றித் தனமான பண்பு. பொறுப்பை ஏற்கும் மனப்பக்குவமில்லை. பொறுப்பு வருமென்று நினைத்து  இளம் வயதிலேயே திருமணமும் நடத்தினார்கள். பயனில்லை. தம்பிகளுடன் தகராறு. குடும்பத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம். வேலை  தேட வேண்டிய அவசியம். மகள் பிறந்தாள், பிறகு மகனும் சேர்ந்து பொறுப்பை சுமத்தி விட்டார்கள்.  வேலையில் மிக அக்கறையும் பொறுப்பும் வந்தது. குடும்பப் பாசம் அதைப் பழக்கியது. பாசம் அப்படித்தானே. படிப்படியாக முன்னேற்றம். விற்பனையாளரிலிருந்து  மேலாளர்  வரை பதவி உயர்வு.  

அத்துடன் பயணம் செய்யும் விருப்பம் அதிகமாக இருந்ததால், எனக்கு அது ஏற்ற வேலையாகத் தெரிந்தது. கைக்காசு செலவில்லாமல் பல ஊர்களை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு. கரும்பு தின்னக் கூலியும் கொடுத்தால் வேண்டாமென்று எதற்கு சொல்ல? இலக்கியம் எல்லாம் மறந்தே போனது. சுமார் 35  ஆண்டுகள் வாசித்தவை விரல் எண்ணிக்கையில் தான் இருந்தன.  ஓய்விற்குப் பிறகு ஆழ்மன ஆசைகள் மெல்லத் தலை தூக்கின, கவிதையும், கதைகளும், மொழிபெயர்ப்பும். 14 ஆண்டுகளில் 70 நூல்கள். கன்னடம், தமிழ் இரு மொழிகளிலும், இரண்டு நூல்கள் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்த்தவை. 

35 ஆண்டு பணியில் 14 ஆண்டுகள் ஹைதராபாதில் குடியிருந்தது, இந்தியாவின் பல பகுதிகளைச் சுற்றியது, பல வெளிநாட்டுப் பயணங்கள். பல விதமான மக்களுடன் பழகுவது.  பயணங்களின் சிரமங்களும் சுகங்களும் தரும் அனுபவம் அலாதி. கூடவே கற்றுத் தரும் பாடங்களும் அதிகம்.  அவை இன்று வாழ்க்கையில் பொறுமையையும், சக மனிதர்களுடன் இயைந்து வாழ்வதையும்,  இயற்கையை மதிக்கும் பண்பையும் கற்றுத் தந்துள்ளன. 

ஆரம்பத்திலேயே கவிதைகள் சிறுகதைகள் எழுதி இத்தனை ஆண்டுகள் இடைவெளி எப்படி விட முடிந்தது? வேலை பார்க்க வேண்டிய குடும்ப பொருளாதாரத் தேவை அழுத்தம் இருந்ததா?

நான் வேலை பார்க்கச் சென்றதற்கு எனது குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம். அதனால் என் எழுத்துப் பணிகளில் நீண்ட இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். இடைவெளி விடவேண்டிய கட்டாயம். மனம் அதில் ஈடுபடவில்லை. வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு கதை எழுதும் மனவலிமை என்னிடமிருக்கவில்லை. என் 18 வயதுவரை மிகச் சுகமாக வாழ்ந்தவன். அதற்குப் பிறகான வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்வேன் என்று நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. 

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் போல நீண்ட இடைவெளிக்குப்பின் எழுத்துலகில் மறுபிரவேசம் செய்து தொடர்ந்து இயங்க ஆரம்பித்தீர்கள். அவ்வகையில் 35 ஆண்டுகள் எழுதாமல் இருந்தது உள்ளுக்குள் ஒரு மன அழுத்தம் கொடுத்ததா?

நான் தொடக்கத்தில் என்றால் என்னுடைய 16 வயதிலிருந்து 18 வயதுவரை, கல்லூரி இதழ்களுக்கும், சில கன்னட வார இதழ்களுக்கும் கவிதை எழுதிக்  கொண்டிருந்தேன்.  அதை இலக்கியம் என்று சொல்லிவிட முடியாது. வாசிப்பு இருந்தது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு... மறுபிரவேசம்... அப்படி எதுவுமில்லை.  ஓய்வுக்குப் பிறகுதான் பிரவேசம் என்று சொல்லலாம். அதனால் மனஅழுத்தம் என்று எதுவும் கிடையாது. குடும்பம், தொழில், ஃபோட்டோகிராபி, சில நல்ல நண்பர்கள் என்பதில் மூழ்கிக்கிடந்த எனக்கு இலக்கியம் ஒரு ரசனையாக மட்டுமே இருந்தது.   

அ. முத்துலிங்கம் அவர்களுடன் நான் ஒப்பிட உகந்தவன் அல்ல. அவர் எழுதிய புலம்  பெயர்ந்தவர், புலம்பெயர்வு சார்ந்து  அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கங்கள் மாறுபட்டவை. தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே புலம் பெயர்ந்தவர்களுக்கு பெரிய சவால். அரசியல் சிக்கல்களையும் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அவர்களிடம் துயர அனுபவங்கள் அதிகமாக இருக்கும். 

அந்த இடைவெளியில் எப்போது ஓய்வு  பெறுவோம் என்று நினைத்தீர்களா? அல்லது வாழ்க்கையின் ஓட்டத்தில் இலக்கியம், எழுத்து  போன்றவற்றை மறந்து விட்டு எந்திரகதியில் ஓடிக்கொண்டிருந்தீர்களா?

எந்திரகதி என்று சொல்லமாட்டேன். நான் வாழ்க்கையை மிகவும் ரசிப்பவன். நீரோட்டத்திற்கு எதிராக நீந்துபவன் அல்ல. நீரோடு சேர்ந்து ஒடுபவன். நிம்மதியாக இருந்ததால் இலக்கியம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எழுதியே  ஆக வேண்டுமென்ற அழுத்தம் இருந்ததில்லை. ஓய்வுக்குப் பிறகு எழுத வந்தது ஒரு விபத்து என்றுதான் சொல்வேன். என் ஆரம்ப காலக்கட்ட மொழிபெயர்ப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்திராவிட்டால் தொடர்ந்து செயல்பட்டிருக்க மாட்டேன் என்றுதான்  நினைக்கிறேன். ஓய்வு பெற்ற உடனே எழுதத் தொடங்கவும் இல்லை. என்  போட்டோக்களை interior decorator-களுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தேன். போட்டி  அதிகமாக, குறைந்த இலாபத்திற்கு விற்றுக் கொண்டிருந்தவன் சமாளிக்க  முடியவில்லை. விட்டு விட்டேன். பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் பொழுதைப்போக்க மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அது என்னை இதுவரை பயணிக்க  வைத்துவிட்டது.   

புகைப்படக் கலையில் எப்போது ஆர்வம் வந்தது? புகைப்பட கலையின் பாதை, பயணம் பற்றிக் கூற முடியுமா?போட்டோஜெனிக் என்பதை ஏற்கிறீர்களா? பிலிமில் இருந்து டிஜிட்டல் யுகத்திலும் அந்த ஈடுபாடு தொடர்கிறதா?

என் பணி நிமித்தமாக 14 ஆண்டுகள் ஹைதராபாதில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். அவை என்னால் மறக்க முடியாத வாழ்க்கையின் மிகவும் நிம்மதியான ஆண்டுகள். ஒரு காலத்தில் சினிமா இயக்குநராக வேண்டுமென்ற ஆசையும் இருந்தது. அதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அதில் எஞ்சிய ஆசைதான் இந்த ஃபோட்டோகிராஃபி.  ஹைதராபாதில் ஆந்திரப்பிரதேஷ் ஃபோட்டோகிரா ஃபிக் சொசைட்டி என்ற ஓர் அமைப்பு இருந்தது. அதில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அங்கே எட்வர்ட் என்ற  ஆங்கிலோ இந்தியர் ஒருவர் இருந்தார். அவர்தான் எனக்கு புகைப்படக் கலையைக் கற்றுக் கொடுத்தவர். அந்த அமைப்பின் துணைச் செயலாளராக, செயலாளராக, தலைவராகவும் இருந்தேன். பல புகைப்படப் போட்டிகளில் பங்கேற்று விருதுகளும் பெற்றுள்ளேன். என்னிடம் சுமார் 20-30 ஆயிரம் டிஜிட்டல்  போட்டோக்கள் இருக்கின்றன.   

எனது முதல் கேமரா Pentex - model நினைவில்லை. பிறகு Nikon-க்கு மாறிவிட்டேன். தற்போது Nikon 800 D உள்ளது. 

ஃபோட்டோஜெனிக் என்பது என்னைப் பொறுத்தவரை கிடையாது. போட்டோ எடுப்பவரின் சாமர்த்தியம்தான் அதை உருவாக்குகிறது என்று நம்புகிறவன். இந்தி சினிமா இயக்குநரும் நடிகருமான குருதத்திடம் வி.கே.மூர்த்தி என்ற சினிமோட்டோகிராஃபர் இருந்தார். இந்தி கதாநாயகிகள் அவர் கேமரா வாயிலாக மிகவும் அழகாகத் தெரிவார்கள். அதில் பெரும்பாலானவர்களுக்கு போட்டோஜெனிக் ஃபேஸ் கிடையாது.  இதை நீங்கள் அவருடைய அனைத்துப் படங்களிலும் கவனிக்கலாம். 

ஃபிலிம் யுகத்திலிருந்து டிஜிட்டல் யுகத்திற்கு மாறினால் என்ன? தற்போது கதை, கட்டுரைகளை கையால் எழுதுவது குறைந்து கணினியில் தட்டச்சு செய்வது அதிகமாகி  இருக்கிறதே. அதனால் கதைகளின் தரம் குறைந்துவிட்டது என்று சொல்லி விடமுடியுமா? அதுபோலத்தான் இதுவும். கருவி எதுவாக இருந்தால் என்ன திறமை முக்கியம். ஃபிலிமில் இருந்த சிரமங்கள் குறைந்து இப்போது எளிதாகிவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. டிஜிட்டலில் அதற்கே உரிய சவால்கள் இருக்கின்றன. 

நல்லதம்பி எடுத்த புகைப்படங்களில் ஒன்று

அடிப்படையில் நீங்கள் எப்படிப்பட்ட புகைப்படங்களின் பிரியர்? எந்த மாதிரியான புகைப்படங்கள் எடுப்பீர்கள்?

எனக்கு இயற்கை ஒளியில் படங்கள் எடுப்பது மிகவும் பிடிக்கும். இயற்கைக் காட்சிகளை, நிலக்காட்சிகளை விருப்பமாக எடுப்பேன். அதேபோல் ஸ்ட்ரீட் ஃபோட்டோகிராபி எனப்படும் தெருக்களை அதன் நெரிசல்களின் அழகைப் படமாக்குவது பிடிக்கும்.

நல்லதம்பி எடுத்த புகைப்படங்களில் ஒன்று

 நீங்கள் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி மாணவர் இதழ்களில் கவிதைகள் எழுதி இருந்தேன். அதன் பிறகு மீண்டும் தொடங்கியது 2010 ஆண்டில் என்று நினைவு. சுமார் 40 ஆண்டுகள் கழித்து. 

எப்போது மொழிபெயர்ப்புக்குள் நுழைந்தீர்கள்?

எனது முதல் மொழிபெயர்ப்பு நூல் வெளியானது 2013 இல். ‘மொட்டு விரியும் சத்தம்’ என்ற கவிதைத் தொகுப்பு. கன்னடத்து லங்கேஷ் அவர்களின் குறுங்கவிதைகள். விழிகள் பதிப்பகத்தார் வெளியிட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து இந்தப் 13 ஆண்டுகளில் சுமார் 70 மொழிபெயர்ப்பு நூல்களும் (கன்னடம், தமிழ், இரண்டு நூல் ஆங்கிலத்திலிருந்து தமிமிழுக்கு) ஒரு சுயக் கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு கன்னடத்திலும், ஒரு சிறுகதைத் தொகுப்பு தமிழிலும் வெளியாகியுள்ளது. அது தெலுங்கிற்கு ரமேஷ் பாபு என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

கவிதை எழுதுவதற்கு ஒரு பித்து மனநிலை வேண்டும். கவி உள்ளம் கொண்ட நீங்கள் அதிலிருந்து வெளியேறி எப்படி மொழிபெயர்ப்புக்குச் சென்றீர்கள்?

அந்தப் பித்து மனநிலை இப்போதும் உண்டு. இப்போதும் அவ்வப்போது கவிதை எழுதுகிறேன். ஆனால் எங்கும் பிரசுரிப்பதில்லை. மொழிபெயர்ப்பு செய்யவும் ஒருவகை பித்து தேவைதான். பித்தில்லாமல் எதையும் எவராலும் செய்துவிட முடியாது என்பது என் நம்பிக்கை.

எழுத்தில் ஆர்வமாக இருந்து கொண்டு மொழிபெயர்ப்பில் ஈடுபடும் போது அதனை எழுத்து ஆர்வத்திற்கு, எழுத்து ஊக்கத்துக்குத் தடையாக உணர்ந்ததுண்டா?

விவேக் ஷான்பாக் உடன்

ஓரளவுக்கு உண்டு. என்னுடைய நாவல் ஒன்றை எழுத ஐந்து ஆண்டுகளாக முயன்றுக்கொண்டு இருக்கிறேன். முடியவில்லை. மொழிபெயர்ப்பிலிருந்து விடுதலை அடையத் திணறுகிறேன். ஆனால் மொழிபெயர்ப்பது சவாலாக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பையும் அனுபவித்து செய்கிறேன். கூடிய விரைவில் ஒரு நாவல் எழுதுவேன் என்று நம்புகிறேன். அதே  வேளை என்னை மொழிபெயர்ப்பாளர் என்று அடையாளப்படுத்துவதிலும் எனக்கு எந்தவிதமான   வருத்தமும் கண்டிப்பாக இல்லை. கூடவே எழுத்தாளன் என்றும் சேர்த்துக் கொள்ளலாம். 

நீங்கள் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு ,கவிதைகள், நாடகம், சினிமா ,சிறுவர் நூல்கள் என்று பலவற்றையும் மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். உங்கள் மொழிபெயர்ப்புக்கான நூலை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?

நானாகத் தேடி வாசிக்கும் சில. நண்பர்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் பரிந்துரைப்பவை சில. எதுவானாலும் இறுதி முடிவு என்னுடையது. எனக்குப் பிடிக்க வேண்டும். அப்படி தெரிவு செய்வதற்குப் பல காரணங்கள் உண்டு. மொழிபெயர்க்கும் நூல் எடுத்துச் செல்லும் மொழியில் அதுபோல முன்பு வந்திருக்கக்கூடாது. சில சமூக அக்கறையால். சில பணத்திற்காக ஆனாலும் எனக்கு ஓரளவிற்கு விருப்பமாக இருக்க வேண்டும். 

பொதுவாக மொழிபெயர்ப்பாளர்கள் பிற மொழியில் உள்ள இலக்கியங்களைக் குறிப்பாக நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை மட்டும் மொழிபெயர்ப்பார்கள். நீங்கள் எல்லா வகைமையிலும் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட நூல்கள் தேர்வில் உங்கள் பங்கு என்ன?

என்னைப் பொறுத்தவரை எனக்கு அந்தப் பாகுபாடு கிடையாது. இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் நான் விரும்புகிறேன். ஒவ்வொன்றிலும் அதற்கே உரிய சவால்கள் இருக்கின்றன. அதைச் சந்திப்பதில் எனக்கு ஒரு வகையான கிளர்ச்சி. அதனால் நாவல், சிறுகதை, கட்டுரை, சிறார் இலக்கியம் அனைத்தையும் மொழிபெயர்க்கிறேன்.

உங்கள் மொழி பெயர்ப்பில் அபுனைவுகள் 20 நூல்களுக்கு மேல் என்று கணிசமான அளவில் உள்ளன. அதில் தனி ஆர்வம் காட்டுவீர்களா? 

அப்படி எதுவும் இல்லை. இது எனக்கு இப்போதுதான் கவனத்திற்கு வருகிறது. நான் மொழிபெயர்த்த அபுனைவுகள் அனைத்தும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றியவை. பலவகையைச் சேர்ந்தவை என்பது என் கணிப்பு. உங்கள் மொழிபெயர்ப்பு நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை எந்த வகைமையில் அடங்குவதாக நினைக்கிறீர்கள் என்றால் என்னால் பதில் கூற முடியாது. இதற்கு வாசகர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். என்னால் அப்படி ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.

தமிழிலிருந்து கன்னடத்தில் மொழி பெயர்த்ததில் நாவல்களில் பெருமாள் முருகனின் மூன்று கதைகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணி என்ன?

சிறப்பான பின்னணி எதுவுமில்லை. அவை என் மொழிபெயர்ப்பின் ஆரம்பகாலக் கட்டத்தில் ஏற்பட்டவை. அப்போது மாதொருபாகான் நாவல் மீதான தடை விலக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு அதை வாசிக்கும் ஆர்வமிருந்தது.  பதிப்பகத்தாருக்கு பதிக்கும் ஆசை. எனக்குக் கன்னடத்தில் மொழிபெயர்க்க வாய்ப்புக் கிட்டியது. அவை நண்பரின் பரிந்துரையின் பேரில் செய்தவை. என்றாலும் எனக்கும் பிடித்திருந்தன.  

’யாத்வஷேம்’ நாவலை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

கன்னடத்தில் நான் வாசிக்க வாங்கி வந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று. வாசித்தபோது அது என் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோல் ஓர் நாவல் தமிழில் இதுவரை வந்ததில்லை என்பது என் கணிப்பு. அதனால் அதை மொழிபெயர்த்தேன். தமிழ் வாசகர்கள் அதிகமாகவே அதை விரும்பினார்கள். அதைப் பற்றி சுமார் 40 விமர்சனங்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் என்னிடம் இருக்கின்றன.  

யாத்வஷேம் நூல் உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ?

யாத்வஷேம் நாவலை கன்னடத்தில் வாசித்த பிறகு ஓரிரு நாள்கள் மௌனமாகவே இருந்தேன். மனம் எதிலும் ஈடுபடவில்லை. வரலாறு மீது ஆர்வமிருந்த எனக்கு வதை முகாம்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. இந்தப் புத்தகத்தில் வாசித்து அதிர்ந்து போனேன். இந்த புத்தகத்தைத் தமிழிற்கு எடுத்துச் செல்லவேண்டுமென்று நினைத்து, அதற்கான பணிகளில் இறங்கித் தொடங்கினேன். பிறகு இரண்டாம் முறை கன்னட நூலை மொழிபெயர்ப்பதற்காகவே வாசித்தேன். இப்போது உணர்ச்சிகள் சற்று தணிந்திருந்தன. 

‘யாத்வஷேம்’ மொழிபெயர்ப்பிற்கான 2022 சாகித்ய அகாதமி விருது பெற்றது மட்டற்ற மகிழ்ச்சியையும்,பெருமிதத்தையும் அளித்தது. விருதுகள் எல்லாம் ஓர் அழகான குழந்தையைப் போல, கையில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சலாம், பாராட்டலாம், பெருமைப்படலாம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கை வலிக்கும். அப்போது இறக்கி வைத்துவிட்டு நம் வேலைகளைப் பார்க்க வேண்டும். குழந்தை அழுகிறதே என்று நினைத்தால் நம் மற்ற வேலைகளில் தடங்கல்களோ மெத்தனமோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் அதுபோலவே இருக்க வேண்டுமென்பதும் கிடையாது.    

அந்த அளவிற்கு  பாதிப்பை ஏற்படுத்திய அந்தப் புனைவை மொழிபெயர்க்கும்போது மிகப் பெரிய சவால் என்று எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. நேமிச்சந்திரா அவர்களின் மொழிநடைக்குப் பொருந்திப் போவது சில இடங்களில் சிக்கலாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நான் மொழிபெயர்த்து முடித்ததும், அவர் மூலத்தில் சில மாற்றங்களைச் செய்தார். அதை அவர் கொடுக்க நான் ஆறு/ஏழு மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அப்போது கொஞ்சம் பொறுமை இழந்தது உண்மை. 

எனக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். நான் பி.ஏ. படிக்கும்போது சரித்திரம் எனது விருப்பப் பாடமாக இருந்தது. உலகப் போர்கள் பற்றி ஆர்வம் இன்றும் உண்டு. ஒரு சிறு காரணத்திற்காகத் தொடங்கும் சண்டை, போரில் முடிவது வியப்பாக இருக்கும். தொடங்கிய மூல காரணமே மறந்துவிடும். இது சாதாரண மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். வரலாறு பல பாடங்களைக் கற்பிக்கின்றன ஆனால்  அதனால் படிப்பினை   பெற்றவர்கள் இன்றுவரை யாருமில்லை. 

’யாத்வஷேம்’ நூல்  சார்ந்து வந்திருந்த 40 விமர்சனங்கள்  நேர் நிலையாக இருந்ததா? எதிர்மறையாக இருந்ததா? உங்களைப் பாதித்த விமர்சனம் என்று... ?

பாரதிய பாஷா திவஸ் விருது

யாத்வஷேம் குறித்து  40 விமர்சனங்கள் வந்தன. எனது மொழிபெயர்ப்பில் வந்த நூல்களில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் அதுவாகத்தான் இருக்கும். பலர் அதை வாங்கி தங்கள் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பரிசாக அளித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு திருமணத்தில் சீர் தட்டில் அந்தப் புத்தகம் வைத்திருந்த போட்டோவைப் பார்த்தது வியப்பாக இருந்தது. சுமார் 40 விமர்சனங்கள் வந்துள்ளன. மதுரைக்கு அருகில் ஒரு மலை அடிவாரத்தில் சுமார் 50 பேர் அந்த புத்தகத்தைப் பற்றி கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள். இப்படிப் பல இடங்களில் நடந்துள்ளன.   கருப்பு கருணா, திருவண்ணாமலை அவருடைய விமர்சனம் புத்தகம் வெளிவந்த இரண்டே நாளில் வந்தது வியப்பாக இருந்தது. அந்த விமரசனத்தை எழுதிய பிறகு ஒரு வாரத்திற்குள் என்று நினைக்கிறேன் அவர் இயற்கை எய்தினார் என்று கேள்விப்பட்டு மனம் துவண்டு விட்டது. அவரை நான் சந்தித்ததில்லை. 

சரவண மாணிக்கவாசகம், பாவண்ணன், மஞ்சுளாதேவி, வேலு மலையாளன் பா.தெய்வீகன், சங்கர சுப்ரமணியன், ரமேஷ் கல்யாண் இப்படிப் பலர் விமர்சனம் எழுதியிருந்தார்கள். அனைத்தும் பாசிடிவ். பாதித்த விமர்சனம் என்று சில இருந்தன. தற்போது நினைவிற்கு வரவில்லை. 

அந்த நாவலின் இறுதிப் பகுதிகள் இந்திய அரசியல், குறிப்பாக மதரீதியிலான அரசியல் பற்றிப் பேசப்படுவது சர்ச்சைக்கு உள்ளானதா?

அந்தப் பகுதி புத்தகத்தில் தேவையில்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது என்பது என் காதுகளுக்கு எட்டிய சங்கதி.

தமிழிலிருந்து கன்னடம், கன்னடத்திலிருந்து தமிழ்- மொழிபெயர்ப்பு அனுபவம் எந்த வகையில் ஒன்றுபட்டதாக எந்த வகையில் வேறுபட்டதாக இருக்கும் ? இரண்டையும் ஒப்பிட முடியுமா?

தமிழ், கன்னடம் இரண்டையும் சிறு வயது முதல் படித்திருப்பதால் எனக்கு அதிக வேறுபாடு தெரியவில்லை. இரண்டு மொழிகளும் திராவிட மொழிகளாக இருப்பதால் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனாலும் வாக்கிய அமைப்பு போன்றவை மாறுபடுகின்றன. சில சொல்லாடல்களை, வழக்கு மொழிகளை, வட்டார வழக்குகளை மொழிபெயர்ப்பதில் சிரமங்கள் உள்ளன. குறிப்பாக ‘ஓடை’ நாவல் மொழிபெயர்க்கும் போது அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 

மொழிபெயர்ப்பில் உங்களுக்கான கொள்கை, வரையறை, குறிக்கோள்கள் என்று வைத்துள்ளீர்களா?

அப்படி எதுவும் இல்லை. எனக்குப் பிடித்திருக்க வேண்டும். அவ்வளவுதான். சிலவற்றை  பல நடைமுறைக் காரணங்களுக்காக செய்கிறேன். 

ஒரு மொழிபெயர்ப்பின் முழுமை எதைப் பொறுத்து அமைகிறது?

எந்த மொழிபெயர்ப்பும் 100 விழுக்காடு முழுமையாக இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. ஆங்கிலத்தில் ‘Something is lost in translation’ என்பார்கள். அப்படி ஏதோ ஒன்று மொழிபெயர்ப்பில் தொலைந்து போகிறது. ஆனாலும் சிலதை எச்சரிக்கையாகக் கவனிக்க வேண்டி இருக்கும். 

துல்லியம், கலாச்சாரத் தொடர்பு, தெளிவு, இயல்பான ஓட்டம், நிலைத்தன்மை, பொருத்தமான தொனி, மொழியியல் மற்றும் பொருள் நிபுணத்துவம்,  விவரங்களுக்கு கவனம் – இவை அனைத்தின் மீதும் கவனம் செலுத்துவது  மொழிபெயர்ப்பில் முக்கியமாகும்.  

நீங்கள் தமிழ், கன்னடம், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் மொழிபெயர்ப்பில் மொழி பரிமாற்றம் செய்திருக்கிறீர்கள். அதை ஒப்பிட முடியுமா?

ஒப்பிடுவது சிரமம். தமிழ், கன்னடத்தில் அதிக மொழிமாற்றம் செய்துள்ளேன். ஆங்கிலத்திலிருந்து இரண்டே நூல்கள். ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரிய வாக்கிய அமைப்புகள் இருக்கும். அதைக் கவனத்தில் கொள்வது மிக முக்கியம். முக்கியமாக ஆங்கில வாக்கிய அமைப்புகளை அப்படியே நேரடியாகத் தமிழ், கன்னடத்தில் கொண்டுவர முடியாது. அதை நம் மொழி இலக்கணத்திற்கு ஏற்ப செய்ய வேண்டும் .

மொழிபெயர்ப்பு பற்றி உங்களது விளக்கம் என்ன?

வாசகர்கள் குழப்பமில்லாமல் சரளமாக வாசிக்கும் படியாக எளிமையாக இருக்க வேண்டும். மற்றொரு பண்பாடு, வரலாறு, வாழ்க்கை முறை போன்றவற்றைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது எது என்பதைக்கூறும் அளவிற்கான நிபுணத்துவம் என்னிடமில்லை. வாசிக்கச் சரளமாக இருக்க வேண்டும், புரிய வேண்டும். அதைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன்.

ஏராளமான நூல்களை மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். அந்த அளவிற்குச் சொந்த நூல்கள் எழுத முடியாமல் போனதற்காக வருந்தியது உண்டா?

கண்டிப்பாக வருந்துகிறேன். ஒரு சிறுகதைத் தொகுப்பும், ஒரு கவிதைத் தொகுப்பும் மட்டுமே வெளியாகியுள்ளன. ஒரு நாவலை எழுத ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக முயன்று வருகிறேன். மொழிபெயர்ப்புப் பணிகள் அதிகமாக இருப்பதால் அதை கையிலெடுக்க இதுவரை முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக  விரைவில் எழுதுவேன். 

உங்கள் ’அத்தர்’ சிறுகதை தொகுப்பிற்கு தமிழ் கன்னடம் தெலுங்கில் எப்படியான எதிர்வினைகள் வந்தன?

ஆரம்ப கட்டத்தில் வெகு சில எதிர்மறைக் கருத்துக்கள் கன்னடம், தமிழ் இரு மொழிகளின் மூத்த எழுத்தாளர்களிடமிருந்து வந்தாலும் பிறகு அது மாறிவிட்டது. வாசித்த பலர் பாராட்டிப் பேசியுள்ளார்கள். மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது. முகம் தெரியாத பல வாசகர்கள்  ஃபோன் வாயிலாகவும்  நேரடியாகவும் பாராட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

நீங்கள் பெற்றிருக்கும் பத்துக்கு மேற்பட்ட விருதுகளில் எது உங்களைப் பெருமையாக உணர வைத்தது?

அனைத்து விருதுகளுக்கும் அதற்கே உரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. அதை மதிக்கிறேன். விருதுகளைப் பாராட்டு என்று உணர்வதைவிட பொறுப்பு என்றே எண்ணுகிறேன். அவை இதுவரை செய்ததற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. குறிப்பாக இந்த விருதுதான் பெருமையடையச் செய்தது என்றில்லை. ஒன்றை மட்டுமே சொல்ல வேண்டுமென்றால், அனைவரும் பெற விரும்பும் சாகித்திய அகாடமி விருதைச் சொல்லலாம். 

’யாத்வஷேம்’ ,’காச்சர் கோச்சர்’ நூல்களை அதே பெயரிலேயே தமிழில் வெளியிட்டது ஏன்? பெயரை ஏன் மாற்றவில்லை?

 ‘யாத்வஷேம்’  புனைவின் தலைப்பு அப்படியே இருக்க வேண்டும் என்பதில் கதாசிரியர் மிகவும் அக்கறையுடன் இருந்தார். தமிழ் வாசகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் அதற்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு தலைப்பு முக்கியமல்ல உள்ளே இருக்கும் சரக்குதான் முக்கியம் என்பதை புரியவைத்தது.  ’காச்சர் கோச்சர்’ வார்த்தைக்குப் பொருளில்லை. அது பொருள் பெறுவது எழுத்தாளர் வாயிலாக. பொருளில்லாத வார்த்தை எந்த மொழியில் இருந்தால் என்ன? அத்துடன் மூல எழுத்தாளரின் விருப்பமாகவும் இருந்ததால் மாற்றவில்லை. 

ஒரு மொழிபெயர்ப்பின்போது யாரைக் கவனத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும் மூல ஆசிரியரா? வாசகனா?

வாசகன். மூல எழுத்தாளரும் அந்த நோக்கத்தில்தானே எழுதி இருப்பார். 

தொழில்நுட்பத்தில் பிழை திருத்திகள் போல் மொழிபெயர்ப்பான்களும் கருவிகளாக வந்துவிட்டன. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்ன கருவிகள் வந்தாலும் அவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. அப்படி வருவதும் நல்லது. அதுவும் ஒருவகை சவால். மனிதனுக்கு இருக்கும் உள்ளுணர்வு  (intuition) எதிர்வினை செய்வதுபோல்  இயந்திரங்களால் முடியுமா என்ற சந்தேகம் எனக்கு. 

ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலப் படைப்பாளியைச் சந்தித்துத் தெளிவு பெறுவது மொழிபெயர்ப்பை மேம்படுத்துமா ?அப்படிச்  சந்தித்த அனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?

வாய்ப்பிருந்தால் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும். அதுபோல் நான் சிலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களுடனான கலந்துரையாடல் மொழிபெயர்ப்பைத் தெளிவு பெறச்செய்யும். குறிப்பாக சிக்கல்கள் இருக்குமிடத்தைக் கட்டாயமாக அவர்களிடமிருந்து விளக்கம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 

விவேக் ஷான்பாக், ஜெயந்த் காய்கணி, திவாகர், பைரப்பா போன்றவர்களைச் சந்தித்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டதுண்டு. அதுபோல் மாதொருபாகன் மொழிபெயர்க்கும்போது  பெருமாள் முருகனிடமிருந்து வட்டார வழக்குகளைப் பற்றி விவரம் பெற்றதுண்டு.  

எந்த நூலை மொழிபெயர்ப்பது உங்களுக்குச் சுலபமாக இருந்தது ? எது சவாலாக இருந்தது ? 

சுலபம் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொன்றும் அதற்கே உரிய சவால்களைச் சுமந்துவரும். மொழிபெயர்ப்பே ஒரு பெரிய சவால். ஸ்ரீநிவாச வைத்தியரின் ‘ஓடை’ (கன்னடத்தில் ‘ஹள்ள பந்து ஹள்ள’) நாவலை மொழிபெயர்ப்பது மிகக் கடினமாக இருந்தது. அது வட கர்நாடகாவின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பேச்சு மொழி. அதுமட்டுமல்லாமல் முதல் 30-40 பக்கங்களின் விவரம் ஒரு வரலாற்று காட்சிபோல் கண் முன் அமையவேண்டும். அதைக் கொண்டுவர மிகவும் திணறினேன். அதைக் குறைந்தது 30 தடவையாவது அழித்தும், திருத்தியும் எழுதி இருப்பேன். ஓராண்டிற்குள் முடித்துக் கொடுக்க வேண்டிய புத்தகம் எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை ஆண்டுகள்.  ஒரு கட்டத்தில் முடியாது என்று கைவிட இருந்தேன். ஆனால் இரவு தூங்கி எழுந்ததும் மனம் மாறிவிட்டது. ‘முடியாதது என்ன?’ என்ற ஒரு தெனாவட்டில் மீண்டும் தொடங்கினேன். 

மொழிபெயர்ப்பதைச் சுலபமாக வார்த்தை மாற்றுதல் போல் கருதுபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் உள்ள சிரமங்களாக நீங்கள் கருதுவது என்ன?

சுலபமாக வார்த்தை மாற்றுவதுபோல் என்று நினைப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? அது அவர்கள் கருத்து மதிப்போம். பல சிரமங்கள் இருப்பது மொழிபெயர்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். மூல மொழியின் தொனியைப் புரிந்துகொள்வது. அதை மொழிபெயர்ப்பில் கொண்டுவர முயல்வது அத்தனை எளிதானதல்ல.  

இந்தத் துறையில் உங்களுக்கு ஏதாவது ஆதங்கம் இருக்கிறதா?

தமிழவன் 35 வயது நாட்டியக்காரியான எழுத்தாளர் கன்னட நூல்

நல்ல சன்மானங்கள் கொடுக்கலாம். உழைப்பு, நேரம், திறமை அதற்குச் சமமான சன்மானம். பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள் அல்லது மாற்று வருமானம் இருப்பவர்கள் மொழிபெயர்க்க வருகிறார்கள். மொழி மீது ஆர்வமிருக்கும் இளம் தலைமுறைகள் வர வேண்டும். அவர்களை ஈர்க்க வேண்டுமென்றால் அவர்கள் இதையே வாழ்வாதாரமாக அமைத்துக் கொள்ளுமளவிற்கு ஆதாயம் இருக்க வேண்டும். 

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மொழிப் படிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மொழி கற்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்து ஒரு சிறு நூலையாவது அவர்கள் இளம்கலை, முதுகலை முடிப்பதற்குள் மொழிபெயர்க்க ஊக்குவிக்க வேண்டும். சாகித்திய அகாதமி போன்ற அமைப்புகள் அதற்கு உதவலாம். 

இன்று மொழிபெயர்ப்பு தேவையில்லாத துறையே இல்லை. கல்வி, மருத்துவம், பொறியியல், வணிகம், ஆட்சிமுறை இப்படி எல்லாத் துறைகளிலும் அதன் தேவை இருக்கிறது.   அதனால் மொழிபெயர்ப்பை ஊக்குவிப்பது காலத்தின் தேவை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram