முனைவர் ஜெயலலிதா 
பேட்டிகள்

தொல்காப்பியத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்த ஜெயலலிதா நேர்காணல்!

அருள்செல்வன்

தமிழிலிருந்து கன்னடத்திற்குச் சங்க இலக்கிய, இலக்கண நூல்கள் தொடங்கி பிற்காலத்திய ஜெயகாந்தன்  புனைவுகள் வரை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் முனைவர் ஜெயலலிதா. பெங்களூரில் பிறந்தவர். கன்னட மொழியில் ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்ற இவர்,  மொழியியலும் படித்தவர். தேசிய அளவில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர். பெங்களூர் தமிழ்ச்சங்க விருது, நல்லி திசை எட்டும் விருது,  ஸ்ரீ லட்சுமி தேவி சாந்தாரசா ஹெம்பராலு விருது, கர்நாடக சாகித்திய அகாடமி விருது, குவெம்பு பாஷா பாரதி விருது, திராவிட மொழியியல் கழகம் வழங்கிய பன்னீர்செல்வம் விருது,  தமிழ்நாடு ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். ஆந்திராவில் உள்ள  குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அவருடன் ஓர் உரையாடல்.

குடும்பச்சூழல், கல்வி கற்ற சூழல் பற்றி?

நாங்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பம். நான் இதுவரை படித்தது அனைத்தும் அரசுப் பள்ளிகளிலும் அரசு கல்லூரிகளிலும்தான். எங்கள் குடும்பத்தில் கல்விப் பின்னணி அதிகமாக இல்லாவிட்டாலும், எனக்குள் இருந்த கல்வி ஆர்வமும், என் தாயாரின் ஊக்கமும் ஆதரவும் என்னுடைய கல்விப் பயணத்தை முன்னெடுத்துச் சென்றன. குறிப்பாக, என் தாயார் எனக்கு முதுகெலும்பாக இருந்து, தொடர்ந்து ஊக்கமளித்தார்.
.எனக்குள் இருந்த கல்வி ஆர்வமும், என் தாயாரின் ஊக்கமும் இணைந்துதான் என்னுடைய கல்விப் பயணம் வளர்ந்தது. குடும்பத்தில் கல்விச் சூழல் அதிகமாக இல்லாவிட்டாலும், படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தை என் தாயார் என்னுள் வளர்த்தார். என்னுடைய கல்வி வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அவருடைய ஆதரவு மிக முக்கியமான காரணமாக இருந்தது.
பெங்களூர் பல்கலைக்கழகத்தில் எம் ஏ கன்னடத்தில் ஐந்து தங்கப் பதக்கங்கள் பெற்றது பற்றி? அந்த அளவிற்கு  படிப்பில் ஆர்வமா?

நான் பட்டப்படிப்பில் கன்னடத்தை விருப்பப் பாடமாகப் படிக்கவில்லை. அதனால் எம்,ஏ கன்னடத்தில் சேர்ந்தபோது ஆரம்பத்தில் எனக்கு ஒரு விதமான அச்சமும் ஆர்வமும் இருந்தது. கன்னடத்தை முறையாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆரவத்துடன் ஒவ்வொரு பாடத்தையும் ஆழமாகப் புரிந்துகொண்டு படிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து படிப்பது, சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வது, ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பயன்படுத்திக்கொள்வது , படித்தவற்றை மீண்டும் மனதில் வரைந்து வரைந்து பார்ப்பது ஆகியவை எனது படிப்பில் ஆர்வத்தை மேலும் அதிகரித்தன.

எனது தாயாரின் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது. அதோடு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கிடைத்த கல்விச் சூழல், ஆசிரியர்களின் வழிகாட்டுதல், என்னுடைய கடின உழைப்பு ஆகியவற்றின் விளைவாகவே ஐந்து தங்கப் பதக்கங்கள் பெற முடிந்தது என்று நான் கருதுகிறேன்.

மொழியியலில் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது? மொழிபெயர்ப்பு பற்றிய எண்ணம் எப்போது தோன்றியது?

என் தாய்மொழி தமிழ் என்பது நான் பட்டப்படிப்பு படிக்கும்போதுதான் எனக்குத் தெரியவந்தது. வீட்டில் நாங்கள் கன்னடத்தில்தான் பேசிக்கொண்டிருந்தோம். இந்த இருமொழிச் சூழல், தமிழ் மற்றும் கன்னட மொழிகளின் அமைப்பு, சொற்கள், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வத்தை எனக்குள் உருவாக்கியது .என் ஆசிரியரான தமிழவன் (முனைவர் எஸ். கார்லோஸ்) அவர்களே. நான் மொழிபெயர்ப்புத் துறைக்கு வருவதற்கான முக்கியக் காரணம், அவருடைய வழிகாட்டுதலும் ஊக்கமும் தான். ஒரு மொழியில் உள்ள சிந்தனைகளையும் இலக்கியங்களையும் மற்றொரு மொழியின் வாசகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் அவர் ஏற்படுத்தினார். அங்கிருந்தே மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பின் மீதான என் ஆர்வம் மேலும் வளர்ந்தது.

'திராவிட மொழிகள் ஒப்பீடு' பற்றி அறிந்த போது என்ன தோன்றியது?


நீங்கள் கேட்ட இந்தக் கேள்வி உண்மையிலேயே ஆய்வு செய்து தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விரிவான பதிலாகும். கன்னடத்திற்கும் தமிழுக்கும் மற்ற திராவிட மொழிகளுடன் இருப்பதைவிட மிக் நெருக்கமான தொடர்பு இருப்பதை அறிய முடிந்தது. குறிப்பாக, பண்டைய காலத்தைச் சேர்ந்த கன்னட மற்றும் தமிழ் இலக்கியங்கள் ஒன்றுக்கொன்று கொடுக்கல் வாங்கல் மூலம் தாக்கம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. கன்னடத்தில் தற்போது கிடைக்காத ஒரு யாப்பு நூல் குறித்த விவரங்களை தமிழின் யாப்பெருங்கலக்காரிகை என்ற யாப்பு நூல் எடுத்துரைக்கிறது. கன்னட யாப்பு நூலில் கூறுகின்ற மாதிரியே தானும் நூற்பாக்களை ஒரு பெண்ணுக்குக் கூறுவது போலேயே எழுதியுள்ளேன் என்று இந்த நூல் ஆசிரியர் கூறியுள்ளார். அதேபோல, கன்னடத்தின் முதல் அணி நூலான 'கவிராஜமார்க'த்திலும், தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் அந்தந்த மொழிகள் பேசப்படும் நிலப் பகுதியின் புவியியல் எல்லைகளை அடையாளப்படுத்துவதும் ஆகிய கூறுகளைக் காணமுடிகிறது.
தொல்காப்பியத்தில் இடம்பெறும் பேய்க்காட்சி போன்ற நிகழ்வை மற்றும் சிங்கநோக்கு எனும் ஒரு தந்திரத்தைக் கன்னடக் கவிஞர் ரன்னாவின்' கதாயுத்தம்' எனும் நூலில் காணலாம். மேலும் கன்னடக் கவிஞரான ஹரிஹரன் எழுதிய `புராதனர ரகளே’ எனும் நூல் கன்னட இலக்கிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பக்திக் காவிய நூலாகும். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கைக் கதைகளை மிகுந்த பக்தியுடனும் ஈடுபாட்டுடனும் விவரித்துள்ளார். இப்படி இந்த இரண்டு மொழிகளுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளையும், நெருக்கமான தொடர்புகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

நாட்டுப்புற இலக்கியத்தில் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?


புத்தகங்களில் காணப்படும் இலக்கியத்திலிருந்து மாறுபட்ட, உயிரோட்டமிக்க ஓர் அனுபவத்தை நாட்டுப்புற இலக்கியம் எனக்கு வழங்குகிறது. பாடல்கள், கதைகள், பழமொழிகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதம் என்னை ஈர்த்தது.

எம்.ஏ. படித்தபோது நாட்டுப்புறவியலைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். அப்போது டாக்டர் கார்லோஸ் அவர்கள் அந்தப் பாடத்தைக் கற்பித்தார். அவருடைய கற்பித்தலும் வழிகாட்டுதலும் எனக்குள் நாட்டுப்புற இலக்கியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, அவருடைய வழிகாட்டுதலிலேயே குழந்தைகளின் நாட்டுப்புறக் கதைகளைப் பற்றி எம்.பில். மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டேன். அந்த ஆய்வுப் பயணத்தின் மூலம் நாட்டுப்புற இலக்கியத்தின் மீது எனது ஆர்வம் மேலும் ஆழமானது. பெண்களின் பாடல்கள், மக்களின் வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவை நாட்டுப்புற இலக்கியத்தில் மிகவும் இயல்பாக வெளிப்படுகின்றன. இது நாட்டுப்புறவியல் ஆய்வில் எனது ஆர்வத்தை மேலும் வலுப்படுத்தியது.

மொழிபெயர்ப்பானது, கற்பித்தல், நாட்டுப்புறவியல், ஒப்பாய்வு ஆகியவற்றுடன் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது?


இவற்றை நான் தனித்தனித் துறைகளாகப் பார்ப்பதில்லை. மொழி, இலக்கியம், நாட்டுப்புறவியல், ஒப்பாய்வு, மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒரு மொழியின் இலக்கியம் மற்றொரு மொழியின் வழியாக அறிமுகப்படுத்தப்படும்போது, மொழி மட்டுமல்லாமல் அதன் பண்பாடும் வாழ்வனுபவமும் சேர்ந்தே வரும். எனவே, என் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுடன் மொழிபெயர்ப்பும் இயல்பாகவே இணைந்து வளர்ந்தது. இந்த மொழிபெயர்ப்புகள் என்னுள் உறங்கிக் கிடந்த எழுத்தாளரை வெளிக்கொண்டு வருவதோடு, ஒப்பீடு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் எனக்கு பெரிதும் துணைபுரிந்தன.

 மொழிபெயர்ப்பில் உங்கள் கொள்கை என்ன? உங்கள் வரையறை மற்றும் வரம்புகள் என்ன?


மூலப் படைப்புக்கு உண்மையாக இருப்பதும், இலக்கு மொழியில் இயல்பாக வெளிப்படுத்துவதும் என் முதன்மைக் கொள்கைகள். இரண்டாவது நேர்மை, கடின உழைப்பு, தொடர்ந்து கற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுவதாகும். கல்வி என்பது வெறும் அறிவைப்பெறுவதற்கான கருவி மட்டுமல்ல, அது சமூகத்திற்கும் இலக்கிய உலகத்திற்கும் பயனளிக்கவேண்டிய ஒரு பொறுப்பு என்று நான் நம்புகிறேன். தமிழ் கன்னடம் உள்ளிட்ட திராவிட மொழிகள் மற்றும் இலக்கியங்களைக் கற்றறிந்து அவற்றுக்கிடையிலான ஒற்றுமைகளையும் தனித்துவங்களையும் ஒப்பீட்டாய்வுகளின் மூலம் ஆராய்வதே என்னுடைய முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாகும். சொல்லுக்குச் சொல் உண்மைத்தன்மையைவிட, படைப்பின் நோக்கம், உணர்வு, சூழல், குரல் ஆகியவற்றுக்கு உண்மையாக இருப்பதே முக்கியம் என்று நான் நம்புகிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியரின் மீது தனது தனிப்பட்ட கருத்துகளைத் திணிக்கக் கூடாது. அதே நேரத்தில், இலக்கு மொழி வாசகர்களை இயல்பாகச் சென்றடையச் செய்வதற்குத் தேவையான படைப்புச் சுதந்திரம் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டும்.நான் பணியாற்றி வரும் திராவிடப் பல்கலைக்கழகத்தின் கன்னட மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையும் என்னுடைய இந்த மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு பெரிதும் ஆதரவாகவும் துணையாகவும் இருந்துள்ளது.

மொழிபெயர்க்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளர் யாரை மனதில் கொள்ள வேண்டும்?


முதலில், மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியரையும் மூலப் படைப்பையும் மதிக்க வேண்டும். அதன்பிறகு, இலக்கு மொழியின் வாசகர்களை மனதில் கொள்ள வேண்டும். என் பார்வையில், ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது மூலப் படைப்பு அதன் வாசகர்களுக்கு வழங்கும் அனுபவத்திற்கு முடிந்த அளவிற்கு நெருக்கமான அனுபவத்தை இலக்கு மொழி வாசகர்களுக்கும் வழங்குவதாகும்.

உங்களது மொழிபெயர்ப்பு மூலம் தமிழ்ச் சிறுகதைகள் கன்னடத்திற்குச் சென்ற அனுபவம் பற்றி?


நான் முதலில் பல தமிழ்க் கதைகளைத் தேர்ந்தெடுத்து  தமிழிலிருந்து கன்னடத்தில் மொழிபெயர்த்து சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டேன். அதன் பின்னர், தமிழ்ச் சிறுகதைகளைத் தொடர்ந்து கன்னடத்தில் மொழிபெயர்த்தேன். தமிழ்ச் சிறுகதைகளின் பாணியும் உத்திகளும் கன்னட இலக்கிய உலகிற்கு மிகவும் புதியவை. அவற்றைக் கன்னட வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை இந்தச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பின் மூலம் நான் செய்திருக்கிறேன் என்று கருதுகிறேன்.
தமிழ்ச் சிறுகதைகளை கன்னடத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கியபோது, ஒரு மொழியின் இலக்கியத்தை மற்றொரு மொழியின் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எனக்கு இருப்பதை உணர்ந்தேன். மொழிபெயர்ப்பு என்பது வெறும் சொற்களை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுவது அல்ல; கதையின் உணர்வு, பண்பாட்டுப் பின்னணி, வாழ்க்கை அனுபவம், மொழிநடை ஆகியவற்றையும் இயல்பாகக் கொண்டு சேர்ப்பதாகும்.
என்னுடைய மொழிபெயர்ப்பு அனுபவத்தில், தமிழ் வட்டாரச் சொற்கள், பண்பாட்டுக் கூறுகள், பேச்சுவழக்கு ஆகியவற்றை கன்னடத்தில் இயல்பாக வெளிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினேன். இதன் மூலம் தமிழ்ச் சிறுகதைகளின் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களையும் உணர்வுகளையும் கன்னட வாசகர்களிடம் கொண்டு செல்ல முடிந்தது. அதே நேரத்தில், இந்த மொழிபெயர்ப்புப் பணிகள் எனக்குள் இருந்த எழுத்தாளரை வெளிக்கொண்டு வந்ததோடு, தமிழ்–கன்னட இலக்கியங்களுக்கிடையிலான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் உதவின.
எனவே, என்னுடைய மொழிபெயர்ப்பு அனுபவம் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கான பயணமாக மட்டுமல்லாமல், இரண்டு மொழிகளின் இலக்கியங்களையும் பண்பாடுகளையும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் ஒரு பயணமாகவும் அமைந்தது.

வித்யா சங்கர் பிரஷஷ்தி பட்டம்

 நீங்கள் இலக்கண நூலான 'யாப்பருங்கலக் காரிகை'யை எப்படி மொழிபெயர்த்தீர்கள்? அந்தப் பணியில் சவால்கள் இருந்ததா?
யாப்பருங்கலக் காரிகையை மொழிபெயர்ப்பது எனக்கு ஒரு சவால் என்பதை விட புதிய அனுபவத்தை அளித்த ஒரு பணியாக இருந்தது. இது ஒரு சாதாரண இலக்கிய நூலை மொழிபெயர்ப்பதைப் போன்றது அல்ல; தமிழ் யாப்பிலக்கணத்துடன் தொடர்புடைய கலைச்சொற்கள், இலக்கணக் கருத்துகள், செய்யுள் அமைப்பு, அசை வகைகள், தளை  ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொண்டுதான் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. கன்னட யாப்பிலக்கணத்திற்கும் தமிழ் யாப்பிலக்கணத்திற்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதால், இந்த மொழிபெயர்ப்புப் பணி எனக்கு அவ்வளவு கடினமாகத் தோன்றவில்லை.
ஆனாலும் மிக எளிது என்றும் சொல்லமுடியாது. முதலில் மூலநூலைப் பலமுறை வாசித்து, ஒவ்வொரு காரிகையின் பொருளையும் தெளிவாகப் புரிந்துகொண்டேன். பின்னர் அதற்கான உரைகள் மற்றும் தொடர்புடைய இலக்கண நூல்களைப் பார்த்து, கன்னடத்தில் அதற்குச் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தேன்.
யாப்பருங்கலக் காரிகையின் மொழிபெயர்ப்பு எனக்கு ஒரு மொழிபெயர்ப்புப் பணியாக மட்டுமல்லாமல், தமிழ்–கன்னட இலக்கண மரபுகளை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளும் ஒரு சிறந்த ஆய்வு அனுபவமாகவும் அமைந்தது.

 'ஒரு வீடு ஒருமனிதன் ஒரு உலகம்' மொழிபெயர்ப்பு அனுபவம் எப்படி?அது யாருடைய தேர்வு ?

ஜெயகாந்தன் அவர்களின்  இரண்டு சிறுகதைகளை நான் முதன்முதலில் மொழிபெயர்த்த சிறுகதைத் தொகுப்பில் சேர்த்திருந்தேன். அப்போது அந்தக் கதைகளின் கருப்பொருள், பாத்திரப் படைப்பு, எழுத்து நடை ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. அதன்பிறகு ஜெயகாந்தனின் ‘பாரிசுக்குப் போ’, ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்?’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘கங்கை எங்கே போகிறாள்?’ போன்ற நாவல்களைப் படித்தேன். அதே காலகட்டத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலையும் வாசித்தேன்.
அவருடைய ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவலைக் கன்னடத்தில் மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பைச் சாகித்ய அகாதெமி எனக்கு வழங்கியது. இந்த நாவலில் வரும் ஹென்றி என்ற கதாபாத்திரமும், அவனைச் சுற்றி விரியும் மனித உறவுகளும், வாழ்க்கையைப் பற்றிய ஜெயகாந்தனின் பார்வையும் என்னை மிகவும் கவர்ந்தன. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மனிதநேயம், அன்பு, உறவுகள், சமூக வாழ்க்கை ஆகியவற்றை மிகவும் இயல்பாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தியிருப்பது இந்த நாவலின் சிறப்பு என்று நான் உணர்ந்தேன். இந்த நாவலை மொழிபெயர்க்கும்போது ஜெயகாந்தனின் தனித்துவமான மொழிநடையையும், கதாபாத்திரங்களின் இயல்பான பேச்சு முறையையும் கன்னடத்தில் கொண்டுவருவதில் கவனம் செலுத்தினேன். அந்த மொழிபெயர்ப்பு எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக அமைந்தது. அதே நேரத்தில், ஜெயகாந்தனின் படைப்புலகை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும், தமிழ் இலக்கியத்தின் நுட்பங்களைக் கன்னட வாசகர்களிடம் கொண்டு செல்லவும் இந்தப் பணி எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இந்த படைப்பு எனக்குப் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.

தொல்காப்பியம் மொழிபெயர்ப்புக்காக ஹெச்.எஸ். சாவித்திரி அம்மா விருது

 தொல்காப்பியத்தை எப்படி கன்னடத்திற்குக் கொண்டு சென்றீர்கள்? குறிப்பாக இளம்பூரணர் உரையை எடுத்துக் கொண்டது  ஏன் ?
தொல்காப்பியம் தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கண நூல்களில் ஒன்று என்பதால், அதன் மொழியையும் இலக்கணக் கருத்துகளையும் கன்னடத்தில் மிகத் துல்லியமாகவும் எளிமையாகவும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். தொல்காப்பியத்தின் அனைத்து இயல்களுக்கு உரை எழுதியவர் இளம்பூரணர். அதனால் அவருடைய உரையையே நான் மொழிபெயர்ப்பதற்குத் தேர்ந்தெடுத்தேன். அந்த உரை தொல்காப்பிய நூற்பாக்களின் பொருளை விளக்குவதோடு மட்டுமல்லாமல், எளிய முறையில் அக்காலத் தமிழ் சமூக வாழ்க்கை, பண்பாடு, இலக்கிய மரபு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் முக்கியமான ஆதாரமாக இருப்பதுதான். தொல்காப்பிய நூற்பாக்கள் மட்டும் சில இடங்களில் சுருக்கமாக இருப்பதால், அவற்றின் பொருளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு உரை மிகவும் உதவுகிறது.
மேலும், இளம்பூரணரின் உரை தமிழின் பழமையான உரை மரபுகளில் முக்கியமானதாக இருப்பதால், அதன் வழியாக தொல்காப்பியத்தின் இலக்கணக் கருத்துகளையும் பண்பாட்டுப் பின்னணியையும் கன்னட வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடியும் என்று கருதினேன்.இந்த மொழிபெயர்ப்புப் பணி எனக்கு ஒரு மொழிபெயர்ப்பு அனுபவமாக மட்டுமல்லாமல், தமிழ்–கன்னட மொழிகளின் இலக்கண மரபுகளையும் இலக்கியத் தொடர்புகளையும் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளும் ஒரு முக்கியமான ஆய்வு அனுபவமாகவும் அமைந்தது. தமிழ்நாட்டிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்தான் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முனைவர் ஜெயலலிதா

 'சங்க காலப் புலவர்கள் அகராதி'யை எப்படித்   தொகுத்தீர்கள்?
'சங்ககாலப் புலவர்கள் அகராதி’யைத் தொகுக்கும் பணியில், சங்க இலக்கியங்களில் இடம்பெறும் புலவர்களைப் பற்றிய தகவல்களை முதலில் பல்வேறு நூல்களிலிருந்து சேகரித்தேன். குறிப்பாக, புலவர்களின் பெயர், அவர்கள் பாடிய பாடல்கள், இடம்பெற்றுள்ள தொகைநூல், பாடல் எண், அவர்களைப் பற்றிய கிடைக்கக்கூடிய குறிப்புகள் போன்றவற்றைச் சரிபார்த்துத் தொகுத்தேன்.ஒரே புலவரின் பெயர் வெவ்வேறு வடிவங்களில் காணப்படும் இடங்களில் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்களை ஒழுங்குபடுத்தினேன். மேலும், புலவர்களின் பெயர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் இலக்கியப் பங்களிப்பையும் வாசகர்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அகராதி வடிவில் அமைத்தேன். இது இன்னும் வெளியாகவில்லை.

இந்தப் பணியில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிப்பதும், பல்வேறு ஆய்வு நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் மிகவும் அவசியமாக இருந்தது. எனவே, ‘சங்ககாலப் புலவர்கள் அகராதி’ தொகுப்பு எனக்கு ஒரு ஆய்வுப் பணியாகவும், சங்க இலக்கியத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவிய ஒரு முக்கியமான அனுபவமாகவும் அமைந்தது.

 பெரியாரின் கட்டுரைகளை மொழி பெயர்த்து இருக்கிறீர்கள். முடித்த பின் தோன்றிய  உணர்வு என்ன?


பெரியாரின் கட்டுரைகளை மொழிபெயர்த்து முடித்தபோது, அது எனக்கு ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு அனுபவமாக அமைந்தது. அவருடைய எழுத்துகளில் காணப்படும் சமூகச் சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகள், ஆகியவை என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தன. பெரியாரின் எழுத்துகளை மொழிபெயர்த்த அனுபவம், மொழிபெயர்ப்பு என்பது வெறும் மொழி மாற்றம் மட்டுமல்ல; அது சிந்தனைகளையும் சமூகக் கருத்துகளையும் ஒரு மொழி வாசகர்களிலிருந்து மற்றொரு மொழி வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியாகும் என்பதை எனக்கு மேலும் தெளிவுபடுத்தியது. இந்தப் பணி எனது மொழிபெயர்ப்பு அனுபவத்தை விரிவுபடுத்தியதோடு, சமூகச் சிந்தனைகள் குறித்த எனது புரிதலையும் ஆழப்படுத்தியது.

 பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, கன்னட  நாட்டுப்புறப் பாடலும் அகத்திணை இயலும் போன்ற ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை  சமர்ப்பித்திருக்கிறீர்களே? அது பற்றி?


என்னுடைய ஆய்வுப் பணிகள் பல்வேறு இலக்கிய மற்றும் பண்பாட்டுத் தளங்களை உள்ளடக்கியவை. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை, கன்னட நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ் அகத்திணை, தமிழ், கன்னட யாப்பியல்கள் – ஓர் ஒப்பீடு  போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளேன். ஒவ்வொரு ஆய்வுப் பிரிவும் எனக்கு வெவ்வேறு அனுபவங்களையும் புதிய பார்வைகளையும் வழங்கியுள்ளது.பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கையை ஆய்வு செய்தபோது, இயற்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை உணர முடிந்தது. கன்னட நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்தபோது, மக்களின் வாழ்வியல், நம்பிக்கைகள், உணர்வுகள், பண்பாடு ஆகியவை நாட்டுப்புற இலக்கியத்தில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதேபோல, தமிழ் அகத்திணையை ஆய்வு செய்தபோது, சங்க இலக்கியத்தில் காதல், உணர்வு, இயற்கை ஆகியவை ஒன்றோடொன்று எவ்வாறு இணைந்துள்ளன என்பதை ஆழமாக அறிந்துகொண்டேன்.

கன்னட நாட்டுப்புறப் பாடல்களின் வடிவம், இலக்கணங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது அவை அகப்பாடல்களை விட வேறுபடுகிறது. ஆனால் அவற்றில் அடங்கியுள்ள பொருளைக் கூர்ந்து கவனித்தால் அவை அகத்திணைப் பாடல்களில் தோன்றும் பலவற்றோடு பொருந்துவது தெரியவருகிறது.இந்த வெவ்வேறு ஆய்வுப் பிரிவுகள் எனது இலக்கியப் பார்வையை விரிவுபடுத்தியதோடு, தமிழ்–கன்னட இலக்கியங்களை ஒப்பீட்டுக் கண்ணோட்டத்தில் அணுகுவதற்கும் பெரிதும் உதவின. பல்வேறு துறைகளில் ஆய்வு செய்வதன் மூலம் தொடர்ந்து கற்றுக்கொள்வதும், புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதும் எனது ஆய்வுப் பயணத்தின் முக்கியமான பகுதியாக அமைந்துள்ளன.

 நீங்கள் பெரும்பாலும் கல்வியியல் சார்ந்து, கல்விப்புலம் சார்ந்து தான் மொழி பெயர்த்து இருக்கிறீர்கள் என்று கூறலாமா?


நான் பெரும்பாலும் கலை, இலக்கியம் மற்றும் கல்வியியல் சார்ந்த படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறேன் என்று கூறலாம். குறிப்பாக, தமிழ் இலக்கியம், இலக்கணம், சமூகச் சிந்தனைகள் ஆகிய துறைகளில் மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். ஜெயகாந்தனின் சிறுகதைகள் மற்றும் நாவல், பெரியாரின் கட்டுரைகள், தொல்காப்பியம் போன்ற படைப்புகளை மொழிபெயர்த்த அனுபவம் எனக்கு உண்டு. எனது மொழிபெயர்ப்புப் பணிகள் இலக்கியத்தோடு மட்டும் நின்றுவிடாமல், மொழியியல், பண்பாடு மற்றும் ஒப்பீட்டாய்வு ஆகிய துறைகளுடனும் தொடர்புடையவையாக உள்ளன. குறிப்பாக, தமிழ்–கன்னட மொழிகளுக்கிடையிலான இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்தப் பணிகள் உதவியுள்ளன.

 ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதை விட ஒன்றுக்குள் ஒன்றான திராவிட மொழிகளில் மொழிபெயர்க்கும் போது இழப்புகள் குறைவாக இருக்கும் என்று நம்பலாமா?

நிச்சயமாக, ஆங்கிலம் போன்ற வேறுபட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியிலிருந்து மொழிபெயர்ப்பதைவிட, ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய ஒரே திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த, சகோதர மொழிகளான திராவிட மொழிகளுக்கிடையே மொழிபெயர்க்கும்போது சில வகையான இழப்புகள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்று நான் கருதுகிறேன். தமிழ் மற்றும் கன்னட மொழிகளுக்கிடையே காணப்படும் இலக்கண அமைப்பு, சொல்வளம், பண்பாட்டு ஒற்றுமைகள் ஆகியவை மொழிபெயர்ப்பாளருக்குச் சாதகமாக அமைகின்றன.ஆனால், மொழிகள் நெருக்கமானவை என்பதால் மொழிபெயர்ப்பில் எந்தவித இழப்பும் ஏற்படாது என்று கூற முடியாது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான மொழிநடை, பண்பாட்டுக் கூறுகள், ஆகியவை உள்ளன. அவற்றை மற்றொரு மொழியில் இயல்பாகவும் துல்லியமாகவும் வெளிப்படுத்துவதில் சவால்கள் இருக்கின்றன.என்னுடைய தமிழ்–கன்னட மொழிபெயர்ப்பு அனுபவத்தில், இரு மொழிகளுக்கிடையிலான நெருக்கம் பல இடங்களில் உதவியாக இருந்தது. அதே நேரத்தில், மூலநூலின் கருத்து, உணர்வு, மொழிநடை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்குத் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியிருந்தது. எனவே, திராவிட மொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்பில் இழப்புகள் குறைவாக இருக்கக்கூடும் என்றாலும், அது மொழிபெயர்ப்பாளரின் ஆழமான மொழியறிவு, பண்பாட்டுப் புரிதல் மற்றும் மொழிபெயர்ப்பு அணுகுமுறையையும் பொறுத்தது என்று கூறுவேன்.

 ஒரு மொழி பெயர்ப்பாளர் யாரைக் கவனத்தில் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும்?


ஒரு மொழிபெயர்ப்பாளர் முதலில் மூல ஆசிரியரையும், மூலப் படைப்பையும் முழுமையாகப் புரிந்துகொண்டு, அதே நேரத்தில் இலக்கு மொழியின் வாசகரையும் கவனத்தில் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். மொழிபெயர்ப்பில் மூலப் படைப்பின் கருத்து, உணர்வு, மொழிநடை ஆகியவை சிதையாமல் இருக்க வேண்டும்; அதே சமயம், அது இலக்கு மொழி வாசகருக்கு இயல்பாகவும் எளிதாகவும் புரிய வேண்டும். குறிப்பாக இலக்கிய மொழிபெயர்ப்பில், மூல ஆசிரியருக்கு உண்மையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இலக்கு மொழி வாசகருக்கும் நெருக்கமாக இருக்கும் வகையில் மொழிபெயர்ப்பை அமைப்பது முக்கியம். எனவே, நான் மொழிபெயர்க்கும்போது மூல ஆசிரியர், மூலப் படைப்பு மற்றும் இலக்கு மொழி வாசகர் ஆகிய மூன்றையும் மனதில் வைத்துக்கொள்கிறேன்.

 உங்கள் மொழி பெயர்ப்பின் தரத்தை எப்படி முடிவு செய்வீர்கள்?அதற்கான அளவுகோல் என்ன?



எந்த ஒரு படைப்பாக இருந்தாலும், மொழிபெயர்ப்பாக இருந்தாலும், அதன் தரத்தை நாமே தீர்மானித்துக்கொள்ள முடியாது என்று நான் கருதுகிறேன். ஒரு படைப்பின் தரத்தை உண்மையில் தீர்மானிக்க வேண்டியவர்கள் வாசகர்கள்தான். வாசகர்கள் அந்தப் படைப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்களுக்கு அது எந்த அளவுக்குப் இயல்பாக படிக்கமுடிகிறது, அவர்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதன் அடிப்படையில்தான் அதன் தரத்தை மதிப்பிட முடியும். எனவே, என்னுடைய மொழிபெயர்ப்பின் தரத்தையும் நானே முடிவு செய்துகொள்வதைவிட, அதை வாசகர்களின் மதிப்பீட்டிற்கே விட்டுவிடுகிறேன்.

 நீங்கள் மொழிபெயர்த்த போது ஒரு மொழிபெயர்ப்பாளர் என்கிற தடத்திலிருந்து இடம் மாறி ஒரு வாசக ரசிகராக மெய்மறந்த அனுபவம் உண்டா?
நான் எந்த ஒரு படைப்பையும் மொழிபெயர்க்கத் தொடங்குவதற்கு முன்பு, அந்தப் படைப்பை முழுமையாக ஒருமுறை வாசித்துவிடுவேன். அவ்வாறு வாசிக்கும்போது, என்னுள் இருக்கும் மொழிபெயர்ப்பாளரைவிட, என்னுள் இருக்கும் ஒரு வாசகன்தான் முதலில் விழித்துக்கொள்கிறான்.
அந்த நேரத்தில் அந்தப் படைப்பை ஒரு மொழிபெயர்ப்பாளராகப் பார்க்காமல், ஒரு ரசிகராக ரசித்து அனுபவிப்பேன். கதையின் போக்கு, கதாபாத்திரங்கள், உணர்வுகள், மொழிநடை என அந்தப் படைப்பின் முழுமையான சாரத்தையும் உள்வாங்கிக்கொள்வேன். அந்த அனுபவத்திற்குப் பிறகுதான் மொழிபெயர்ப்புப் பணியில் அமர்வேன்.எனவே, நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால், உண்மையாகவே ஒவ்வொரு படைப்பையும் முதன்முதலாக வாசிக்கும்போது நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக அல்ல, ஒரு ரசிகராகத்தான் வாசிக்கிறேன்.


 இந்த ஏ ஐ காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு என்கிற பணிக்கு நம்பகமான மதிப்பு இருக்கிறதா?

AI வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும் மொழிபெயர்ப்புப் பணிக்கான மதிப்பு நிச்சயமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். குறிப்பாக இலக்கிய மொழிபெயர்ப்பில், ஒரு படைப்பின் சொற்களை மட்டும் மொழிப்பெயர்த்தால் போதாது. அதன் உணர்வு, பண்பாட்டுப் பின்னணி, ஆசிரியரின் தனித்துவமான மொழிநடை, ஆகியவற்றையும் புரிந்துகொண்டு இலக்கு மொழியில் வெளிப்படுத்த வேண்டும்.
ஆனால் மொழிபெயர்ப்புப் பணிக்கு ஒரு சிறந்த கருவியாக ஏ .ஐ பயன்படுத்திக்கொள்ளலாம். அது வேகமாக மொழிபெயர்க்கவும், பல்வேறு தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கவும், ஒரு சொல்லின் பல பொருள்களைப் புரிந்துகொண்டு சரியான சொல் பயன்படுத்துவதற்கும்   உதவுகிறது. ஆனால் ஒரு படைப்பை ஒரு வாசகராக உள்வாங்கி, அதன் உணர்வையும் அழகையும் புரிந்துகொண்டு, இலக்கு மொழி வாசகருக்கு இயல்பாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் கொண்டு சேர்ப்பதில் மனித மொழிபெயர்ப்பாளரின் பங்கு இன்னும் முக்கியமானதாகவே இருக்கிறது. எனவே, AI வந்துவிட்டதால் மொழிபெயர்ப்பாளரின் பணி முடிந்துவிட்டது என்று நான் கருதுவதில்லை. மாறாக, இதை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு, தன்னுடைய மொழியறிவு, இலக்கியப் புரிதல், மற்றும் பண்பாட்டு உணர்வை இணைத்துச் செயல்படும் மொழிபெயர்ப்பாளருக்குத்தான் இன்னும் மதிப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆளுநர் ரவி விருது வழங்கியபோது

நீங்கள் வகிக்கும்   பேராசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் இந்த மூன்று செயல்பாத்திரங்களுக்கும்  நீங்கள் தரும் மதிப்பெண்களின் தரவரிசை எப்படிப்பட்டதாக இருக்கும்?

பேராசிரியர் எனும் பட்டம் இன்னும் ஒரு பத்து பன்னிரண்டு ஆண்டுகளில் அதாவது ஒய்வு பெற்ற பின்பு இழந்துபோகும்.
ஆனால் எனக்குள் இருக்கும் ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர் நான் உயிரோடு இருக்கும் வரை என் கூடவே இருப்பார். இப்பொழுது நீங்களே தகுந்த மதிப்பெண் கொடுத்துக்கொள்ளுங்கள்.
 உங்கள் மொழி சார்ந்த பணிகளில் உங்களை ஊக்கத்துடன் தூண்டி முன்னெடுப்பது எது?
மொழிகளுக்கிடையே இருக்கும் தொடர்புகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், நான் படித்ததை என் கன்னட வாசகர்களுக்குத் தரவேண்டும் என்கிற ஆசை, அது மற்றொரு மொழி வாசகர்களைச் சென்றடைவதைப் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இவையே எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கின்றன.

 இதுவரை பெற்றுள்ள அங்கீகாரங்களில், விருதுகளில் எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்?

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் உன்னதமான சிந்தனை போலவே, நான் படித்த தமிழ் இலக்கிய சுவையைக் கன்னட இலக்கிய வாசகர்களும் சுவைக்கவேண்டும் என்கிற எண்ணத்தால் தான் நான் மொழிபெயர்க்கிறேனே தவிர எந்த ஒரு விருதிற்கும், அங்கீகாரங்களுக்கும் ஆசைப்பட்டு அல்ல. ஆனால் அத்தகைய விருதுகளும், சன்மானங்களும் என் பொறுப்பை அதிகரித்து என்னுள் மேலும் ஊக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை. ஆகையால் எல்லா விருதுகளும் பெருமைக்குரியதுதான்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram