பாபுராஜ் களம்பூர் 
பேட்டிகள்

‘உண்மை பேசுவதற்கு பல எழுத்தாளர்கள் தயங்குகிறார்கள்!’

மொழிபெயர்ப்பாளர் பாபுராஜ் களம்பூருடன் ஒரு நேர்காணல்

அருள்செல்வன்

கல்கியின் ’சிவகாமியின் சபதம் ’ தொடங்கி, நா.பா வின் ’  குறிஞ்சி மலர் ’, கலைஞரின்  ’ குறளோவியம் ’   எனத் தொடர்ந்து, 
 ’ வேள்பாரி ’ , ’  நீரதிகாரம் ’  வரை சுமார் 50 நூல்களைத் தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழி பெயர்த்து இருப்பவர் மொழிபெயர்ப்பாளர் பாபுராஜ் களம்பூர். இவர் மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல மலையாளத்தில் 50 நூல்களையும் தமிழில் இரண்டு  நூல்களையும் எழுதி இருப்பவர். அண்மையில் சென்னை வந்திருந்த அவருடன் அந்திமழைக்காக ஒரு சந்திப்பு!


உங்களைப் பற்றிய அறிமுகம் ?

எனது சொந்த ஊர் களம்பூர். இது கேரளத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது. வைக்கம் ,சோட்டானிக்கரை ஊர்களின் நடுவே இருக்கிறது இந்த  கிராமம் . மூன்று பக்கம்  ஆறுகள்  ஒரு பக்கம் மலை என இயற்கை அழகு நிறைந்த ஊர்.
என் அப்பா பெயர்  பிரபாகரன் நாயர். அவர் பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர். அம்மா கார்த்தியாயினி. எனக்கு மூன்று அண்ணன்கள் , ஒரு அக்கா. இதில் ஒரு அண்ணன் மட்டும் என் தந்தையைத் தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வருகிறார்.
நான் பிறந்தது ,பள்ளிக்கல்வி பயின்றது எல்லாம் அங்கேதான் . பியூசி முடித்த பிறகு   வேலைவாய்ப்பு தேடி சென்னை வந்து விட்டேன்.  முதலில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள  ஓர் அச்சகத்தில்  வேலைக்குச் சேர்ந்தேன். அத்துடன் சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியாக பி ஏ வரலாறு முடித்தேன்.

நீங்கள் தமிழ் படித்தது எப்படி?


பிழைப்பு தேடி1985 இல் சென்னைக்கு நான் வந்தபோது, எனக்குத் தமிழ் தெரியாது. முதலில் தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.சினிமா  சுவரொட்டிகள், விளம்பர பலகைகளையெல்லாம் பார்த்து எழுத்துக்கூட்டிப் படித்துப் பழகிக் கொண்டேன். பிறகு தினசரிப் பத்திரிகைகள், குறு நாவல்கள் என்று படிக்கத் தொடங்கினேன். என்னுடைய ஆர்வத்தால் ஒரே ஆண்டில் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டேன்.  எனது தாய்மொழி மலையாளம் என்றாலும் எனது தாய் மொழியின் தாயாக இருப்பது தமிழ்மொழிதான். விரைவாகவே நான் தமிழில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.தமிழ் திரைப்படப் பாடல்கள் மீது எனக்கு தனியார்வம் உண்டு. என்னைத் தமிழுக்கு அழைத்து வந்ததில் திரைப்படப் பாடல்களின் பங்கு கணிசமாக உண்டு என்று கூறலாம்.கண்ணதாசனின் பழைய பாடல்கள் மீது எனக்குத் தணியாத காதல் உண்டு. அதில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ள அழகையும் எளிமையையும் ரசிப்பேன்.ஒவ்வொரு வரியும் பொன்மொழி போல அழகாக  மனதில் பதியும்.அதேபோல புலமைப்பித்தனின் அழகு தமிழ்ச் சந்தங்கள் பிடிக்கும். பிறகு வைரமுத்து ,வாலி  என்று கவனம் சென்றது.எளிய சொற்களால் அந்தப் பாடல்கள் மனதில் பதிந்தன. எம் எஸ். வி, இளையராஜா போன்றவர்களின் சினிமா பாடல்கள் மீது எனக்குத் தீராத மோகம் உண்டு . இளையராஜாவின் பாடல்களெல்லாம் அப்போது எட்டுத் திக்கிலும் ஒலித்தன. திரும்பிய திசையெல்லாம் அவரது பாடல்கள்தான் கேட்கும்.இப்படிக் கண்ணில் படுபவற்றை எல்லாம் படித்து, காதில் கேட்பதையெல்லாம் கவனித்துத் தமிழ் எனக்குள் நுழைந்து கலந்து விட்டது.இப்படி 20 ஆண்டுகள் சென்னையில் இருந்து தமிழை நன்றாகப் பழகிக் கொண்டேன்.  சென்னை வந்த போது ஜீவனம் செய்வதே பெரியதாகப்பட்டது .வாழ்க்கைப் பாட்டைப் பார்ப்பதே பெரிதாக இருந்ததால்  படிப்பதோடு சரி, எந்த எழுத்து முயற்சியிலும் ஈடுபடவில்லை.  அப்போதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றவும் இல்லை.


சென்னை வாழ்க்கை எப்படி இருந்தது ?
சென்னை வந்த பத்தாவது ஆண்டில் எனக்குத் திருமணம் நடந்தது. நான் சென்னையில் என்னுடன் பணியாற்றிய விஜயலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். அவருக்குச் சொந்த ஊர் காஞ்சிபுரம் அவ்வகையில் தமிழ்நாட்டுடன் எனக்குப் பந்தம் நீடிக்கிறது.எனது மகள் பெயர் பிரியம்வதா .சென்னையில் பிறந்தாலும்  மலையாளப் பள்ளியில் படித்தாள். அவள் இப்போது கேரளாவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறாள்.

சென்னையில் இருந்த போது கேரள சமாஜம் எனப்படும் மலையாள சங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்பதுண்டு.அங்கு நடக்கும் கவியரங்கங்களில் அப்போது பல கவிஞர்கள் வருவார்கள் .அவர்களுடன் பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.அப்போது நான் என் கவிதைகளை வாசித்ததுண்டு.சென்னையில் இருந்த காலங்களில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. இப்போது நான் கேரளாவில் வசித்தாலும் பாதி நண்பர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். காலம் விரைவாக ஓடுகிறது. சென்னையில் 20 ஆண்டுகள் ஓடி விட்டன.சென்னை வாழ்க்கை முடிந்து 2005 இல் மீண்டும் கேரளாவுக்குச் சென்று விட்டேன்.

தமிழ் மலையாளத்துக்கான உறவு , மொழி அமைப்பு பற்றி உங்கள் புரிதல் எப்படி உள்ளது?

ஒரு காலத்தில், அதாவது  ஏழாம் நூற்றாண்டு வரை தென்னகம் முழுவதும் தமிழ் தான் பேசப்பட்டது. ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் சமஸ்கிருதம் வந்த பிறகுதான் சமஸ்கிருதமும் தமிழும் கலந்து மலையாளம் தோன்றியது. இப்போதைய கேரளாவாக இருக்கும் பழைய சேர நாட்டில் முழுக்க தமிழ் தான் பேசினார்கள். இப்போதும் கேரளாவில் பெரும்பாலான ஊர்களில் தமிழ்ப் பெயர்கள் உள்ளன.எங்கள் ஊருக்குப் பக்கம் பாழூர் பெருந்திருக்கோயில் என்கிற ஊர் உள்ளது. ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்களுக்கு அது தெரியும்.இது ஆதிசங்கரர் பிறந்த ஊர் .இப்படி நிறைய தமிழ்ப் பெயரில் ஊர்கள் உள்ளன.இரண்டு பக்கமும் புழங்கும் பொதுவான வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.
முன்பே நான் சொன்னபடி எனக்குத் தாய்மொழி மலையாளம். ஆனால் என் தாய்மொழியின் தாய் தமிழ் தான் என்பதை மறக்க முடியாது. எனவே இரண்டு மொழியிலும் எனக்கு இருந்த பரிச்சயம் தேர்ச்சியாக மாறியது. எனக்கு இரண்டு மொழியும் பிடிக்கும் , இரண்டிலும் படிக்க மட்டுமல்ல  படைப்புகள் எழுதவும் கற்றுக் கொண்டேன்.
அப்படித் தமிழில் நான் முதலில் எழுதிய நாவல் 'வாரணாவதம்'. மகாபாரதத்தில் வரும் துரியோதனின் பார்வையில் எழுதியிருந்தேன். அதைப் படித்துப் பார்க்கச் சொல்லி கிழக்குப் பதிப்பகத்திற்கு அனுப்பினேன். அங்கிருந்த எழுத்தாளர் மருதன் அவர்கள் இதை  நூலாகக் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.
மலையாளம் என்பது தமிழுடன் சமஸ்கிருதம் கலந்து உருவான மொழி. ஆனால் தமிழ் அப்படிப்பட்டதல்ல. தமிழில் சமஸ்கிருதக் கலப்பில்லாமலேயே  எழுத முடியும். அப்படிப்பட்ட தனிச்சிறப்பு பெற்ற மொழி தமிழ்.இரண்டு மொழிகளுக்கும் உறவும் தொடர்பும் பந்தமும் இருந்து வருவதை உணர்ந்து கொண்டேன்.

மொழி பெயர்ப்புக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

கேரளா சென்ற எனக்கு என்ன தொழில் செய்வது என்பது கேள்விக்குறியாக இருந்தது.தமிழ்நாட்டில் உள்ள சுரா பதிப்பகத்துக்கு அங்கே எர்ணாகுளத்தில் மலையாளப் பிரிவொன்று இருந்தது. அதன் அதிபர் வி கே சுப்புராஜ் எனக்கு அறிமுகமானார். அவர் தமிழில் இருந்து மொழி பெயர்க்க ஓர் ஆள் தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் கேட்டபடி நான் பிழைப்புக்காகச் சின்னச்சின்ன புத்தகங்களைத் தமிழில் இருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தேன்.இப்படித்தான் தொடங்கியது எனது மொழிபெயர்ப்பு வாழ்க்கை. வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என்று இப்படித் தமிழில் இருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்து 20 புத்தகங்கள்  கொடுத்திருப்பேன். அவர்களுக்கும் திருப்தி. எனக்கும் அது  ஒரு பயிற்சியாக அமைந்தது. பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது .இதைத் தொடரலாம் என்கிற எண்ணம் வந்தது.பெரிய எழுத்தாளர்களின் நாவல்களை ஆலிவ், சைகதம், பரிதி புக்ஸ், டிசி போன்ற பதிப்பகங்களுக்கு மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.அப்படித் தொடங்கியது இதுவரை சுமார் 50க்கு மேல் நூல்களை மலையாளத்தில் மொழி பெயர்த்து இருக்கிறேன்.

மொழிபெயர்ப்பு செய்யும் நூல்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?

மொழிபெயர்ப்பு செய்யும் நூல்களைப் பதிப்பகங்கள்  தான் தேர்வு செய்கின்றன. அவர்கள் விரும்பிக் கேட்பவற்றைத்தான் நான் மொழிபெயர்ப்பு செய்து கொடுப்பேன்.இதில் எனது தேர்வு என்று எதுவும் இல்லை என்றே கூற வேண்டும். எனக்குப் பிடித்த புத்தகங்களை மொழிபெயர்க்கக் கூடிய காலம் இப்போது இல்லை எனவே வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
ஒரு மொழியில் பிரபலமான எழுத்தாளர்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். இதில் வணிக மதிப்புள்ள எழுத்தாளர்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன .அந்த வகையில்  விற்பனையில் சூப்பர் ஸ்டாராக உள்ளவர்களுக்கு மலையாளத்தில் மொழிபெயர்ப்புக்குக் கேட்கிறார்கள். அப்படி பெருமாள் முருகன் வரவேற்பு பெற்ற எழுத்தாளராக இருக்கிறார். 'மாதொருபாகன்' பிரச்சினைக்குப் பிறகு அவர் கேரளாவில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் .

மொழிபெயர்ப்பு  என்பது  மொழியை மாற்றுவதா? அல்லது மறு உருவாக்கமா?

மொழிபெயர்ப்பு என்பது இலக்கியங்களின் குடிபெயர்ப்பு என்பேன். ஒவ்வொரு படைப்பும் ஓர் இடத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரமுள்ள மற்றொரு இடத்துக்கு குடிபெயர்வது போலத் தான் இது.   இதை ஒரு மறு உருவாக்கம் என்று தான் சொல்ல வேண்டும். சில எழுத்தாளர்கள் இதை ஒப்புக் கொள்வதில்லை .ஆனால் உண்மை அதுதான்.

மொழிபெயர்ப்பாளர் என்பவர் ஓர்  இணைப் படைப்பாளர் என்பது பொருந்துமா ?

மொழிபெயர்ப்பு என்பது  எளிமையாக பார்க்கக்கூடிய வேலை கிடையாது . ரஷ்ய இலக்கியங்கள், நோபல் பரிசு பெற்ற இலக்கியங்கள் எல்லாம் நம் நாட்டில் எப்படிப் படிக்க முடிகிறது ? யாரோ ஒருவரின்  மொழிபெயர்ப்பால் தானே ? இப்படி ஒரு மொழி கடந்து இலக்கியம் பரவுவதற்கு மொழிபெயர்ப்பாளர்களின் பணி முக்கியமானது .அதைக் குறைவாக மதிப்பிடக்கூடாது. லியோ டால்ஸ்டாய், மாக்சிம் கார்க்கி, கப்ரியேலா மார்க்கஸ், எர்னெஸ்ட் ஹெமிங்வே,வி .எஸ். காண்டேகர்,தாகூர்  போன்றோரின் படைப்புகளை நம் உள்ளூர் மொழியில் படிக்க முடிவதற்குக் காரணம் மொழிபெயர்ப்பாளர்கள் தானே? அந்த வகையில் பார்த்தால் மொழிபெயர்ப்பாளர் நிச்சயமாக இணைப்படைப்பாளர்தான். ஒரு படைப்பை இன்னொரு மொழிக்கு அவர் எழுதுகிறார். ஆனால் இது பற்றி இரு வேறு கருத்துகள் உள்ளன. மொழி பெயர்ப்பாளரை இரண்டாம் பட்சமாக நடத்தும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பெரிய மரியாதை கொடுக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு காலத்தில் மொழிபெயர்ப்பாளர் பெயரை அட்டையில் போட மாட்டார்கள். பிறகு சிறிதாகப் போட்டார்கள். இப்போது  மொழிபெயர்ப்பாளரை அடையாளம் காணும் விதத்தில் உரிய அளவில் போடுகிறார்கள்.
மொழிபெயர்ப்பாளர்  யார் என்று பார்த்து வாங்குகிற சூழலும் இருக்கிறது. எனவே மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் மொழிபெயர்ப்பின் மூலம் விருது பெற்ற படைப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரைக் கொண்டாடுகிறார்கள்.

நல்லி திசையெட்டும் விருது


மொழிபெயர்ப்பு நடை சரளமாக இருக்க வேண்டும் என்பது முக்கியமா?

ஆம். எளிமை முக்கியம். நடையில் கடுமையாக இருக்கக்கூடாது .வாசர்களுக்கு புரியும்படி எழுத வேண்டும்.ஒரு பக்கம் எழுத்தாளரும் இன்னொரு பக்கம் வாசகரும் இருப்பதை நான் எப்போதும் உணர்வதுண்டு . வாசகனை கைப்பிடித்துக் கொண்டு எழுத்தாளரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.இருவருக்கும் இடையில் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.

உங்கள் மொழிபெயர்ப்பின் தரத்தை எப்படி முடிவு செய்கிறீர்கள்?

அதை மதிப்பிடுவது வாசகர்கள் தான். ஒரு காலத்தில் அதற்காக  பதிப்பகத்திலேயே ஒரு குழு வைத்திருந்தார்கள். அந்த வழக்கம் இப்போது குறைந்து வருகிறது. இருந்தாலும் வாசகர்கள் தரும் மதிப்பீடு தான் முக்கியம். என்னுடைய மொழிபெயர்ப்பை பார்க்கும் போது முதலில் எனக்கு திருப்தி கிடைக்க வேண்டும்.இது பற்றி அறிந்தவர்களிடம் அபிப்பிராயம் கேட்பதும் உண்டு.

மொழிபெயர்க்கும் போது மூல ஆசிரியருக்கு எந்தளவுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்? நூலைப் படிக்கும் வாசகனைக் கருத்தில் கொள்ள வேண்டுமா?
 
ஒரு வாசகராக முதலில் படிப்பேன் என்றாலும் மொழிபெயர்க்கும் போது நான் எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையில் உள்ள பாலம் போல உணர்வேன் .ஒரு பக்கம் எழுத்தாளர் இருப்பார். இன்னொரு பக்கம் வாசகன் இருப்பான். அவர்களுக்கிடையே தொடர்பு படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

அப்படியென்றால் வாசகனை முன் வைத்துத்தான் உங்கள் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்கிறீர்களா?

மொழிபெயர்ப்பில் மட்டுமல்ல, இலக்கியப் படைப்புகள் அனைத்திலும்  வாசகனைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு நூல் உருவாகும் ஒவ்வொரு கட்டத்திலும் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். எழுத்தாளர், வெளியீட்டாளர், அச்சிடுபவர்,அதை தட்டச்சு செய்பவர், வடிவமைப்பவர்,விற்பனை செய்பவர் வரை எத்தனையோ பேர். இதில் எழுத்தாளருக்கு பெயரும் புகழும் கிடைக்கின்றன. மற்றவர்களுக்குப் பணம் கிடைக்கிறது. ஆனால் எந்த ஆதாயமும்  பெறாமல் ஒரு நம்பிக்கையோடு அந்நூலை வாங்கும் ஒரே நபர் வாசகன் தான். பணம் கொடுத்து   புத்தகத்தை வாங்கும்  அவனுக்கு அந்தப் புத்தகம் ஓர் நிறைவைத் தரவேண்டும். அதற்கேற்றவாறு தான் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் செயல்பட வேண்டும்.  அவன் காசு போட்டு வாங்கும் புத்தகம் புரியாமல் இருந்தாலோ படிக்கச் சிரமப்பட்டாலோ நாம் அவனை ஏமாற்றி விட்டோம்  என்று அர்த்தம். எனவே அவனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

 மூல எழுத்தாளரின் நடை, சிக்கலான மொழியுடன் கடினமாக இருந்தால் அதை  மொழிபெயர்ப்பாளர் எளிமையாக்குவது சரியா?

எழுத்தாளர் ஒரு புத்தகம் தனக்காக மட்டும் எழுதுவதில்லை. அது வாசகனிடம்  போய்ச் சேர வேண்டும் ;படிக்க வேண்டும். ரசிக்க வேண்டும். அந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டும். எனவே எழுத்தாளர் எழுதியிருப்பதைக் கூடுமானவரையில் அவனிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதில் நம் மொழி வாசகர்களுக்கு புரியாத இடங்களிருந்தால் விளக்கம் தர வேண்டும். அதைச் செய்யவில்லையென்றால்  ஏஐ மூலம் மொழியாக்கம் செய்தது போல்  இருக்கும்.   எனவே வாசகனுக்குப் புரிய வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.அதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

மொழிபெயர்ப்புப் பணியின்  போது ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் நுட்பங்களை ரசிப்பதுண்டா ?

ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மையுடன் நுட்பமும் உண்டு. ஆனால் அவற்றை  ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. நான் பணியாற்றும் தமிழ், மலையாளம் இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் மொழிகள் தான்.எனவே எனக்கு இந்தப் பிரச்சினை அவ்வளவாக இல்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. அதை நான் ரசிப்பேன். உதாரணத்துக்கு தமிழில் கூறும் சில வார்த்தைகளுக்கு  மலையாளத்தில் வேறு பொருள் உள்ளது. இப்படிப்பட்டவற்றை எச்சரிக்கையாக மொழிபெயர்க்க வேண்டும். இரண்டு மொழியின்  தனித்தன்மையும் எனக்குத் தெரியும் என்பதால் பெரிய பிரச்சினைகள் வருவதில்லை.

மொழிபெயர்ப்பில் பெரும் தடையாக இருப்பது எது? வட்டார வழக்கா? பழமொழிகளா ?

மொழிபெயர்ப்பில் வட்டார வழக்கைப் புரிந்து கொள்வது சற்று சிரமமாகத்தான் இருக்கும். அதற்கு இரண்டு மொழிகளையும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதன் இயல்பு வழக்குகள், சொல்வடைகள் போன்றவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே திருநெல்வேலியில் பேசுவது வேறு, கொங்கு மண்டலத் தமிழ் வேறு,மதுரைத் தமிழ் வேறு மாதிரியாக இருக்கும். இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழல்களில் தெளிவு கிடைக்கவில்லை என்றால் எனது மூத்த முன்னோடிகளிடம் நான் அதைப் பற்றிக் கலந்து பேசித் தெளிவு பெறுவேன்.தமிழ், மலையாளத்துக்கு நெருக்கமாக இருப்பதால் இந்த பிரச்சினை அதிகம் வந்ததில்லை. ஆனால் இதை ஆங்கிலத்தில் கொண்டு செல்வதென்றால் அந்த முழுமையான பொருளும் தொனியும் கிடைக்காது.

 நீங்கள் மொழிபெயர்த்த தமிழ் நூல்கள் பற்றி?

முதலில்  கலைஞரின் குறளோவியத்தை மொழி பெயர்க்க முடியுமா என்று டிசி புக்ஸ் கேட்டார்கள் .ஆரம்பத்தில் எனக்குத் தயக்கமாக இருந்தது. அதற்குள் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவலை  மொழி பெயர்த்து விட்டேன். கல்கியின் சொல் வளமும் ஆற்றோட்டம் போன்ற மொழி நடையும் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. அது எனக்கு ஒரு நல்ல பயிற்சியாகவும் திருப்தியான அனுபவமாகவும் இருந்தது. அந்த அனுபவம் எனது மொழிபெயர்ப்பு வாழ்க்கையில் முக்கியமான கட்டமாகும்.
அதற்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டுக்களும் என் மீது எனக்கு நம்பிக்கையை வரவைத்தன . பிறகு தைரியமாக கலைஞர் எழுதிய குறளோவியத்தை எடுத்துக் கொண்டு மொழிபெயர்த்தேன்.அதன் பிறகு கல்கியின் தியாக பூமி, பார்த்திபன் கனவு,தீபம் நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர்,அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை,  சு. தமிழ்ச்செல்வி எழுதிய அளம், மருதனின் அசோகர்,ராஜம் கிருஷ்ணனின் சுழலில் மிதக்கும் தீபங்கள் என்று மொழிபெயர்ப்பு செய்தேன்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் எழுதிய அவரது இந்தியஆட்சிப்பணி, சினிமா, தணிக்கை சார்ந்த அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பை நான் மொழிபெயர்ப்பு செய்தேன். வெ. இறையன்புவின் அவ்வுலகமும் இக் கட்டத்தில் மொழி பெயர்த்துள்ளேன்.

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' ஏற்கெனவே மலையாளத்தில் வந்திருந்தது.ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால் அத்தனை சிறப்பாக அமையவில்லை என்று அபிப்பிராயப்பட்டார்கள். ஆனாலும் அந்த நூல் பெரிய வெற்றி பெற்றது.அவரது படைப்புகளை  என்னிடம் தமிழிலிருந்து மலையாளத்தில் மொழிபெயர்க்கக் கேட்டார்கள். அப்படி பெருமாள் முருகனின் மாதொருபாகன்  , ஏறு வெயில், கூளமாதாரி,நெடுநேரம் போன்ற நாவல்களை நான் மொழிபெயர்த்தேன்.  போண்டு என்ற அவரது சிறுகதைத் தொகுப்பையும் கோழையின் பாடல்கள் நூலையும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூலையும் நான் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன்.
சு .வெங்கடேசனின் வேள்பாரி, அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் என்று பெரிய பெரிய நூல்களையும் மொழிபெயர்ப்பு செய்த என் பணி செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்காகக் கம்பராமாயணத்தை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்தது வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.கம்பராமாயணமும், பாலகுமாரனின் மெர்குரிப்பூக்களும்   மொழிபெயர்ப்புப் பணி முடிந்து வெளிவர வேண்டியுள்ளன.

செய்யுள் வடிவில் உள்ள கம்பராமாயணத்தை எப்படி மொழிபெயர்த்தீர்கள்?

கம்பராமாயணம் செய்யுள் வடிவில் அதாவது பாடலாக உள்ளதை மலையாளத்தில் ஒலிபெயர்ப்பு செய்து அதன் விளக்கத்தைத்தான் நான் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். கம்பன் எழுதியதை அப்படியே செய்யுள் வடிவில் மொழிபெயர்க்க முடியாது. அது அவனுக்கே உரிய படைப்புத்திறன்.அவனது மொழி நடை, உவமை நயம் போன்றவற்றை விளக்கி உரைநடையில்தான் கம்பராமாயணத்தை நான் மொழி பெயர்த்து இருக்கிறேன்.

மொழிபெயர்க்கும் போது நீங்கள் அடைந்த அனுபவம் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

நான் ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று இருந்தாலும் நானும் ஒரு வாசகன் தான் .  சிறுவயதில் இருந்தே வாசித்து வருபவன். மலையாளத்தில் உலக இலக்கியங்கள் எப்போதோ வந்து விட்டன .அப்படி ஏராளமான செவ்வியல்  நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அந்த வகையில் நான் தீவிர வாசகனாகவே இருக்கிறேன். ஒரு மொழிபெயர்ப்பு நூலை எடுத்துக் கொண்டால் நான் முதலில் ஒரு வாசகனாக அதை வாசிப்பேன். பிறகு  ஒரு மொழிபெயர்ப்பாளராக அதன் மொழிநடையையும் மொழிக்கட்டுமானத்தையும் கலைச் சொற்களையும் கதாபாத்திரங்கள் பேசும் உரையாடல்களையும் அதன் தொனியையும் உற்றுக்கவனிப்பேன்.அப்படி நான் முதலில் மொழிபெயர்த்த கல்கியின் ’சிவகாமியின் சபதம் ’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது கல்கியின் மொழி நடை என்னை மிகவும் கவர்ந்தது. அவை படிக்கும் போதே காட்சிகள் மனதில் விரியும் அளவிற்கு இருக்கும். பாலுமகேந்திரா கேமராவைக் கொண்டு ஒளிப்பதிவு செய்து காட்சிப்படுத்தியது போல் அவை காட்சி இன்பத்தை அளிக்கக் கூடியவை.
கலைஞரின்  ’குறளோவியம் ’ வேறொரு அனுபவம். அவர் திருக்குறளுக்கு அவரது பார்வையில் விளக்கம் அளித்திருந்தாலும் அவரது மொழி நடை அந்த இலக்கிய நயம் கொண்ட  சொற்களின் பிரயோகம் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு நான் சாதாரண உரைநடை போல் விளக்கம் அளிக்க முடியாது. இன்னும் ஆழமாகச் சென்று இலக்கிய நடையில் எழுத வேண்டி இருந்தது.அதேபோல் அம்பையின்  ’வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ’. அது பெண்களின் வலியைப் பற்றி பேசியது . அதில் பெண்களின் குரலைக் கண்டுபிடிக்க முடிந்தது. மு க ஸ்டாலின் எழுதிய ’உங்களில் ஒருவன்’ நூல் அவரது வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல அரசியல் வரலாற்றையும் கூறும்படி இருந்தது . மருதன் எழுதிய  ’அசோகர்  ’நூல் ,கல்வெட்டு மூலம் எப்படி ஒரு வரலாற்றை அணுகுவது என்பதைக் கூறி வியப்பு அளித்தது.ராஜம் கிருஷ்ணன் எழுதிய  ’சுழலில் மிதக்கும் தீபங்கள் ’ பெண்களின் உலகம் பற்றிப் பேசுகிறது .
அதேபோல்   சு.வெங்கடேசன் எழுதிய  ’வேள்பாரி ’ மொழிபெயர்க்கும் போது 2000 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ்நாட்டுச் சூழ்நிலை பற்றிப் பேசியதைஅறிய முடிந்தது. அப்போது இருந்த மரங்கள், மலர்கள் ,விலங்குகள், பறவைகள் பெயர்கள் எல்லாம் எனக்குப் புதிதாக இருந்தன. அப்படித்தான் 2026 இல்  அ. வெண்ணிலாவின்  ’நீரதிகாரம் ’ மொழி பெயர்த்த போது அது இன்னொரு அனுபவமாக இருந்தது. பொதுவாக முல்லைப் பெரியார் அணை  அரசியல் மயமாகிவிட்டது. அந்த அணையை திட்டமிட்டது யார்? திறந்து வைத்தது யார் ? போன்ற எதுவுமே இவர்களுக்குத் தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முல்லைப் பெரியார் அணைக்கும் மலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பும் பந்தமும் இருக்கிறது. அதைப்பற்றி வரலாற்று பூர்வமாக அணுகி ஆதாரங்களை எல்லாம் திரட்டி  எழுதப்பட்டதுதான்  ’நீரதிகாரம் ’. அது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. சு.தமிழ்ச்செல்வியின்  ’அளம் ’ உப்பெடுக்கும் தொழிலாளர்களின் பாடுகளைப் பற்றிப் பேசியபோது வேறொரு அனுபவமாக இருந்தது. பெருமாள் முருகன் படைப்புகளைப் பார்க்கும்போது அவரது மொழிநடையும் கதாபாத்திரங்கள் பேசும் மொழிகளையும் எனக்கு வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்தது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுக்கும் படி இருந்தது.

கலாகௌமுதி சிறுகதை விருது



மொழிபெயர்ப்புப் பணியில் சலிப்பு ஏற்பட்டதுண்டா?

மொழிபெயர்ப்பை நான் தொழிலாகச் செய்கிறேன். வருமானத்திற்காக சில மொழிபெயர்ப்புகளைச் செய்கிறேன் என்பதும் உண்மை. இதை மூன்று வகையாகப் பார்க்கலாம் . முதல் வகை  தொழிலாகச் செய்வது. அதற்காக பல நூல்களை மொழிபெயர்க்க வேண்டிவரும்.  சில நூல்கள் மனத்துக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எதற்காக இந்த வேலைக்கு வந்தோம் என்றும்  தோன்றும். சிலர் எழுத்துகளைப்  படிக்கும்போது அந்தப் பிரதியைக் கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு மனம் கவர்ந்ததாக இருக்கும். 

மொழிபெயர்ப்பு கடினமான பணி அதற்குரிய ஊதியம் , அங்கீகாரம்   கிடைக்கிறதா?

என்னைப் பொறுத்தவரை ஊதியம் கிடைக்கிறது. அங்கீகாரம் குறைவாகத்தான் இருக்கிறது.
மொழிபெயர்ப்பில் தரம் சரியாக அமையும் போது நமக்கு ஒரு அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.
எழுத்தாளர் ஒரு படைப்பை எழுதும் போது அவருக்கு அதன் மீது அதிக பொறுப்பும்  கடமையும்  இருக்கிறது. அதை எப்படியாவது விற்கச் செய்ய வேண்டும். அதற்கான வணிக சந்தைப்படுத்துதலில் அவர் ஈடுபடுகிறார். இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மார்க்கெட்டிங் செய்கிறார்கள்.அவர்களுக்கு வேறு வழியில்லை .அவர்கள் படைப்பு விற்றாக வேண்டும். அந்த நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு அந்த கவலையில்லை.  ஏனென்றால் அதன் பின்னே அவரது எழுத்தாளர் இருக்கிறார். யானை மீது யானைப் பாகன் சவாரி செய்வது போலத்தான் இது. அந்த யானையே பாகனை உயரமான இடத்தில அமர வைத்து கொண்டு போய் சேர்த்துவிடும்.

மொழிபெயர்ப்பின் மூலம்  உங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சிகர அனுபவம் பற்றி... ?

நான் எழுத வரும் முன்பே ஏராளமான உலக இலக்கியங்களை மலையாளத்தில் படிக்கும் பாக்கியம் கிடைத்தது.   உலக செவ்வியல் இலக்கியங்கள் எல்லாம் மலையாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்து விட்டன.   அந்த அனுபவம் எனக்கு உறுதுணையாக இருந்தது. ஒவ்வொரு நூலை மொழிபெயர்க்கும் போதும் நாம் அதற்குள் இறங்கி விடுவோம். கல்கியின் கதையைப் படிக்கும் போது அந்தக் காட்சிகள் கண் முன் தெரியும். அந்த மொழியின் சரளம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அதேபோல் கலைஞரின் குறளோவியம் படித்த போதும்  அந்த மொழியும் நடையும் என்னைக் கவர்ந்தது.பன்னீரும் சந்தனமும் கலந்து செய்யப்பட்ட மலை மீது ஏறி இறங்கினால் நம் உடம்பும் மணக்குமே அப்படி ஓர் உணர்வை அடைந்தேன்.


 மூலஆசிரியரின் எண்ணத்தை  அப்படியே முழுதாகக் கொண்டுவர முடியுமா?

ஒரு மனிதன் மனதால் நினைப்பதை அறிந்து சொல்லக் கூடிய கருவி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .இது பற்றி குமாரன் ஆசான் ஒரு கவிதை எழுதி இருப்பார்.  ’பிறருக்கு உள்ளத்தைக் காட்டும் திறனை ஆண்டவன் நமக்குத் தரவில்லை. அதைச் சில வார்த்தைகளால் தான் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வார்த்தைகள் கூட  முழுமையானதல்ல. எனவே புரிதல் குறைவாக இருக்கிறது ’ என்று எழுதி இருப்பார். அப்படித்தான் இதுவும். ஓரளவுக்குத்தான் மொழி பெயர்க்க முடியும்.

மொழிபெயர்ப்பதற்கு ஏற்ற மனநிலை என்று ஏதாவது இருக்கிறதா?

நான் வசிக்கும் களம்பூர் இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான இடம். எனவே எனக்கு எல்லா நேரமும் ஏகாந்தமாக இருக்கும் .நான் முழுநேர எழுத்தாளராக இருப்பதால் தினமும் படிப்பதும் எழுதுவதும் எனது தொழிலாக இருக்கிறது.
தினசரி திட்டமிட்டு நான் மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொள்கிறேன்.அதனால் தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ’வேள்பாரி ’ ,  ’நீரதிகாரம் ’ போன்ற படைப்பு ஒவ்வொன்றையும்  ஏழே மாதங்களில் மொழிபெயர்ப்பு செய்தேன்.அன்றாடம் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்கிறேன். அதனால் தான் ’கம்பராமாயணம்’ போன்ற பெரிய முயற்சிகளில்  என்னால் ஈடுபட முடிகிறது. மொழிபெயர்ப்புக்கு என்று தனியான மனநிலை எதுவும் இல்லை. எப்போதும் நான் பணியாற்றும் மனநிலையோடு தான் இருக்கிறேன்.

மூல ஆசிரியரைச் சந்தித்த அனுபவங்கள் ?

நூலாசிரியர் என்றால் நான் பெருமாள் முருகனை மட்டுமே சந்தித்து இருக்கிறேன். வேறு யாரையும் சந்தித்ததில்லை. அனைவரிடமும் தொலைபேசியில்தான் பேசி இருக்கிறேன். மூல ஆசிரியரைச் சந்திப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்தான். பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்கள் கேரளாவில் நன்றாக விற்கின்றன. அவர் மிகவும் எளிமையாக இருக்கிறார். மிக சகஜமாகப் பேசினார். பலரிடமும் என்னைப் பற்றிப் பெருமையாக விரிவாக எடுத்துப் பேசுவார் .அது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும்.
 
நீங்கள் சுயமாக எழுதிய நூல்கள் பற்றி?

எனது மிக முக்கியமான நாவல் டிசி புக்ஸ் வெளியிட்ட  'பாஞ்சாலங்குறிச்சி’. வீர பாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையின் பார்வையில் செல்கிற கதை.சிறையிலிருந்து தப்பித்த அவர்  மருது பாண்டியர்களுடன் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்துப் போர் புரிந்தார். ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பிடிபட்டுத் தூக்கு மேடைக்குச் செல்லும் முதல் நாள் அவரது எண்ண  ஓட்டத்தில் செல்கிற கதை இது.
இதைத் தவிர நான் மலையாளத்தில் ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதி இருக்கிறேன். முதலில் சுரா பதிப்பகத்துக்காக ’மகாபாரதம்  கதாசாகரம்' என்ற பெரிய நூலை எழுதினேன்.  வியாசரைப் பின்பற்றி எழுதியிருந்தாலும் அதில் வரும் பாத்திரங்கள் சம்பவங்கள் பற்றி எனது பார்வையையும் ஆங்காங்கே அடிக்குறிப்பாக  எழுதியிருப்பேன். இது போல்  'வால்மீகி ராமாயணம் கதாசாகரம்' என்கிற நூலையும் எழுதினேன்.
’வாரணாவதம்’,  ’தீமழைக்காலம்’, ’பாஞ்சாலங்குறிச்சி’, ’சதுப்பு’, ’பச்சிமாயனம்’ என்று ஐந்து நாவல்கள்  எழுதினேன்.
விவேகானந்தர், ஆப்ரகாம் லிங்கன், அலெக்சாண்டர், நெப்போலியன், புத்தர்  போன்ற உலகின் பெரிய தலைவர்கள் பிரமுகர்களின்  வாழ்க்கை வரலாறுகளும்  எழுதியிருக்கிறேன்.
நான் கேரளா சென்ற பிறகு  முழு நேர எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். சுரா பதிப்பகம் அந்த வகையில் எனக்குப் பெரிய உதவி செய்தது என்று கூற வேண்டும்.

உங்களுக்குள் மொழிபெயர்ப்பாளராக இருப்பவர், உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளரை இருட்டடிப்பு செய்கிறாரா?

இரண்டும் வெவ்வேறு துறைகள். முற்றிலும் மாறுபட்ட அனுபவங்கள்.மொழிபெயர்ப்பாளராக இருப்பதால் சொந்த நூல்கள் எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. மொழிபெயர்ப்பு எனது தொழில் என்பதால் அதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.மொழிபெயர்ப்பிலிருந்து வருமானம் கிடைக்கிறது. சொந்தமாக எழுதும் போது  ஆத்ம திருப்தி கிடைக்கிறது. சொந்த எழுத்தை மட்டுமே நம்பி வருமானத்தை இழக்க நான் விரும்பவில்லை. இதற்கிடையே ஆத்ம திருப்திக்காக சொந்த படைப்புகளும் அவ்வப்போது எழுதுகிறேன்.

உங்களைக் கவர்ந்த தமிழ் மலையாள எழுத்தாளர்கள்  யார் ?
கல்கி, தீபம் நா. பார்த்தசாரதி ,ஜெயகாந்தன், ஜெயமோகன் ,எஸ் ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன் இப்படி  பெரிய பட்டியல் இருக்கிறது.மலையாளத்தில் எம்.டி வாசுதேவன் நாயர், தகழி,வைக்கம் முகமது பஷீர், பொற்றேகாட் ஓ .வி .விஜயன் போன்ற நட்சத்திர எழுத்தாளர்கள் தொடங்கி ஏராளமானோர் உள்ளனர்.
 
தமிழில் சமஸ்கிருதம் கலவாமல் எழுதுகிற போக்கு இருக்கிறது. மலையாளத்தில் எப்படி?

மலையாள மொழி என்பதே தமிழும் சமஸ்கிருதமும் கலந்த ஒன்றாகத்தான் இருக்கும் .அதில் சமஸ்கிருதத்தை கழித்து விட்டு எழுதுவது சிரமம்.  தூய மலையாளத்தில் எழுதும் முயற்சிகளும் அங்காங்கே நடக்கின்றன. ஆனால் அது கடினம். ஏனென்றால் சமஸ்கிருத சொற்கள் நிறைந்தது தான் மலையாளம்.
தமிழ் தனித்து இயங்கக்கூடிய வல்லமையுடன் இருக்கிறது .ஒரு காலத்தில் தமிழில் சமஸ்கிருதக் கலப்பு இருந்தாலும் மெல்ல மெல்ல அதிலிருந்து வெளிவந்துவிட்டது .கல்கி எழுதிய போது பூரண சந்திரன் என்று எழுதுவார்.இப்போதெல்லாம் அப்படி எழுதுவதை யாரும் ரசிப்பதில்லை. அதனால முழு நிலவு என்று எழுதுகிறார்கள்.
மலையாளத்தில் எழுத்தச்சன் ’அத்தியாத்ம ராமாயணம் ’எழுதியபோது இருந்த மலையாளம் இப்பொழுது இல்லை. அவர்  திராவிடமும் ஆரியமும் கலர்ந்த அழகான வடிவம் மொழிக்கு கொடுத்திருந்தார். அதற்கு முன்பே எழுதப்பட்ட’ கிருஷ்ண காதா’ பெரும்பாலும் திராவிட மொழி பாணியில் இருந்தது.  இது எழுத்தச்சனுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. சமஸ்கிருதம் இல்லாமல் தமிழால் நிற்க முடியும். மலையாளத்தில் அது சாத்தியமில்லை.  இருந்தாலும் தூய மலையாளத்தில் எழுத ஒரு பக்கம் முயற்சி செய்கிறார்கள்.

தமிழ் -மலையாள இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களின் போக்கு எப்படி உள்ளது?

எழுத்தாளர்களில் 90 சதவீதம் எப்போதும் இடதுசாரிகளாக இருப்பார்கள். வலதுசாரிகள் குறைவாக  இருப்பார்கள்.ஆனால் இப்போது உலகத்தின் கார்ப்பரேட் சூழல் எழுத்தாளர்களையும் மாற்றிவிட்டது.வலதுசாரிகள் வலுப்பெற்று வருகிறார்கள். எனவே எழுத்தாளர்கள் காய்க்கிற மரம் பக்கம் செல்கிற நிலை உள்ளது.  எந்த மரத்தின் கீழ் நின்றால் பூக்கள் உதிரும் என்று பார்க்கிறார்கள். இது காலமாற்றம்.குழு அரசியல், குழு மோதல்கள் எல்லா பக்கங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு காலத்தில் பொய் பேசினால் போஜனம் கிடைக்காது என்கிற நிலை இருந்தது . இப்போது சுதந்திரமாகப் பேசினால் சாப்பாடு கிடைக்குமா என்கிற கேள்வி இருக்கிறது. எனவே உண்மை பேசுவதற்கு பல எழுத்தாளர்கள் தயங்குகிறார்கள். சமூகம் அந்த அளவுக்கு மாறிவிட்டது .எனவே எழுத்தாளர்களும் மாறிவிட்டார்கள்.
ஒரு காலத்தில் படைப்பின் பெயர் பெரிதாக இருக்கும். எழுதுகிற எழுத்தாளர் பெயர் சிறிதாக இருக்கும். அப்பொழுது படைப்புக்கு வல்லமை இருந்தது. இப்போது எழுத்தாளர் பெயர் பெரிதாகிவிட்டது, படைப்பின் பெயர்  சிறிதாகிவிட்டது. படைப்பாளி படைப்பை விட பெரிதாகிவிட்டால் படைப்பின் தரம் குறையும். 

இப்பணிக்காகக் கிடைத்த அங்கீகாரங்கள் ?

மொழிபெயர்ப்புக்காக நல்லி வழங்கும் திசை எட்டும் விருது பெற்றிருக்கிறேன். கம்பராமாயணத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்ததற்குத்  பாரதி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் என்னை அழைத்துக் கௌரவித்தார். பெரிய அளவில் நடக்கும் கேரள இலக்கியத் திருவிழாவில் திரு பெருமாள் முருகனுடன்  கலந்துரையாடுவது போல் ஒரு நிகழ்ச்சி இருந்தது.அப்போது நான் அவரைப் பற்றிப் பேசலாம் என்றால் அவர் என்னைப் பற்றி விரிவாகப் பேசி அனைவருக்கும் அறிமுகம் செய்து என்னைப் பெருமைப்படுத்தினார். இந்தப் பெருந்தன்மை எல்லா எழுத்தாளர்களுக்கும் வந்து விடாது.
’வேள்பாரி’ வெளியீட்டு விழா கேரளாவில் நடந்தது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் எம். ஏ.பேபி வெளியிட்டார் .அப்போது என்னை எழுத்தாளர் சு. வெங்கடேசன் அழைத்திருந்தார் . ஆனால் நான் சென்னையில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் விழாவில் என்னைப் பற்றியும் என் மொழிபெயர்ப்பைப் பற்றியும் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி சில மகிழ்ச்சிகரமான அனுபவங்கள் உண்டு.

குடும்பத்தினர் உங்களுக்கு எப்படி உதவுகிறார்கள்  ?

என் மனைவி மகள் போன்றவர்கள் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள்.  எனது ஒரே மகளுக்குத் திருமணமாகிவிட்டது. அவர் என்னுடன் இருக்கும் வரை முதல் வாசகராக நான் எழுதியதை  வாசிப்பாள்.கருத்து சொல்வாள். இப்போது ஆசிரியராக இருக்கிறாள்.

நீங்கள் மொழிபெயர்க்க ஆர்வமாக இருக்கும் நூல்கள் என்று ஏதாவது இருக்கிறதா?


நான் சமகாலத்திலுள்ள நூல்களைத் தான் மொழிபெயர்ப்பு செய்து வருகிறேன். சீவக சிந்தாமணி, வளையாபதி போன்ற காப்பியங்களையும் சங்க இலக்கியங்களையும் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram