காவியமுகாமில் கலந்துகொண்டோர் 
இலக்கியம்

காவிய முகாமில் என்னதான் நடக்கிறது? ஓர் இலக்கிய நேரடி ரிப்போர்ட்

அருள்செல்வன்

ஆண்டுதோறும் நடைபெறும் காவிய முகாம் என்பது எழுத்தாளர் ஜெயமோகன் வாசகர்களிடம் மிகவும் புகழ் பெற்றது. அந்த முகாமில் பங்கேற்பது தீவிரவாசிப்புக்கும் ஜெயமோகன் வாசகர்களின் உண்மைத் தன்மைக்குமான சான்று போல அவர்களிடையே கருதப்படுகிறது.

இந்த ஆண்டு ஈரோடு அருகே ஒரு மலைத் தங்குமிடத்தில் ’குரு நித்யா காவிய முகாம்’ நடைபெறுகிறது என்று அறிந்தோம்.

மூன்று நாட்கள் இலக்கியம் சார்ந்து, காவிய முகாம் எனும் பெயரில் ஒரு கொண்டாட்டம் என்கிறபோது எப்படித்தான் இருக்கும் என்று பார்க்கத் தோன்றியது. துணிந்து புறப்பட்டு விட்டோம்.

ஈரோட்டிலிருந்து அந்தியூர் சென்று அங்கிருந்து மடம் என்கிற மலைக்கிராமம் செல்லும் வழியில் வெள்ளிமலை இருக்கிறது.அந்தியூரில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மலைப்பகுதியில் பேருந்து ஏற ஆரம்பித்த உடனேயே குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைவது போல் குளுமை படரத் தொடங்கியது.இரண்டு மணி நேரப் பயணத்தில் வெள்ளிமலை.அங்கே தான் 'நித்ய வனம்' இருக்கிறது.வெள்ளிமலைப் பகுதி வந்தவுடன் பேருந்து ஓட்டுநரே சொன்னார் "நித்ய வனம் செல்ல இங்கே இறங்கவும்" என்று. அந்த அளவிற்கு வருவோர் போவோரின் புழக்கத்தால் பழகி இருக்கிறது அவருக்கு.

நித்யவனம்

ஜெயமோகன், நண்பர்கள், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்றவற்றின் கூட்டு முயற்சியில் 'முழுமையறிவு' என்கிற அமைப்பாகத் திரண்டு உருவாகி அதன் மூலம் அறிவியக்கச் செயல்பாடுகள் தொடர்ந்து வருகின்றன; பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மரபிசை. மரபிலக்கியம், சைவ, வைணவ இலக்கியம், தத்துவப் பயிற்சிகள், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ,பௌத்தம் சார்ந்த தத்துவங்கள், மேற்கத்திய இசை, உளக்குவிப்பு,யோகக் கலை,ஆலயக் கலை, பறவை பார்த்தல், தாவர வகைகளை இனங்காணுதல், ஓவியக்கலை போன்ற பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன.குறைந்தது 30 பேர் இருந்தால் பயிற்சி தொடங்கப்படும் .

குடில்கள் போல் தங்குமிடங்கள் ஆங்காங்கே உண்டு. பெண்களுக்கும் தனி இட வசதி உண்டு.மின்விசிறி சுழல அவசியமே இல்லாத குளிர் அங்கே பரவி இருந்தது.ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனிக்கத் தேவை ,புறச் சூழல்களின் தாக்கங்கள் இல்லாத ஓசையற்ற அமைதி.அது அங்கே பூரணமாக நிலவியது.

எல்லோரும் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு அந்த வகுப்புகளுக்காக கவனத்தை ஒப்புக்கொடுக்க முடிவு செய்து வந்தவர்கள். எனவே யாரிடமும் பதற்றமில்லை பரபரப்பு இல்லை.

வார இறுதியில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் முகாம் என்பது திட்டம். இந்தக் காவிய முகாமுக்கு 100 பேருக்கு மேல் வந்திருந்தார்கள்.இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு கட்டணம் உண்டு.உண்மையில் இலக்கிய ஆர்வம் இருந்து கலந்து கொள்ள முடியாத பொருளாதாரச் சூழல் கொண்டவர்களுக்கு கொடையாளர்கள் மூலம் உதவி பெற்று கலந்து கொள்ள வாய்ப்பளிக்கும் ஏற்பாடும் உள்ளது. முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் உறுதி செய்யப்பட்டதும் அவர்களைக் கொண்டு ஒரு வாட்சப் குழு தொடங்கப்படுகிறது. அதில் முகாம் நடைபெறும் இடம், போக்குவரத்து வசதிகள் வழிகாட்டுதல்கள் பற்றிய குறிப்புகள் கலந்து கொள்வோருக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் முகாமில் இடம்பெறும் அமர்வுகள் சார்ந்து பாடத்திட்டம் போன்று முக்கியமான குறிப்புகள் அளிக்கப்படுகின்றன. விவாதிக்கப்பட உள்ள சிறுகதைகளும் அனுப்பப்படும். அதைப் படித்துக் கொண்டு அமர்வுகள் பற்றிய முன் அறிதலோடு வரலாம். அது அமர்வைப் புரிந்து கொள்வதற்கும் ஆழமாக விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும். சிலர் அதைப் பிரதிகளாக அச்சிட்டு புத்தக வடிவில் கொண்டு வந்திருந்தது ஆச்சரியம். அது மட்டுமல்லாமல் அரங்கிலும் நகலெடுத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

புறச் சூழல்களின் தாக்கங்கள் இல்லாத அமைதி

அலைபேசி தொடர்பு இல்லாமல் இருப்பதே பெரிய விடுதலையாக இருந்தது மட்டுமல்ல ஓசை உலகத்தை விட்டு வெளியேறிய உணர்வைத் தந்தது. அந்த அமைதி ஒவ்வொருவருக்கும் சமநிலையுடன் கற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொண்டு வருகிறது.செவிக்கு நிறைய உணவு இருந்தும் வயிற்றுக்கும் ஆரோக்கியமான உணவும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து வானத்தைப் பார்த்தாலே அழகிய கேன்வாஸில் இயற்கை ஓர் ஓவியம் வரைந்திருக்கும்.காலை நேரம் வானம் நீலம் பாரித்துத் கிடக்கும். வெண்பஞ்சு மேகங்கள் நகர ஆரம்பித்திருக்கும். பசுமை பூசிய மலைகளின் விளிம்பில் ஜரிகையாய் ஒளி மின்னிக் கொண்டிருக்கும்.இயற்கை வரையும் சித்திரம் அழகு.

அதுவே அந்த நாள் காலையின் முதல் கலைத்தரிசனமாக அமைந்து நல்ல ஆரம்பத்திற்கான அறிகுறியாகத் தோன்றும். அதுவே மாலையானால் வேறொன்றாக மாறி இருக்கும். இப்படி இயற்கை வரைந்து காட்டும் ஓவியங்கள் கண்களை நிறைக்கும்.

அங்கே சென்று பார்த்த போது தான் மலைக்கும் மழைக்கும் உள்ள பந்தத்தை அறிய முடிந்தது.

மூன்று நாட்களில் மழையின் பல்வேறு அவதாரங்களைப் பார்த்தோம். நினைத்தபோது சிறு தூறலாய் மழை ஆரம்பிக்கும் :மெல்லிய தூறல், சீறலாய்ச் சாரல் ,நின்று பெய்த மழை எல்லாம் சிறிது நேரம் தான் ,விளையாட்டு காட்டி விட்டுச் சென்றுவிடும்.

பசுமையான செடி கொடிகள்,பெயர் தெரியாத வண்ணமயமான மலர்கள்.பசுமைப் பின்னணியில் அவை ஒளிரும் காட்சியும் நல்ல பார்வை அனுபவமே. இடையில் பறவைகளின் கீச்சொலிகள். நடுவே குயில் பாட்டு இல்லை என்றாலும் மயில் பாட்டு உண்டு. மயிலின் அகவல் ஓசை காலை முதல் மாலை வரை இருந்து கொண்டிருக்கும்.

குளிரூட்டப்பட்டறை அறைக்கும் நிகரான குளுமை அந்தச் சூழலை நிறைந்திருந்தது.

அரங்குக்கு வெளியே கற்றுக் கொள்வதற்கு இயற்கை ஒரு பக்கம் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது,இன்னொரு பக்கம் குரு நித்யா அரங்கில் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

காவிய முகாமைக் கண்காணிக்கும் புதர்ச்சிட்டு

இந்த முகாமுக்காக 18 அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அமர்வுகள் என்னென்ன என்று பார்ப்போம்:

முதல் அமர்வாக 'கம்பராமாயணத்தில் நிலக்காட்சி' பற்றி கவி நிலவன் விளக்கினார்.

'நாம் காணுகின்ற இந்த உலகினைக் கவிஞன் வேறொன்றாக்கி நம் கையில் தருகிறான் .அதன் மூலம் இந்த நிலம் மீது தீராக் காதலை மூட்டி வைக்கிறான். கம்பன் தன் சொற்களின் ஊடாக படைத்துக் காட்டிய உலகம் பற்றியது இந்த அமர்வு' என்று தொடங்கியவர், கம்பனின் வர்ணனையில் காட்டிய நிலத்தோற்றங்களை வரிசையாக எடுத்துக் கூறினார்.

கம்பனின் இரவு வர்ணனையில்

'நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாக நிரம்பியதோ? காலனுடைய நிறத்தை மையில் குழைத்து ஆகாயத்தின் மீதும் மண்ணின் மீதும் மெழுகினார்களோ ?எங்கும் இருளாக பரந்து உள்ளதே! 'என்று சீதை ராமன் மீதும் உண்டான காதலால் இரவைக் கண்டு புலம்புதல் பற்றி எடுத்துக் கூறியவர், பல பாடல்களில் நிலக்காட்சி பயின்று வந்ததை விளக்கிக் கூறினார். அக்கருத்திற்கு மேலும் செழுமை சேர்க்கும் விதமாக எழுத்தாளர் நாஞ்சில்நாடன் மேலும் சில பாடல்களைப் பற்றிக் கூறி நிகழ்ச்சியை மெருகேற்றினார்.

'சமஸ்கிருத சந்த மரபு ' சார்ந்த அமர்வில் தேஜஸ் தன் கருத்துகளைக் கூறினார்.

'சொல் என்பது ஒலி. செவியுணரும் ஒலி அகமுணரும் ஒலியாலேயே இணைக்கப்பட்டுள்ளது. ஒலிகளை இணைப்பதன் அறிவையே சந்தஸ் என்றனர்.அந்தச் சந்தஸ் என்பது சொல்களை வடிவமைக்கும் யாப்பு முறை.தமிழில் குறில், நெடில் போல் சமஸ்கிருதத்தில் குரு, லகு என்ற வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அட்சரவிருத்தம் என்பது எழுத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் மாத்ராவிருத்தம் ஒலி அளவை, மாத்திரையை அடிப்படையாகக் கொண்டது என்றும் வகுக்கப்பட்டதையும் கூறியவர், சந்தஸை வகுக்க எழுத்துகளைக் கணமென்று சிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கணமும் ஓர் எழுத்தால் சுட்டபடுகிறது என்றும் கூறினார்.

'கன்னட சிறுகதைகள்' குறித்து புவனேஸ்வரியின் அமர்வில்,

ஞானபீட பரிசு பெற்ற எழுத்தாளர் குவேம்புவின் 'மீனாட்சியின் வீட்டு வாத்தியார்' என்ற கதையைப் பற்றிக் கூறினார்.தொடர்ந்து மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்,யூ ஆர் அனந்த மூர்த்தி,திவாகர் ஆகியோரின் படைப்புகள் குறித்தும் ஒப்பீடு செய்தார்.

'நெக்ஸஸ் ' (Nexus by Yuval Nova Harari) தலைப்பிலான அமர்வில் நாகநந்தினி பங்கேற்றார்.

"மக்களுக்கு ஒரு இலவச மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துவிட்டு அவர்களுடைய படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்ய ஒரு செயலியையும் கொடுத்து அவர்களிடமிருந்து ஏராளமான தரவுகளை அவர்கள் அறியாமல் எடுத்துக் கொள்கின்றன பெரு நிறுவனங்கள்" என்றவர்,

"ஒரு புத்தகத்தைத் திருத்தி விடலாம் .ஒரு களிமண் பலகை அல்லது தோல் ஆவணத்தை நெருப்பிலிட்டு எரிக்கலாம். அவை யாவும் புறவயமான பொருட்கள்(physical objects). கணினி வலைப் பின்னலில் சேமிக்கப்பட்டிருக்கின்ற தகவல்கள் எண்ம (digital) வடி வி ல் இருக்கின்றன. தகவல்களை முழுமையாக அழிக்க முடியாது.

வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பில் இருந்து நம்மால் தப்பவே முடியாது. நமது டிஜிட்டல் காலடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.இந்த வலை அமைப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளம் . அடையக் கூடிய தீமைகள், சாத்தியம் உள்ள பாதகமான விஷயங்கள் வருங்காலத்தில் மனிதனை அழிவுக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவை" என்றார்.

இன்னொரு அமர்வில் 'கவிஞர் வெயிலும் மகிழ்ச்சியும் ' பற்றி ஞானசேகர் பேசினார்.

அப்போது 'மகிழ்ச்சியான பன்றிக் குட்டி' கவிதையில் சொல்லப்படும் மூன்று தலைமுறை உணர்வுகளையும் வேறுபடுத்திக் காட்டினார்.வெயிலின் கவிதையில் உள்ள அரசியலைப் புரிந்து கொண்டால் ரசிக்கலாம். அரசியல் கவிதைகளில் ஆன்மீகத்தை எதிர்பார்க்கக்கூடாது" என்றார்.

'காண்பியல் கலையில் பெண்கள் ' தலைப்பில் பேச வந்த ஜெயராம், பவர் பாயிண்ட் மூலம் படங்களைத் திரையில் காட்டி பேசத் தொடங்கினார். தினசரி நாளிதழில் சிறுவர்கள் வரையும் ஓவியங்களிலேயே ஆண்மை, பெண்மை இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆண் -பெண் குழந்தைகள் வரைவதில் பெரும்பாலும் என்னென்ன ஓவியங்கள் இடம் பெறுகின்றன, என்று பால் வேறுபாட்டு வெளிப்பாட்டை விளக்கினார்.

ஆண் குழந்தைகள் வாகனம் ஆட்டோமொபைல், கார், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்றவற்றை வரைகிறார்கள் .பெண் குழந்தைகள் சுயபடங்கள் பெண்ணுருவம் கொண்டதை வரைகிறார்கள். சூப்பர் மேன், சோட்டா பீம் போன்றவற்றையும் வரைகிறார்கள். ஆண் பிள்ளை வளர்ந்த பிறகுதான் பெண்ணுருவங்களை வரைய ஆரம்பிக்கிறான்.

மாடலாக பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு ஓவியங்கள் வரைந்தது பற்றி நடிகர் சிவகுமார் நினைவு கூர்ந்திருக்கிறார். அதேபோல் இப்போது நடக்கிறதா? ஓவியத்தில் பெண்கள் ஏன் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை? கிச்சனை பெண்கள் வரைவதில்லை. ஓவியங்களில் வட்டம் சதுரம் இடம்பெறுவதில் கூட பால் வேறுபாடு தெரிகிறது," என்றெல்லாம் கூறினார்.

'தமிழ் அறிவியல் புனை கதைகள்' பற்றிய அமர்வில் சுனில் கிருஷ்ணன்பேசும்போது, " முதல் அறிவியல் புனைவு என்பது ஜெகதீஷ் சந்திரபோஸ் எழுதியதுதான். வாழ்க்கையில் அவர் எழுதிய ஒரே கதை அது தான். அது ஒரு ஹேர் ஆயில் விளம்பரத்துக்காக எழுதப்பட்ட கதை .

தமிழில் 'தூரத்து பச்சை', 'கோபாலன் விஷயம்' ,பாரதியின் 'ஞானரதம்' ,'கபாடபுரம்' போன்றவற்றைக் கூறலாம். மட்டுமல்ல ஜி. நாகராஜனின் 'அணுயுகம்' சமூகத்தில் அறிவியல் ஏற்படுத்தும் பிரச்சினைகளைப் பேசியது. சுஜாதா இதில் புகழ்பெற்றிருந்தார். அவர் எழுதிய 'சூரியன்' ,'மஞ்சள் ரத்தம்', 'உபகிரகம்' , போன்றவை சில உதாரணங்கள். ஜெயமோகனின் 'விசும்பு', 'பித்தம்', 'உற்று நோக்கும் பறவை' எல்லாமே வாழ்க்கையில் அடிப்படையில் எழும் வினாக்களை அறிவியல் கொண்டு எதிர்கொள்வது என்று இருந்தது. ஆர்னிகா நாசர், இரா முருகன் போன்றவர்கள் எழுதியதையும் குறிப்பிடலாம். இவை பெரும்பாலும் எதிர்காலத்தை முன்னிட்டு எழுதப்பட்டவை. அறிவியல் புனைவுகள் சமகாலத்திற்கும் திரும்ப வேண்டும்," என்றார்.

நாஞ்சில்நாடனுடன் வெளியே ஒரு குறு முகாம்

இரண்டாவது நாளில் முதல் அமர்வில் 'இசை வர்ணனைகள்' தலைப்பில் யோகேஸ்வரன் ராமநாதன் பேசும்போது,

"இலக்கிய படைப்புகளில் இசை வர்ணனைகளை ஆதார சுருதியாகக் கொண்ட ஆக்கங்கள், மையக்கருவின் இணை இழையாய் தொடர்ந்து வரும் வர்ணனைகள், திடீரென சில்லிடும் காற்றைப் போல இசையால் வருடிச் செல்லும் படைப்புகள் என்ற வகைப்படுத்தலாம் "என்றார்.

"சங்கீத ரத்னாகரம் 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றும் கருணாகர சாகரம் 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது "என்றும் கூறினார்.

"1930க்கு பிறகு 2024 வரை சிறுகதைகளில் இசை வர்ணனைகள் இடம் பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் மேற்கத்திய ஹிந்துஸ்தானி கர்நாடக இசை வர்ணனைகள் இருந்தன" என்றவர், " நகுல் வசனின் 'இறைவர்க்கோர் பச்சிலை', தி. ஜானகிராமனின் 'பாஷாங்க ராகம்', அ. முத்துலிங்கத்தின் 'ரி ' போன்றவை ஆதார சுருதி, இணை இழை,குளிர் காற்று அனுபவங்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பவை" என்றார்.

கம்பராமாயணத்தில் 'ஆவி ஒழியினும் ஆசை ஒழியா'என்னும் தலைப்பில் கம்பனின் காதல் கவிதைகளை பற்றி கவிஞர் இசை சுமார் 20 கவிதைகளை விளக்கினார்.

'இலக்கிய உண்மையும் தத்துவ உண்மையும்' பற்றிய அந்தியூர் மணியின் அமர்வு அடுத்து இடம் பெற்றது.

"ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று கூறுவோர் சூனிய ஆன்மாவாதிகள்,உடம்பே ஆன்மா என்போர் தேக ஆன்மீகவாதிகள், மெய்,வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளை ஆன்மா என்பர் இந்திரிய ஆன் மாவாதிகள். பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மா வாதிகள், சுத்த பிரம்மமே ஆன்மா என்பர் ஏக ஆன்மாவாதிகள். எல்லா கருவிகளும் கூடிய கூட்டமே சமூக ஆன்மாவாதிகள் என்பர்.

இவ்வாறு கூறும் எழுவர் கருத்துகளையும் மறுத்து தனியாக ஆன்மா உலகு பற்றி மெய்கண்டார் கூறியுள்ளார்,’’ என்றவர், இலக்கிய -தத்துவ உண்மைகள் இரண்டுக்குமான வேறுபாடுகளைக் கூறினார்.

'மொழியாக்கத்தின் நுட்பங்கள் 'குறித்து நிர்மால்யா தனது அமர்வில், ' 20 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில்தான் மொழியாக்க நூல்கள் அதிகம் வந்தன .இப்போது தமிழில் அதிகம் வருகின்றன.பதிப்பிக்கப்படும் நான்கு நூல்களில் இரண்டு, மொழியாக்க நூல்களாக உள்ளன .இந்திய அளவில், உலக அளவில் பேசப்படும் நூல்கள் உடனடியாகத் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுகின்றன.

இலக்கிய மொழிபெயர்ப்புகளை மொழியாக்கங்கள் என்று கூறுவதே சிறப்பாக இருக்கும். மொழிபெயர்ப்பு மொழியை மட்டும் சார்ந்தது. மொழியாக்கம் என்பது மொழியையும் உணர்வையும் சார்ந்து இயங்குவது. மூல ஆசிரியரின் உணர்வை மூலத்திற்கு இணக்கமாகவும் அணுக்கமாகவும் கொண்டிருப்பது நுட்பமான மொழியாக்கத்தின் வரையறை" என்றவர், பணியர் மொழியில் லயேஷ் தேலம் பற்றா கவிதைகளின் மொழியாக்கத்தை வாசித்தார்.

'சரவணன் சந்திரன் சிறுகதைகள்' குறித்துப் பேசிய சிவகுமரன் அடுத்த அமர்வில் இடம் பெற்றார்.

சரவணன் சந்திரனின் சிறுகதைகளின் இலக்கிய வடிவத்தைப் புரிந்து கொள்ள அவற்றின் கருப்பொருள், மொழிநடை, கதை சொல்லும் விதம், ,கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றை 'ஹோட்டல் கே', 'யாதவ பிரகாசர்', 'மானுமோராஸ்' சிறுகதைகள் வழியே பார்க்கலாம் என்று விளக்க ஆரம்பித்தார்.

அது சார்ந்த உரையாடலில் சரவணன் சந்திரனின் சிறுகதைகளில் தரவுகளும் அனுபவங்களும் உள்ளன. ஆனால் அவை இலக்கியத்திற்கு நெருக்கமாக வராதவை என்றும் வருபவைதான் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பார்வையாளர்கள் கருத்து கூறினார்கள்.

சா . கந்தசாமி எழுதிய 'சாயாவனம் 'நாவல் குறித்து விஜயலட்சுமியின் அமர்வில் சாயாவனத்தில் வரும் சிதம்பரத்தின் பாத்திரம் பற்றி விளக்கியவர்,

'ரப்பர்', 'காடு' போன்ற நவீன வாசிப்புகளையும் 'காண்டவ வனமழித்தல்' என்ற மரபார்ந்த வாசிப்பையும் இணை வைத்துக் கொள்ளக் கூடிய வாசிப்பாக இந்த நாவல் அமைந்துள்ளதாகக் கூறினார்.

அப்போது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனக்கும் சா. கந்தசாமிக்குமான நட்பைப் பற்றி எடுத்துரைத்து கூட்டத்தில் எழுத்தாளர்களுக்கான இடத்தை பற்றி உணர வைத்தார்.

ஷோபா சக்தி 'காலம் 'இதழில் எழுதி 2014 இல் வெளிவந்த 'மாதா' சிறுகதை குறித்து பிரசன்ன கிருஷ்ணன் பேசினார்.

கதை பற்றி விதந்தோதினார். ஆனால் எதிர்வினை வேறு மாதிரியாக இருந்தது. 'மாதா' கதையில் மன்னித்து தியாகம் செய்வதை மகிமைப்படுத்துவதாக உள்ளதனை ஏற்க முடியாது என்றனர். குறிப்பாக பெண்கள் இந்த எதிர்ப்புக் குரலை எழுப்பினார்கள்.

'நெய்தல் திணைப் பாடல்கள் குறித்து முத்துக்குமரன் அமர்வில் ,சங்க இலக்கியங்களில் நெய்தல் பாடல்கள் 100 க்கு மேல் உள்ளதாகவும் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டதாகவும் கூறியவர், நெய்தல் நிலத்தில் கட்டுமரம், தோணி, படகு போன்றவற்றையும் மீன் வலைகளின் வகைமைகளையும், மீனவர்களில் கதாநாயகர்களாக மாறுவோர் பற்றியும் அவர்கள் இணைந்து தனித்தனி குறுங்குழுவாக தனித்தனி கலாச்சாரமாக உருவெடுப்பது பற்றியும் கூறினார்.

'சிங்கப்பூர் சிறுகதைகள்' குறித்த அமர்வில் அழகு நிலா பேசினார்.

சிங்கப்பூரில் எழுத்து இலக்கியம் தோன்றி வளர்ந்து வந்த வரலாற்றைக் கூறியவர், திராவிட இயக்க தாக்கங்களினால் சமூக சீர்திருத்த கருத்துக்கள் கதைகளில் இடம்பெற்றது பற்றியும் இன்னும் அங்கே நவீன இலக்கியம் போதிய அளவிற்கு வளராமல் இருப்பதையும் எடுத்துக் கூறினார்.படைப்புகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு எதிராக அரசியல் அழுத்தங்கள் இருப்பதையும் கூறினார்.

முகமது ரியாஸின் 'சிங்கா',உமா கதிரின் 'ப்ளூடூத் ஜோஹன்',லதாவின் 'தேக்காவில் ஒரு பாலம் இருந்தது' போன்ற சிங்கப்பூர் சிறுகதைகள் அலசப்பட்டன.

அடுத்து ஃபைஸ் காதிரியின் 'கஜல் கவிதைகள்: அமர்வில், உருது கவிதையில் கஜல் (Ghazal) புகழ்பெற்ற நுணுக்கமான அழகிய யாப்பு வடிவம்.இரு வரிக் கண்ணிகளால் ஆனது. முதல் இரண்டு அடிகள் மத்லா (உதிப்பு) எனப்படும்.இறுதியிரண்டு அடிகள மக்தா (முடிவு) எனப்படும்.

முதல் இரண்டு அடிகளின் இறுதிச்சீர்கள் இயைபுத் தொடை (Rhyme)பெற்று வரும். அடுத்து ஒன்று விட்டு ஒன்று இயைபுத்தொடை பெற வேண்டும்.

இறுதி இரண்டு வரிகளில் கவிஞனின் புனைபெயர் இருக்க வேண்டும்.கண்ணிகள் 5, 7, 9 ,11 என்று ஒற்றைப்படையில் அமைய வேண்டும் என்றெல்லாம் கூறினார். உருது கஜல் கவிஞர்களின் சிகரமாகக் கருதப்படும் மிர்ஸா காலிப்பின் கஜலை பாடிக் காட்டினார்.அதேபோல் பகதூர் ஷாவின் புகழ்பெற்ற 'சபர்' கஜலையும் பாடிக் காட்டினார்.சில கஜல் பாடல் வீடியோக்களை ஒளிபரப்பினார். அந்தப் பாடல்களில் பிரபலமான இந்தி, தமிழ்ப் பாடல்களை அடையாளம் காண முடிகிறது.

ஏராள முன் தயாரிப்புகளுடன் ஓர் அமர்வு

'முன்வரலாற்று எழுத்துரு' பற்றிய அமர்வில் ராஜமாணிக்கம் தனது கம்பீரமான கலகலப்பான குரலில் ஏராளமான கருத்துகளை அள்ளி வழங்கினார்.

''பல லட்சம் ஆண்டுகளாக உலகம் முழுக்க பரவி இருந்த சைகைக் குறிகள், சங்கேதக் குறிகள் ,குறியீடுகள், குழூஉக்குறிகள், குலச் சின்னங்கள் பின்னர் பரிணாம மாற்றத்தில் எடுத்துகளாகவும் மொழிகளாகவும் உரு மாற்றம் கொண்டன.

இடப்பெயர்வு செய்த போது குறியீடுகளைத் தாண்டி மொழியின் அவசியம் உருவாகி மொழிகள் உருவாவதற்கு முன்பே சிந்தனைகள், சட்டங்கள், வழிபாட்டு சடங்குகள், வேட்டை நடைமுறைகளைச் சொல்லும் குறியீட்டு மொழி கட்டமைப்பு உருவாகி புழக்கத்தில் இருந்தது. இவையே இன்றும் பாறை செதுக்குகளாக காணப்படுகின்றன. இதை பல்வேறு வடிவங்களாக பரிணாமம் பெற்றன.

கருவிகள், ஓவியங்கள் தொல் எழுத்துரு தொல்மொழியின் ஒரு பகுதியாக இருந்து இன்றுவரை நீடித்து நிற்கிறது.

பிராமி, பிராகிருத, தமிழ், வட்டெழுத்து, தேவநாகிரி எழுத்துக்கள், செப்பேடுகள், சிலைகள், ஓவியங்களில் பார்வைக்கு படும் குறியீடுகள், புதிர் வடிவ சொற்கள் ,சித்திரப் புதிர்கள் குறியீட்டுக் கவிதைகள், புதிர் கவிதைகள் என்று பல்வேறு தடங்கள் வரலாற்றுக்கு முந்தைய மொழி,எழுத்துருவின் தடங்களைத் தொடர்ந்து தொல் எழுத்துக்களை நம் வரலாற்றோடு இணைத்துப் பார்க்க உதவுகின்றன".

''காலம் தோறும் குறியீடுகள் மூலம் மொழி அடைந்த பரிணாம வளர்ச்சி"யை அவர் கூறியதும் தங்குதடையின்றி குறிப்புகள் இல்லாமல் அவர் பேசியதும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஒவ்வொரு அமர்வு முடிவடையும் நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பாக ஒற்றை மணி ஒலி ஒலிக்கும். அது பார்வையாளர்களை அமர்வு முடியப் போகும் மனநிலைக்குக் கொண்டு வரும் .அந்த மணி ஒலித்த அடுத்த ஐந்து நிமிடங்களில் அமர்வை முடித்துக் கொள்வார்கள். அமர்வு எவ்வளவு சுவாரசியமாகச் சென்றாலும் அடுத்த அமர்வின் நேரத்தில் மூக்கை நீட்டுவதில்லை .இந்த நேரமேலாண்மை சரியாகக் கடைபிடிக்கப்பட்டது.அந்த மணி அடிக்கும் பணியைச் செய்தவர் அந்தியூர் மணி. இவர்தான் இந்த மையத்தின் ஆல் ரவுண்டர். பம்பரமாய் சுழன்றபடி பல்வேறு பங்களிப்புகளை ஆற்றுகிறார்.

வருடிச் செல்லும் மழைக்காற்று... அரே பாய்!

இவ்வமர்வுகளில் இயற்கை பின்புலமாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது பங்கெடுப்பதும் உண்டு. மழையைக் காற்று உருமாற்றிச் சிறு சிறு தூறலாய் சாரலாய் இரு பக்கத்து வரிசையை மயில் தோகையாய் வருடிச் செல்லும். ஒரு நாள் மதிய உணவுக்கு பிறகான அமர்வு அது. சற்றே உண்ட மயக்கத்தில் பார்வையாளர்கள் இருந்தபோது, உறக்கக் கிறக்கத்தில் ஆழ்ந்த அப்போது ஒரு மழையைக் காற்று அள்ளிக்கொண்டு பூத்தூவலாய், மெல்லிய மேகத் துகிலினை கூட்டத்தில் தழுவ விட்டு வெளியேறியது போல அமர்ந்திருந்தவர்கள் மீது தூவி விழிக்க வைத்தது மட்டுமல்ல, சிலிர்க்கவும் வைத்தது . அரங்கிற்குள் மழை வந்துவிட்டதோ என்று நினைக்கும் படி காற்று உள்ளே அள்ளிக் கொண்டு தூவியது. இதுபோல் இயற்கையின் விளையாட்டு அவ்வப்போது நடைபெறும்.

முதல் இரண்டு நாட்கள் தலா 8 அமர்வுகளாக 16 அமர்வுகள். மறுநாள் இரண்டே அமர்வுகள். மூன்றாம் நாள் மதிய உணவுடன் அமர்வுகள் முடிந்து புறப்படத் தயாராவார்கள்.

மூன்று நாட்களில் பிறிதொரு உலகத்தில் பிரவேசித்துவிட்டு வந்த உணர்வைத் தந்தது இந்த அமர்வுகளின் அனுபவம்.இதில் ஒன்று தோன்றியது எழுத்தாளர் ஜெயமோகன் என்பவர் ஒரு தனி மனிதரோ நிறுவனமோ அல்ல. அவர் ஓர் இயக்கம் என்று.

மிஸ்டு யூ ப்ரோ....

வழக்கமாக காவிய முகாமில் கலந்து கொள்ளும் ஜெயமோகன் இம்முகாமுக்கு வரவில்லை. அவர் கேரளாவில் வேறொரு இலக்கிய நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால், கலந்து கொள்ள முடியவில்லை. அவரது இன்மையை உணர்ந்தாலும் பிறகு அந்த எண்ணத்தைக் கடந்து வாசகர்கள் அமர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அவர் இல்லாவிட்டாலும் இந்த வகுப்புகளும் இந்த அறிவியக்க செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாக இருக்கும். இதுதான் அவர் விரும்பியது.

அமர்வுகள் நடுவே இருந்த இடைவேளைகளில் சிலர் வனப் பறவைகளைப் பார்க்கவும் பூக்கள், கானுயிர்களை ரசிக்கவும் ஆங்காங்கே பிரிந்து சென்றனர்.இந்த இடைவேளையில் ஆங்காங்கே விவாதங்கள் நடைபெற்றுக் . கலந்துரையாடல்கள் வெட்ட வெளியில் நின்றபடி, திண்ணையில் அமர்ந்தபடி, பாறைகளில் அமர்ந்தபடி , கல்பெஞ்சுகளில் உட்கார்ந்த படி என்று வேறு வேறு வகைகளில் அளவளாவல்கள் நடக்கும்.

அப்படிப்பட்ட உரையாடல்களில் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பாவண்ணன், சோ. தர்மன்,போகன் சங்கர், கோபாலகிருஷ்ணன், இசை, சுனில் கிருஷ்ணன், கடலூர் சீனு என்று வருகை தந்தவர்கள் கலந்து கொள்வார்கள். அமர்வுகளில் பேசுபவர்களும் உரையாடினார்கள்.சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை நாஞ்சில் நாடனிடம் கேள்வி கேட்டால் ஓர் ஆசிரியர் போல பொறுமையாக விளக்கிப் பதில் கூறுவார்.அவரைச் சுற்றி எப்போதும் இளைஞர் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் கவிஞர் தேவதேவனைச் சுற்றி, எழுத்தாளர் பாவண்ணனைச் சுற்றி என்று உற்சாக இளைஞர் கூட்டம்.

உள்ளே கதகதப்பு.. வெளியே குளிர்.. சுனீல் கிருஷ்ணன் பேசுகிறார்

புகை மதுவிற்கு அனுமதி இல்லை என்கிற அறிவிப்பு வாசலிலே உள்ளது. நான்கு பேர் சேர்ந்தாலே பாட்டிலைத் தேடும் இக்காலச் சூழலில் வெட்ட வெளிகள்,பசுமைப்புதர்கள், ஏராளமான மறைவிடங்கள் கொண்ட அந்த மலைப்பகுதியில் மது அனுமதி இல்லை என்பதே ஒரு துணிச்சலான முடிவு. அந்த நம்பிக்கை தந்த துணிவில் தான் ஏறக்குறைய பாதிப்பேர் பெண்களாக வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் நாள் அமர்வுக்கு பிறகு ஒன்பதரை மணிக்கு மேல் அங்கு விருந்தினர்களாக வந்திருந்த எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பாவண்ணன் ,சோ.தர்மன், தேவதேவன், குலசேகரன், சந்திரா உடன் வாசகர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.அதில் வாசிப்பது எப்படி?வாசிப்பின்படி நிலைகள் என்ன? வாசிப்பின் சவால்கள் என்ன? நவீன கவிதைகளை புரிந்து கொள்வது எப்படி ? மரபு வாசிப்பின் அவசியம் என்ன? வாசித்து புரியாத பட்சத்தில் என்ன செய்வது ? நவீன எழுத்தாளர்களின் பின்புலத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமா? போன்ற கேள்விகளுக்குப் பதில்கள் பெறப்பட்டன.

அமர்வுக்குப் பின் எழும் உரையாடல்களில் ஈரோடு கிருஷ்ணன், போகன் சங்கர், கடலூர் சீனு, சுசித்ரா, அஜிதன், 'நீலி' ஆசிரியர் ரம்யா, 'கவிதைகள்' ஆசிரியர் ஜி.எஸ்.எஸ்.வி. நவின், விக்னேஷ் ஹரிஹரன், 'குறுகு' ஆசிரியர் அணங்கன் போன்றோர் அர்த்தமுள்ள கேள்விகளை எழுப்பி அமர்வைச் செறிவாக்கினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram