ரஷ்யப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாளராக பரவலாக அறியப்பட்டவர் எம். ஏ .சுசீலா.இவர் ஓர் எழுத்தாளர் ,பேராசிரியர், மொழிஆய்வாளர் ,முனைவர் பட்ட ஆய்வு மதிப்பீட்டாளர் என்று பரந்துபட்ட பணி அனுபவங்கள் கொண்டவர். ஏராளமான கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியவர் பல கருத்தரங்குகளை நெறிப்படுத்தியவர். இவர் எழுத்தாளராகச் சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதி இருப்பவர்.
முனைவர் எம்.ஏ.சுசீலா, எழுத்துப் பணிகள் சார்ந்து கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது ,நல்லி திசை எட்டும் விருது , எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி. யூ. போப் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்னை ரஷ்யக் கலாச்சார மையம் இணைந்து வழங்கிய தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க் குரல் என்னும் விருது , ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது, தில்லி தமிழ்ச் சங்கத்தின் அமரர் சுஜாதா விருது,விஜயா வாசகர் வட்ட விருது,கவிதை உறவு விருது என்றும் சமூகச் செயல்பாடுகளுக்காக ஸ்த்ரீ ரத்னா விருது,பாரதீய யுவகேந்திராவின் சிறந்த பெண்மணி விருது என்று ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளவர். அவருடன் ஓர் உரையாடல் !
உங்கள் குடும்பத்தின் சூழல் படிப்புக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது ? அப்போது பெண்களுக்கான கல்விக்கு ஏதாவது தடைகள் இருந்ததா?
நான் கல்வி கற்றது, பெண்கல்வி வளர்ச்சி அடையத் தொடங்கி வேகம் பிடித்த 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேதான் என்பதால் அதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை. மேலும் என் தாய், உள்ளூர்ப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலேயே தலைமை ஆசிரியராகவும் இருந்தார். காரைக்குடியின் பெண்கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு ஆற்றிய அவர், '30 களின் காலகட்டத்திலேயே சென்னையின் புகழ் மிக்க கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு பயின்று ஆசிரியர் பயிற்சிக் கல்வியும் முடித்தவர். தந்தையும் காவல்துறை அதிகாரி. அதனால் அடிப்படைக் கல்வியோடு மட்டுமல்லாமல், உயர்கல்வி,அதற்கு மேல் உயர்கல்வி என்று ஊக்கப்படுத்திக்கொண்டு போகும் வகையிலேதான் என் குடும்பப் பின்புலம் அமைந்திருந்தது. அதை நான் என்றும் நன்றியோடு நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வாசிப்பிற்குள் எப்போது வந்தீர்கள்? வாசித்து வளர்ந்த விதம் எப்படி?
ஒற்றைக் குழந்தையாய்ப் பிறந்து உடன் ஊடாடுவதற்கு சகோதர சகோதரிகள் இல்லாத நிலையில் - சிறுவயதிலிருந்தே வாசிப்பு எனக்கு உற்றதுணை ஆகி விட்டது. அம்மா பணிசெய்த பள்ளியின் சிறிய நூலகத்தில் புதிதாக வரும் புத்தகங்கள்,நான் படித்த பிறகுதான் பதிவேட்டில் குறிக்கப்பட்டு சுற்றுக்குப் போகும். புதுப் புத்தகத்தின் வாசனையை உள்ளிழுத்தபடி கல்கி,அகிலனில் தொடங்கி ஒரே மூச்சில் வாசிக்க ஆரம்பித்த பழக்கம் துணிக்கடை, நகைக்கடை என்று அம்மாவோடு எங்கே போனாலும் கையில் புத்தகம் இல்லாமல் போக முடியாதபடி தொற்றிக் கொண்டது. பள்ளி நூலகம் போதாது என்று வீட்டில் வாங்கும் கல்கண்டு,அதில் வரும் தமிழ்வாணன் கதைகள், கண்ணன்,அம்புலி மாமா , இன்னும் அப்போது இலவசப் பிரதிகளாகவே வரும் அமெரிக்கன் ரிப்போர்ட்டர் , சோவியத் நாடு ,காரைக்குடியிலேயே அமைந்திருந்த நவயுகப் பிரசுராலய வெளியீடுகள் என்று பலவும் என் வாசிப்புக்குத் தொடர்ந்து தீனி போட்டுக்கொண்டே இருந்தன. இளமையில் தொற்றிக் கொண்ட அந்த வாசிப்புப் பழக்கம்தான் என்னுடைய இலக்கிய ஆர்வத்துக்கும் அடித்தளம் ஆயிற்று. பிற பாடங்களை விட இலக்கியப் பாடங்களின் மீது என் ஆர்வம் நிலைப்படவும், தொடர்ந்து அந்த ஆர்வத்தை நான் தக்க வைத்துக்கொள்வதற்கும் காரணம்,அந்த வாசிப்புப் பயிற்சி மட்டுமே. என்னுடைய படைப்பிலக்கிய முயற்சிகளுக்கும், நான் செய்து வரும் மொழியாக்கங்களுக்கும் இன்று வரை உறுதுணையாகவும் இருந்து வருவதும் அதுவே.
கல்லூரிப்படிப்பில் இளங்கலையில் அறிவியல் வேதியல் எடுத்த நீங்கள் முதுகலையில் தமிழ் எடுத்தது எப்படி?
இளங்கலை நிலையிலேயே இலக்கியக் கல்வி பயில வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனினும் அந்தக் காலகட்டத்தில், நான் பயின்ற அந்தப் பெண்கள் கல்லூரியில் வேதியல், பொருளாதாரம் ஆகிய இரு பாடங்களைத் தவிர வேறு துறைகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் வேதியல் எடுத்தேனே தவிர என் உள்ளம் இலக்கியத்தின் மீதே நிலைத்திருந்தது. உண்மையில். வேதியல், மற்றும் அதன் துணைப்பாடங்களாக இருந்த வேறு சில அறிவியல் பாடங்கள் ஆகியவற்றை விட, ஆங்கிலத்திலும் தமிழிலும்தான் நான் அதிக மதிப்பெண்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். அதற்காக என் அறிவியல் ஆசிரியரிடம் பலமுறை நான் குட்டு வாங்கியதும் உண்டு. ஆனாலும் என் இலக்கிய ஆர்வம் எதனாலும் மட்டுப்படவில்லை. மேலும், காரைக்குடியில், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்கள் ஆண்டுதோறும் நடத்தி வந்த கம்பன் விழா,நான் படித்த பள்ளி வளாகத்தில்தான் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனால் நல்ல தமிழ் இலக்கியத்தை, மேடைத் தமிழ் வழியே கேட்டு வளரும் வாய்ப்பு இளம்பருவத்திலேயே எனக்குக் கிடைத்தது. தமிழ்க் கடல் இராய. சொ., ம.பொ.சிவஞானம், திரு ப ஜீவானந்தம், தவத்திரு குன்றக்குடி அடிகளார், அறிஞர் அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் இஸ்மாயில் போன்ற மிகப்பெரும் ஆளுமைகளின் செறிவான தமிழ்ப் பேச்சுக்கள், தமிழ் இலக்கியத்தை முறைப்படி கற்க வேண்டும் என்ற வேட்கையை என்னுள் அதிகப்படுத்திக்கொண்டே இருந்தன. முதுகலை என்று ஒன்று படித்தால், ஆங்கில இலக்கியம் அல்லது தமிழ் இலக்கியத்திலேதான் அதைச் செய்ய வேண்டும் என்று தீவிரமாக முடிவெடுத்து வைத்திருந்தேன். காரைக்குடி அழகப்பா கல்லூரியிலேயே பெரும் தமிழறிஞரான டாக்டர் வ சுப மாணிக்கம் அவர்களிடம் தமிழ் முதுகலை பயிலும் வாய்ப்பு கிடைத்தது, வாழ்க்கையில் நான் பெற்ற பெரும்பேறு.
மதுரை பாத்திமாக் கல்லூரியில் 1970 ஆம் ஆண்டு முதல் 2006 வரை தமிழ்த்துறைப்பேராசிரியர் பணி எப்படி இருந்தது?கல்லூரிப் பணி சார்ந்து 'காணப்படுகிற உலகம் வேறு, அறியப்படுகிற உலகம் வேறு' என்று இருந்ததா? பணி மனநிறைவு அளித்ததா?
எனது ஆசிரியப் பணி, மிகவும் சிறப்பாக- மிகுந்த மனநிறைவு அளிப்பதாகவே அமைந்திருந்தது. வாழ்வின் செம்பாதிக் காலத்தைக் கல்லூரி வளாகத்தில் கழித்திருக்கும் நான், ஓர் ஆசிரியராக அமைய நேர்ந்ததில் இன்றுவரை அளவற்ற பெருமிதமும் பூரிப்பும் கொண்டவளாகவே இருந்து வருகிறேன். எத்தனையோ தலைமுறை இடைவெளிகள் இருந்தாலும்,அந்தந்த வகுப்புக்கும் வயதுக்கும் ஏற்ற வகையில் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டதால் பணி ஓய்வு பெறும் வரை எந்தத் தலைமுறையும் எனக்குச் சிக்கலை ஏற்படுத்தியது இல்லை. பணி நிறைவு பெற்று 20 ஆண்டுகள் கழிந்த பிறகும், கைபேசி,முகநூல் என்று பல வகையான சமூக ஊடகங்கள் வாயிலாகவும், நேரடித் தொடர்பிலும் பல மாணவிகள் என்னோடான பிணைப்பை இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். குக்கிராமத்தின் கோடியாக இருந்தாலும் உலகத்தின் எந்த மூலைக்கே போனாலும் 'அம்மா' என்ற அளப்பரிய பாசத்தோடு அடையாளம் கண்டு ஓடி வரும் அருமை மாணவிகள் பலரை எப்போதும் நான் எதிர்ப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். கல்லூரிப் பணியாற்றிய காலகட்டத்தை, மாணவியரோடும் சக பேராசிரியர்களோடும் நான் பெற்ற பலவிதமான அனுபவங்களைப் பின்புலமாகக்கொண்டு, 'தடங்கள்' என்ற ஒரு நாவலையும் எழுதி வெளியிட்டு இருக்கிறேன். என்னிடம் பயின்ற மாணவிகள், கவிஞர்களாகவும்,கதாசிரியர்களாகவும்,வேறு பல பொறுப்புக்களிலும் மேம்பட்டுச்சிறந்து வருவதைத் தற்போது மகிழ்வோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரி வளாகத்தில் காணும் வாழ்வும், நடப்பியல் வாழ்வும் வேறுபட்டவையாக இருக்கலாம். ஆனால் நடப்பியல் வாழ்வுக்கு இளம் தலைமுறையினரை ஆயத்தப்படுத்திப் பக்குவப்படுத்தும் பட்டறை கல்விக்கூடமே என்பதால் அதன் அச்சாணியான ஆசிரியப் பணி ஓர் உயரிய சமூகப்பணியாக என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானதாகவே என்றும் இருந்து வருகிறது. குறிப்பிட்ட அந்தக்கால கட்டத்தில் அறிந்தோ அறியாமலோ நான் விதைத்த சில விதைகள், வாழ்வின் எந்தெந்தக் காலகட்டங்களில் தங்களுக்கு உறுதுணையாக இருந்தன என்பதை இன்று வரை பல பழைய மாணவியர் அவ்வப்போது என்னுடன் பகிர்ந்து கொள்ளும்போது நாம் ஆற்றிய பணி குறித்து ஏற்படும் அலாதியான நிறைவு, வார்த்தைகளில் விளக்க இயலாதது.
இரண்டாண்டு காலம் 2002ல் இருந்து 2004 வரை துணை முதல்வராக ஆற்றிய பணியும் பொறுப்பும் எப்படி இருந்தது?
துணைமுதல்வர் பொறுப்பு என்பது, நிர்வாகம் மற்றும் மேற்பார்வை சார்ந்தது. கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்தாலும், அதை விடவும் என்னை மிகவும் ஈர்த்தவை வகுப்பறைகளும்,அதற்கான தயாரிப்புகளும், மாணவர்களோடான உரையாடல்களுமே.
மொழியியலில் பட்டயப் படிப்பு படிக்கும் எண்ணம் எப்படி வந்தது? திடீரென்று மொழிகள் மீது எப்படி ஆர்வம் வந்தது? மலையாளம், சமஸ்கிருதம் சான்றிதழ்ப் படிப்பு படிக்கத் தோன்றியது எப்படி?அப்படிப்பின் மூலம் பெற்றது என்ன?
ஆசிரியர் என்பவர் ,தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் புதிது புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கவேண்டும், கற்றலை எந்தக்கட்டத்திலும் நிறுத்தக்கூடாது என்பது என் திடமான கருத்து. அதை ஒட்டியே பல துறைகளிலும் சான்றிதழ், பட்டயக்கல்வியை மேற்கொண்டேன். வகுப்பறையில் மொழியியல் பயிற்றுவிக்கும்போது அது எனக்கு உதவியாகவுமிருந்தது. தமிழோடு ஒப்பிட்டும் உறழ்ந்தும் பார்ப்பதற்குப் பிற மொழிக்கல்விகளில் பெற்ற பயிற்சிகள் துணையாக இருந்தன.
முனைவர் பட்டத்திற்குக் 'காலப்போக்கில் தமிழ்ச் சமூக நாவல்களில் பெண்மைச் சித்தரிப்பு' மிகச்சிறப்புடையது என்ற பரிந்துரை கிடைத்தது.அப்போதே உங்களுக்குள் பெண்ணியச் சிந்தனை தொடங்கி விட்டதா?
ஒரு பெண்கள் கல்லூரியில் - வாழ்வின் பலதரப்பட்ட பிரச்சினைகளுடன் இயங்கிக்கொண்டிருந்த வெவ்வேறு வயதுப் பெண்கள் நடுவிலேயே பணியாற்றிக் கொண்டிருந்த எனக்குப் பெண்ணியச்சிந்தனை என்பது தோன்றாமல் போயிருந்தால்தான் வியப்பாக இருந்திருக்கும். அடிப்படையிலேயே ஒரு பெண்ணியவாதியாகிய நான் ஒரு பெண்ணியப் போராளியாகவும் பல போராட்டங்களிலும்,இயக்கங்களிலும் பங்கேற்று செயல்பட்டிருக்கிறேன். ஆய்வேடு எழுதும் முன்பே பெண்ணியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் வழங்கியிருப்பதோடு, பெண்ணியம் சார்ந்த நூல்கள் சிவற்றையும் எழுதி இருக்கிறேன். என் சிறுகதைகள் பலவும் பெண்ணியக் கருப்பொருள் சார்ந்தவையே. பெண்ணியம் என்பது, என்னுள் ஊறி உட்கலந்த ஒன்று
'ஓர் உயிர் விலை போகிறது’ 1979 கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது பற்றி? உங்கள் பிற சிறுகதைகள்,அந்தப் படைப்பிலக்கிய அனுபவம் பற்றி?
கதை வாசிக்கும் பழக்கம் தொடங்கிய இளமைப் பருவத்திலேயே கதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் என்னுள் தொற்றிக்கொண்டு விட்டது. அந்த தாகம், பணியில் சேர்ந்த பின்னும் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்ததால், '70க்குப் பிறகு, பல்வேறு இதழ்களுக்கு நான் எழுதும் படைப்புகளை அனுப்பி வைத்துக்கொண்டே வந்தேன். நான் சற்றும் எதிர்பாராத வகையில், 1979 ஆம் ஆண்டு கல்கி இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் என் முதல் சிறுகதைக்கு முதல் பரிசு கிடைக்க ஒரு சிறுகதை எழுத்தாளர் என்னும் அங்கீகாரத்தை நான் முதன்முதலாகப் பெற்றேன். குறிப்பிட்ட அந்தத் தருணம் வாழ்நாளில் என்னால் மறக்க இயலாதது. பணியிடைப் பயிற்சிக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில்- கைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் எனக்குத் தகவல் தெரிவித்த தந்தியிலும் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட, ஊர் திரும்பிப் புதிர் விடுபட்டபோது நான் பெற்ற ஆனந்தம், அதை நினைவுகூரும் இந்தநேரத்திலும் கூட என்னுள் எட்டிப்பார்க்கிறது. அந்தக் கதைக்குக் கிடைத்த வரவேற்பும் நூற்றுக்கும் மேலான வாசகர் கடிதங்களும் தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதத் தூண்டுகோலாய் அமைந்தன. என் படைப்புக்கள் கல்கி, கலைமகள், ஆனந்த விகடன், தினமணி கதிர், செம்மலர், அமுதசுரபி, மங்கையர் மலர், அவள் விகடன் முதலிய வெகுஜன இதழ்களோடு, புதிய பார்வை, வடக்கு வாசல், கணையாழி, உயிரெழுத்து ஆகிய சிற்றிதழ்களிலும் வெளி வந்துள்ளன; ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் முதல் சிறுகதை கன்னடத்திலும், ‘இம்மை மாறி..’என்னும் ஆக்கம் மலையாளத்திலும் வேறு சில கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்கம், ஃப்ரஞ்ச் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான ‘அமரர் சுஜாதா விருது, எனக்கு, ஏப்.6-2013இல் தில்லி தமிழ்ச்சங்கத்தால் அளிக்கப்பட்டது. 'பருவங்கள்மாறும்'(1985), 'புதிய பிரவேசங்கள்'(1994),'தடை ஓட்டங்கள்'(2001),'தேவந்தி' (2011) என்னும் நான்கு சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. ‘தேவந்தி’ தொகுப்பு, தில்லி தமிழ்ச்சங்கத்தில் ‘வடக்கு வாசல்’ இலக்கிய இதழ் நடத்திய வெளியீட்டு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது.
’கண் திறந்திட வேண்டும்’ என்ற சிறுகதை பாலுமகேந்திரா இயக்கத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது பற்றி?
எனது சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொலைக்காட்சித்தொடர் வழி,’நான் படிக்கணும்’என்ற பெயர் மாற்றத்தோடு திரை வடிவம் பெற்றிருந்தாலும் அதில் எனக்குக் கிட்டிய அனுபவம் சற்று கசப்பானதே. அது ஒளிபரப்பாகும் நாள் வரை என் கதை, அந்தத்தொடருக்குத் தேர்வாகியிருக்கிறது என்பது எனக்குத் தெரிவிக்கப்படவும் இல்லை, அதற்கு என் ஒப்புதல் பெறப்படவும் இல்லை. சிறந்த இயக்குநர் ஒருவர்தான் அதை உருவாக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு படைப்பாளிக்குத் தரப்பட வேண்டிய கௌரவம் தரப்படாமல் போனது இன்று வரை எனக்கு உறுத்தலான ஒன்றுதான். மூலக்கதையை என்னிடமிருந்து எடுத்துக்கொண்டதால் டைட்டில் கார்டில் என் பெயரும் இடம்பெற்றதே தவிர எனது வேறு எந்தப் பங்களிப்பும் அதில் இல்லை.அதற்குரிய எந்த அங்கீகாரமோ சன்மானமோ எனக்கு அளிக்கப்படவும் இல்லை.
நான்கு சிறுகதைத் தொகுப்பு எழுதினீர்கள். ஆனால் நாவல் மட்டும் 2 ஏன்?
ஒரு திருத்தம். இரண்டல்ல...,மூன்று நாவல்களை இதுவரை எழுதியிருக்கிறேன். நாவல் படைப்பில் ஈடுபட வேண்டுமென்ற உந்துதல்,எழுதுகோல் ஏந்திய நாளிலிருந்தே இருந்தபோதும், ஆசிரியப் பணி, ஆய்வுப்பணிகள், குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றின் இடையே தொடர் சிந்தனைக்கான மனநிலையும், தொடர்ந்த செயல்பாட்டுக்கான நேரமும் கூடிவரவேண்டும் என்று எண்ணியதனாலேயே அதைப் பலஆண்டுகள் ஒத்திப் போட வேண்டியாகி விட்டது. சென்ற நூற்றாண்டுப் பெண்கள் அனுபவிக்க நேர்ந்த பல கொடுமைகளையும் எதிர்ப்பட்டிருக்கும் என் தாயின் வாழ்வை வெறும் வாழ்க்கை வரலாறாகக் கூறாமல் புனைவுத்தன்மை பொருந்திய நாவலாக்கிச்சொல்ல வேண்டும் என்று ஆண்டுக்கணக்காக என்னுள் மூண்டிருந்த பெருங்கனவு, ’யாதுமாகி…’என்னும் நாவலாக 2014 இல் செயல்வடிவம் பெற்றது.. என் முதல் நாவல் முயற்சி அதுவே. ’Devi The Boundless’ என்ற தலைப்பில் அது ஆங்கிலத்திலும் மொழியாக்கப்பட்டுள்ளது. என் பணிக்கால அனுபவ அடிப்படையில்,பல பெண்களின் வாழ்வுச்சிக்கல்களை ஒரே சரட்டில் ஒருங்கிணைத்துத் ’தடங்கள்’என்ற தலைப்பில் என் இரண்டாவது நாவலை உருவாக்கினேன். அண்மையில் - 2023 இல் வெளிவந்திருக்கும் ' அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்' என்ற என் மூன்றாவது நாவலுக்கும் கவிதை உறவு அமைப்பின் பரிசைப் பெற்றிருக்கிறேன்.
இத்தனைக்கும் பிறகும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது புனைவுகளில் போதுமான வேகம் கிடைக்காதது போல் தோன்றுகிறதே?
படைப்பு மனநிலை கைகூடும்போது மட்டுமே எழுதுவதுதான் என் இயல்பு. மேலும் பொறுப்பான ஒரு பணியில் இருந்ததால் - அதற்கு உண்மையாக இருக்க வேண்டியதை என் முதன்மையான கடமையாகக் கருதினேன். அந்த வேலை நெருக்குதல்களுக்கும்,பளுவுக்கும் இடையிலேதான் நான் எழுதியாக வேண்டியிருந்தது. அவற்றுக்கு நடுவே படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கும், அதைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்கும் நான் போராடினேன் என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு தடை ஓட்டம். அதை என் சிறுகதை ஒன்றிலும் சொல்லியிருக்கிறேன். ஒருவேளை படைப்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், நான் சொல்ல நினைத்தவற்றைச் சொல்லியிருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தியும் சிறந்த வாசக எதிர்வினைகளுமே எனக்குப் போதுமானவையாக இருக்கின்றன
மொழிபெயர்ப்புக்குள் வந்தது எப்படி ? ’குற்றமும் தண்டனையும்’ அனுபவம் பற்றி ?
நான் மொழிபெயர்ப்புக்குள் நுழைந்தது மிகவும் தற்செயலான ஒரு நிகழ்வு. ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் குடும்பத்தோடு தில்லி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில்,மதுரையில் இருந்த ஒரு பதிப்பாளர், 'குற்றமும் தண்டனையும்' நாவலை மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு என்னை நாடி வந்தார். பழகிய சூழல், நட்புகள், பார்த்துக் கொண்டிருந்த பணி எல்லாவற்றிலிருந்தும் அன்னியப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், சொந்தப் படைப்புகளை உருவாக்கும் அளவுக்கு அமைதியான ஒரு சூழலையோ மனநிலையையோ உருவாக்கிக் கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், என் எழுத்தார்வத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் எழுத்துடனும் இலக்கியத்துடனுமான தொடர்பைத் தொடரவும், அந்த மொழியாக்கப் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். அந்தப் பணி, என் வாழ்வில் மறக்க முடியாத சுவடுகளைப் பதிக்கப் போகிறது என்பதையோ, எனக்குக் குறிப்பிடத் தகுந்த அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றுத் தரப் போகிறது என்றோ அப்போது நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'குற்றமும் தண்டனையும்' நாவலைப் படிக்கத் தொடங்கி ஒரு சில பக்கங்களைத் தாண்டுவதற்கு முன்பே தஸ்தயெவ்ஸ்கி,எனக்கு மிகவும் நெருக்கமானவராகத் தோன்ற ஆரம்பித்து விட்டார். ரஸ்கோல்நிகோவுக்கு அவரது அன்னை கடிதம் எழுதும் கட்டத்தை நெருங்கியபோது, நான் எந்த முயற்சியுமே செய்யாமல் அதன் தமிழ் வரிகள் என்னுள் ஓடத் தொடங்கி இருந்தன. அவரது எழுத்தை வாசிக்க வாசிக்க அவர் எனக்கு நெருக்கமாகிப் போனார். அவரது சொற்களுக்குள் அமிழ்ந்து தொலைந்து போய்க்கொண்டிருந்தேன் நான். அவர் சொல்ல விரும்பிய கதையை,உணர்வுகளைத் தமிழில் முன்வைக்க நானும் என் எழுத்தும் கருவிகள் மட்டுமே என்பதை அப்போது விளங்கிக் கொண்டேன். எட்டு மாதங்களுக்குள் அதன் முதல் வரைவை முடிக்கும் அளவுக்கு அத்தனை விரைவாக என் ஆட்கொண்டு இயக்கியது அவரது எழுத்து.
’அசடன் ’நாவலை மொழி பெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்தது எப்படி? இதற்கு 3 விருதுகள் கிடைத்தது பற்றி?
’குற்றமும் தண்டனையும்’ படைப்பின் மொழிபெயர்ப்பு வெளியானபோது இலக்கிய வட்டத்தில் எனக்குக் கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் மேலும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிட தொடர்ந்து 'இடியட்' நாவலை 'அசட'னாக மொழி மாற்றும் பணியை ஏற்றுக்கொண்டேன். பரிசுகளுக்காகவும் விருதுகளுக்காகவும் நான் இந்தப் பணியை மேற்கொண்டிருக்கவில்லை என்றபோதும், 2013 ஆம் ஆண்டில் 'அசடன்' நாவல், கனடா இலக்கியத் தோட்ட விருது,நல்லி திசைஎட்டும் விருது, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராய விருது என்ற மூன்றையும் பெற்று எனக்கு நன் மதிப்பைத் தேடித் தந்தது. விருதுகளை விடவும் எனக்கு மகிழ்வூட்டியவை, வாசகர்கள் எனக்கு அனுப்பிய செய்திகளே. 'அசடன்' வெளிவந்த நேரத்தில் எனக்கு அறிமுகமே இல்லாத தையல் கலைஞர் ஒருவரிடருந்து ஒரு கைபேசி அழைப்பு வந்தது. அப்போது அறுநூறு ரூபாய் விலையில் விற்றுக் கொண்டிருந்த அசடன் நாவலை விலை கொடுத்து வாங்கிப் படித்ததோடு பதிப்பாளர் வழி, என் கைபேசி எண்ணையும் கண்டுபிடித்து "ஆங்கிலமே அறியாத என்னிடம் அசடனைக் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்" என்று நெகிழ்ச்சியோடு அவர் பேசிய அந்தக் கணம் என் நெஞ்சில் எப்போதும் உறைந்து கிடக்கிறது. மெட்ரோ குடிநீர் வாகன ஓட்டுநரில் தொடங்கிப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்,வேத பாடசாலை மாணவர்கள் என்று வாழ்வின் பலதரப்பட்ட நிலையில் வாழும் மனிதர்களும் தஸ்தயெவ்ஸ்கியைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்காக மனம் உருகி என்னிடம் நன்றி பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். என் வாசகர் ஒருவர் ’குற்றமும் தண்டனையும்’ நாவலில் சொல்லப்பட்ட இடங்களை நேரிலேயே - பீட்டர்ஸ்பர்க் வரை தேடிச் சென்று படத்தொகுப்பாக ஆக்கி இருக்கிறார்.அதில் இடம் பெறும் சம்பவங்கள் நடந்த இடங்களை எல்லாம் படத்தொகுப்பாக்கி தன் வலைத்தளத்திலும் பதிவு செய்திருக்கிறார். என் மொழிபெயர்ப்புகள் வழி ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் வாசகர் ஒருவர், தன் மகனுக்கு வைத்திருக்கும் மகிழ்நன் என்ற தமிழ்ப் பெயருக்கு முன்னால் ஃபியதோரை முன்னொட்டாக்கி இருக்கிறார். வேறு எந்த விருதுகளையும் விட வாசகர்கள் அளித்து வரும் இத்தகைய ஊக்கங்களே இந்தக் களத்தில் இயங்குவதற்கான எரிபொருளைத் தொடர்ச்சியாக எனக்கு அளித்து வருகின்றன.
தஸ்தயேவ்ஸ்கியின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை கார்னஸ் கார்னெட்டின் மொழியாக்கமே நம்பகத்தன்மை வாய்ந்ததென்று பலராலும் பரிந்துரைக்கப்படுவதால் என் தமிழ் மொழியாக்கங்கள் எல்லாவற்றுக்கும் அவருடையதையே அடிப்படையாக வைத்துக்கொண்டேன் என்கிற உங்கள் மொழிபெயர்ப்புகளை மதிப்பிடுவது யார்?
முதல் மொழிபெயர்ப்பைப் தவிர, இதுவரை நான் செய்து வரும் மொழியாக்கங்களைப் பெரும்பாலும் நானேதான் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். திரும்பத் திரும்பப் பல முறை மூலத்தோடு அதை ஒப்பிட்டு செம்மை செய்யும் பணியையும் நானே செய்து வருகிறேன். அதை எந்த மதிப்பீட்டுக் குழுவிடமோ,மதிப்பீட்டு வல்லுனர்களிடமோ - நானோ என் பதிப்பாளரோ இதுவரை ஒப்புவித்ததில்லை. தஸ்தயெவ்ஸ்கி படைப்புகளைப் பொறுத்தவரை, கார்னஸ் கார்னெட்டின் ஆங்கில மொழியாக்கமே பெரிதும் நம்பகத்தன்மையுடையது என்று பொதுவாக மதிப்பிடப்படுவதால்,அதை என் மொழியாக்கத்துக்கு அடிப்படையாக வைத்துக் கொண்டாலும் கூடுதல் தெளிவுக்காக அதே ரஷ்யப் படைப்பின் பிற ஆங்கில மொழியாக்கங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பது என் வழக்கம். கூடிய வரை மூலத்தின் சாரத்திலிருந்து வழுவாமல் செல்ல இந்த ஒப்புநோக்கல் எனக்குத் துணை செய்கிறது.
தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளைத் தவிர நீங்கள் செய்திருக்கும் பிற மொழியாக்கங்கள் பற்றி?
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் டெம்சுலா ஆவ் ஆங்கிலத்தில் எழுதிய - அந்த மாநில மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் 'என் தலைக்கு மேல் கொன்றை' என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைத்தொகுப்பும் ,பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த எழுத்தாளர் ஹரீந்தர் சிக்காவின் 'செஹ்மத் அழைக்கிறாள்' என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கமும் தஸ்தயெவ்ஸ்கி தவிர்த்த என் மொழியாக்கங்களில் முக்கியமானவை. டால்ஸ்டாய், கோகோல், ஆண்டன் செக்காவ் போன்ற அயல் எழுத்தாளர்கள், வங்கப்படைப்பாளிகளான மகா ஸ்வேதா தேவி, ஆஷா பூர்ணா தேவி ஆகியோரின் சிறுகதைகளையும் ஆங்கில வழியே மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவற்றில் பல தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. சொல்வனம் இணைய இதழில் என் மொழியாக்கச் சிறுகதைகள் பலவும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபிதாபா என்பவரின் ஆங்கிலச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் கூட அண்மையில் சொல்வனத்தில் வெளிவந்திருக்கின்றன. என் மனதின் அலைவரிசைக்கு ஒத்துவரும் எந்த மொழிச் சிறுகதையாக இருந்தாலும் அதை மொழிபெயர்ப்பதை இன்றுவரை ஆர்வத்தோடு மேற்கொண்டு வருகிறேன்.
மொழிபெயர்ப்பு என்பதைக் குறித்த உங்கள் வரையறை என்ன ?
மொழிபெயர்ப்பு என்பதும் ஒரு படைப்பாக்க முயற்சிதான். சிறுகதை, நாவல், கவிதை ஆகிய புனைவு வடிவங்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வரையறைகள் சொல்லப்பட்டாலும் அந்த வரையறைகளுக்குள் மட்டுமே அவை அடங்கி விடுவதில்லை. மொழிபெயர்ப்பும் அப்படிப்பட்டதுதான். அதற்கு இலக்கணமும் வரையறைகளும் அவற்றைப் புகட்ட வகுப்பறைகளும், நூல்களும், பயில் அரங்குகளும் மட்டுமே துணை செய்வதில்லை. நீச்சல் கற்க நீரில் குதிப்பதே சிறந்தது என்பது போல படிப்படியாக மொழியாக்கம் செய்து பலமுறை சரிபார்த்து, செம்மை செய்து திருத்தியமைத்து வாசிப்பதற்கு எளிதாக்கி...இப்படிப் பல வழிகளிலேதான் அதை வசப்படுத்த முடியும். அதுவே மேலானது. மூலப்பிரதிக்கு உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டுமென்பதும்,அதில் கூட்டல் குறைத்தல்களோ,திரிபுகளோ செய்ய மொழிபெயர்ப்பாளருக்கு உரிமையில்லை என்பதும் மட்டுமே நான் கைக்கொண்டிருக்கும் வரையறை. மற்றபடி, இலக்கணம் கற்று இலக்கியம் படைப்பதென்பது ஒருபோதும் இயலாது,உதவாது.
ஒரு பாத்திரத்தில்இருந்து வேறு மாதிரியான பாத்திரத்திற்குத் திரவத்தை மாற்றும்போது இடையில் சிந்துவதற்கு வாய்ப்பு உள்ளது போல் இடை மொழியான ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் மொழி பெயர்ப்பு செய்யும்போது அதன் தரத்தில் சேதாரம் அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறதே?
மூல மொழி அறிந்திருந்தால்தான் இலக்கு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பது வெறும் இலட்சியவாதம் மட்டுமே. மூலமொழி,இலக்கு மொழி இரண்டிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அதைக் கைக்கொள்ள இயலும். அதற்கான வாய்ப்பு இல்லாத போது, இடைமொழி என்று ஒன்றை நாடுவது தவிர்க்க இயலாதது. மூல மொழியின் வழியாகத்தான் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற உறுதியான சட்டத்தை வைத்துக் கொண்டால், பல உலக இலக்கியங்கள் நம்மிடம் வந்து சேர்ந்து இருக்காது. நமக்கான உலகப் பலகணி ஆங்கிலம் என்ற தெளிவு இருந்ததாலேயே பாரதி,மாதவையா,புதுமைப்பித்தன் ஆகிய பல முன்னோடிகள், ஆங்கிலத்தின் வழி மொழியாக்கங்கள் செய்தபடி நமக்கு நவீன இலக்கியங்களை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற நாவல்கள் பலவற்றையும் பல்வேறு மொழிகளில் இருந்து தமிழுக்குக் கொணர்ந்திருக்கும் விமரிசகரும் படைப்பாளியும் மொழிபெயர்ப்பாளருமான க .நா. சுப்பிரமணியம் அவர்கள்,ஆங்கிலத்தையே அதற்குரிய வாயிலாகக் கொண்டார். அசாம், மணிப்புரி போன்ற வேறுபட்ட பல இந்திய மொழிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்யவும் ஹிந்தியே இடைமொழியாக நின்று உதவியிருக்கிறது. மூல மொழியில் இருந்து நேரடியாகச் செய்யப்படும் மொழியாக்கங்கள் பாராட்டுக்குரியவைதான். ஆனால் மூலமொழியில் இருந்து அவற்றை இலக்கு மொழிக்குக் கடத்தும் திறன் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்து வருகையில், இலக்கியத்தளத்தில் நிகழும் முயற்சிகள் எதையும் தெரிந்து கொள்ள வழியின்றி முடங்கி இருப்பதை விட மூலத்திற்குப் பக்கமான ஒரு மொழிபெயர்ப்பை இன்னொரு இடைமொழி வழி முயற்சிப்பதில் ஒரு பிழையும் இருக்க இயலாது. மேலும் மூல மொழியை மட்டும் தெரிந்து வைத்திருப்பதாலேயே படைப்பின் எல்லா கருத்துகளையும் சரிவர உள்வாங்கிக் கொண்டு கதையைக் கோவையாக தந்து விட முடியுமென்பதும் பிழையான சிந்தனையே. மூலத்திலிருந்து பிறழ்ந்து போய்விடாமல், இலகுவான வாசிப்பிற்கேற்ற சரளத்தோடு - கதைத்தன்மை குன்றாமல் அதன் ஆன்மாவை இலக்கு மொழியில் கொண்டுவரும்போது இடை மொழி என்ற ஒன்றினால் மிகச்சிறிய சேதாரங்கள் ஏற்பட்டாலும் அவற்றைப் பெரும் குற்றமாகக் கொள்ள வேண்டியதில்லை.
’நாவலின் மொழிபெயர்ப்பு என் வசம் இருப்பதாக உணராமல் நாவலின் வசம் என் எழுத்து இருப்பதாக உணர்ந்தேன்’ இதை கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா?
மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளும் நூலின் மீது ஒரு கட்டத்தில் பிடிப்பும் பிணைப்பும் ஏற்பட்டு விட நம்மை மறந்து அதன் வசப்பட்டு விடும்போது,நாம் அதைப்பெயர்க்கிறோம் என்ற உணர்வே மறைந்து போய்க் குறிப்பிட்ட படைப்போடு ஒன்றிக்கலந்து விடும் அபேத நிலை வாய்த்து விடுகிறது, அந்தக்கட்டத்தில் அந்த மூலப்படைப்பே நம் கை பற்றிச் செலுத்திக்கொண்டு போவதான உணர்வு ஏற்பட்டுவிட்டால்.. அப்போதுதான் அதன் வசத்தில் நாம் இருப்பதாகப்பொருள். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் மட்டுமே அனுபவித்து அறியக்கூடிய உன்னதமான ஓர் உணர்வு அது.
ஒரு மொழிபெயர்ப்பில் படைப்பாளி ,வாசகன் இருவரில் யாருடைய குரலை மனதில் வைத்து இந்தப்பணியை மேற்கொள்வீர்கள்?
நிச்சயம் படைப்பாளியின் குரல்தான். அவர் சொல்லியிருப்பதைப் பிழையற உள்வாங்கிக்கொண்டு - மொழி வேறாக இருந்தாலும் அவர் முன் வைக்க விரும்பிய அதே உணர்வு நிலையுடன்,அதே தொனியுடன் வாசகனிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் மொழிபெயர்ப்பாளரின் கடமை. வாசகன் குரலுக்கு இங்கே சற்றும் இடம் இல்லை.
மொழிபெயர்ப்பில் சரளத்துக்கான இடம் என்ன? அதை யார் முடிவு செய்வது?
ஒரு மொழிபெயர்ப்பு வெற்றியடைவது என்பதே அது எந்த அளவு சரளமாக இருக்கிறது என்பதைப் பொறுத்ததுதான். வாசிப்பை இலகுவாக்குவது மொழியின் சரளமே. அது சரளமாக இருக்கிறதா என்று தீர்ப்பு சொல்ல வேண்டியவர் வாசகர். அதை முடிந்த வரை சரளமாக ஆக்க வேண்டியவர் மொழிபெயர்ப்பாளர். மூலப் படைப்பின் கதைப்போக்கை மாற்றாமல் எந்த அளவுக்கு சரளமாக சொல்கிறோமோ. அந்த அளவுக்குத்தான் அந்த மொழிபெயர்ப்பு வாசகர்கள் நெஞ்சில் இடம் பிடிக்கிறது.பொதுவாக நாம் கையாளும் எளிமையான பொருத்தமான சொற்கள், வழுக்கிக்கொண்டு செல்லும் நீரோட்டம் போன்ற தெளிவான குழப்பமற்ற நடை ஆகிய கூறுகளே ஒரு மொழியாக்கப்படைப்பைக் கரடுமுரடு அற்றதாய் - வாசிப்புக்கு உகந்ததாய் ஆக்குகின்றன. readability என்பது அதில் கிடைப்பதுதான்.
இடையிடையே படைப்பாக்கங்களில் ஈடுபட்டு வருவது மொழியாக்கங்களுக்கு எந்த வகையில் உதவியாக உந்துதலாக இருக்கிறது ?
56 வயது வரை என் எழுத்துப் பயணம் படைப்பிலக்கியம் சார்ந்ததாகவே இருந்து கொண்டிருந்தது. எதிர்பாராத ஒரு வேளையில், மொழியாக்கப் பணியில் கால் பதித்த போது என் படைப்பிலக்கிய ஆர்வத்துக்கும் முயற்சிகளுக்கும் அது தடையாகி விடக்கூடுமோ என்ற ஒரு சிறு அச்சம் என்னுள் இருந்தது உண்மைதான். ஆனால் பலமொழி இலக்கியங்களை வாசிக்க வாசிக்க, அவற்றின் பின்புல அமைப்புகளும். பாத்திரப்படைப்புகளும், உணர்ச்சிப் போராட்டங்களும் பரிச்சயமில்லாத வேறொரு விசாலமான உலகத்துக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தன. என் மொழிக்குள் இன்னும் ஆழமாகப் பயணம் செய்து மொழிபெயர்ப்புக்கான ஒரு அகராதியை என்னுள் உருவாக்கிக்கொள்ளவும், சொற்களை அகழ்ந்து எடுக்கவும் மொழிபெயர்ப்புப்பணி எனக்கு உதவியதால் மொழியை இன்னும் வளப்படுத்திக் கூர் தீட்டிக்கொள்ள முடிந்தது. மொத்தத்தில்,மொழி அடிப்படையிலும், கருப்பொருள் அடிப்படையிலும் என்னை விரிவுபடுத்திக் கொண்டு என் படைப்பிலக்கியத்தை இன்னும் தெளிவாக உருவாக்குவதற்கும், வெவ்வேறு பரிமாணங்களில் சிந்திப்பதற்கும் என் மொழியாக்க அனுபவம் எனக்கு உற்ற துணையாக அமைந்தது. அதே போல என் சொந்தப் படைப்பாக்க அனுபவங்கள், வேற்று மொழி நாவலையும், சிறுகதைகளையும் மொழிபெயர்க்கும்போது சரியான கதை ஓட்டத்தோடு இடறல் இல்லாமல் சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டு போக எனக்குக் கை கொடுக்கின்றன. மொத்தத்தில் - என்னைப்பொறுத்தவரை, படைப்பாக்கம், மொழியாக்கம் இரண்டுமே பரஸ்பரம் ஒன்றுக்கொன்று உதவி வருவதாகவே நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்புக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா? அதை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை உள்ளதே?
நீங்கள் சொல்வது செயற்கையாக உண்டாக்கப்பட்ட ஒரு கருத்து. ஒரு படைப்பாளி தன் கற்பனை வழியே புனைவை உருவாக்குகிறானென்றால்..., தன் கண்ணுக்கெதிரிலேயே எழுதி முடிக்கப்பட்ட ஒரு படைப்பு இருந்தாலும் கூட ஒரு மொழிபெயர்ப்பாளன் , படைப்பாளியைவிடவும் பன்மடங்கு அதிகமான மூளை உழைப்பையும், உடல் உழைப்பையும் செலுத்தி மட்டுமே மொழியாக்கத்தை உருவாக்க வேண்டி இருக்கிறது. ஒரு மோசமான புனைவை விட ஒரு நல்ல மொழிபெயர்ப்பு எந்த வகையிலும் குறைந்ததல்ல. எல்லா மொழிகளிலும் அந்தந்தக்கால கட்டங்களில் நல்ல மொழியாக்கங்கள் உரிய மரியாதை பெற்றுத்தான் வருகின்றன. மொழிபெயர்ப்புக்கள் வழியேதான் வேற்றுமொழி இலக்கியங்கள் மக்களை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. இந்திய அளவிலும் தமிழிலும் தாகூர், பாரதி,புதுமைப்பித்தன் போன்ற சிறந்த படைப்பாளிகளே மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர். சுந்தரராமசாமி, பாவண்ணன் போன்ற இன்றைய படைப்பாளிகளும் கூடத்தான். மொழிபெயர்ப்பு இல்லையென்றால் உலக இலக்கியங்கள் நம்மை எட்டியிருக்க வழியில்லை. சம காலச் சூழலைப்பொறுத்த வரை - கடந்த 10,15 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பின் பொற்காலம் என்றே சொல்லத்தகுந்த வகையில் ஏராளமான மொழியாக்கங்களைப் பல பதிப்பகங்களும் வெளியிட்டு வருகின்றன.மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதளித்துச் சிறப்புச் செய்யும் போக்கும் முன்னை விட மிகவும் கூடுதலாகியிருக்கிறது. படைப்புகளைப் போலவே மொழியாக்கங்களை ரசித்துப் படிக்கும் வாசகர் எண்ணிக்கையும் பெருகி இருப்பதாகவே நான் உணர்கிறேன். மொழிபெயர்ப்பை மொழியாக்கம்(transcreation )என்றும் அழைக்கக்காரணம் அதுவும் படைப்பாக்கத்தோடு சேர்ந்தது என்பதாலேயே. எந்த வகையிலும் அது இரண்டாம் தரமானதில்லை.
மென்பொருள் தானியங்கி கருவிகள் மூலம்,ஏ ஐ மூலம் மொழிபெயர்க்கப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அன்றாட மொழி ஏ ஐ மொழிக்கு மாறிவிடும் அபாயம் உள்ளதா?
மனித மூளை அசாத்தியமான எல்லைகளை எட்டும் வாய்ப்பை அளிக்கக் கூடியது. அது இயந்திரங்களினால் சாத்தியப்பட்டு வருவது வியப்பை அளிப்பதாக இருந்தாலும், மூலத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட சூழ்நிலையை, பின்புலத்தை, மனஉணர்வுகளை எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டு அந்த மொழியாக்கங்கள் அமைந்திருக்கின்றன என்பதை இன்னும் ஆழமாக ஆராய்ந்து,இயற்கை,செயற்கை என்ற இரு வகை மொழியாக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் எந்தத் தீர்ப்பும் சொல்ல முடியும்.மனித உழைப்பை விட மிக விரைவாகச் செயல்படுவது ஏ ஐ என்பது உண்மைதான். அதை எந்த எல்லைக்கோடு வரை பயன்படுத்திக் கொள்வது என்பது நம் கையில். மானுடக் கற்பனைகளுக்கோ,மூளை உழைப்புக்கோ இடம்தராமல் இயந்திரங்களை மட்டுமே சார்ந்திருப்பதென்பது அபாயகரமான ஒருபோக்குத்தான். மானுட முயற்சியால் தன்னிச்சையாக உருவாகும் கலை எதுவெனினும் -மொழியாக்கம் உட்பட- அதன் தனித்துவம் uniqueness பிற செயற்கையான செயல்பாடுகளோடு எந்த வகையிலும் ஒப்பிட முடியாதது என்பதே என் கருத்து. மனித முயற்சி உயர்ந்ததா? செயற்கை நுண்ணறிவு சிறந்ததா என்பதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.