சாகித்ய அகாடமி மீட்டிங்கிற்காக 3.4.2026 வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து டெல்லிக்கான பயணத்திலிருந்தேன். கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் ஆவணப்படத்தின் தொடர்ச்சியான திரையிடல்களின் அயர்ச்சியோடு, விமானம் ஏறியதும் தூங்கிவிட வேண்டும் என்று நினைத்தபடியே விமானத்துள் ஏறினேன். அலைபேசியை ஃப்ளைட் மோடில் வைக்கும் அறிவிப்பு வந்தது. இன்னும் மூன்றரை மணி நேரம் வரை செய்திகள் எதுவும் பார்க்க முடியாதே, கடைசியாய் என்ன செய்தி வந்திருக்கிறது என்று பார்க்கத் துவங்கினேன். விமானம் நகர்ந்து ரன்வே நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. காலை 11 : 17க்கு நண்பர் பாரி ஒரு செய்தி அனுப்பியிருந்தார். விமானம் ரன் வேயில் ஓட ஆயத்தமாய் வந்து நின்றது. நான் செய்தியைத் திறந்து வாசித்தேன். என் மனம் சில க்ஷணங்கள் உறைந்து மீண்டது. அயர்ந்த தூக்கத்திலேயே அமைதியாய் நண்பர் அரவிந்தனின் உயிர் பிரிந்திருந்த எதிர்பாராத துக்கச் செய்தி. சில நிமிஷங்களுக்குப்பின் விமானமும் என் மனம்போலவே வேகமான ஓட்டத்தில் தடதடவெனக் குலுங்க ஆரம்பித்தது. உடலும் விமானமும் அதிர்ந்தன. மரங்களும் கட்டிடங்களும், வாகனங்களும் பிற விமானங்களும் பின்னோக்கிச் சென்றன. மனம் தகிக்க வெளியெங்குமொரு வெறுமை. எல்லாம் நழுவிக்கொண்டே செல்ல, துக்க வாதையால் கண்களில் சில துளிகள். மேல் நோக்கிச் சென்ற விமானம் மெல்ல சமனில் நிலைத்து மிதக்க, மனமும் அது போலவே.
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்ற பெருமை படைத்த இவ்வுலகில், எல்லோரது தலைக்கு மேலும் மரணத்தின் கத்தி எப்போதும் தொங்கியபடியேதான் இருக்கிறது. அது ஏதோ ஒரு சிறு சமிக்ஞைக்காக காத்திருக்கிறது அவ்வளவுதான். நமது வீராவேச சபதங்கள், வன்மங்கள், பிரகடனங்கள், வாளுருவி நின்ற நாட்கள், சாதிக்க வேண்டிய வான் முட்டும் கற்பனைகள் -எல்லாமே பொடிப்பொடியாக உதிர்கிற நேரம் இப்படியான செய்திகள் வருகிற நேரம்தான். எப்போதோ படித்த மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் தலைப்போ முழுமையான வரிகளோ இப்போது நினைவில் இல்லை. ஆனாலும் மனத்தில் தேங்கியவற்றைச் சொல்லிப் பார்த்துக்கொள்ளத் தோன்றிற்று.
‘அது ஒரு அமைதியான வருகையாளர்
பல சமயம் ஓசையுடன் வருவதில்லை
அமைதியின் மொழியைக் கற்றுக்கொண்ட பின்தான்
அது புறப்படுகிறது.
இதயத் துடிப்புகளின்
இடைவெளிகளில்
சதா அது காத்திருக்கிறது.
அது வரும்போது
எதையும் பறிப்பதில்லை
நாமறியாத சில முடிச்சுகளை மட்டும்
அவிழ்க்கிறது.
வாழ்நாள் முழுவதும்
நாம் சேகரிக்கிறோம்
காதல், நட்பு, உறவு, சொந்தம்,
சொத்து, கோபம் என…
காலடி தொட்டு நழுவும் அலைகள் போல
மரணம் வந்து
அந்தப் பெயர்களை மெதுவாய் அழித்து
மிச்சமிருப்பவர்களிடம்
அதுகுறித்த கேள்விகளைத் தருகிறது.
நாம் சென்ற இடங்களெல்லாம்
செல்ல வேண்டிய இடத்துக்குச்
சென்றுகொண்டிருந்த
அந்த இடம்தான்.’
அரவிந்தனை தொண்ணூறுகளின் துவக்கத்தில் ராதாகிருஷ்ணன் ரோடு, இந்தியா டுடே அலுவலகத்தில், வாசந்தியைச் சந்திக்கச் சென்றபோது, சந்தித்தேன். அவர்தான் ‘அவரைப் பார்த்துட்டுப் போங்கோ’ என்று சொன்னார். அரவிந்தனை அவரது சிறு சதுர கேபினுக்கு வெளியே நின்று பார்த்தேன். வாசந்தி சந்திக்கத் சொன்னதைச் சொன்னேன்.
“ஓ… அப்படியா... ஓக்கே. உங்களுக்கு நான் என்ன செய்யணும்?”
“ஒண்ணும் செய்ய வேணாம்.”
“சரி. ரிசப்ஷன்ல இருங்க. ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வர்றேன்.”
நான் காத்திருந்தேன்.
அவர் வந்தார்.
“உங்க பேர் என்ன சொன்னீங்க..?”
“ரவி.”
“யெஸ்… யெஸ்… ரவிசுப்பிரமணியன்.கும்பகோணமா நீங்க?”
“எப்படித் தெரியும்?”
“வாசந்திகிட்ட பேசிட்டுத்தான் வர்றேன். ஆமா, சும்மாவா இலக்கியவாதிகளைப் பார்க்க நீங்க சென்னைக்கு வந்து வந்து போறீங்க?”.
“ஆமாம்.”
“ஆச்சர்யமா இருக்கு. நான் இப்படிக் கேள்விப்பட்டதே இல்ல. ஆமா, உங்களுக்கு வியாபாரம்ல்லாம் இருக்குல்லய்யா?”
“தம்பிங்க, ஆள்ங்க, பார்த்துப்பாங்க.”
இப்படியாக, அந்த பால்கனியில் நின்றபடி, சம்பாஷணை சில நிமிஷங்கள் தொடர்ந்தது. பின் அவர் விடைபெற்றார். நான் அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதன்பின் நிரந்தரமாக நான் 1995இல் சென்னைக்கு வந்த பின், அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நட்பின் நெருக்கம் அதிகமானதும் சில வேளைகளில் அவர் வீட்டுக்கும் செல்வேன். அதில் இரண்டு முறை அவர் வீட்டில் சுந்தர ராமசாமி அவர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஸ்ரீதேவி மலர்ந்த முகத்தோடு அப்போதும் நல்ல கும்பகோணம் ஃபில்ட்டர் காப்பியைக் கொண்டு வந்து தருவார்.
அதன் பின் எவ்வளவோ சந்திப்புகள். அவர் எனது வண்டியின் பில்லியனிலும், நான் அவரது வண்டியின் பில்லியனிலுமாக கடந்த தூரங்கள், ருசிருசியாய்த் தேடித் தேடிச் சாப்பிட்ட உணவுகள், கேட்ட கச்சேரிகள், போட்ட சண்டைகள் பேசமாலிருந்த காலங்கள் எல்லாம் போயிற்றே, அரவிந்தா..!
ஒரு முறை ஏதோ இலக்கிய விவாதம் நீண்டு வாக்குவாதம் முற்ற
“உங்களை எல்லாம் என்ன இலக்கியத்துக்கான ஐ.எஸ்.ஐ தரக் கட்டுப்பாளரா யாரும் நியமிச்சிருக்காங்களா? எப்பவும் சில பேர் என்னமோ கைல தராசோடயே திரியிறீங்க... பெரிய சந்நிதானம் ஆயிட்டிங்களோ..? சந்நிதானங்கள் ஏதோ ஆசி வழங்குற மாதிரில்ல ஆப்பிளை மேலேருந்து அப்படி கைல தூக்கிப் போடுறீங்க. போங்கடாங்… இங்க பாரு. வைச்சு செஞ்சிருவோம்… ஆமா” என்று கடுமையாகப் பேசிவிட்டேன்.
“இப்படில்லாம் பேசுவீங்களா நீங்க. தயவு செஞ்சு முட்டாள்தனமாப் பேசாதீங்க, என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க. உங்களுக்கும் எனக்குமான சண்டையா இது?”
“இங்க பாரு… நீ புத்திசாலியாவே இரு அரவிந்தா. பை” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
பிறகு ரெண்டு ஆண்டுகள் பேசவில்லை. அதன் பின் நான் ஏதோ ஒரு இலக்கியக் கூட்டத்துக்கு அரை மணி முன்னதாகப் போய்விட்டேன். வழக்கம் போல யாருமில்லை. அவரும் என்னவோ சீக்கிரம் வந்துவிட்டார். பேசாமலிருக்கிறோமே என்று நான் ஒதுங்கி வேறு பக்கமாக நடந்து போனேன்.
“ஹலோ, ரவி, பரவாயில்லை வாங்க. இன்னைக்கு நம்ம மெளனத்தை உடைச்சிடலாம்” என்று தானே வலியக்க வந்து சிரித்தபடி கையைப் பிடித்துவிட்டார். அதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்... அதுதான் அரவிந்தன்!
15. 2. 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை டிஸ்கவரியில் நண்பர் பிருந்தா சாரதி, எனது ‘ஆளுமைகள் தருணங்கள்’ கட்டுரைத் தொகுதிக்காக அவர் பொறுப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். கி.அ. சச்சிதானந்தம் அதற்குத் தலைமை வகிக்க, வெளி. ரங்கராஜன், அரவிந்தன், பிருந்தாசாரதி ஆகியோர் பேசினர். அதில் அரவிந்தன் என் கட்டுரைகளைப் பற்றி விரிவாக அரை மணி நேரம் பேசினார். மிகவும் செறிவான உரை. அவர் பாராட்டுகளுக்கான தர்க்கங்களை தேர்ந்த விமர்சகனாய் அடுக்கிக்கொண்டே வந்தார். அன்று எல்லோருக்குமே அவர் பேச்சு பிடித்திருந்தது. அதை ஒரு கட்டுரையாக எழுதித் தாங்களேன் என்று அவரிடம் கேட்டேன். கடைசி வரை அவரால் அதை எழுதித் தரவே இயலவில்லை.
“இவர் கட்டுரைகள் பற்றி இவ்வளவு பாசிட்டிவா சொல்ற நான், இவர் கவிதை பத்தியும் சில வரிகள் சொல்லணும்ன்னு தோண்றது. பொதுவா எல்லாராலயும் இவர் ஒரு நல்ல கவிஞராகத்தான் அறியப்படுகிறார். ஆனால், இவர் மிகச்சிறந்த கட்டுரையாளர். கவிதைங்கிற பேர்ல, பாவம் இவர் எதோ எழுதிண்ட்ருக்கார். அந்த விஷயத்துல அவர நாம விட்டுரலாம்” என்று முடித்தார். இதுவும் அரவிந்தன்தான்.
பின்னாட்களில், “நீங்க இப்படிச் சொல்லச் சொல்ல கவிதைக்காக எனக்கு விருது கிடைச்சுட்டே இருக்கே அரவிந்தன்” என்று சொன்னேன்.
“அது என் தனிப்பட்ட அபிப்ராயம். உலகத்தின் எல்லார் அபிப்ராயமும் அப்படி ஒரே மாதிரி இருக்கணுமா... ஒரு வேளை அதைச் சரியான விதத்துல புரிஞ்சுக்க முடியாத போதாமையும் எனக்கு இருக்கலாமே…” என்றார்.
சென்ற 28. 3. 2026 காலை 7. 40க்கு அவரோடு நடந்த ஃபோன் உரையாடலின் போது,
“லக்ஷ்மண அய்யர் பற்றி ஞானசேகரன் தொகுத்து தன்னறம் வெளியீடாக வந்த ‘சத்திய மானுடம்’ புத்தகத்தைப் படிச்சிருக்கீங்களா?”
“பார்த்தேன். கொஞ்சம் படிச்சேன். ஆனா, முழுமையா உள்ள போக முடியல.”
“ஏன்?”
“காந்தியும் தலித் அரசியலும்ங்கிற ஜெயமோகனோட ஒரு நீண்ட கட்டுரை அதுல முதல்ல இருந்தது. எதுல எதைக் கொண்டுவந்து சேர்க்கணும்ன்னு ஒரு சீரியஸ் சென்ஸ் இல்லாம, சம்மந்தா சம்மந்தமில்லாம அதுல அது இருந்தது. அந்த ‘முன்பாரம்’ எனக்குப் பெரிய எரிச்சலா இருந்தது. அதனாலேயே அதை நான் முழுமையாப் படிக்கலை.”
அவரது அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் எவ்வளவோ கருத்து முரண்பாடுகளோடும் அபிப்ராய பேதங்களோடும் நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம்.
மறுபடியும் ரெண்டு ஆண்டுகள் முன் ஒரு பெரும் சண்டை நடந்தது. ஆனால் அது எங்களுக்குள் ஒரு வாரத்தில் செட்டிலாகி விட்டது. இந்த முறை என் பணிந்த மன்னிப்பை நான் முதலில் ஃபோனில் சொல்லிவிட்டேன். அவர் தன் தரப்பை நீண்ட மெஸேஜாகவே அனுப்பிவிட்டார்.
அன்புள்ள ரவி
வணக்கம்.
முதலில் என்னுடைய மன்னிப்பைத் தெரிவித்துவிடுகிறேன். இப்போது என் முறை. உங்களை என் முதல் கடிதம் புண்படுத்தியிருக்கிறது என்பதை அறிந்ததால் மனமார இந்த மன்னிப்பைக் கோருகிறேன்.
உங்கள் உணர்வுகளையும் காரணங்களையும் நான் புரிந்துகொள்கிறேன். இந்தக் கட்டுரைகள் எழுதக் காரணமானவர்களைக் குறிப்பிட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்கிறேன். தனிப்பட்ட உரையாடல்கள் கட்டுரையின் கணிசமான பகுதியாக இருந்ததால், அவை இல்லாமல் கட்டுரை கட்டுக்கோப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஏற்கெனவே இத்தகைய கட்டுரைகளை நாம் விவாதித்து, சிலவற்றை நீக்கியிருந்ததால் உங்கள் முன்னுரைக்கும் அதைப் பொருத்திப் பார்த்தேன். நான் செய்தது சரியாகத்தான் இருக்கும் என்று முழுதாக நினைக்கவில்லை. அதனால்தான் உங்கள் பார்வைக்காக அனுப்பினேன். அவையெல்லாம் எனக்கு முக்கியம், கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருந்தால் இந்த விவாதம் வேறு வகையில் நடந்திருக்கும். இவ்வளவு முடிந்த பிறகு, புத்தகத்தையே திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்னதால் அதிர்ச்சி அடைந்தேன். நீங்களும் நானும் எத்தனையோ விஷயங்கள் பேசியிருக்கிறோம், பேசாதிருந்திருக்கிறோம். இதைப் பேசிச் சரி செய்துகொள்ள முடியாதா நம்மால்?
நிரப்ப முடியாத இடைவெளி நமது சில கருத்துகள், பார்வைகள், அணுகுமுறைகளுக்கிடையே இருக்கலாம். ஆனால், நமது நீண்ட கால நட்பில் அப்படி எந்த இடைவெளியும் இல்லையே, ரவி.
நான் நீக்கப் பரிந்துரைத்த பகுதிகளுக்கு நீங்கள் கற்பிக்கும் காரணம் உண்மையில் எனக்கு வருத்தமளிக்கிறது. குறிப்பாக “எனக்குக் கீழே வேலைசெய்யும்” என்று ஆரம்பிக்கும் அந்த பாரா. நான் தனிநபர்கள் சார்ந்து எந்த ஆட்சேபணையும் எழுப்பவில்லை. அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் சார்ந்துதான் பேசுகிறேன். ஒரு பகுதி அந்தக் கட்டுரைக்குத் தேவையா இல்லையா என்பதற்கான விஷயம் சார்ந்த கேள்வி மட்டும்தான் எனக்கு. இதற்கு நான் கண்டடையும் பதில் சரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்பதை அறிவேன். ஆனால், விஷயம் சார்ந்து மட்டுமே என் கருத்தைச் சொல்கிறேனே தவிர, எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்று தெளிந்த மனசாட்சியுடன் சொல்கிறேன்.
உரையாடல்களை நீக்கியிருந்தாலும் அவர்கள் பெயர்களையேனும் நான் சேர்த்திருக்கத்தான் வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது என் தவறுதான்.
எடிட்டிங் சார்ந்த சட்டாம்பிள்ளைத்தனம் என்று நீங்கள் சொல்லும்போது, உண்மையிலேயே மீண்டும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், காயப்பட்ட ஒருவித மனநிலையில் நீங்கள் அதையெல்லாம் சொல்லியிருப்பதைப் புரிந்துகொள்கிறேன். உங்களுக்குப் பாடம் எடுக்கும் நோக்கமோ, ஆணவமோ ‘வாத்யார்த்தனமோ’ எனக்கு இல்லை. எனக்குச் சரி என்று படுவதை மனம் திறந்து சொல்லும் நோக்கம் மட்டுமே உண்டு. பிற நூல்கள் குறித்து நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நான் என்ன பதிலளிக்க முடியும்?
மீண்டும் சொல்கிறேன். எனக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. என் யோசனைகள் தனிநபர்கள் சார்ந்ததும் இல்லை. சட்டாம்பிள்ளைத்தனமும் இல்லை. கட்டுரையின் கட்டுக்கோப்பு சார்ந்த கருத்தும் நட்பின் அடிப்படையில் எடுத்துக்கொண்ட உரிமையும்தான் என்னுடைய வெளிப்பாடு.
இவ்வளவையும் சொன்ன பிறகு மீண்டும் சொல்கிறேன். உங்களைப் புண்படுத்திவிட்டதை எண்ணி மிக மிக வருந்துகிறேன். நாம் மீண்டும் பழையபடி பேசிவிட முடியும்தானே.
அன்புடன்
அரவிந்தன்.
17. 12. ’24, செவ்வாய், இரவு 7 : 02, நாகர்கோவில்.
அவர் மன்னிப்பால் என்னைச் சிறுவனாக்கிவிட்டார். அதை ஒரு பெரும் பண்பாகவே கொண்டிருந்தார் என்றே சொல்லத் தோன்றுகிறது. கொஞ்ச நாட்களில் வீட்டுக்கு வந்தார். அவரின் மேன்மைக்கு, பெருந்தன்மைக்கு, நட்பைப் போஷித்த குணத்துக்கு இப்படி எவ்வளவோ விஷயங்கள் அடுக்கடுக்காய் என் மனத்தில் நிழலாட, விமானம் டெல்லி வந்திறங்கிவிட்டது.
“இனி
அவனது கறார் விமர்சனக் குரல் கேட்காது
ஆனால்,
அவன் எழுத்தின் கீதத்திலும்
செப்பமிட்ட பனுவல்களின் லயகதியிலும்
கூடு பாய்ந்த மொழிபெயர்ப்பிலுமாய்
அவன் ஒலித்துக்கொண்டேயிருப்பான்.
ஏனெனில்
அவனின் இல்லாதிருப்பிலும்
துடிக்கும் அவனின் செயல்களின் ஜீவிதம்”.
அவருடைய ‘வானபிரஸ்தம்’ முதலிய சில சிறுகதைகளை நான் வாசித்திருக்கிறேன். பல சமயம் அவரே அனுப்பி அபிப்ராயம் கேட்பார். இந்தப் பெருநகரத்தின் புற நெருக்கடிகள் நடுத்தர வர்க்கத்தினரை, அவர்களது அகத்தை எவ்விதம் பாதிக்கின்றன, உறவுகளும் நட்புகளும்கூட, எந்த அளவு கோணலுக்கும் சிதைவுக்கும் உள்ளாகின்றன என்பதைச் சித்திரிக்கும் நகரப்பின்னணியிலான கதைகளே பெரும்பாலும் நான் படித்த அவரது கதைகள். அவரது சமீபத்திய ‘வெல்கம் டூ மில்லெனியம்’ தொகுப்பு நவீனமயமான கதைகளைக் கொண்டது என்றே சொல்ல வேண்டும்.
‘பயணம்’ என்ற அவரது முதல் நாவல், எனக்கு மிகவும் பிடித்த வித்தியாசமான ஒரு நாவல். ஆன்மீகத் தேடலை மையமாகக் கொண்டது. அறிந்திராத பிரதேசத்தில் நடக்கும் விஷயங்களை சுவாரஸ்மாகச் சொன்னது அந்த நாவல். சென்னையின் குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கையைச் சொன்ன அவரது ‘பொன்னகரம்’ நாவலை, பாதி படித்ததோடு வைத்துவிட்டேன்.
விமர்சனக் கட்டுரைகளிலும் தன் தரப்புக் கருத்தை எடுத்து வைத்து உண்டு இல்லை என்று செய்து விடுபவர்தான் அரவிந்தன். கடைசியாய் ஸ்ரீமான் வைரமுத்துவின் ஞானபீட லீலைகள் குறித்து, புதிய தலைமுறையின் ‘சிந்தை’ என்ற பகுதியில் 17 மார்ச் 2026இல் எழுதிய, ‘வைரமுத்துவுக்கு ஞானபீடம் : பண்பாட்டுச் சூழலின் பேரிடர்’ என்கிற தலைப்பிலான கட்டுரையின் லிங்க்கை 24. 3. ‘26 அன்று வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். அதுவும் அதே அக்மார்க் அரவிந்தன் ஸ்டைல். சில சமயம் அவர் எழுதும் கட்டுரைகள் எனக்கு மிகுந்த கோபத்தையும் வரவழைத்திருக்கின்றன. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளை கவிதா பதிப்பகம் வெளியிட்டபோது, இண்டியா டுடே இதழில் அதன் ரிவ்யூவாக அவர் எழுதிய ஒரு வரியின் கருத்து என்னால் மறக்க இயலாது. “ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளும் உரத்த குரலிலான மேடைப் பேச்சுகள்” என்ற ரீதியில் எழுதியிருந்தார். நான் இதற்காக அவரிடம் மிகக் கடுமையாகக் கோபப்பட்டேன்.
நாவல், சிறுகதை, கட்டுரை, விமர்சனங்கள் போன்றவை தாண்டி, அரசியல், கிரிக்கெட், ஆய்வுகள், வரலாறு எனப் பல விஷயங்களில் அவருக்கு ஆர்வம் இருந்தது. ‘எளிமையாகத் தமிழ் எழுத ஒரு வழிகாட்டி’ என்று ஒரு புத்தகம் எழுதியதாகக்கூட நினைவு. காவிய உணர்வோடு கணேஷ் தேவி எழுதிய ‘மகாபாரதம்’ நூலை அவர் தமிழில் எழுதியது போல அழகாக மொழிபெயர்த்திருந்தார்.
இந்தியா டுடே, காலச்சுவடு, தி இந்து தமிழ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, மின்னம்பலம் போன்ற நிறுவனங்களில் அவர் வேலை செய்தபோதும், ‘சென்னை நம்ம சென்னை’, ‘நம் தோழி’ போன்ற இதழ்களை அவர் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திய போதும் செய்த கணிசமான இதழியல் பங்களிப்புகளும், புதுவிதக் கண்டுபிடிப்புகளும் கணக்கில் கொள்ள வேண்டியவை. ஒரு வகையில் அவையே பின்னாளில் அவரை சிறந்த பதிப்பாசிரியராக நிறுத்தியது என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட முப்பது நூல்கள் எழுதியுள்ள தன் பங்களிப்புகளுக்காக, உரிய விருதுகள் தனக்கு வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்ததை நான் அறிவேன்.
கடைசியாய் 6. 3.’26 வெள்ளிக்கிழமை காலை அவர் வீட்டின் கிரஹப்பிரவேசத்துக்குச் சென்றிருந்தேன். ரெண்டு பஸ்கள் மாறி ஏறி கடைசியில் ஆட்டோவில் அவர் வீட்டுக்கு காலை பதினொன்றரை பக்கமாகப் போய் சேர்ந்தேன். ஸ்ரீதேவிதான் உபசரித்து, “முதல்ல சாப்டுங்கோ… அப்பறமா மேல போய் வீட்டைப் பார்க்கலாம்” என்றார். அரவிந்தன் என்னைப் பார்த்துவிட்டார். ஆனாலும் சைகையிலேயே வாங்கவென வரவேற்றுவிட்டு ஃபோனில் பேசிக்கொண்டே இருந்தார். அதற்குள் நான் ரசத்துக்கு வந்திருந்தேன்.
“சாரி ரவி. கட் பண்ண முடியலை.”
“பரவாயில்லை. அதனால என்ன…”
“எப்படி வந்தீங்க?”
“அதான் எல்லாம் அனுப்பிச்சிருந்தீங்களே பக்காவா.”
“அது இல்ல… மோட் ஆஃப் டிரான்ஸ்போர்ட்…”
“ரெண்டு பஸ் மாறி இங்க, ஆட்டோவுல ஏறி வந்தேன். அதான் இவ்ளோ லேட்.”
“அடடா…”
அதற்குள் யாரோ விருந்தினர் வர,
“நல்லா சாப்டுங்க” என்று சொல்லியவாறே யாரையோ உபசரிக்க ஓடிவிட்டுத் திரும்பினார். அதற்குள் நான் சாப்பிட்டு முடித்திருந்தேன்.
“ சாப்பாடு எப்படி இருந்தது... என்னென்னல்லாம் பிடிச்சிருக்கு?”
“எல்லாமே நல்லா இருக்கு.”
“ஹா.. ஹா… ஸ்பெசிஃபிக்…”
நான் ரொம்பப் பிடித்த நான்கு ஐட்டங்களைச் சொன்னேன். பிறகு அவர் மாடிக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு அறையாகக் காண்பித்து, க்யூரேட்டர் போல எனக்கு விளக்கிக்கொண்டு இருந்தார். லிஃப்ட்டில் கீழே இறங்கி விடைபெற்றுப் புறப்படும் முன், இரண்டு தாம்பூலப் பைகளை எடுத்துவந்து தந்தார். கூடவே இன்னொரு பை இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தேன்.
“இது என்ன இந்தப் பையிலே டப்பா டப்பாவா?”
“நீங்க பிடிச்சிருக்குன்னு சொன்ன நாலு ஐட்டங்கள். வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க” என்றார்.
அதற்குள் இன்னொரு ஃபோன் வந்தது அவருக்கு; போனார். அப்போது போனவர்தான்.
14. 4. ’26, செவ்வாய், தமிழ்ப் புத்தாண்டு மாலை 6 : 03, சென்னை - 10.