சிறந்த நூலுக்கு வழங்கப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான பஞ்சு பரிசில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதாகர்நல்லியப்பன்-குமரவேல்இராமசாமி ஆகியோர் இணைந்தெழுதிய"நீலமலைத் தொல்லியல்" நூல் இப்பரிசுக்காகத் தேர்வாகி உள்ளது.
பஞ்சு பரிசில் என்பது கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. பேராசிரியர் க.பஞ்சாங்கம்(பஞ்சு) அவர்கள் மேல் உள்ள பேரன்பின் காரணமாகப் பிரான்சில் வசிக்கும் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் பஞ்சு பிறந்த மாதமான பிப்ரவரியில் இப்பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. பஞ்சு பரிசில் குழுவினராகப் பேரா.பாரதிபுத்திரன், பேரா.சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர், பேரா.பா.இரவிக்குமார், பாவலர், மொழிபெயர்ப்பாளர் புதுவை சீனு.தமிழ்மணி ஆகியோர் உள்ளனர். பஞ்சு பரிசிலுக்குரிய தொகை 10,000 .
இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், தொல்லியல், நாட்டுப்புறவியல், மாந்த(மானுட)வியல் சார்ந்து நிகழ்த்தப்பட்ட திறனாய்வு நூல்கள், ஆய்வு நூல்கள் பஞ்சு பரிசிலுக்கான தேர்வுக்குரியன.
பஞ்சு பரிசில் - 2025ஆம் ஆண்டிற்குப் பல்வேறு துறைகள் சார்ந்து வந்திருந்த 25 நூல்கள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் இறுதிச் சுற்றிற்கு வந்த ஆறு நூல்களில் "நீலமலைத் தொல்லியல்" என்ற ஆய்வு நூல் பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டிருந்தது. எனவே அது பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.